(Reading time: 13 - 25 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 13- ஜெய்

ண்டி, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. நீ இப்போதான் ஞாயித்துக்கிழமைகூட ரெஸ்ட் எடுக்காம வேலைக்கு ஓடற. இன்னைக்கானும் ஆத்துல இருக்கலாம் இல்லை.”, வேலைக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த கௌரியிடம் கத்திக் கொண்டிருந்தார் ஜானகி.

“ஏம்மா எனக்கு இன்னைக்கு ஆபீஸ்க்கு கட்டாயம் போகணும்ன்னு வெள்ளிகிழமைலேர்ந்தே சொல்லிண்டுதானே இருந்தேன். என்னமோ இன்னைக்கு கார்த்தாலதான் சொன்னாமாதிரி எதுக்கு கத்தற. இந்த வாரம் மட்டும் இல்லை, இன்னும் மூணு வாரம் இப்படித்தான் இருக்கும். எல்லா நாளும் போய்த்தான் ஆகணும். கொஞ்சம் க்ரூசியல் பீரியட். இந்தப் ப்ராஜெக்ட் ஆரம்பிச்சதுலேர்ந்தே எத்தனை பிஸியா இருக்கேன். எல்லாம் தெரிஞ்சுண்டே கத்தினா எப்படிம்மா. கொஞ்சம் புரிஞ்சுக்கோ.”, கிளம்பும்போது கடுப்பேற்றுகிறாரே என்று அவளும் திருப்பிக் கத்தினாள்.

“என்னது இன்னும் 3 வாரமா, அதெல்லாம் முடியாது. இந்த வாரம் மட்டும் போயிட்டு வா. அடுத்த வாரத்துல இருந்து கல்யாணப் புடவை எல்லாம் வாங்க ஆரம்பிக்கணும். இப்போவே தைக்கக் கொடுத்தாத்தான் கல்யாணத்துக்கு முந்தின நாளானும் நம்ம மணி தருவான். என்னவோ அவன் ஒருத்தன்கிட்ட மட்டும்தான் இந்த ஒட்டுமொத்த குரோம்பேட்டையே தைக்கக் கொடுக்கறா மாதிரி அவன் அலட்றது இருக்கே, தாங்கலை.”

Gowri kalyana vaibogame

“ஏம்மா உலகத்துலேயே அவன் ஒருத்தன்தான் டைலரா. புடவை, நகை எல்லாம் ஒரே நாள்ப் போய் வாங்கிடலாம்மா. ஒரு நாலு புடவை, ரெண்டு நகை செட் வாங்க எத்தனை நேரம் ஆகும். ஒரு மணி நேரமே ஜாஸ்தி. இப்போலாம் கடைலயே டைலரும் இருக்கா. அவாகிட்டேயே தைக்கக் கொடுத்துடலாம். சோ ப்ளீஸ், இந்த மாசம் என்னை ஆளை விடு, அடுத்த மாசம் போய் எல்லாம் வாங்கிக்கலாம். நான் இப்போ கிளம்பறேன். ராத்திரி வர ஒம்போது மணி ஆகும். அதுக்கும் இன்னொரு வாட்டி நான் வந்தப்பறம் கத்தாதே. பக்கத்துத் தெருல இருக்கற அந்த ரெண்டு பேரும் என்னோட ஆபீஸ்க்கு வரா. அதனால கவலைப்படாதே.”

“ஏண்டி உனக்கு என்னைப் பார்த்தா தேவையே இல்லாமக் கத்தறா மாதிரி இருக்கா. நாளைக்கு உன் பொண்ணு வளர்ந்து கல்யாணத்துக்கு நிப்பாப் பாரு அப்போத் தெரியும், நான் கத்தினது சரிதான்னு. ஒரு ஒரு ஆத்துலயும் கல்யாணப் பொண்ணு இப்படியா கால்ல கஞ்சியைக் கொட்டினா மாதிரி ஓடறா. என்னமோ ஆபிசே உன் தலைலதான் ஓடறா மாதிரி ஒரேயடியாப் பேசாதே. அடுத்த மாசம் பொண்டுகள் இருக்கு, குலதெய்வம் கோவிலுக்கு போகணும். நிறைய வேலை இருக்கு. இப்படி எதையுமே யோசிக்காம ஆபீசே கதின்னு நீ கிடந்தா நான் கத்தாம என்ன பண்றது.”, ஆற்றாமையில் பொங்கிக் கொண்டிருந்தாள் ஜானகி.

தான் அடங்காமல் அம்மா மலை இறங்க மாட்டாள் என்று தெரிந்த கௌரி சமாதானக் கொடியைப் பறக்கவிட சமையலறை சென்று தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள். அதை வாங்காமல் ஜானகி முறைத்தபடியே நிற்க, இவர்கள் இருவருக்கும் நடக்கும் Tug of War-ய் சோபாவில் அமர்ந்த படியே ராமனும், ஹரியும் கண்டு களித்தார்கள்.

“ஏம்ப்பா, நான் என்ன இங்க டான்ஸா ஆடிண்டு இருக்கேன். ரெண்டு பேரும் உக்கார்ந்து பார்த்துண்டு இருக்கேள். கொஞ்சம் பேசி உங்க தர்ம பத்தினியை சமாதானப் படுத்தலாம் இல்லை.”, ராமனின் உதவியை கௌரி நாட, ஜானகி முறைத்த முறைப்பில் பேசுவதற்காக எழுந்த ராமன் எழுந்த வேகத்தில் அமர்ந்து விட்டார், ஹரி அந்த முயற்சிக் கூட செய்யவில்லை.( ஹா ஹா ஹா கௌரி நல்ல ஆளை உன் உதவிக்குக் கூப்பிடற. உங்கம்மா சாதரணமா பார்த்தாலே உங்கப்பா பம்முவார். முறைச்சு வேற பார்த்தா, கேக்கவே வேண்டாம்.)

ராமனிடமிருந்தோ, ஹரியிடமிருந்தோ தனக்கு எந்த உதவியும் வராது என்ற முடிவுக்கு வந்த கௌரி, ஹான் சைனாக்காரனையே   சமாளிக்கறோம். அம்மாவை சமாளிக்க முடியாதா. கத்தலுக்கு அடுத்த ஆயுதமான காலில் விழலுக்குத் தயாரானாள் கௌரி. (கௌரி எலெக்ஷன்ல நில்லு. எல்லா ஓட்டும் உனக்குத்தான். கைத் தேர்ந்த அரசியல்வாதி மாதிரியே இருக்க.)

“அம்மா, நீ பேசற விஷயம் எனக்கு புரிய எதுக்குப் பொண்ணு வரணும். அதெல்லாம் வராமையே நீ சொல்றது புரியறதும்மா. பாரு கௌஷிக்கூட பேசறதைக் கூட தியாகம் பண்ணிட்டு ஆபீஸ் போறேன்னா எத்தனை முக்கியமான வேலைன்னு பார்த்துக்கோ. நீயே புரிஞ்சுக்காம கோச்சுண்டா நான் யாருக்கிட்டப் போய் சொல்றது.”, என்று வராத கண்ணீரைத் தன் அம்மாவின் புடவைத் தலைப்பில் துடைத்தாள்.

“இந்த நடிப்பெல்லாம் என்கிட்டக்க வேண்டாம். உங்கப்பா வேண்ணா நீ சொல்றதுகெல்லாம் தலை ஆட்டுவார். நான் இல்லை. போனாப் போகட்டும் இன்னும் ரெண்டு வாரம் time. அதுக்குள்ள வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டு மரியாதையே வீட்டுல இருக்கப் பாரு. இல்லைன்னா உனக்கு வேலை கொடுத்தானே அந்த சைனாக்காரனைப் பார்த்து நான் பேச வேண்டியதா இருக்கும். சொல்லிட்டேன்.”, ஜானகி கெடு வைத்து முடிக்க. எப்படியோ ரெண்டு வாரம் இருக்கே. அதுவரை போதும். திரும்பவும் வேறு ஒரு நாடகத்தை நடத்தி அம்மாவை சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தபடியே கிளம்பினாள் கௌரி.

துக்கு ஜானகி வீணா அவ கிளம்பும்போது கத்தற. பாரு இப்போ உன்னோட பேசினதுல நேரம் ஆச்சுன்னு ஓடு ஓடுன்னு ஓடுவா. உனக்குத்தான் அவ வேலையைப் பத்தி தெரியும் இல்லை. அவ நேரம் அவ கைல கிடையாது. அது அவ ப்ராஜெக்ட் லீடர் கைலதான் இருக்கு. அவ அன்னிக்கு சொல்லும்போது சரின்னுதானே சொன்ன. திடீர்ன்னு என்ன ஆச்சு.”

“சும்மாதான்னா கத்தினேன். நீங்க எப்பவுமே பணம் போச்சேன்னு சோகமா இருக்கேள். ஹரி இது வரைக்கும் கேட்ட இடத்துல எல்லாம் பணம் கிடைக்கலையேன்னு கவலைல இருக்கான், உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு அவ என்னப் பிரச்சனைன்னு என்னைப் பிடுங்கி எடுக்கறா. நேத்திக்கு திடீர்ன்னு கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிண்டு இருக்கு, நான் ஏதானும் பண்ணனுமா. எப்போ ஆபீஸ்ல பத்திரிகை கொடுக்கறது அப்படின்னு கேட்டா. அதுக்குப் பதில் சொல்றதுக்குள்ள, ஏம்மா அப்பா கல்யாண ஏற்பாட்டைப் பத்தி என்னண்ட பேசலைன்னு வேறக் கேள்வி. இன்னைக்கு ஒரு நாள் அவ வேலையைப் பத்தி கத்தினேன்னா எங்க திரும்பி லீவ் எடுக்க சொல்வேனோன்னு ஒரு ரெண்டு வாரத்துக்கு என்னண்ட கேள்வி கேக்க மாட்டா. எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி இதுதான். என்னை என்னப் பண்ண சொல்றேள்.”, தன் கணவனே தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் ஜானகி பொறிந்து தள்ளினாள்.

“சாரி ஜானகி. எனக்கு இந்த விஷயம் தெரியாது இல்லை, அதுனாலதான் உன்னை கேட்டேன். மத்தபடி உன்னைப் புரிஞ்சுக்காம இல்லை. பாரு பணத்தைத் தொலைச்சது நானு, ஆனால் அவகிட்ட மொத்த சமாளிப்பும் நீயும், ஹரியும்தான் பண்றேள். என்னால அவளைப் பார்த்துப் பேசவே முடியலை ஜானகி. குற்ற உணர்வாவே இருக்கு. அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாம மறைக்கறது ஒரு பக்கம்ன்னா, சுலபமா நடக்க வேண்டிய ஒண்ணை, இப்படி சிக்கலாக்கிட்டேனேன்னு வருத்தமா இருக்கு. அன்னைக்கு நீ பணம் போட வேண்டாம்ன்னு சொன்ன உடனேயே கேக்காமப் போயிட்டேன். இன்னும், எங்க கேட்டும் கடைசி நேரம் வரைக்கும் பணம் கிடைக்காத பட்சத்துல எப்படி அவக்கிட்ட சொல்லப் போறோம்ன்னு நினைச்சா கதி கலங்கறது.”

“அப்பா என்னப்பா இது, குற்ற உணர்வு அது இதுன்னு. கௌரி சொன்னாப் புரிஞ்சுப்பாப்பா. கண்டிப்பா இத்தனை நாள் சொல்லாம மறைச்சதுக்காக கோவப்படுவாதான், இல்லைங்கலை. அதுக்காக நீங்க வருத்தப்படறா மாதிரி எதுவும் பேசமாட்டா. அப்பறம் உங்களாலதான் பணம் போச்சுன்னு புலம்பறதை நிறுத்துங்கோ. நமக்கு படற நேரம் அவ்வளவுதான். அம்மா, நான் கோபால் அண்ணா ஆத்து வரைக்கும் போயிட்டு வரேன். என் வேலைப் பத்தி பேசிட்டு அப்படியே எங்கயானும் பணம் கிடைக்குமான்னும் கேட்டுப் பார்க்கறேன்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.