(Reading time: 17 - 34 minutes)

19. நினைத்தாலே  இனிக்கும்... - பாலா

ரண்டு நாட்கள் ஊரில் இருந்த நந்துவிற்கு மனம் நிம்மதியாக இருந்தது.

அவள் எப்போதுமே பாதுகாப்பாக உணரும் ஒரு இடம், அவள் அப்பா இருக்கும் இடம், அவளின் நினைவுகள் நிறைய புதைந்துள்ள இடம், இத்தனை சிறப்புகளுடன் இன்னொரு சிறப்பாக அவள் மனதுக்கு பிடித்தவன் அவளோடு கூட அவள் வீட்டில் இருக்கிறான். இது போதாதா? அவளின் சந்தோஷங்களுக்கு.

எதையும் யோசியாமல் அவனுடனே சென்றவளுக்கு முதலில் அதிர்ச்சி தான். அக்கம்பக்கத்தில் இருக்கும் அவர்களின் உறவினர்கள், இவர்கள் இருவரையும் ஆராய்ச்சியோடு தான் நோக்கினார்கள். அவர்களின் பார்வையே அவளுக்கு ஒரு வித கூச்ச உணர்வை தந்தது.

அவள் அத்தை முன்பே அவள் தந்தையிடம் சந்துரு தான் அவளுடன் வருகிறான் என்று கூறியிருந்தார். எனவே அவர் இவர்களை பார்த்து அதிர்ச்சியடையவில்லை.

ninaithale Inikkum

இவர்கள் வரவை எதிர்ப்பார்த்திருந்தவர், எல்லோரிடமும் சந்துருவை நளினியின் மகன் என்று அறிமுகப்படுத்தியவுடன் எல்லோரும் அவனிடம் அவன் அம்மாவை பற்றி நலம் விசாரித்து விட்டு சென்றனர்.

சந்துருவிற்கு தான் அதிர்ச்சி, ‘என்னடா இது, நாம செய்யற ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம எல்லார் கிட்டவும் காரணம் சொல்லிக்கிட்டு இருக்கனுமா’ என்று.

அதையே அவளிடம் சொன்னான்.

“என்ன ஊர் இது”

“ஏன் இந்த ஊருக்கு என்ன. அத்தைக் கிட்ட போய் இந்த கேள்வியை கேட்டு பாருங்க”

“ம்ம். ஊர் பாசமா. இங்கயே இப்படி பதில் வருதுனா, அங்க இன்னும் கொஞ்சம் வயலன்ட்டா தான் வரும்”

“அது இருக்கட்டும். ஏன் அப்படி சொன்னீங்க”

“இல்ல. நாம செய்யற எல்லாத்துக்கும் எல்லாருக்கும் விளக்கம் சொல்லனுமா என்ன. நம்ம வரும் போது எல்லாரும் அப்படி பார்க்கறாங்க. அதான் என்ன ஊர் இதுன்னு கேட்டேன்”

அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவன் சிறு வயதில் இங்கு வந்ததோடு சரி. பிறகு தான் அவர்கள் இங்கு வருவதில்லையே. அதனால் அவனுக்கு பழகிய சென்னையை மட்டுமே வைத்து எல்லா ஊர்களையும் கம்பேர் செய்கிறான். அவனுக்கு மற்ற ஊர்களின் பழக்கங்கள் தெரியவில்லை. ஏதோ இந்த ஊரில் மட்டும் தான் இப்படி என்பது போல கேட்கிறான்.

சிரித்துக் கொண்டே “இங்கன்னு எல்லாம் இல்லை. எல்லா ஊர்லையும் இப்படி தான் இருப்பாங்க”.

“வாட்”

அவன் கேட்ட தோரணையிலேயே அவனின் அதிர்ச்சி தெரிய, அவள் இன்னும் புன்னகைத்தாள்.

“ஆமாம்”

ஆனால் அவன் அதை நம்புவதாக இல்லை.

“நீ என்ன சொல்ற”

“எல்லா ஊர்லையும் இப்படி தான் இருப்பாங்க. இப்ப நம்ம பார்த்தவங்க எல்லாம் நம்ம உறவுக்காரங்க. நான் இவ்வளவு வருஷம் இங்க வளர்ந்த பொண்ணு. படிக்கறதுக்கு வெளியூர் போயிருக்கேன். இடையில வரும் போது இப்படி ஒரு பையன் கூட வந்தா என்ன, ஏதுன்னு கேட்க மாட்டாங்களா”

“அவங்க ஏன் கேட்கனும்”

“நம்ம உறவுக்காரங்கன்னா அப்படி தான் கேட்பாங்க”

“கேட்டா கூட தேவலாம் போல, ஆனா அவங்க அப்படி குறுகுறுன்னு பார்க்கற பார்வை இருக்கே, ஐயோ”

“இங்க எல்லாம் அப்படி தான்”

“என்னவோ போ. ஏன் நம்ம மக்கள் இப்படி இருக்காங்க. மத்தவங்களோட ப்ரீடம்ல இப்படி தலையிட கூடாது. பாரீன்ல எல்லாம் இப்படியா இருக்காங்க. ஏன் சென்னையே எடுத்துக்கோயேன். யாரும் இப்படி பார்க்க மாட்டாங்க”

அமைதியாக பார்த்த நந்துவை என்னவென்று கேட்டான் சந்துரு.

“இல்ல. வரும் போது அவங்க எல்லாம் பார்க்கும் போது எனக்கு கூட அப்படி தான் இருந்துச்சி. ஆனா, நாம அதை தப்புன்னு எல்லாம் சொல்ல முடியாது. சென்னைல அப்படி இருக்காங்கன்னா. அங்க போய் ஒரு அட்ரஸ் கேட்டு பாருங்க. ஒருத்தர் நமக்கு நின்னு வழி சொல்றதே பெரிய விஷயம். இங்க வந்து முப்பது கிலோ மீட்டர் தள்ளி இருக்கற ஒரு ஊருக்கு வழி கேட்டு பாருங்க. உங்களை உட்கார வைச்சி உபசரிச்சி, தம்பி என்ன விஷயமா அந்த ஊருக்கு போகுதுன்னு கேட்டு, அந்த ஊருக்கு போறதுக்கு பல வழி சொல்லி ஒரு குட்டி மேப்பே போட்டு காட்டிடுவாங்க.”

இதை எல்லாம் கேட்டவனுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது. இருந்தும் ஏதோ தன் ஊரை விட்டுக் கொடுக்க இயலவில்லை.

“எல்லாரையும் அப்படி சொல்லாதே. அங்கயும் நின்னு வழி சொல்லிட்டு போறவங்க இருக்காங்க தெரியுமா. அதுவும் இல்லாம அவங்களுக்கே வழி தெரியலைன்னா அவங்க என்ன பண்ணுவாங்க”

“ம்ம்ம், இதையும் ஒத்துக்க தான் வேணும். இப்பவும் சில பேர் இருக்க தான் செய்யறாங்க. ஆனா இந்த மாதிரி வழி கேட்கற எல்லாரும் அங்க பீல் பண்ற வார்த்தை என்னவா இருக்கும் தெரியுமா, ‘எங்க ஊர்ல எல்லாம் இப்படி வழி கேட்டா, அந்த வீட்டுக்கே கூட்டிட்டு போய் விடுவாங்க. இங்கயும் இருக்காங்களே’ன்னு புலம்பிட்டு போவாங்க”

“நீ சொல்றது எல்லாம் ஓகே தான். பட் இப்படி நம்மளை வரும் போது பார்த்த்து, கேள்வி கேட்டது, அதை என்ன சொல்றது. நீ சொல்ற மாதிரி நம்ம சொந்தக்கார பொண்ணுன்ற அக்கறைல எத்தனை பேர் கேள்வி கேட்பாங்கன்னு சொல்ற, இவங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுதுப் போக்கு. இல்லைன்னா மத்தவங்களை பத்தி பேசறதுல ஒரு சந்தோஷம்”

சிறிது யோசித்தவள், “இருக்கலாம். நீங்க சொல்ற மாதிரியும் சில பேர் இருக்கலாம். ஆனா அப்படி இருக்கறதால தான் இங்க இருக்கறவங்களுக்கு ஏதாச்சும் தப்பு பண்றாங்கன்னா, அதை அவங்க வீட்டுல இருக்கறவங்க கேட்கறதுக்கு முன்னாடி, இப்படி சுத்தி இருக்கறவங்க அவங்க பார்வையாலயே கேள்வி கேட்பாங்க. அதனாலயே அவங்களுக்கு நம்ம செய்யறது தப்புன்னு புரியும். இங்க நான் இந்த லவ் அப்படீங்கற விஷயத்தை பத்தி மட்டும் சொல்ல வரலை. இப்ப இங்க யாராச்சும் ஒருத்தவங்க லேட்டா வராங்கன்னு வைச்சிக்கோங்களேன், அவங்க வரும் போதே வழியில ஒருத்தர் பார்த்து ‘என்னப்பா ராமசாமி மகன் தானே நீயி, என்ன இந்த நேரத்துக்கு வாரவன், நேரத்துக்கு வந்து சாப்பிட்டு தூங்குவியா, உடம்பை பார்த்துக்க ராசா’ என்று சென்றுக் கொண்டே புத்தி சொல்லிட்டு போவார். அப்படி அவங்க சொல்றதுல நம்ம மேல ஒரு அக்கறை தெரியும். அதனால அவங்களை மறுத்து பேசவும் முடியாது. இங்க நம்ம வீட்டுல இருக்கறவங்க மட்டும் தான் நம்மளை கேட்கனும்ன்னு எல்லாம் கிடையாது. நம்ம ஊர்ல யார் வேணும்னாலும் கேட்பாங்க. இப்ப இங்கயும் கூட எல்லாம் மாறிட்டே தான் வருது. ஆனா இப்பவும் மாறாம இருக்கறவங்க அப்படியே தான் இருக்காங்க.

சென்னைன்றது இப்ப தானே இவ்வளவு பெரிய சிட்டியாகிடுச்சி. முதல்ல அதுவும் சின்ன ஊரு தான். இப்படி பல ஊர்ல இருக்கறவங்க தானே அங்க போய் செட்டில் ஆகிட்டாங்க. இங்க கட்டுப்பாடோட இருந்தவங்க எல்லாம் கூட அங்க போன உடனே அவங்க இஷ்டத்துக்கு இருக்கறது எதனாலே தெரியுமா, கட்டுப்பாடோட இருந்தவங்களுக்கு அங்க போன உடனே, அப்பாடா, இனி நம்மளை கேள்வி கேட்கறதுக்கு யாரும் கிடையாதுன்னு ஒரு நிம்மதி, கட்டவிழ்த்து விட்ட மாதிரி அவங்க இஷ்டத்துக்கு இருக்கறாங்க.”

“எல்லா பாரீன் கன்ட்ரீஸ்ல இருந்தும் நம்ம பண்பாடு, கலாச்சாரத்தை தேடி இங்க வரும் போது, நாம அவங்களை பாலோ பண்ணிட்டு போறோம்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.