(Reading time: 10 - 20 minutes)

02. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா

ருட்டில் அவள் பின்னால் யாரோ வருவது போலே உணர்ந்தாள் மாதங்கி. அவள் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது. இதுவரை அவள் உணர்ந்திராத ஒரு வாசம் காற்றில் கலந்து அவள் நாசியை வருடியது.

அதே நேரத்தில் அவளுடைய கொலுசொலியில் ஈர்க்கபட்டதைப்போல் அந்த கிணற்றுக்குள்ளிருந்து வெளியேற துடித்தது அது.

'மா...து......ம்மா  வா.... எ..ன் கி....ட்டே.வா .  மா..து...ம்மா இன்னும் கொஞ்சம் கிட்டே தனக்குள்ளே முனகியது அது

iru kannilum un nyabagam

ஏதோ ஒன்று அவளை பிடித்து இழுப்பதுப்போல் தோன்றியது. அவளுக்கு. இதயத்துக்குள் எச்சரிக்கை மணி, உடலெங்கும் பயத்தின் அதிர்வு.

அந்த நேரத்தில் அவளை இன்னமும் அதிகமாக நெருங்கி வந்தது அந்த வாசம்.

மனதில் இருந்த வெகு சில தைரியத்துளிகள் தந்த வேகத்தை தனது நடையில் அவள் காட்ட எத்தனிக்க 

'மா....த....ங்கி'..... கனிவில் மட்டுமே ஊறியிருந்த அந்த குரல் அவளை பிடித்து நிறுத்தியது.

நின்றுப்போனது அவள் கொலுசொலி. கிணற்றினுள்ளிருந்து எழும்பி மேலே வர முயன்றது அது. '

ஏன்? நின்றுப்போனது அவள் கொலுசொலி? வரவில்லையா அவள்? மா...து...ம்மா மாது..ம்மா. நீ வரணும் பக்கத்திலே வரணும்......

'மா...த...ங்கி.' மறுபடி அழைத்தான் அவன்.

அந்த குரல் யாருக்கு சொந்தம் என்று தெரியாத நிலையிலும், பல நாள் பழகியது போன்றதொரு இதமான அழைப்பில் எங்கோ காணாமல் போயிருந்த சுவாசம் ஓடி வந்து அவள் இதயம் சேர்ந்தது.

சட்டென திரும்பியவளின் முகத்தில் நிரம்பியிருந்த கலக்கம் மெல்ல மெல்ல விலகியது. டார்ச் லைட்டின் சின்ன வெளிச்சத்தில் தெரிந்தது அவன் முகம்.

ஒ! இவனா? அந்த வாசம் அவன் சட்டையிலிருந்து எழுந்த perfume வாசமா?

சின்ன புன்னகையுடன் 'நீ.....ங்.....களா..? என்றாள் அவள்.

அந்த நீங்களா...? எதை புரிந்துக்கொண்டதால் வந்த வார்த்தை என்பதை புரிந்துக்கொள்ள விரும்பியவனாய் பதில் சொல்லாமலே புன்னகையுடன் அவளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன். முகுந்தன்.

அந்த சின்ன வெளிச்சத்தில் அவன் விழிகள் அவளை மெல்ல மெல்ல அளந்தன.

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

அந்த பாடல் அவன் காதுக்குளே ஒலிப்பது போலே இருக்க அவளை ரசித்தபடியே நின்றிருந்தான் அவன்.

கொஞ்சம் யோசித்திருந்தால் கூட முன்பொருநாள் அவனை அவள் சந்தித்த நேரமும், அவன் அவள் கைப்பற்றிக்கொண்ட விதமும் அவள் நினைவுக்கு வந்திருக்கும். யோசிக்கவில்லை அவள்.

அவள் மனம் முழுவதும் கிணற்றுக்கு அருகில் போவதிலேயே இருந்தது.

நீங்க எப்படி இந்த நேரத்திலே? மெல்ல வெளியே வந்த அந்த வார்த்தையில், வேறு புறம் திரும்பி மெல்ல சிரித்துக்கொண்டன  அவன் கண்கள்.

'உன்னை வரச்சொல்லி விட்டு, உன் வீட்டு வாசலுக்கு ஓடி வந்து நின்று, உனக்கு காவலாய் உன் பின்னாலேயே வந்துக்கொண்டிருப்பவனடி நான். பார்க்கலாம். நான் உன்னவன் என்பதை தெரிந்துக்கொள்ள நீ எவ்வளவு நாள் எடுத்துக்கொள்கிறாய் என்று பார்க்கலாம்.'

'அது நான் கேட்க வேண்டிய கேள்வி. இருட்டிலே தனியா எங்கே மா போறே நீ?'

அ...து.... ஒ... ரு friendஐ பார்க்க.

அது யாருமா? இந்த நேரத்திலே உன்னை வரச்சொன்ன friend? பேரென்ன உன் friendக்கு?

அவள் திரு திருவென விழித்த விதத்தில் கொஞ்சம் கிறங்கித்தான் போனான் அவன். மெல்ல சமாளித்துக்கொண்டு , சட்டென எழுந்த புன்னைகையை மறைத்துக்கொண்டு சொன்னான்...

அவன் பேருக்கூட தெரியாதா உனக்கு? சரியா போச்சு. பேரைக்கூட சொல்லாம உன்னை வரசொல்லிருக்கானா அவன்.? சரியான fraudஆ இருப்பான் போலிருக்கு. அவனை நம்பி நீ போயிட்டிருக்கியா? நல்ல பொண்ணு.  ஒழுங்கா வீடு போய் சேரு.

சட்டென கோபம் பொங்கியது அவளிடம். 'அவர் fraudடெல்லாம் ஒண்ணுமில்லை. ரொம்ப நல்லவர். எனக்கும் அவருக்கும் சீக்கிரம் நிச்சியதார்த்தம் நடக்க போகுது. நான் போறேன்.' விறு விறுவென நடந்தாள் அவள்.

ஹேய்...மாதங்கி அவன் குரலுக்கு நிற்காமல் வேகமாய் நடந்தாள் அவள்.

வள் கோபம் அவனுக்கு கொஞ்சம் நிறைவாகவே இருந்தது. என் மீது உனக்கு இவ்வளவு நேசமா? புன்னகை வந்து சேர்ந்தது அவன் உதடுகளுக்கு.

நடந்தாள் அவள். மீண்டும் ஒலிக்க துவங்கியது அவள் கொலுசொலி. கிணற்றுக்குள் மீண்டும் ஒரு சலசலப்பு. ‘வருகிறாள். அவள் வந்துக்கொண்டே இருக்கிறாள்'

தண்டவாளத்தை தாண்டி சில அடி தூரத்திலே அந்த கிணறு. அதன் அருகிலேயே சில தென்னை மரங்கள். அந்த தென்னை மரங்களின் கிளைகளின் நடுவில் காற்று ஊடுருவி விளையாடிக்கொண்டிருந்தது..

ம்...ம்ஹூம்...ம்  ம்ஹூம்    யாரோ முனகுவதை போலே ஒரு ஒலி திரும்ப திரும்ப கேட்டது.

திடுக்கென்றது அவளுக்கு. பயம் நிரம்பியிருந்த அவள் கண்கள் இங்குமங்கும் சுழன்றன. யாரும் கண்ணில் தென்படவில்லை.

அந்த தண்டவாளமும், கிணறும்  அவள் எண்ணங்களை எங்கெங்கோ இழுத்து சென்றன.

மறுபடி மனதிற்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது கிணற்றின் அருகில் வர வர அவள் நடையின் வேகம் குறைந்தது.

அங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லையே. அவன் இல்லையோ? போய் விட்டானோ? திரும்பி விடலாமா? யோசித்தபோது அந்த டார்ச் லைட்டின் மங்கலான வெளிச்சத்தில் அந்த கிணற்றின் மீது யாரோ அமர்ந்திருப்பது போலே தெரிந்தது.

அந்த உருவம் அவளை கையசைத்து வாவென அழைத்தது.

அந்த கிணற்றைப்பற்றி அவள் அறிந்திருந்த போதிலும் அந்த நேரத்தில் எல்லாமே மறந்துப்போக சட்டென சந்தோஷம் பொங்க. அதை நோக்கி நடந்தாள் மாதங்கி. ஒலித்தது அவள் கொலுசு.

அவள் கொலுசொலியில் மயங்கியது போல் அந்த உருவம் அவளை கை நீட்டி அழைத்துக்கொண்டே இருந்தது.

அவள் நடையில் கொஞ்சம் வேகம் பிறந்தது. அந்த கிணற்றை மிக நெருங்கி அவள் வந்த வேளையில் ,  அங்கே யாருமே தென்படவில்லை.'

அதன் மீது அமர்ந்திருந்தானே அவன். எங்கே போனான்? அவள் கண்கள் தவிப்புடன் தேடின.

கிணற்றுக்கு மிக அருகில் வந்து விட்டிருந்தாள் அவள். கிணற்றுக்குள்ளே தவித்தது அது.

அந்த தண்டவாளத்தில் ரயில் வேகமாய் வந்துக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தின் அருகே ஒரு பூனை வந்துக்கொண்டிருந்தது.

கிணற்றை சுற்றி நடந்தாள் மாதங்கி. யாருமில்லையே இங்கே?

கிணற்றினுள்ளே இங்குமங்கும்  சுழன்றுக்கொண்டிருந்தது அது. அந்த நேரத்தில் அவளே அறியாமல் அவள் கை கிணற்றின் மீது பதிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.