(Reading time: 14 - 27 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 07 - ஜெய்

லோ கௌரி, எப்படி இருக்கே?”  மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌரிக்கு கௌஷிக்கிடமிருந்து போன் வர, இவர் ஏன் இப்போ பண்றார் என்று யோசித்தபடியே போனை எடுத்தாள் கௌரி.

“வெரி பைன் கௌஷிக்.  நீங்க எப்படி இருக்கேள்?.  இது என்ன கார்த்தாலயே போன், அதுவும் வொர்க்கிங் டேல.  சாதாரணமா சண்டே அதுவும் குடும்பமே ஒண்ணா ஹால்ல உக்கார்ந்துண்டு இருக்கும்போதுதானே பண்ணுவேள்”

“அடி கள்ளி, அப்போ உனக்கு என்கிட்ட  தனியா பேசணும்ன்னு இருக்கா, இதை முன்னாடியே சொல்லி இருந்தா, உன் செல் போன்க்கே நீ தனியா இருக்கும்போது  பண்ணி இருப்பேனே.  தேவை இல்லாம நல்ல பையனா ஆத்து போன்க்கு பண்ணி இருக்க மாட்டேனே”

Gowri kalyana vaibogame

“அய்யே அப்படியே பண்ணிட்டாலும், காலேஜ் professor  மாதிரி,  என்ன ப்ராஜெக்ட் பண்ற, டெஸ்டிங்க்கு எந்த டூல் use பண்றேள்.  இந்த மாதிரி வை வா கேள்விகளா கேக்க போறேள்.  இதுக்கு எதுக்கு தனியா பேசிண்டு.  நான் உங்களோட பயமே இல்லாம conference கால் கூட பேசுவேன்”

“கௌஷிக் இது  உனக்கு கிரேட்  இன்சல்ட்டுடா .  ஹ்ம்ம் ஏதோ பாவம் சின்ன பொண்ணாச்சே, ஏடாகூடமாப் பேசினா பயந்துறப் போறியேன்னு பார்த்துப் பேசினா நீ என்னையே கிண்டல் பண்ற.  இனிமேப் பாரு, மாமனோட ரொமான்ஸ் பார்த்து அப்படியே அரண்டு போய்டப் போற.  இன்னிலேர்ந்து கௌஷிக் ரெமோவா மாறப் போறான்.  மனசுல நல்லா Fix பண்ணிக்கோ செல்லம்”

“யாரு, நீங்க ரெமோவா,  நம்பிட்டேன்.   அந்நியனா ஆகாம இருந்தா சரி.  அதை விடுங்கோ. முதல்ல எதுக்கு போன் பண்ணினேள்ன்னு சொல்லுங்கோ”

“சும்மாதான். எனக்கு ஒரு பட்சி வந்து நீ என்னையே நினைச்சு ஏக்கத்துல வாடறதா  சொல்லித்தா அதான், உடனே பண்ணிட்டேன்.”

“அது சரி, அது ஏக்கத்துல வாடலை, இது லஞ்ச் time இல்லை.  அதனால பசில கொஞ்சம் வாடிப் போய் இருந்தேன்.  சரி,  நீங்க சும்மாவெல்லாம் பேச மாட்டேளே.  எங்கியோ இடிக்கறதே.  என்ன பண்ணிண்டு இருக்கேள்  இப்போ?”

“ம்ம், நானா, பீனாவோடையும், பானுவோடையும்  கைல பீரோட கடலை போட்டுண்டு  இருக்கேன்,  நீ என்ன பண்றே”

“ம்ம், நான் மதுவோடையும், மாதவ்வோடையும் கைல மோரோட  அதையே பண்ணிண்டு இருக்கேன்”

“அடிப்பாவி நான் இப்படி சொன்னா உடனே கண்ணை  கசக்கிண்டு அவாளாம் யாருன்னு கேப்பேன்னு பார்த்தா நீ Rhymingல  கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கற.  இதெல்லாம் நன்னா  இல்ல சொல்லிட்டேன்.”

“ஹா, யாரு நானு, கண்ண கசக்கிண்டு.  ஜோக் அடிக்காதீங்கோ.  முடிஞ்சா நாங்கல்லாம் நாலு பேரை அழவைப்போமே  தவிர நாங்க அழ மாட்டோம்.  தெரிஞ்சுக்கோங்கோ.  லைசென்ஸ் இருக்கற என்னோட பேசறதுக்கே ஆயிரம் வாட்டி யோசிக்கறேள்,   இதுல பீனா, பானுவோட பேசிட்டாலும்.  சரி,  இப்போ நீங்க ஏதோ முக்கியமா பேசணும்ன்னுதானே போன் பண்ணினேள்.  அதை சொல்லுங்கோ. எனக்கு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல conference call இருக்கு ஓடணும்.”, என்று தன் தோழிகளுடன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு நடந்து கொண்டே பேசினாள் கௌரி.

“இல்ல கௌரி நீ இப்போ ஒரு ஒண்ணரை வருஷமா வேலைக்குப் போறே இல்ல.  எத்தனை savings வச்சிருக்கே?”,  என்று கௌஷிக் கேட்க, 

 இது என்ன இப்படி கேட்கிறார் என்று கௌரி அதிர்ச்சியாகி ,  “எதுக்கு இப்போ திடீர்ன்னு balance பத்தி எல்லாம் கேக்கறேள்?”, என்று சந்தேகத்தோடு கேட்டாள்.

”என்கிட்ட சொல்றதுல என்ன கஷ்டம், ப்ளீஸ் கௌரி ஒரு விஷயத்துக்காகதான் கேக்கறேன்.  கண்டிப்பா தப்பான எண்ணத்தோட இல்லை.   சொல்லு”,  என்றான்.

“அது ஒரு மூணு லட்சம் இருக்கு, ஆனா .......”, அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே குறிக்கிட்ட கௌஷிக்,

 “அதை அப்படியே உன்னோட அப்பாக்கிட்ட கல்யாண செலவுக்கு கொடுத்துடு”, என்று சொல்ல, ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே தெரியாமல் கௌரி நின்று விட்டாள். 

“கௌரி, ஹலோ கௌரி லைன்ல இருக்கியா. ஹலோ .....”, என்று பலமுறை கௌஷிக் அழைத்த பின்பே சுய உணர்வை அடைந்தாள்  கௌரி.  

“சாரி கௌஷிக் ஒரு நிமிஷம் நீங்க சொன்னவுடனே ஒண்ணும் புரியலை. அதுதான், தேங்க்ஸ் கௌஷிக்.  எங்காத்து நிலவரம் தெரிஞ்சுண்டு என்னைப்  பணம் கொடுக்க சொல்றதுக்கு.... “என்று மனம் நெகிழ்ந்து பேச ஆரம்பிக்க

“ஹே ஸ்டாப் ஸ்டாப், first of all அது நீ கஷ்ட்டப்பட்டு சம்பாதிச்ச பணம், அதை நீ இதுக்காக செலவழின்னு சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது.  அதுனால நான் ஏதோ பெரிசா பண்ணிட்டா மாறி தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதே. நான் ஏன் உன்னை பணம் கொடுன்னு சொன்னேன்னா, உங்க ஆத்துல யாருமே உன் பணத்தை எடுத்து செலவழிக்க மாட்டா.   ஆனா, நான் சொன்னேன்னு நீ அவாகிட்ட சொன்னா   ஓரளவானும் consider  பண்ணுவாளேன்னுதான்.  இப்போ என் சைடுலேர்ந்து கல்யாணத்துக்கு நான் செலவழிக்கறா மாதிரி,  நீ உன் சைடுல பண்ணப்  போறே அவ்வளவுதான். ஆனா நம்ம நாட்டுல அதை அத்தனை ஈஸியா எடுத்துக்க மாட்டா.  பொண்ணு பணத்தை எடுத்து செலவு பண்றதான்னுதான் யோசிப்பா. ” என்று சொல்ல.

“நானே அப்பாகிட்ட இதைப் பத்தி அடுத்த வாரம் பேசலாம்ன்னுதான் இருந்தேன் கௌஷிக்.  நீங்க அதுக்குள்ளே போன் பண்ணிட்டேள்.  ஆனால் எப்படி அவாகிட்ட பணத்தை பத்தி சொல்றதுன்னுதான் தெரியலை.  தப்பா எடுத்துப்பாளோன்னு பயமா இருக்கு”

“ஹே கௌரி நீயா இது.  பேச எல்லாம் யோசிக்கறது.  நம்ப முடியலை.  சரி ஜோக்ஸ் அபார்ட்.  நீ ஒண்ணும் அவாளை எடுத்தெரிஞ்சு பேசப் போறதில்லையே.  சொல்லப் போறதை நிதானமா சொல்லு போறும்.  எப்பவும் யோசிக்காம படார்ன்னு பேசுவியே.  அதை மட்டும் பண்ணிடாதே.  கண்டிப்பா அவா புரிஞ்சுப்பா.  சரியா.  கவலைப்படாதே.  நீ அப்பாம்மாக்கிட்ட பேசினப்புறம் மெசேஜ் பண்ணு.  நான் உன்னைக் கூப்பிடறேன். ஓகே உனக்கு time ஆயிடுத்து.  நீ கிளம்பு அப்பறம் சண்டே சாட்டிங்ல வரேன்.  Bye”, என்றபடியே கௌஷிக் போனை வைக்க, எப்படி அப்பாவிடம் பேசுவது என்று யோசித்தபடியே கௌரி அலுவலகத்திற்குச் சென்றாள்.

ஞாயிறன்று கௌஷிக்குடன் சாட்டிங் முடித்த பிறகு எல்லாரும் ஒன்றாக உக்கார்ந்து காபி குடிக்கும்போது உள்ளறைக்கு போன கௌரி பாஸ் புக்குடன் வந்து ராமனின் அருகில் அமர்ந்து,  “அப்பா, நான் இப்போ பேசறதை தயவு செய்து தப்பா எடுத்துக்காம காது கொடுத்துக்  கேக்கணும். கேப்பேளா, ப்ளீஸ்”, என்று தயங்கியபடியே கேட்டாள்.

ராமன்,  “என்னமா ப்ளீஸ் எல்லாம் சொல்லிண்டு என்ன சொல்லணுமோ பளிச்சுன்னு சொல்லு, புதுசா என்ன தயக்கம் எல்லாம்”, என்றார்.

“இல்லப்பா நான் பேசப் போறதை கரெக்ட் சென்ஸ்ல நீங்க எடுத்துக்கணுமே அப்படின்னுதான்ப்பா.”, என்றாள் கௌரி தயங்கித்தயங்கி.

“கௌரி, நோக்கு என்னாச்சு, புதுசா என்னல்லாமோ பேசற.  ஏதானும் யட்சிணி வந்து உன் உடம்புல பூந்துடுத்தா.  நீ  பேசறா மாதிரியே  இல்லையே. ரொம்ப தெளிவா பேசற”, ஹரி  கிண்டலுடன் கேட்க்க

ராமன்,  “ஹரி சும்மா இரு.  நீ உனக்கு என்ன சொல்லணும்ன்னு தோன்றதோ அதை சொல்லு கௌரி.  அப்பா எதையும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்”, என்று பதில் சொன்னபடியே ஜானகியை என்னவாக இருக்கும் என்று பார்த்தார்.

அவர் எனக்கும் தெரியவில்லையே என்ற லுக்கை விட ராமன் ஜானகியிடமிருந்து தன் லுக்கை கௌரிக்கு இடம் மாற்றினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.