(Reading time: 19 - 37 minutes)

11. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

விடைபெற தயாரானான் அகன்.

“பார்க்கலாம் ரக்க்ஷு” என்றவன் நிரல்யாவிடம் திரும்பி ஒரு தலையாட்டலில் விடை பெற்றான். ‘தெரிவித்துவிடு  அருகிலிருப்பவனிடம் அனைத்தையும்’ என்ற செய்தி அதில் தெளிவாக தெரிந்தது.

“தங்கை பத்திரம்” என்ற இரு பதத்தை மிரட்டலும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தன் நண்பனை பார்த்து சொல்லிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்த அகன் திரும்பி ரக்க்ஷத்தை ஆழமாக பார்த்தான்.

Kaniyatho kathal enbathu“என்ன ரக்க்ஷு..... எதையோ சொல்ல நினைக்கிறியோ?...என்ன விஷயம்........”

“துவி, ஜேசன் மேரேஜ் அரேஞ்ச்மேண்டை கவனியேன்......அவளை எதுவும் துருவாத.....உன் தங்கயை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.....” தொக்கி நின்றது ரக்க்ஷத்தின் அவ்வாக்கியம்.

அகன் நிதானமாக தன் நண்பன் முகம் பார்த்தான் ஒரு கணம்.

வார்த்தையின்றி தகவல் பறிமாற்றம் காதலில் மட்டுமல்ல நட்பில் கூட நடைமுறைபடும்.

மலர்ந்த  முகத்துடன் அகன் சொன்னான் “ உன் தங்கையை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு”

அகன் முகத்திலிருந்த அந்த மகிழ்ச்சி ரக்க்ஷத் முகத்திலும் அப்படியே பிரதிபலித்தது.

“ஆரா, அகன் மேரேஜ் அரேஞ்ச்மேண்டை கவனியேன்......அவளை எதுவும் துருவாத.....உன் தங்கயை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.....” ரக்க்ஷத் சற்றுமுன் சொன்ன அதே வார்த்தைகளை அவனை போலவே சொன்னான்.

நண்பர்கள் இருவரும் தழுவிக் கொண்டனர்.

நிரல்யா மட்டும் தன் கண்சுருக்கி கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள் நடப்பதை.

‘கல்யாணம் காதலின் காரணமாய் நடக்கவேண்டும், அல்லது இறை தந்தது இது என இயல்பாய் வரும் சம்மதித்தினால் செய்யபடவேண்டும். இதென்ன விதம்?

 இவர்களாக முடிவு செய்துகொண்டு, பெண்களை சம்மதிக்க வைப்பார்களாம்!!?? அதுவும் மண பெண்கள் சம்மதிக்கும் முன்பே திருமண ஏற்பாடு வேறு!! ஆக மண மகன்கள் சம்மதித்துவிட்டால் போதும் போலும்? இவளை நிச்சயம் செய்ய வந்தானே அதுபோலவா?

.இன்று கண் எதிரில் இருப்பவன் மீது கடலளவு காதல் இருந்தாலும், அந்த சிந்தனை அவள் பெண்ணிய உணர்வை குத்தியது அக்கணம். எப்படி பட்டவளையும் நினைத்தவிதமாய் வளைத்துவிடலாம் என்ற ஆணாதிக்க திமிரா இது?’

அகன் அப்படியே சிரித்த முகமாக வெளியேற, இவளிடமாக வந்தான் அவளின் காதல் ரட்சகன்.

யுவராணி யுத்த ராணியாகிட்டீங்கன்னு தெரியுது” என்றவன்.

“இதென்ன கல்யாணம்?.... கல்யாண பொண்ணுங்க சம்மதம் கேட்காமலே அரேஞ்ச்மெண்ட்ஸ்... இந்த ஆம்பளைங்க அடாவடி தாங்கலப்பா...எப்படிபட்டவளையும் நினைச்சமாதிரி வளைச்சுடலாம்ங்கிற திமிர்...மேல்சாவனிசம்..இதான விஷயம்?” சிறு புன்னகையுடன் விளையாட்டாய் கேட்டான்.

ஒருகணம் மிரண்டுபோனாள் நிரல்யா. பின்னே அவள் நினைப்பதை அப்படியே அறிந்து கொண்டால்??..

அவள் முகத்துக்கு நேராக தன் முகம் வரும் விதமாக குனிந்தவன் அவளது கண்களில் தன் கண்களை கலந்தான். கண்கள் உள் உறையும் உயிரின் கோட்டை கதவுகள் என்பதை அனுபவமாய் உணர்ந்தாள் அவள்.

பாவையின் ஆத்துமத்தை தாண்டி ஆவியை தொட்ட அவனது பார்வை பகர்ந்தது,

“காற்றே நீ என் சுவாசம்,

என்னுள் புகுந்து கலந்து திரும்புகிறாய்

அறியாதோ உன் வாசம்

என் அத்தனை திசுக்களும்”

“உன் மனசு புரிஞ்ச மாதிரி என் தங்கைங்க மனசும் எனக்கு புரிஞ்சிருக்கும்னு கொஞ்சம் நம்பேன்” குறும்பு கலந்த கெஞ்சல் வார்த்தையில்.

பேசும் வகை இவனிடம்தான் அறியவேண்டும்.

“உன்னை நானறிவேன்

உன் மனம் அதுவும் அறிவேன்

எண்ண இழைகள் யாவும் புரிவேன்

கண்மணி நீயே என்

கண்களுக்குள் வசிப்பதால்

காதல் சிறை இருப்பதால்

அறியாதது உன்னிடம்

எதுவுமில்லை என்னிடம்”

அவன் புன்சிரிப்பின் புதைபொருள் இது.

இருகணம் இன்ப ஊற்று இதயத்தில் இடமின்றி ஊற்றெடுத்தாலும், ஓரமாக என்றாலும் ஓராயிரம் மடங்காய் நாண நதி கிளைபரப்பினாலும், இதயத்தில் பிறந்த காதல் சுவாசம் நாசி தொடும் முன் நடுவழியில் நின்றது நிரல்யாவிற்கு.

எல்லாம் தெரியுமா? இல்லையே!

ஆரு விஷயம் இவள் அறிந்த கதை தெரியுமா? இல்லை அதற்காக துப்பாக்கி தூக்கி இவள் துப்பறிந்த கதை தான் தெரியுமா?

“சும்மா நினைப்புதான்.....” யோசிக்காமல் வந்து விழுந்தன வார்த்தைகள். ஆரணியிடம் சொல்லிவிட்டு அனைத்தையும் இவனிடம் சொல்வதாகதான் இருக்கிறாள். ஆனாலும்  அவளிடம் இன்னும் சொல்லவில்லையே!

வெளிபட்ட வார்த்தை அதன் விளைவை ஏற்படுத்தாமல் திரும்புமா என்ன?.

“அப்படி என்ன எனக்கு தெரியாது, சொல்லேன் கேட்போம்....” இயல்பாய்தான் கேட்டான். ஆனாலும் இவளுக்குள் ஆயிரம் பதற்றம். ஆரணியை இப்பொழுதே அழைக்கலாமா என்று கூட ஒரு எண்ணம்.

அதற்குள்

வா!” என்றபடி இவள் கை பற்றி அழைத்து சென்றான். சென்றது இவளது வீட்டிலிருந்த ஒரு ஓரத்து அறைக்கு. ஒரு பாக்க சுவர் முழுவது கண்ணாடியால் கட்டபட்டு கண்ணுக்கு விருந்தளிக்கும் அவ்வறை பல நேரங்களில் இவளது சிந்தனை கூடு.

ஆனால் இன்று அடையாளம் தெரியவில்லை.

அறை முழுவதும் ஆயிரமாயிரம் பிங்க் நிற ரோஜாக்கள். நடுவில் வட்டமாக அடுக்க பட்டிருந்தன அதே நிற டிசைனர் காலணிகள் பல.

‘உன் சிறு இழப்பும் நூறு மடங்காய் திருப்பித் தரப்படும்—ரட்சகன்’  என்றதாய் ஒரு குறிப்பு பார்வைக்கு படும் விதமாய்.

பார்த்தவள் இட கை அதுவாக வாய் பொத்த, தன் விழிகளை விரித்தாள் அதன் முழு எல்லைக்குமாக. அவளுக்கு பிடித்தமான பிங்க் நிற வெட்ஜெஸ் பிய்ந்திருந்தது சில நாள் முன்பு. செருப்புதான் என்ற போதும் மனதில் சிறு சலனம். மஞ்சள் வரும் எந்த பிங்க் நிற உடைக்கும் மிக பாந்தமாக பொருந்துமே.

அதை ஒற்றை வார்த்தையில்கூட இவனிடம் புலம்பிய ஞாபகம் இல்லை. உன் மனம் தொடும் சிறு விஷயமும் நான் அறிவேன் என்பதாய்.....இவன் என்ன செய்து வைத்திருக்கிறான்??

காதல் போர் தந்திரத்தில் கரை கண்டவன் நீ!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.