(Reading time: 11 - 22 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 14 - ஜெய்

மாடிப் படிகளில் இருந்து இறங்கிய ஹேமாவை அதிர்ச்சியுடன் பார்த்தபடியே இருந்த கோபால் ஹேமாவின் பின்னால் அவளின் தோழியும் இறங்க மேலும் அதிர்ச்சி அடைந்தான். ஐயோ இவா ரெண்டு பேரும் நாங்க பேசினதை எதுவரை கேட்டான்னு தெரியலையே என்று மனதிற்குள் புலம்பியபடியே அவர்களைப் பார்த்தான்.

“என்ன அண்ணா, அப்படியே திகைச்சுப் போய் நிக்கற. நான் உன் தங்கைதான். ஏதோ பேய், பிசாசைப் பார்த்தா மாதிரியே நிக்கற.”

அதுங்க வந்திருந்தாக் கூட நான் இத்தனை கவலைப்பட்டிருக்க மாட்டேன் என்று மனதிற்குள் நினைத்தபடியே ஹேமாவிடம், “ஆமாம், நீ ஏதோ உன் friend ஆத்துக்கு போய் இருக்கேன்னு அம்மா சொன்னா. நீ என்னாடான்னா மாடிலேர்ந்து இறங்கி வர. நீ போகலையா.”, என்று கேட்டான்.

Gowri kalyana vaibogame

“இதோ இங்க நிக்கறாளே இவதான் என் friend ஸ்வேதா. இவாதுக்குதான் போகக் கிளம்பினேன். அதுக்குள்ள அவளே போன் பண்ணி இங்க வரேன்னு சொல்லிட்டா. சரின்னு கிளம்பின நான் போகவே இல்லை. நான் அம்மாகிட்ட இவாத்துக்குக் கிளம்பறேன்னு சொல்றச்ச அம்மா குளிக்கப் போய் இருந்தா. சரி வந்தப்பறம் சொல்லலாம்ன்னு நினைச்சுண்டு நான் மாடிக்குப் போயிட்டேன். இவளும் உடனே வந்துட்டாளா. அதுதான் பேச்சு சுவாரஸ்யத்துல அம்மாக்கிட்ட கீழ வந்து சொல்ல மறந்து போயிட்டேன். அம்மாவும் நான் போயிட்டேன்னு நினைச்சுண்டு கிளம்பிட்டா.”

“ஓ அப்படியா சரி. நீங்க பேசிண்டு இருங்கோ. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போய்ப் பார்க்கறேன்.”

“இருண்ணா, எங்க ஓடற. இவ ஸ்வேதா அப்படின்னு மட்டும்தானே உன்கிட்ட சொன்னேன். இன்னும் முக்கியமான மாட்டர் சொல்லவே இல்லையே. இவ யாரு தெரியுமா?”

“யாரு, நமக்கு எதானும் தூரத்து உறவா? புதுசா கண்டுபிடிச்சியா.”, ஹேமா தங்கள் பேச்சைக் கேட்டிருப்பாளோ என்ற கடுப்பில் அவளிடம் எரிந்து விழுந்தான்.

“நமக்கு தூரத்து உறவில்லை. இப்போ வந்தாரே ஹரி அண்ணா, அவாளுக்கு ரொம்பக் கிட்டத்து உறவாக ஆகப் போறா.”, என்ற குண்டைத் தூக்கி போட்டாள்.

“என்னடி உளர்ற. ஹரியை இவளுக்கு எப்படித் தெரியும்?”

“கத்தாத அண்ணா. இந்த ஸ்வேதாவோட அண்ணாவைத்தான் நம்ம கௌரி கல்யாணம் பண்ணிக்கப் போறா.”, அடுத்த குண்டைத் தூக்கி போட்டாள்.

இன்னைக்கு மாத்தி மாத்தி நாம அதிர்ச்சி ஆகும் நாள் போல என்று நொந்தபடியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்த கோபால் அவர்களையும் உட்காரச் சொன்னான்.

“இப்போ சொல்லு. இவ கௌஷிக்கோட தங்கையா? உனக்கு எப்படித் தெரியும்? நீ அவாத்துக்கு போய் இருக்கியா? என்கிட்டக்க ஏன் சொல்லவே இல்லை?”, வரிசையாக ஹேமாவைப் பேச விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் கோபால்.

ண்ணா, நடுவுல கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. என்னை இப்படி பதில் சொல்ல விடாம கேள்வி கேட்டுத் தள்ளறயே.   இவ கௌரியோட நாத்தனார் அப்படிங்கறது எனக்கு இப்போதான் தெரியும். First year common அப்படிங்கறதால வேற வேற கிளாஸ்.   இந்த வருஷம்தான் இவ என் கிளாஸ்க்கு வந்தா. இன்னைக்கு நான் இவாத்துக்குப் போறதாத்தான் இருந்தேன். அப்பறம் இங்க பக்கத்துல யார் ஆத்துக்கோ பத்திரிக்கை கொடுக்கணும், so நானே வந்துடறேன்னு சொன்னா. அப்பறம் ஹரி அண்ணா உள்ள வரும்போது பார்த்துட்டுதான் என்கிட்டக்க சொன்னா. சரி வந்து பேசலாம் அப்படின்னு வரும்போதுதான் அண்ணா கரெக்டா நான் இருக்கேனா, இல்லையான்னு கேட்டுண்டு இருந்தா. எனக்குத் தெரியாம பேசணும்னு வேற சொல்லிண்டு இருந்தா இல்லை, அதுதான் அப்படியே மேலே போய்ட்டோம்.”

“இதுவரைக்கும் எல்லாமே சரி. மேல போன ஓகே, ஆனா நாங்க பேசினதைக் கேக்காம இருந்தியா?”, தான் கேட்டக் கேள்விக்கு என்ன பதில் வரும் என்று தெரிந்து கொண்டே கேள்வியைக் கேட்டான் கோபால்.

“ அது எப்படி கேக்காம இருக்கறது. அப்பறம் ஹேமாவை இந்த உலகம் பழிக்காது. அவர் பேசினது ஒரு வரி விடாம ரெண்டு பேருமேக் கேட்டோம். இவக்கூட அவா என்னமோ பெர்சனலா பேசப்போறா, நாம மொட்ட மாடிக்கு வேணா போயிடலாம்ன்னு சொன்னா. நான்தான் வேணாம்ன்னு சொல்லிட்டு படில உக்கார்ந்துண்டு நீங்க பேசினதை முழுக்க கேட்க வச்சேன்.”

“கிழிஞ்சிது போ. கௌரியோட சேர்ந்து சேர்ந்து அவளோட அச்சு அவதாரமா வர்ற நீ. எதெல்லாம் பண்ணக் கூடாதோ அதெல்லாம் கரெக்டா பண்ணு. சரி இப்போ நான் சொல்றதைக் கவனமா கேளு. ஹரி பேசினது எதைப் பத்தியும் நீ கௌரிகிட்ட மூச்சு விடக்கூடாது. மீறி அவக்கிட்ட வாயை விட்டேன்னு வச்சுக்கோ, அப்பறம் உனக்கு பேசறதுக்கு வாய் இல்லாமப் போய்டும்.”

“என்னண்ணா இப்படி மிரட்டற. நான் போய் இதை அவகிட்ட சொல்லுவேனா. அதுதான் ஹரி அண்ணா அவளுக்குத் தெரிஞ்சா கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுவான்னு சொன்னாளே. நான் கண்டிப்பா அவக்கிட்டக்க சொல்ல மாட்டேன்.”

“ரொம்ப நல்லது. இதை மட்டும் மறக்காம, உன் ஓட்டை வாயையையும் விடாம இரு போரும். சரி ஸ்வேதா. நீ ஹரி வந்து சொன்னது எல்லாம் கேட்ட இல்லை. தயவு செய்து உங்க அம்மா, அப்பாகிட்ட போட்டுக் கொடுத்துடாதே. கல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை பிரச்சனையான்னு யோசிக்கப் போறா. கண்டிப்பா ஏதானும் ஒரு வழில நாங்க பணத்தைப் பொறட்டிடுவோம். அதனால கல்யாணம் ஒழுங்கா நடக்காதோ அப்படின்னு யோசிக்காதே.”, என்று ஸ்வேதாவிடமும் கொஞ்சம் கண்டிப்புடன் கூறினான்.

“சாரிண்ணா, நான் அம்மா, அப்பாகிட்டக்க இதை சொல்லப் போறேன். முதலாவது மன்னியாத்துல ஏதாவது ஒண்ணுன்னா கண்டிப்பா அம்மா, அப்பா விட்டுக் கொடுக்க மாட்டா. ரெண்டாவது, பிரச்சனை அப்படின்ன உடனே இவா சம்மந்தம் வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு ரெண்டு பேருமே மெச்யூரிட்டி இல்லாதவா கிடையாது.”

“நீ சொல்றது மத்த விஷயத்துல சரியா இருக்கலாம் ஸ்வேதா. ஆனால் இது பண விஷயம். அதுவும் ராமன் மாமா தொலைச்சுட்டு நிக்கறது சின்ன அமௌன்ட் கிடையாது. இன்னைக்கு உதவி பண்ணிட்டு நாளைக்கு ஏதானும் ஒரு விதத்துல உங்க அப்பாம்மா சொல்லி காட்டினாலோ இல்லை பேச்சு வாக்குல கௌரிகிட்ட சொல்லிட்டாலோ ரொம்பப் பெரிய பிரச்சனை ஆயிடும். அதனாலதான் வேண்டாம்ன்னு சொல்றேன். என்னடா உங்க அப்பாம்மா பத்தி தப்பாப் பேசறானேன்னு நினைக்காதே. இதுதான் நிதர்சனம், புரிஞ்சுக்கோ.”

“நீங்க சொல்ல வரது புரியறது அண்ணா. நான் உங்களை தப்பு சொல்லலை. சரி ஒரு பேச்சுக்கு கேக்கறேன். எல்லா இடத்துலயும் கேட்டுட்டும் பணம் கிடைக்கலைன்னா என்ன பண்றது. கடைசி நேரம் வரைக்கும் வெயிட் பண்ண முடியாது இல்லையா. இன்னும் முழுசா நமக்கு ரெண்டு மாசம்தான் இருக்கு. அதுக்குள்ள எத்தனை வேலை செய்யணும். இதெல்லாம் யோசிச்சுதான் சொல்றேன். அப்பாம்மாக்கிட்ட பேசறேன். கண்டிப்பா ஏதானும் ஒரு தீர்வு கிடைக்கும்.”

“ஓகே ஸ்வேதா. உங்க அப்பாக்கிட்ட பேசலாம். ஆனால் நானும் உன்கூட வரேன். நீ சொல்றதை விட நான் சொன்னா இன்னும் சரியா இருக்கும். அப்பறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். நான் உன்கூட வந்தா எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டா இல்லை. என்னடா கௌரி ஆத்து மனுஷா வந்து பேசாம இவன் வரானேன்னு. எனக்கு ஹேமா எப்படியோ கௌரியும் அதே மாதிரிதான். வித்யாசம் கிடையாது.”

“ச்சே ச்சே இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு. நீங்க சொல்றதை அவா சரியா புரிஞ்சுப்பா. கவலைபடாம வாங்கோ. நாம இப்போவே கிளம்பலாம். சாயங்காலம் அம்மாப்பா பத்திரிகை கொடுக்கக் கிளம்பிடுவா. இப்போ போனாத்தான் ஆற அமர பேச முடியும். ஹேமா நாங்க கிளம்பறோம்.   சாரிடி சாயங்காலம் வரை இருகேன்னுட்டு இப்போவே கிளம்பறா மாதிரி ஆயிடுத்து. இன்னொரு நாளைக்கு வந்து நிறைய நேரம் இருக்கேன்.”

“ஹே எதுக்கு சாரி எல்லாம் சொல்ற. கௌரி அக்காக்கு நல்லது நடக்கப் போறது. எனக்கு சந்தோஷம்தான். நானும் உங்களோடவே வருவேன். ஆனால் நீங்க ரெண்டு பேரும்ன்னா வண்டிலேயே போய்டலாம். ரெண்டாவது நான் ஏதாவது நடுநடுல லொட லொடன்னு பேசுவேன். அப்பறம் அண்ணாக்கு கோவம் வரும். ஆனால் அண்ணா, அங்க போயிட்டு வந்த உடனே என்ன பேசினேள்ன்னு எனக்கு ஒரு வரி விடாம சொல்லணும் சொல்லிட்டேன்.”

“கண்டிப்பா. நீ ஆத்தை பூட்டிண்டு ஜாகிரதையா இரு. நாங்க போயிட்டு வரோம்.”, ஹேமாவிடம் சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.