(Reading time: 17 - 33 minutes)

07. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

றுநாள் நிரல்யா விழித்தெழுந்து அறைக்கு வெளியே வரும்பொழுதே அவளுக்காக தன் அண்ணனுடன் காத்திருந்தாள் ஆரணி. தன் எட்மாண்டன் விசிட் பற்றி இவளிடம் தெரிவித்துவிட்டு சொந்த விமானத்தில் சொந்த ஊர் கிளம்பினாள் அவள்.

நிரல்யா வீட்டிலிருந்து இவளுடன் நேராக விமான நிலையத்திற்கு சென்று தங்கையை வழி அனுப்பிவிட்டு வந்தான் ரக்க்ஷத். அதாவது நிரல்யாவை தூங்கும் நேரம் தவிர தனியாக விட அவன் தயாராக இல்லை.

கடந்தன சில தினங்கள். பகலில் ரக்க்ஷத்தின் கண் பார்வைக்குள் காவல் வைக்க பட்டிருந்தவள், இரவில் அறைக்கு முன்னும் பின்னும் அதை சுற்றியுமென ஆயுத அலங்கத்திற்குள் அடங்கி இருந்தாள்.

Kaniyatho kathal enbathu

பகலில் படுத்தாத மனம், இரவில் இம்சித்தது. அவன் பார்வையிலிருக்கும் பொழுது அவனை மட்டும் சுற்றிய அகம், இரவின் இருளில் இடி தாங்கி இல்லா கட்டிடத்தின் மேல் விழும் கொடும் மின்னலாய் எதிர்பாராத கோணங்களில் குத்தியது. கொடுமை படுத்தியது. ஒழுக்கம் கெட்டவள் என வித விதமாய் ஓதியது. ஓய்வின்றி அழுதன அவள் கண்கள்.

அலுவலகம் வீடு என்று மட்டும் அவளை அழைத்து கொண்டு அலைந்து கொண்டிருந்த ரக்க்ஷத் அன்று ஒரு பெரியவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம். அவளை தன்னோடு அழைத்து கொண்டு அந்த பள்ளிக்கு சென்றான்.

து ஒரு தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பள்ளி. பெற்றோரில்லாத பிள்ளைகள் தங்கி இருந்து கல்வி கற்ற வளாகமது.

செல்லும் வழியில் அந்த பள்ளியை பற்றியும் அதன் தலமை பொறுப்பிலிருக்கும் ஆமி டார்கஸ் என்ற அந்த பெரியவர் பற்றியும் ரக்க்ஷத் இவளிடம் பேசினான்.

ஆமி டார்கஸ் அயர்லாந்து தேசத்தை சேர்ந்தவர். இள வயதில் இங்கு வந்து இந்த பள்ளியை நிறுவி நடத்தி வருபவர். இக் குழந்தைகளே அவரது குடும்பம்.

இப்பொழுதோ முதுமை காரணாமாக நெருங்கும் மரணத்தின் நிமித்தம் அவரது பணியை தகுதியான அடுத்த நபரிடம் ஒப்படைக்க விரும்பினார்.

பல ஆண்டுகளாக ரக்க்ஷத்தின் குடும்பம் பொருளாதார உதவியோடு வேறு பல உதவிகளும் இப்பள்ளிக்கு செய்திருந்தது. இவர்கள் குடும்பத்தோடு ஆமி அம்மையாருக்கு  இருந்த நட்பாகிய நெருங்கிய நல்லுறவு காரணமாக, இப்போதைய சூழலுக்கும், உதவிக்கு அவனையே நாடியிருந்தார்.

இன்நிலையில் திடீரென அவர் உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக ரக்க்ஷத்தை பார்க்க அழைத்திருக்கிறார் இப்போது. அதனால் தான் ரக்க்ஷத் நிரல்யாவோடு அங்கு செல்வது.

வர்கள் செல்லும் போது அந்த அம்மையார் படுக்கையில் இருந்தார். பொறுப்புகளை அவசரமாக ரக்க்ஷத்திடம் ஒப்படைக்க போவதாகவும், ஏற்ற நபரை கொண்டு அவனே இதை பராமரிக்கட்டும் என்றபடி அவர் பேசிக்கொண்டிருக்க, ஒரு நிறை மாத கர்பிணி பெண் இவர்களுக்கு குடிக்க காஃபி கொண்டு வந்து பரிமாறினாள்.

நிரல்யாவிற்கு மனம் அந்த பெண்பால் கசிந்தது. மிகவும் சிறு வயதாய் இருக்கும் அப்பெண்ணிற்கு. கர்ப்ப காலத்திற்கே உரிய மெருகோடு சேர்ந்து தேவதை போல அவளிருந்தாலும், வறுமை அதன் அடையாளத்தை அவள் மீது ஆழமாக தடம் பதித்திருந்தது நிரல்யாவிற்கு அவள்பால் இரக்கம் பிறக்க போதுமான காரணமாக இருந்தது.

இவர்கள் குடித்து முடிக்கும் வரை குடித்த கோப்பைகளை வாங்கி செல்ல காத்திருந்தாள் அவள். காலி கோப்பையை அப்பெண் நீட்டிய ட்ரேயில் நிரல்யா வைத்த நொடி, தலையை பிடித்தபடி   “க்வே.....வக்....வக்” ஓங்கரிக்க தொடங்கினாள் அக் கர்பிணி பெண்.

வேகமாக அறையின் வாசலை நோக்கி ஓடிய அவள் சறுக்கி விழத்தொடங்க பதறியடித்து ஓடினாள் நிரல்யா. ஏற்ற நேரம் அவளை தாங்கி பிடித்தாலும் அப்பெண்ணைவிட அதிகம் பதறியது நிரல்யாவிற்கு.

அந்த பெண் தடுமாறியபடி முண்ட அவளை கைதாங்கலாக அழைத்து கொண்டு அருகிலிருந்த மாணவியருக்கான கழிவறை பகுதிக்குள் நுழைந்தாள் நிரல்யா.

ரு நீண்ட ஹாலில் ஏழெட்டு சிறு கழிவறைகள், அதற்கு எதிர்புறமாக நான்கைந்து வாஷ்பேசின்கள்.

அதில் ஒன்றில் அப்பெண் குமட்டியபடி குனிய, அதே நேரம் ஒரு கழிவறையிலிருந்து வெளியே வந்தான் அவன். ப்யூன் போன்ற காக்கி உடை. முன் வழுக்கை. வெள்ளையும் கறுப்புமாய் பின் பக்க முடி. 40 வயதிற்கு மதிக்கலாம் என்பது போல் தோற்றம்.

பெண்கள் பகுதியில் இவனுக்கு என்ன வேலை என நிரல்யா நினைத்து முடிக்கும் முன்பே வந்தவன்

வாந்தி எடுத்து கொண்டிருந்தவள் முடிந்திருந்த சுருட்டை முடி கொண்டையை கைபற்றியபடி கன்னத்திலும் முதுகிலுமாக அவளை அடிக்க ஆரம்பித்தான்.

கொதித்து போனாள் நிரல்யா.

“ஏய்...விடு....நீ...விடு அவளை”

நிரல்யாதான் கத்தினாளே தவிர அடி வாங்கிய பெண்ணோ 

“பே........ப்பே...ம்ம....பே....ப்பே” என்றபடி அடித்தவனை நோக்கி கை கூப்பி கெஞ்சினாள்.

நெஞ்சில் கத்தி குத்தியது போல் வலித்தது நிரல்யாவிற்கு. பேச முடியாதபடி ஊனப்பட்டவளா அவள்.....அவளை ..கர்பிணிவேறு........இப்பபடி முரட்டு தனமாய்...

ஓடிச்சென்று அப்பெண்ணை அந்த முட்டாள் முரடனிடமிருந்து பிய்த்தெடுக்க முயன்றாள்.

“விடுறா நீ.....பேச கூட முடியாதவள..விடுறா நீ”

சட்டென அடிப்பதை நிறுத்தியவன் முகத்தில் வேறு வித பாவனை. ஒரு வெண்ணிற கவரை இவளிடம் நீட்டினான்.

பிரித்து பார்த்தாள் நிரல்யா.

ன் பக்க நியாயத்தை பேச கூட முடியாதவங்களை அடிக்கிறது எப்படி வலிக்கும்னு உங்களுக்கு புரியுதா நிரல்யா மேடம்?

காதலை கர்ப்பமாய் சுமந்துகிட்டு இருந்த என்னை பேசவே விடாம அடிக்கிறீங்களே...இது எப்படி நியாயம் நிரல்யா?

உங்க ரக்க்ஷத் உங்களுக்கு எப்படியோ, அப்படித்தானே என் ஆரணி எனக்கும்.......எப்படி விட்டு கொடுப்பேன்?......வலிக்குது ரொம்பவும்...

காத்திருந்த கர்பகாலம் முடிஞ்சு கல்யாணங்கிற பிரசவ நேரத்தை எதிர்பார்த்திட்டு இருக்கிறப்ப எல்லாத்தையும் கலச்சுட்டீங்களே...

கைக்கு எட்டியதை கண்ணால கூட பார்க்க முடியாதம மாதிரி பண்ணிட்டீங்களே!

என்ன ஒரு அபாண்டமான குற்றசாட்டு....காரணமே இல்லாம....விசாரணை இல்லாம தூக்குல போடுறமாதிரி.....

ப்ளீஃஸ் பேசுங்க.....என்ன ப்ரச்சனை? என்ன குழப்பம்? என்ன குற்றம்?

எதுனாலும் என்ட்ட பேசுங்க! எது உங்களுக்கு பிடிக்கலைனாலும் என்னை மாத்திகிறேன். ஆராவுக்கு பிடிக்காத எதுவும் என் எல்லைகளுக்குள்ளே இல்லாம பார்த்துபேன்.

ப்ளீஸ் இப்படி காரணமே இல்லாம உயிரோடு கழுவிலேத்தாதீங்க!

காத்துகிட்டு இருக்கேன் ஒவ்வொரு நொடியும் உங்க ஃபோன் காலுக்காக!

                                            அகன் ஜெஷுரன்

என்றது அக்கடிதம்.

படித்து முடித்து நிமிர்ந்து பார்த்தால் அந்த வழுக்கை தலையணை காணவில்லை. எதுவும் நடவாததுபோல் இயல்பாய் இவள் முகம் பார்த்து நின்றிருந்தாள் அந்த கர்பிணி. இவள் கேள்விகளுக்கு அவள் ஏதோ பதில் சொன்னாள் தான், ஆனால் புரியத்தான் இல்லை.

அதற்குள் அவள் அலை பேசி அலற எடுத்தால் ரக்க்ஷத் “ என்னடா...என்னாச்சு..இவ்வளவு நேரமா?” கழிவறை வாயிலில் இருந்து பரிதவித்துகொண்டிருந்தான்.

அந்த நொடி முடிவு செய்தாள். இந்த ஜெஷுரன் விஷயத்தை ரக்க்ஷத்திடம் சொல்ல கூடாது என.

இப்பொழுதே இவள் நிமித்தமாக ஜாஷ் விஷயத்தில் பரிதவித்து கொண்டிருப்பவன் ரக்க்ஷத். இதில் இந்த ஜெஷுரன் இப்படி திட்டம் தீட்டி இவளை பின் தொடர்வது தெரிந்தால் இன்னும் இதற்காகவும் பரிதவிப்பான் இவள் காதலன்.

ன்று இரவு படுக்கையில் நிரல்யா தன்னை பற்றி சுய ஆராய்ச்சி செய்யவில்லை. காரணம் அவள் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது அந்த அகன் ஜெஷுரனின் கடிதம்.

ஆரணிக்கு நடந்த கொடுமைக்கும் இக் கடிதத்திற்கும் காரணம் ஒரே மனிதன் என மனம் ஒப்ப எவ்வளவு முயன்றும் நிரல்யாவால் முடியவில்லை.

ரக்க்ஷத்தை இத்தனை காலம் இவள் பார்த்ததில், அவனின் ஆட்களை எடை போடும் திறம், சோடை போன ஒரே இடம், இந்த ஜெஷுரன்தான். ஒருவேளை இந்த ஜெஷுரன் நல்லவனோ?

அல்லது ஜெஷுரனின் சதியின் அடுத்த நடவடிக்கையா இந்த கடிதம்.?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.