(Reading time: 11 - 22 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 08 - ஜெய்

வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேள் எல்லாரும்? வாம்மா ஸ்வேதா  படிப்பெல்லாம் எப்படிப் போறது.  இரண்டாவது வருஷம் ஆரம்பிச்சாச்சு இல்லை?”, என்று பத்து குடுபத்தாரை வரவேற்றார்  ராமன்.

“ம்ம்ம் படிப்பெல்லாம் சூப்பரா போயிண்டு இருக்கு மாமா.  மன்னி எங்க உள்ள இருக்காளா.  என்ன  பண்ணிண்டு இருக்கா.”  கூடத்திற்கு வந்து அமர்ந்து உள்ளே பார்த்தபடியே கேட்டாள் ஸ்வேதா.

“ஹே வா வா ஸ்வேதா.  வாங்கோப்பா, வாங்கோம்மா.   நான் இங்க இருக்கேன்.  மன்னி எல்லாம் சொல்லாதேயேன் ஸ்வேதா.  சும்மா பேரை சொல்லியே கூப்பிடு. ” உள்ளறையிலிருந்து வந்தபடியே அவர்களை வரவேற்றாள் கௌரி.

Gowri kalyana vaibogame

“ஏன் மன்னி ஏன், உங்களுக்கேன் இந்த நல்ல எண்ணம்.  எங்கம்மா என்னை தொரத்தி தொரத்தி அடிக்கணுமா”

“அய் அங்கயும் இந்த அடி மாரத்தான் நடக்குமா.  எங்க உங்காத்துக்கு வந்தா இதை எல்லாம் மிஸ் பண்ணனுமோன்னு நினைச்சேன்.  இப்போ நீ சொன்னதுக்கப்பறம்தான் நிம்மதியாச்சு.”  (நாத்தனார் அடி வாங்கறதைப் பார்க்கறதுல என்ன ஒரு சந்தோஷம் உனக்கு.  Bad Girl)

“ஏன் மன்னி உங்கம்மாவும் அடிப்பாளா ?”  (ஹா ஹா ஹா, உங்க மன்னி உடம்புல இல்லாத விழுப் புண்களே இல்லை ஸ்வேதா.  அந்த வீரத் தழும்பயெல்லாம் நீ பார்க்கணும்.)

“அடிப்பாளாவா?  பெரட்டி பெரட்டி எடுத்துடுவா”

“ச்சே மாமியைப் பார்த்தா அப்படி தெரியவே இல்லையே.  என்கிட்டக்க எத்தனை பாசமா பேசறா.  நீங்க சும்மாதானே சொல்றேள்.”  (ஸ்வேதா மாமி ஏவுகணை விட்டு நீ பார்க்கலையே.  ஸ்ரீஹரிகோட்டால விடறது கூட sometimes இலக்கு மாறிப் போகும்,  ஆனால் மாமிது குறி தப்பவே தப்பாது)

தன் அம்மாவைப் பற்றி எப்படி இப்படி ஒரு தப்பான முடிவுக்கு வரலாம் என்று கௌரி பொங்கி எழுந்து,  “ஏன்னா நீ அவாளோட பொண்ணு இல்லையே, அதான் அந்த சாந்தம் எல்லாம்.”, விளக்கினாள்.

“ஓ, அது சரி.  அப்போ உங்காத்துல நீங்க, உங்க தம்பி  ரெண்டு பேருமே ரொம்ப விஷமம் பண்ணுவேளோ?  அதுதான் அடிக்கற அளவுக்கு கோவம் வரதா மாமிக்கு?”  (ச்சு, ச்சு உங்க மன்னியோட இத்தனை நேரம் பேசியும் உனக்கு இது தெரியலையா.  ரொம்ப பச்சப் பிள்ளையா இருக்க ஸ்வேதா நீ.)

“ரெண்டு பேருமே பண்ணுவோம்தான்.  ஆனால் இந்த ஹரி இருக்கான் பாரு.  சரியான அமுக்குணி, பண்றதெல்லாம் அமைதியா பண்ணிட்டு ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துடுவான்.  நான்தான் மாட்டிப்பேன்.  அதனால எப்பவுமே ஏவுகணை என்னை நோக்கியேதான் பாயும்.” (ஹரி நீ இல்லாதப்பவும் உன் பேரை damage பண்றாடா உங்க அக்கா.)

“ஹா ஹா ஹா. சூப்பர் மன்னி.  கௌஷிக் உங்கள மாதிரியேதான்.  வீட்டுல அவன் இருந்தா வீடு எப்பவும் சந்தக் கடை மாதிரிதான் இருக்கும்.  அம்மா, அப்பா, இல்லை என்கூட ஏதானும் வம்பு வளர்த்துண்டே இருப்பான்.  நான் பேசுவேன்னாலும் அவன் அளவுக்கு கிடையாது.  சமயத்துல அவன் சொல்றதுக்கு பதில் கூட சொல்லத் தெரியாம முழிச்சிருக்கேன்.” (Oh My கடவுளே. இப்போவே கல்யாணத்துக்கு அப்பறம் கௌரியும், கௌஷிக்கும் சேர்ந்து இருக்கும்போது உங்க வீடு எப்படி இருக்கும்னு தெளிவா தெரியுது.)

“அச்சோ, இத்தனை அப்பாவியா நீ ஸ்வேதா.  கவலையே படாதே.  இனி கௌஷிக் உன்னை என்ன சொன்னாலும் உனக்குப் பதிலா நான் அவருக்கு கவுன்ட்டர் கொடுத்துடறேன்.  இந்து நமக்குள்ள டீல், ஓகேயா?”  (மாட்னடா கௌஷிக் நீ)

“வாடிம்மா மாட்டுப் பொண்ணே.   இன்னும் ஆத்துக்கே வரலை. அதுக்குள்ள நாத்தனார் கூட சேர்ந்து கூட்டுப் போட்டாச்சா.”, இவர்கள் இருவரும்  பேசுவதைப் பார்த்து சிரித்தபடியே லச்சு மாமி  கேட்க, எப்பவும் போல் தன் பெண்ணின் வாயைப் பார்த்து ஜானகிதான் டென்ஷன் ஆக ஆரம்பித்தாள்.

“கௌரி என்னதிது, கண்டபடி பேசிண்டு. பெரியவா இருக்காளேன்னு கொஞ்சமானும் வாயை அடக்கறியா.”, என்று பல்லைக் கடித்தபடியே ஜானகி கேட்டார். 

ஆஹா அம்மா இருக்கறது தெரியாம ஏடாகூடமா பேசிட்டோமா.  இதுக்கு நம்மள ஓட விட்டு அடிப்பாளே என்று மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் கௌரி. 

“அச்சோ என்ன மாமி இது. குழந்த இப்படியே கலகலன்னு பேசிண்டு சந்தோஷமா இருக்கட்டும்.  சின்ன வயசுலேர்ந்தே நான் ரொம்ப shy type.  யாரோடையும் அத்தனை சீக்கிரம் பேச மாட்டேன்.  கல்யாணம் ஆகிப் போன புதுசுல, இவாத்துல வாய் ஓயாம எல்லாரும் வளச்சு வளச்சுப் பேசறதைப் பார்த்து கொஞ்சம் அரண்டு  போயிட்டேன்.  என் மாமியார் என்னோட பேசிப் பேசியே  கொஞ்ச கொஞ்சமா என்னை மாத்தினார்.    மனசு விட்டு எல்லாரும் என்னோட நல்ல படியா பேசிண்டு இருந்ததால எனக்கு புது இடத்துக்குப் போன நினைப்பே வரலை.  இதே என்னை மாதிரியே என் மாமியாரும் ரொம்ப பேசாத மாதிரி இருந்து இருந்தா என்ன ஆகறது.  வர்ற பொண்ணு போரடிச்சுப் போய் ஓடிடும்.  அதனால கௌரி நீ என்னைக்கும் மாறாம இப்படியே இரு.” என்று மொத்தமாக தன் மருமகளுக்கு வக்காலத்து வாங்கினார் லக்ஷ்மி.

(லச்சு மாமி, இதைத்தான் எங்க ஊருல, சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறது அப்படின்னு சொல்லுவா.  அவளே நிறுத்தாம பேசுவோ, இதுல நீங்க வேற பச்சைக் கொடியை ஆட்டிட்டேள். இனி கல்யாணத்துக்கு அப்பறம் உங்காத்துல நான் ஸ்டாப் நான்சென்ஸ் தான்)

த்து மாமாவோ மைன்ட் வாய்ஸில் எங்க அம்மா பண்ணின தப்புலையே பெரிய தப்பு இவளைப் பேச வச்சதுதான். என்னைக்கு இவ பேச ஆரம்பிச்சாளோ அன்னைக்கு நான் நிறுத்திட்டேன் என்று பேசிக் கொண்டிருந்தார். 

இவர்கள் வாயையே பார்த்துக் கொண்டிருந்த மாமாக்கள் ரெண்டு பேரும், இவாளை விட்டா நமக்குப் பேச சான்சே கிடைக்காது, சந்து கேப்ல புகுந்துட வேண்டியதுதான் என்று யோசித்து பேச ஆரம்பித்தார்கள்.  (கரெக்டா உங்க மாமிகளை புரிஞ்சு வச்சுண்டு இருக்கேள் மாமாஸ்)

“அப்பறம் ராமன், கல்யாண ஏற்பாடு எல்லாம் எப்படி போயிண்டு இருக்கு.  சத்திரம் ஏதானும் பார்த்தேளா.  “

“ம்ம் ரெண்டு மூணு சத்திரம் பார்த்து வச்சிருக்கோம்.  மாம்பலத்துல 2  அப்பறம் வடபழனில ஒண்ணுன்னு பார்த்திருக்கோம்”

“நீங்க இங்கயே குரோம்பேட்டை பக்கத்துலையே பார்த்திருக்கலாமே.  உங்களுக்கு போக வர சுலபமா இருக்குமே.  சிட்டி அவுட்டர்ன்னா சத்திர வாடகையும் குறையுமே. ”, என்று பெண் வீட்டாரின் சௌகர்யத்தை முன்னிறுத்திக் கேட்டார் பத்து.

“அது சரிதான்.  ஆனால் நீங்க வேளச்சேரிலேர்ந்து வரணும்.  தவிரவும் கல்யாணத்துக்கு வர மத்தவாளுக்கும், சிட்டிக்குள்ளன்னா போக்குவரத்து ஈஸியா இருக்குமே.  அதுதான் அங்க பார்த்தேன்.”, என்று காரணங்களை விளக்கினார்.

“இங்க பாருங்கோ ராமன், வரவாளாம் எங்க வச்சாலும் வரணும்ன்னு நினைச்சா வருவா.  உங்க ஆத்துப் பக்கத்துலனா ஏதானும் எடுக்கணும் கொள்ளனும்ன்னாக்கூட சுலபமா இருக்கும். “

(பத்து சார் ஆனாலும் அநியாயத்துக்கு நல்லவரா இருக்கேள்.   கதைல  எல்லாரும் உங்களை ஹீரோவா ப்ரொமோட் பண்ணிடப் போறா)

“இல்லை பத்மநாபன்,  மொத்தமா காண்ட்ராக்ட்ல விட்டுடலாம்ன்னு நினைக்கிறோம்.  நான் போன 3 சத்தரத்திலையுமே அப்படிதான் சொன்னா.  இப்போலாம் சமையக்காறாளே  மொத்த காண்ட்ராக்ட் எடுத்துக்கறா.  நாமப் போய் இறங்கரதுலேர்ந்து கட்டுசாதக் கூடை வரை அவா பாடு.  நாமளும் இதை மறந்தோமா அதை மறந்தோமான்னு அல்லாட வேண்டாம்.”

“நீங்க சொல்றது ரொம்ப சரி ராமன்.  நாம ஜோசியர் குறிச்சு குடுத்த நாள்ல எது முடிவு பண்ணலாம்ன்னு இருக்கேள். “

“அவர் 9, 10, 12, 13 நாலு நாள் சொன்னார் இல்லையா.  அதுல பனிரெண்டாம் தேதி ரொம்ப நன்னா இருக்கு.  மறுநாளும் முஹூர்த்த நாள்ங்கறதால உங்காத்துக்கு வரும்போதும் நல்ல நாளா இருக்கும். ”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.