(Reading time: 7 - 14 minutes)

04. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி

 

நறுமீன் பாதம் புரிவித்த செய்தி

பட்டதும் விழி தொட்டதும்

பம்மிய பாதம் செப்பியதே!

நின் முன் நிற்பதும் வேண்டா

இச்சந்திப்பு நீளவும் வேண்டா

அரியணை வேண்டா வேண்டா

அது தரும் அதிகாரம். கொற்றவ!

உனக்காய் பெண்டீர் ஆயிரம் உண்டு. அது யாமில்லை காண்.(1)

 

ஷெஷாங்கன் தோல்வி அறிதல்

நிமிர்ந்தவன் அதிர்ந்தான்.

தார் தோற்றறியான்

தன் தேர் தோற்றறியான்

கரி, பரி, குறி, கைவாள், குறுவாள்,                       

சொல், செயல், {tooltip}சூள்,{end-link}சூளுரைத்தல்{end-tooltip}  தோள் எதிலும் தோல்வி கண்டறியான்;  

அறிந்தனனே தோல்வியின் அரிச்சுவடி

அணங்கிவளின் தூய்மை எனும் ஆயுதம்பால்.(2)

 

நறுமீனின் ஆயுதம்

நாணமற்ற நிலா முகம் செப்பிய தூய்மை

எதிர் பார்வை ஏற்ற இரு கண்கள் காட்டிய தூய்மை

ஆடி தேகம் மூடிய கலிங்கம் சுட்டிய கண்ணிய தூய்மை

என்போல் நீயும் வெறும் மனு என்றதாய் நின்ற நிமிர்வின் தூய்மை

அடையுமோ என் பெண்மை உன்னிடம் நோவு எனமருண்ட மாண்பின் தூய்மை

அத்தனையும் ஆயுதமாய், கொற்றவனோ நிராயுதனாய்! (3)

 

நறுமீன் மன குமுறலை உணர்ந்த ஷெஷாங்கன்

கோனே சரியா? கோல் செய் முறையா?

கன்னியரும், காளையரும், காதல் நோய் காணா பாலகரும்

கண்ணெதிரே நீ செய்யும் முன்மாதிரி மறுமணம் இதுவோ?

கொற்றவனே அறியாயோ? கோன் எவ்வழி குடி அவ்வழி.

விதைக்கும் விதை விளையும். அதை நீயும் அறியும்.

உன் மகள் கண்டால் என்னிலை, உனக்கது புரியும்.

என்பதனாய் துடித்த முழு தேகம், மதி தொட்டதே மன்னவனை. (4)

 

ஷெஷாங்கன் மன தீர்மானம்

கவனித்தேன் இக் கன்மலைத்தேன் கண் மலைத்தேன்.

தானும் கெடாமல் தன்னுள் வந்தவரை தீங்கு தொடாமல் காக்கும் தேன்: இவள் தாய்த்தேன்

விர்ரென எரித்தாலும் காயம் சுகம் செய்யும் தேன்: இவள் தகப்பன்தேன்

{tooltip}கசப்பிட்டு{end-link}கசப்பான மருந்து கலந்து{end-tooltip}  குடித்தாலும் உள் சென்று குணம் செய்யும் தேன்: இவள் தியாகத்தேன்

உன் குடி உன் வழி எனும் இஞ்ஞானத்தேன், பண்பில் தேன் அன்பில் தேன் அறிந்தேன்.

மணப்பேன்; மனைவி என்பேன்; அரியணைக்கு ஏற்ற இவள் ராணித்தேன். நினைத்தேன்.

நாட்குறித்தேன், நாளை என்றேன், காதலில்லை மங்கை இவளை மதித்தேன். (5)

 

மையல் வந்த வேளை

தொடர்ந்தது ஒரு உரையாடல்

வெறுத்தாயோ இச்சுயவரம்?

ஆம் என்றனள் அணங்கு

நிறுத்தினேன் இன்றோடு நீ காரணம்.

நன்றி நவின்றாள் நங்கை நிமிர்ந்து.

பயந்தாயோ எனை கண்டு?

தலை குனிந்தாள். மௌனம் சம்மதம்.

பதி தவிர பத்தினி தொடுபவன் சிரமறுக்கும் சட்டம் இயற்றியவன் நான். 

வெட்டும் பார்வை ஒன்று இவளிடமிருந்து அர்ப்பணம்.

நேற்றுவரை நடந்ததென்ன என்றாயோ?

நேர்கொண்ட பார்வை அவளிடம்.

எச்சொல் யார்யார் வாய் கேட்பினும் அச்சொல் மெய்ப்பொருள் காண்பதறிவு!

சிறு புன்னகை அவளிதழில்.பாராட்டு அதன் பொருள்

செத்தனன் ஷெஷாங்கன்.

காதல் நோய் பற்றிற்று. (6)

 

ஷெஷாங்கன் காதல் காரணம்

விரும்புவர் விரும்புவார் வேந்தன்

என்ற பதவிக்காய்.

எனை எனக்காய்

என் சுயம் தொட்டது இப்பூவாய்.

எரித்தாலும் கொதித்தாலும்

இதழ் விரித்து சிரித்தாலும்

அவள் காணவில்லை என்னை என் பதவியாய். (7)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.