(Reading time: 17 - 33 minutes)

காதல் நதியில் – 21 - மீரா ராம்

யூரி கை காட்டிய திசையில் பார்த்த இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகியதில் வியப்பேதுமில்லை… ஏனெனில் அங்கு நின்றிருந்தது சாகரியின் உடன் பிறந்த அண்ணன் தினேஷ்… அவனை அங்கு சாகரி சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகம் உணர்த்திய சேதியில் இருந்து அனைவரும் கண்டுபிடித்திருக்கலாம்… ஆனால் அந்நேரம் அனைவரும் தினேஷைப் பார்ப்பதிலேயே இருந்ததால் அவளின் முகமாற்றம் மற்ற அனைவரின் கண்களில் இருந்து தப்பியது…

தினேஷை வரவழைத்தது மயூரி தான்… முகிலன் அவளுக்கு போன் செய்து ரிகா பற்றிய தகவல் சொன்னதும், உடனே வரேன் என்றவள் முதலில் தொடர்பு கொண்டது தினேஷை தான்… தினேஷிடம் சாகரி பற்றி சொல்லி உடனே இந்தியா வர சொன்னாள்.. அவனும் நான்கைந்து நாட்களில் வருவதாக சொன்னான்… சொன்னபடியே முதலில் பெங்களூர் சென்று மயூரியிடம் அவள் தான் தன் உடன்பிறந்த தங்கை என சொல்லவும் முதலில் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பின் சந்தோஷம் கொண்டாள்… அதன் பின் இருவரும் கிளம்பி ஊட்டிக்கு வந்தனர்… முகிலன் தான் அவளை ஷன்வியின் வீட்டிற்கு வர வழைத்தான்… அவளும் வந்துவிட்டாள்… இப்போது வாதாடியும் கொண்டிருக்கிறாள்…

தினேஷ்…. நீங்க… இங்கே ???.. எப்படியிருக்கீங்க… என்ற ஆதர்ஷை தினேஷ் கட்டிக்கொண்டான்… அவனுக்கு பதில் உரைத்தவன், நேரே தங்கையிடம் தான் சென்றான்… அவள் நிதானமாக அவன் பார்வையை எதிர்கொண்டாள்…

kathal nathiyil

என்னை தெரியாதுன்னு சொன்னல்லடி… இப்போ சொல்லுடி… இவரை தெரியாதுன்னு… சொல்லு… என்று மயூரி அதட்ட…. அவள் பதில் பேசாது நின்றாள்…

நான் உன் அண்ணன்டா… தெரியலையாம்மா?.. என்று கேட்க… முகத்தில் எந்த சலனமும் இல்லாது தெரியாது என்றாள்…

தெரியாதா என்ற கோபத்துடன் மயூரி அவளை நெருங்க, அவளை விடு மயூரி, நான் பேசுறேன்… என்ற குரல் கேட்டு திரும்பிய அனைவரும் பார்த்தது காவ்யாவைத் தான்…

அடுத்த கட்ட நாடகத்தையும் முடித்திட வேண்டும் என்று மனதினுள் எண்ணுகிறாயா சாகரி என்று காவ்யா கேட்க, அவளோ மனதில் எழுந்த அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, பேசாமல் நின்றாள்…

என்னையும் உனக்கு தெரியாது இல்லையா?... என்று அவள் பொறுமையாக கேட்க, அவள் ஆம் என்று தலை அசைத்தாள்…

சரி நீ போ என்று அவளை அனுப்பி வைத்தாள் காவ்யா…

சாகரி மெல்ல திரும்பி நடக்க முயற்சித்த போது, அத்தை என்ற குரல் கேட்க, மனதினுள் இன்ப ஊற்று பெருகிய கொஞ்ச நேரத்திலே வடிந்து இருந்த தடம் தெரியாமல் மாயமானது…

அந்த குரல் தனக்கு கேட்கவே இல்லையென்ற தோரணையில் அவள் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து செல்ல, இரு பிஞ்சு கைகள் தன் இரு கைகளையும் பிடித்துக்கொள்வதை பேரதிர்ச்சியுடன் உணர்ந்தாள் அவள்…

சாகரி அத்தை… எப்படியிருக்க… இங்கே பாரு… நீ சொன்ன மாதிரி, நானும் அண்ணனும் டெய்லி என்ன நடந்துச்சு, நாங்க என்ன பண்ணினோம்னு எழுதி வச்சிருக்கோம்… நீ ஏன் அத்தை போன் பண்ணவே இல்ல… எங்களை மறந்துட்டியா?... என்று கண் சற்று கலங்க கேட்ட நந்துவை பார்ப்பதை தவிர்த்தவள், அவள் கையை உருவிக்கொள்ள முயன்றாள்…

அத்தை… நந்து கையை ஏன் எடுத்துவிடுற?... என்னாச்சு அத்தை உனக்கு?... இங்க பாரு என்னை… நீ ஏன் எங்களை பார்க்கவே மாட்டிக்குற?... எங்களைப் பார்த்த்தும் வந்து கட்டிப்பிடிச்சு அழுது முத்தம் கொடுப்பேன்னு நாங்க நினைச்சோம்… ஆனா, இப்போ இப்படி அமைதியா நிற்கிற?... என்னாச்சு அத்தை…?... உடம்பு எதும் சரி இல்லையா என்றவன் அவள் கையை தொட்டுப் பார்த்தபடியே இல்லையே நார்மலா தான இருக்கே… அப்புறம் ஏன் பேசமாட்டிக்குற நீ?... அன்னைக்கு ஏர்ப்போர்ட்டில் மட்டும் அப்படி அழுத… ??? ஏன் அத்தை ???... என்று அவன் கேட்டுக்கொண்டே போக, அவள் தடுமாறினாள்…

போராடி மௌனத்தை கையிலெடுத்தாள் சாகரி…

அத்தை… அண்ணன் கேட்டுட்டே இருக்கான்ல, பேசு அத்தை… அவன் பாவம்… உன்னை எப்படி மிஸ் பண்ணான்னு தெரியுமா?... நீ இப்படி என் அண்ணனை ஏன் கஷ்டப்படுத்துற?... உன்னைப் பார்க்காம இருந்தும் அழுதான்… இப்போ இங்க உன்னைப் பார்த்த பின்னாடியும் அழறான்… என்ற நந்துவை, சித்து முயன்று சமாதானப்படுத்தினான் வழியும் நீரை துடைத்துக்கொண்டே…

நீ சும்மா இரு அண்ணா… இவளுக்கென்ன பிடிவாதம்?... நம்ம கிட்ட பேசாம போனது இவளா?... நாமளா?.. நாமே வழிய வந்து பேசுறோம் பாத்தியா இவ பேசாம போன பின்னாடியும்.. அந்த கொழுப்பு அண்ணா இவளுக்கு…... என்று பொரிந்த நந்துவை வேண்டாம்டா விடு எதுவும் பேசாதே என்றான் அமைதியாக சித்து…

இந்த இரண்டு வருட காலத்தில் பத்து வயதை எட்டிவிட்டான் அல்லவா… அதற்கேற்ற சிறு பக்குவமும் அவன் நடத்தையில் வந்தது…

தங்கையின் கைப்பிடித்தபடி அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு அகல முயன்றான் சித்து…

மயூரிக்கு தான் மனம் தாளவில்லை… உன் மேல உயிரையே வச்சிருந்த இரண்டு பிஞ்சு மனசை இப்படி பேசாம இருந்து கொன்னுட்டியேடி… இப்போ உனக்கு சந்தோஷமா?... என்று கேட்க, மயில் நீ சும்மாயிரு… என்ற சித்து… நாங்க வரோம் மயில்… என்றபடி நடந்தான் மெதுவாக தங்கையுடன்…

எங்கே அண்ணா போகப் போறோம்… ?... என்ற நந்துவின் கேள்விக்கு, நாம மறுபடியும் வெளிநாடு போயிடலாம் நந்து…. எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை… என்றவன் லேசாக அழ…

வேண்டாம் அண்ணா, அழாதே… உன்னை அழ வைச்சவளை நான் சும்மா விட மாட்டேன்… என்றவள், நீ வாண்ணா, எங்கூட என்று அவனை இழுத்து வந்து சாகரியின் முன் நின்றவள், என்னை தெரியலைன்னு சொன்னாலும் பரவாயில்லை… எங்கிட்ட நீ பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை… என் அண்ணங்கிட்ட ஒரு வார்த்தையாச்சும் பேசு சாகரி அத்தை… ப்ளீஸ்… அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்…. ப்ளீஸ் என்று அந்த குட்டித்தங்கை அழ பொறுக்காத அண்ணன், அழாதேம்மா… உனக்கு இருக்குற பாசம் கூட அவளுக்கு இல்லையே… விடு… என் சாகரி இவ இல்லை… என்றவன், தாத்தா பாட்டி கூடவே நாமும் போயிருக்கலாம் நந்து… என்றவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டாள் சாகரி…

இப்போ ஒன்னும் கெட்டுப் போகலை வா, நாமும் போகலாம் அவங்க கிட்டயே… என்று அவன் முடிக்கும் முன், அவன் சாகரியின் அணைப்பில் இருந்தான்….

அழுதாள்… இத்தனை நாள் போட்டுக்கொண்டிருந்த பொய்த்திரை கண் முன்னே கலைந்து காணாமல் போனதை உணர்ந்தவாறு… இப்படி சொல்லலாமா சித்து கண்ணா… என்னை விட்டு போயிடுவீங்களா?... என்று அவள் சிறு பிள்ளையாய் கேட்க,

நீதான் பேசமாட்டிக்கிறியே… அதான்… என்று அவன் விசும்ப, இல்லடா சித்து குட்டி… அத்தை உன்னை விட்டு போகமாட்டேன்… என்றவள், நந்துவை நோக்கி கை நீட்ட, அவள் முகம் திருப்பிக்கொண்டாள்…

என் அண்ணனை அழ வச்சுட்டல்ல, போ உங்கிட்ட பேச மாட்டேன் என்றது அவளது கோப முகம்… அந்த முகம் பற்றி, என்னை மன்னிக்க மாட்டியா நந்து… உன் அண்ணனை அழ வைக்க மாட்டேன் என்றவள் கன்னங்களில் நீர் சரசரவென்று வழிய, அத்தை என்றவள் அதை மென்மையாக துடைத்து சாகரிக்கு முத்தம் கொடுக்க, அவள் நந்துவை இறுக அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள் இருவரையும்…

அவர்களின் அழுகை, குரல், பாசம், அனைத்தும் அங்கு சுற்றி இருந்தோரின் விழிகளையும் ஈரமாக்கியது…. வார்த்தைகள் வராது தொண்டை அடைக்க… அனைவரும் செய்வதறியாது நின்றிருந்தனர்…

ஹ்ம்ம் ஹூம்… அழக்கூடாது… நல்ல பிள்ளைங்க தான நீங்க… என்று இருவரின் முகங்களையும் துடைத்தவள், அப்போது தான் அங்கிருந்தோரை கவனித்தாள்… தான் போட்டுக்கொண்டிருந்த திரை அவிழ்ந்து விட்டதை அனைவரும் அறிந்து கொண்டுவிட்டார்கள்… அடுத்து கேள்வி கேட்பார்கள்… அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்ட வேளையில், மயூரியின் பேச்சு அவளை நனவுலகுக்கு கொண்டு வந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.