(Reading time: 18 - 36 minutes)

10. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

கோபத்தின் மொத்த உருவமாய் நின்றிருந்தான் பரத். அதிர்ந்து போய் திரும்பினர் இருவரும்.  

என்னதான் தனது தங்கையின் மீது கோபம் இருந்தாலும் அதை பொது இடத்தில் வெளிப்படுத்த விரும்பவில்லை அவன்.

அவர்கள் அருகில் வந்து நின்றவன் பொங்கிக்கொண்டிருந்த கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு  இந்துவைப்பார்த்துக் சொன்னான்  'நீ வீட்டுக்கு போ. நான் பின்னாடியே வரேன்'

Ullam varudum thendral

இல்லைண்ணா....

இ...ந்...து... அதிர்ந்து ஒலித்தது அவன் குரல். சுற்றியிருந்த சிலரின் பார்வை அவர்கள் பக்கம் சட்டென திரும்பியது.

'அண்ணா ப்ளீஸ். இது விஷ்வா ஆபீஸ்.......' கெஞ்சலுடன் சொன்னாள் இந்து.

'ஏன்? அவன் மானம் போயிடும்னு பார்க்கறியா? போகட்டும்.' '

அண்ணா. பாவம்ண்ணா விஷ்வா.....

அந்த வார்த்தை பரத்துக்கு இன்னமும் கொதிப்பேற்றியது. ' இந்து...... இப்போ இங்கே இருந்து நீ போகலைன்னு வெச்சுக்கோயேன்....

டேய்... உயர்ந்தது விஷ்வாவின் குரல். அவளை ஏண்டா மிரட்டுறே? இங்கே பேசு. ஆமாம். உனக்கு தெரியாம நான் ஹாஸ்பிடல் வந்தேன். எங்க அம்மா கூட இருந்தேன். இப்போ என்ன செய்ய முடியும் உன்னாலே.? எனக்கு மானம் மரியாதை பத்தியெல்லாம் கவலை இல்லை. உன்னாலே என்ன செய்ய முடியுமோ செய்.

அடுத்த நொடி அவன் மீது பாய்ந்தான் பரத். விஷ்வாவின் சட்டையை அவன் கொத்தாக பிடித்த நேரத்தில்....

'அண்ணா... இப்போ நீ விஷ்வாமேலே இருந்து கையை எடு. இல்லன்னா நான் இப்படியே விஷ்வாவோட போயிடுவேன். திரும்ப வீட்டுக்கு வரவே மாட்டேன்.' விஷ்வாவை காப்பாற்றிவிடும் தவிப்பில் பட் பட்டென வெளி வந்தன வார்த்தைகள்.

மொத்தமாய் அதிர்ந்துப்போனான் பரத், விஷ்வாவின் மீது இருந்த அவன் பிடி தளர்ந்தது. அவள் அப்படி பேசுவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

கண்களை மூடி கோபத்தை உள்ளே அழுத்திக்கொண்டு சில நொடிகள் மௌனமாய் நின்றவன் ' இந்துமா. நீ வீட்டுக்கு போடா. நாம அப்புறம் பேசலாம். நான் இவனோட கொஞ்சம் பேசிட்டு வரேன்' என்றான்.

'இல்லை. நான் போக மாட்டேன். நீ இங்கே இருந்து போ.'

'நீ என் தங்கச்சிடா. என்னை விட அவன் தான் முக்கியமா உனக்கு?' அவன் குரலில் முன்பு இருந்த கோபம் இல்லை.

'ஆ..மா...ம் அவன்தான் முக்கியம்.' இத்தனை நாள் மனதில் புதைத்து வைத்திருந்த காதலின் வெளிப்பாடாய் அழுத்தம் திருத்தமாய் வெளியே வந்து விழுந்தன அவள் வார்த்தைகள்.

பளீரென்று கன்னத்தில் அரை வாங்கியதுபோல் உணர்ந்தான் பரத். இதயம் துண்டாகி போய் விழுந்ததை போல் தோன்றியது. ஒரு பாசம் மிகுந்த அண்ணனாய் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்தான் அவன்.

அவன் பார்வை ஒரு முறை சுற்றிலும் சுழன்று அங்கே அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மீது பதிந்து, திரும்பி விஷ்வாவை அடைந்தது. அவன் சாதரணமாக பார்த்த பார்வைகூட  பரத்தை சுருக்கென தைத்தது.

பார்வையை திருப்பி இந்துவை சில நொடிகள் பார்த்தவன், அங்கிருந்து விறு விறுவென நகர்ந்து வெளியேறினான்.

தே நேரத்தில் திருச்சியில் தனது கைப்பேசியில், விஷ்வாவின் தங்கையின் எண்ணை அழுத்தினாள் அபர்ணா.

ஹலோ...

ஹலோ! நான் விஷ்வாவோட friend அபர்ணா பேசறேன் நீங்க......

நான் அஸ்வினி பேசறேன். சொல்லுங்க அப்பூ. எனக்கு உங்களை தெரியும். நீங்க போன் பண்ணுவீங்கன்னு விஷ்வா சொன்னான்.

நான் இப்போ உங்க வீட்டுக்கு வரலாமா?

கண்டிப்பா அப்பூ டார்லிங். நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்.

சில நிமிடங்கள் கழித்து அவள் வீட்டை அடைந்திருந்தாள் அபர்ணா.

அஸ்வினியை பற்றி நிறைய சொல்லி இருக்கிறான் விஷ்வா. பிறந்ததிலிருந்தே அவளுடைய ஒரு கால் இயங்கவில்லை என்ற ஒரு சின்ன குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லை அவளுக்கு என்பான் அவன்.

'எனக்கு என்ன குறை. மத்தவங்க நடக்கறதை விட நான் கொஞ்சம் ஸ்லோவா நடக்கறேன் அவ்வளவுதானே? என்பாள் அவள்

மனம் நிறைய உற்சாகமும், அன்பில் நனைந்த வார்த்தைகளுமாய். வளைய வரும் தேவதை இவள். அவள் இருப்பது அவள் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டியுடன். திருச்சியில் ஒரு மழலையர் பள்ளியில் வேலைப்பார்த்துக்கொண்டு குழந்தைகளோடு குழந்தையாய்...

'அப்பூ டார்லிங்.' அஸ்வினி இப்படிதான் அழைத்தாள் அவளை.

'என் தங்கச்சி கிட்டே இந்த உலகத்திலே இருக்கிற எந்த விஷயத்தை பத்தி வேணும்னாலும் கேளு குறைஞ்சபட்சம் ஒரு மணி நேரம் பேசுவா.' சொல்வான் விஷ்வா. உண்மை அது. பேசிக்கொண்டே இருந்தாள் அவள். அவளிடம் கொஞ்சம் மயங்கித்தான் போயிருந்தாள் அபர்ணா.

அபர்ணா அணிந்திருந்த சல்வாரில் துவங்கி எல்லாவற்றை பற்றியும் பேசிக்கொண்டிருந்தவள், மிக இயல்பாய் அவள் கையில் இருந்த கைப்பேசியை  வாங்கினாள் அஸ்வினி.

என்ன போன் இது?. மிக இயல்பாய் அதை இயக்கி பார்த்தவளுக்கு ஒரு நொடி திடுக்கென்றது. அதன் திரையில் சிரித்துக்கொண்டிருந்தான் பரத்.

அது எப்போதோ அவனுக்கே தெரியாமல் அபர்ணா எடுத்த புகைப்படம். அடுத்த நொடி பேசாமல் கைப்பேசியை அபர்ணாவின் கையில் கொடுத்தாள் அஸ்வினி.

அப்பூ டார்லிங் நீங்க சாப்பிட்டுதான் போறீங்க, என்றாள் அஸ்வினி

இல்லை. நான்... வீட்டிலே போய்.

நீங்க வேறே. அப்புறம் விஷ்வா என்னை கொன்னுடுவான் என்றவள் அங்கே அமர்ந்திருந்த தனது பாட்டியை பார்த்து, பாட்டி சாப்பாடு எடுத்து வைக்கறீங்களா? என்றாள்.

பாட்டி நகர்ந்ததும் மெல்லக்கேட்டாள் ' அப்பூ டார்லிங். சட்டுன்னு உண்மையை சொல்லணும் நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா.?

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அபர்ணா. ஏனோ அஸ்வினியிடம் பொய் சொல்ல விரும்பவில்லை அபர்ணா. சின்னப்புன்னகையுடன் தலையசைத்தாள் அவள்.

யாரு? உங்க மொபைலிலே சிரிக்கிறாரே அவரா? --- அடுத்தகேள்வி.

மெல்ல சிரித்தாள் அபர்ணா. 'ம்'.

ஏதோ யோசனையுடன் அப்படியே மௌனமானாள் அஸ்வினி.

அவள் சாப்பிட்டு விடைப்பெற்று கிளம்பியவுடன் தனது பாட்டியிடம் சொன்னாள் அஸ்வினி ' பாட்டி எனக்கு சென்னை போகணும்'

எதுக்குமா? ஏதாவது முக்கியமான வேலையா?

'இல்.. இல்லை.பாட்டி எனக்கு அம்மாவை பார்க்கணும் போலே இருக்கு.' ஒரு முடிவுடன் மெல்ல எழுந்தது அஸ்வினியின் குரல்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.