(Reading time: 17 - 33 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 03 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ழியெல்லாம் ஷாந்தனு கேட்டுகொண்டே வந்த கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான் மதியழகன்.. ஒருவழியாய் இருவரும் அவனின் பள்ளி வளாகத்திற்குள் நுழைய, அங்கு நின்றிருந்தாள் அவனது தேவதை  தேன்நிலா....

 உயரமும் அல்லாத குள்ளமும் அல்லாத நடுத்தர உயரம், லேசாய் பூசினாற்போல் உடல்வாகு, பெயருக்கேற்றது போல வட்ட நிலா முகத்தில் ஜொலிக்கும் நட்ச்சதிரங்களாய் கண்கள், பிறை நெற்றி , மின்னல் கீற்றுகள் போல தோன்றும் புன்னகையை சுமக்கும் செவ்வனமான இதழ்கள், இவை அனைத்தையும் விட ஒப்பனையில்லாத அவளின் தோற்றம் அவளின் இயல்பான அழகை எடுத்து காட்டியது .. அதே பள்ளி வளாகத்தில், தன் தோழியிடம் பேசிக்கொண்டு இருந்தவளை பார்த்து மதியழகன் மனதில் ஏதோ  கிளர்ந்தாலும், வெளித்தோற்றத்தில் அதிக நாட்டம் செலுத்தாதவன் அலட்சியமாய் திரும்ப ஷாந்தனுவோ,

" அழகு .... அழகு ப்ளீஸ் வண்டிய திருப்பு " என்றான்...

Ithanai naalai engirunthai

" ஏண்டா எதுவும் மறந்துட்டியா ? "

" இல்ல இல்ல .... இன்னைக்கு என் பல்லை பிடுங்க போறாங்க " என்றான் கண்களை உருட்டியபடி ..

" பல்லை பிடுங்க போறாங்களா? என்னடா சொல்லுற  ? "

" அச்சோ அங்க பாரேன் "

" ஆமா அந்த பொண்ணுக்கு என்ன ? "

" நேத்து அந்த அக்கா  இன்னொரு அக்காவை கூட்டிடு வந்திச்சு .. அந்த அக்கா  பக்கத்து கிளாஸ் பசங்க பல்லை செக் பண்ணி பூச்சி பல்லை பிடுங்கிருச்சாம் .. ரம்யா கூட ரொம்ப அழுதா தெரியுமா ? "

" உன் ரம்யாவுக்கு பூச்சி பல்லு இருந்திருக்கும் .. உனக்கென்ன உனக்குத்தான் பூச்சி பல்லு இல்லையே "

" அச்சோ இப்போதானே நீ தந்த சாக்லேட் சாப்டேன் . ஒருவேளை இப்போ பூச்சி வந்துச்சுன்னா ? "

" ஒரே நாளில் பூச்சி வர்ற அதுஎன்ன  முதல்வன் படம் அர்ஜுனா ? "

" அழகு .....!"

" சரி சரி கோபப்படாதிங்க  பெரிய மனுஷா... பட் இதுகாகல்லாம் நீ ஸ்கூல் போகாம இருக்கனுமா ? உன் கேர்ல் பிரண்ட்ஸ் எல்லாரும் உன்னை  மிஸ் பண்ணுவாங்களே " அவன் சொன்ன விதத்தில் பலமாய் யோசிக்க ஆரம்பித்தான் ஷாந்தனு ..

" ஹ்ம்ம் முன்னலாம் சாக்லேட் தரேன் ஐஸ் கிரீம் தர்றேன்னு சொல்லி பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவாங்க .. என் அப்பா ரெண்டு அடி தரவா இல்ல ஸ்கூலுக்கு போறியான்னு மிரட்டுவாரு .. ஆனா இப்போ உள்ள பசங்களை பாரு .. எல்லாத்துலயும் எட்வான்ஸ்தான்"  என்று மனதிற்குள் நினைத்தான் மதி.. அதற்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாய்,

" சரி ஓகே .. பட் என்னை எதுவும் பண்ண வேணாம்னு  அந்த மிஸ் கிட்ட சொல்லு ப்ளீஸ் " என்றான் ஷாந்தனு ..

" இந்த வயசுலே சிபாரிசா டா உனக்கு ? அதெல்லாம் முடியாது .. முதல்ல உனக்கு சாக்லேட் வேணும்னு நீயேதானே வாய்விட்டு கேட்ட, அதே மாதிரி தான் .. இப்பவும் உனக்கென்ன வேணுமோ நீயே பேசு .. நான் வேணும்னா உனக்காக இங்கயே நிக்கிறேன் " என்று கைகளை கட்டிக்கொண்டு அவனை தீர்க்கமாய் பார்த்தான் மதி...

 இது வேலைக்கு ஆகாது என்றறிந்த ஷாந்தனு, தேன்நிலாவை பார்த்தப்படியே அவளருகே வர, சட்டென திரும்பிய அவளின் கவனமும் ஷாந்தனுவின் மீது பாய்ந்தது .. " யாரிந்த குட்டி ? " என்று அவள் மனதில் கேட்கும்முன்னே, ஷாந்தனு அருகில் வரவும் இருவருக்கும் இடையே அந்த பைக் வேகமாய் வந்து நிற்கவும் சரியாக இருந்தது .. அந்த பைக் வந்த வேகத்தில் ஷாந்தனு விழ போக அவனை பிடித்து கொண்ட நிலா கோபமாய் அந்த பைக் ஓட்டுனரின் பக்கம் பாய, அங்கு ஓடி வந்த மதியழகனும் வேகம் குறைத்து அமைதியாய் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தான் ....

வனக்குறைவாக வந்த அந்த ஓட்டுனரை பிலு பிலுவென பிடித்து கொண்டாள் நிலா ...

" ஸ்கூல் பக்கம் வேகமா வர கூடாதுன்னு கூட தெரியாதா சார் " என்று ஏகவசனத்தில் பேசியவளின் கோபமும், கோபத்தில் அவள் விரல் நீட்டி பேசும் தோரணையும் அவனை மேலும் இம்சித்தது..

" மதி இது என்னடா புது பழக்கம் .. உன்னை நல்லவன்னு ஊரே நம்புது ஆனா நீ இப்படி ஒரு பொண்ணை சைட் அடிச்சுகிட்டு நிற்கிறியே? " என்று கேள்வி கேட்ட மனதிற்கே பதில் சொல்லாதவன் நமக்கா சொல்ல போகிறான் ? சோ வாங்க நாம நிலாவை பார்ப்போம் ....

தூரத்தில் இருக்கும்போது அமைதியாய் புன்னகையுடன் நின்ற நிலா இப்போது கோபமே உருவாய் இருக்கவும் ஷாந்தனுவுக்கே ஒரு வித பயம் பரவ, தன் ஆள்காட்டி விரலால் அவளை வருடி அவளருகில் வந்தான் .. அப்போதுதான் சிறுவர்கள் முன்பு தான் சண்டை போட்டதே தெரிய, சட்டென ஷாந்தனுவின் உயரத்திற்கு குனிந்தவள்

" சொல்லுங்க குட்டி " என்று அழகாய் புன்னகைத்து கேட்டாள்.... மதியழகனுக்கோ  அத்தனை ஆச்சர்யம். ஆதவனாய் கொதித்தவள் சட்டென எப்படி  நிலவாய் குளிர்ந்து தன் தேன் குரலால் பேசுகிறாள் என்று யோசித்தான் .. ஆம் அவனுக்கு அவளின் குரல் தேனாய் தான் பாய்ந்தது.. ( மிஸ்டர் மதி நீங்க இப்படி அடிகடி அவங்களை ரசிச்சுகிட்டு இருந்தா நான் எப்படி கதையை சொல்றது ? ...சரி சரி வாங்க கதைக்கு வருவோம் )

" ஹாய் நான் ஷாந்தனு "

" ஹாய் நான் தேன்நிலா "

தேன்நிலவா ?

பெண்ணே தேனால் குழைத்த உன் குரலை கேட்கும் முன்னே

நிலவாய் மலரும் உன் முகம் பார்க்கும்முன்னே

மது ஒழுகும் உன் பார்வையை எதிர்கொள்ளும்முன்னே

குளிரும் உன் குணத்தை ரசிக்கும் முன்னே

உனக்கு தேன்நிலா என்று பெயர் சூட்டியவர் யார் ???

அவள் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே கவிதை வடித்தது அவன் மனம் .. ( இது கவிதையா ? அப்படின்னு கேட்க கூடாது .. ஏதோ நம்ம ஏழாம் அறிவுக்கு இதுதான் தோணிச்சு .. என்னதான் இருந்தாலும் நாங்க டபுள் ஹனி லெவலுக்கு  கவி எழுத முடியுமா ? ...ஹா ஹா)

சட்டென ஏதோ யோசனை தோன்ற, ஷாந்தனுவிடம் கூட சொல்லாமல் பைக்கை எடுத்துகொண்டு அங்கிருந்து சென்றான் மதி .. ( ஹெலோ ஹீரோ சார் ?????? )

தே நேரம்,

" நிலா ... இந்த அங்கிளை மன்னிச்சிடு பாவமா  இருக்கு " என்றான் ... ஷாந்தனுவை ஆச்சர்யமாய் பார்த்தவள்

" ஏன் அப்படி சொல்றிங்க டா ? " என்றாள்..

" நான் டெய்லி அழுதுகிட்டே எழுவேனா , அப்போ அம்மா சொல்லும் அழுதுகிட்டே எழுந்தா அன்னைக்கு நாள்  அழுகையாவே போகும் .. அதுனால சிரிச்சுகிட்டே இருக்கணும்னு .. நீ திட்டி இந்த அங்கிள் அழுதுட்டா அப்பறம் இன்னைக்கு புல்லா அழுவாரே " என்றான் பாவமாய் ..

 பார்த்தாயா? என்பதுபோல ஒரு அர்த்தம் நிறைந்த பார்வையுடன் அவரை நோக்கினாள் நிலா .. மீண்டும் அவரை மன்னிப்பு கேட்டுவிட்டு ஷாந்தனுவிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அங்கிருந்து சென்றார் ..

"  சரி இப்போ சொல்லுங்க .. குட்டி ஏன் என்கிட்ட ஓடி வந்திங்க ? "

" உன் கூட வந்த இன்னொரு டாக்டர் எங்க ? "

" இன்னொரு டாக்டர் ??? ஓ பூரணியா ? அவ உள்ள போய்ட்டாளே ... அவ வண்டி ஏதோ ப்ரோப்ளம்..அதான் நான் வந்து டிராப் பண்ணேன் .. ஏன் ?? "

" அந்த அக்கா  நேத்து என் கேர்ல் ப்ரண்ட் ரம்யா பல்லை பிடுங்கிருச்சு . நான் வேற இன்னைக்கு சாக்லேட் சாப்டேனா ? அதான் பயம்மா இருக்கு " அவன் கண்களை உருட்டி சொன்ன விதத்தில் கலகலவென சிரித்தாள் நிலா. கலைந்திருந்த அவனின் கேசத்தை சீர் செய்தவள்,

" உன்னை யாரு காலையிலேயே சாக்லேட் சாப்பிட சொன்னது ? " என்றாள் ( எல்லாம் உங்க அவருதான் )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.