(Reading time: 12 - 24 minutes)

01. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

ஹாய்! ஐ’ம் வியன். கவினோட தம்பி, நேத்துதான் மதுரை வந்தேன்.....”

புன்னகையுடன் தன்னை, முழு மண அலங்காரத்திலிருந்த மிர்னாவிடம் அறிமுகபடுத்திக்கொண்ட வியன் ‘மாலை பொன்னான மாலை’ பாடலின் ரஹ்மானை தாராளமாக நியாபகப்படுத்தினான் அனைவருக்கும்.

ஆனால் அவனை அப்பொழுதுதான் முதன் முறை பார்த்த மிர்னாவின் நினைவோ முற்றிலும் வேறாக இருந்தது.

Ennai thanthen verodu

ஓ நீதானா அந்த தம்பி தங்கரத்தினம்...வில்லன் நம்பர் ஃபோர்....ம்கூம் அந்த பேரை இந்த மிர்னா மாகராணிட்ட வாங்ற தகுதி இந்த  வெள்ள சுண்டலிக்கு இல்ல....யாரங்கே! பாவம் போல இருக்கும் இந்த பால் கொழுக்கட்டைக்கு ஏற்ற ஒரு பரிகாச பெயர் கொணர்க....வெயிட்...வெயிட்...பால்கொழுக்கட்டை....இதுவே அட்டகாசமா இருக்கே...என்ன கொஞ்சம் கூட வில்லத்தனமா இல்ல...பிரவாயில்ல பிழச்சு போ...இனிமே உன் பேர் பால்கொழுக்கட்டை...ஷார்ட்டா பி.கே....ஹேய்.. கெக்கேபிக்கே...இது கூட நல்லாதான் இருக்குது.......மிர்னாவின் மனகுதிரை கண்மண் தெரியாமல் நாலுகால் பாய்ச்சலில் பாய அதை வெளிகாட்டாமல் அவனைப் பார்த்து புன்னகையுடன் அடக்கமாக கைகுவித்தாள்.

என் அம்மா கண்ல விழுந்துட்டல்ல....பிகே @ கெக்கேபிக்கே உனக்கு மாங்கல்ய பாக்யம் வந்தாச்சு...நீ எகிறி எகிறி எங்க சுத்தி ஓடினாலும் இழுத்துவச்சு தாலி கட்ட வச்சுடுவாங்கல்ல.......அனுபவி ராஜா அனுபவி ...ஆத்துகாரியின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்...மனதிற்க்குள் பாட்டு அதுவாக வந்தது.

அதே நேரம் இவள் பின்னாலிருந்த கூட்டத்திலிருந்த எவளோ ஒருத்தி “ஏய் அவன் நச்சு பிச்சுனு சும்மா ஹீரோ மாதிரி இல்ல...” என தன் சகாவிடம் வர்ணிப்பது இவள் காதில் விழுந்தது.

போச்சுடி மிர்னி...உன் மானத்தை வாங்க இவங்களே போதும்....இவள் மனம் நொந்து முடியும் முன்

“ஆமாண்டி அழகா அம்சமா....” என்று ஜொள்ளு தொடர்ந்தது.

ஐயோ...மானம் போகுது...இவன் என் வீட்டை பத்தி என்ன நினைப்பான்...எனக்கு கேட்குதுன்னா பக்கத்தில நிக்கும் அவனுக்கும் கேட்கும் தானே...கேட்கும் தானேவா...அவன் முழு செவிடா இருந்திருந்தா கூட கேட்டிருக்கும்...மனம் புலம்ப

அவனோ பந்தாவோ, சங்கடமோ, இகழ்ச்சியோ எந்தவித சிறு முகமாற்றம் கூட இல்லாமல் இயல்பாக அவளை பார்த்து “கிளம்பலாமா...?” என்றபடி அவள் ஏறுவதற்காக அவனது ஜாகுவார் XJன் பின் கதவை திறக்க கைநீட்டினான்.

ஹேய்... நீ குட் பாய்டா பிகே...உனக்கு பாஸ் மார்க் குடுத்துட்டா எம் எம்.......பிழச்சு போ...என்ன எம்.எம் தெரியலையா மிர்னா மகராணி.யோட ஷார்ட் ஃபார்ம்...முத தடவைங்கிறதுனால சொல்றேன்...என மனதிற்குள் அவனை பாராட்டிய மிர்னா அவன் கை கார் கதவை தொடும் முன் அதை பிடித்து திறந்து உள்ளே துள்ளி ஏறினாள்.

எச்சூழலிலும் தன்னியல்பு இழக்காத புயல் அதுதான் மிர்னா.

ஹேய்....நாந்தான் ஃபர்ஸ்ட்...நாந்தான் ஃபர்ஸ்ட்....எப்பூடி? மனதிற்குள் அவனுடன் போட்டி போட்டுகொண்டு வேகமாக சறுக்கிக் கொண்டுபோய் அமர்ந்தாள்.

(என்ன போட்டியா? காருக்குள்ள யாரு முதல்ல ஏறி உட்கார்றது? அதுதான் போட்டி)

ஸ்ஸில் சீட் பிடிப்பதுபோல் அவசரத்தில் ஏறி அமர்ந்தவள் தன் தலையிலிருந்து அருவி போல் வெள்ளையாய் நீளமாய் காரைத் தாண்டி வெளியில் வழிந்து கொண்டிருந்த அந்த வெட்டிங் வெயிலை சட்டென உள்ளிழுத்தாள்.

“ஹேய்...கூல்...கூல்...மெதுவா...” வியன் சொல்லி முடிக்கும் முன் தலையிலிருந்த பகுதி தவிர அந்த வெயிலின் மீதிப் பகுதி ஒரு துணிப்பந்தாய் சுருட்டப்பட்டு காரின் மூலையில் முடங்கியிருந்தது. கைங்கரியம் மிர்னா.

“ப்ரைட்’ஸ் மெய்ட் யாரும் கூட வர்றாங்களா?...” சுற்றும் முற்றும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி மிர்னாவிடம் கேட்டான் வியன்.

கெக்கேபிக்கே புத்திசாலிடா நீ! உனக்கு இதுல ஃபுல் மார்க்...உன்னை யாராவது என்ட்ட இருந்து காப்பாத்தனுமே அதுக்கு கண்டிப்பா ஆள் தேவைனு தெரிஞ்சிவச்சிருக்கியே!...வழக்கம் போல மனதிற்குள் பேசியபடியே வெளியே பார்வையால் தன் தங்கயைத் தேடினாள்.

“அம்மா...” இவள் தன் அம்மா மாலினியைவை கேள்வியாய் அழைக்க அவரோ

“அதெல்லாம் வேண்டாம் மிர்னிமா...வெயில் கசங்கிடும்....சின்ன மாப்பிள்ள நீங்க கிளம்புங்க...நாங்க வந்துடுறோம்...” வாயெல்லாம் பல்லாக தேனொழுகும் குரலில் அந்த யோசனையை நிராகரித்தார் அவளது அம்மா மாலினி.

வெயில் கசங்கும் என்றதும் ‘இதுக்கும் மேலயுமா...?’ என ஆராய்ச்சி பார்வை ஒன்றை அருகில் கண்றாவியாக கசங்கி கிடந்த வெயிலுக்கு தந்தவள், சின்ன மாப்பிள்ள என்ற பதத்தில் தூக்கிவாரிப்போட திரும்பி தன் அம்மா முகத்தைப் பார்த்தாள்.

அடுத்து அவசரமாக அவனைப் பார்த்தாள்.

டேய்! பி.கே...இங்க உன்னை பதியாக்க பெரும் சதியே நடக்குதுன்னு பட்சி சொல்லுது......எங்கம்மாவுக்கு  மருமகனா வர்றதுக்கு பதிலா நீ கொடைகானல்ல குச்சி ஐஸ் வித்து பிழச்சுகிடலாம், பெரிய மனுஷி சொல்லிட்டேன்...புத்திசாலியா புரிஞ்சி நடந்துக்கோ... மிர்னா அவனுக்கு மானசீகமாக அறிவுரை வழங்க, அவள் வீட்டு போர்டிகோவிலிருந்து அந்த கார் கிளம்பியது.

துரையிலிருந்து கொடைக்கானல் நோக்கி பயணம். அங்குதான் மிர்னாவுக்கும் கவினுக்கும் திருமண ஏற்பாடு வெகு விமரிசையாக செய்யப்பட்டிருந்தது.

அண்ணனுக்கான மணப்பெண்ணை அழைத்துச்செல்ல அவனது தம்பியே வந்திருந்தான்.

சிறிது நேரம் மௌனம் காரில். மனதிற்குள் பல கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் மிர்னா.

நிச்சயமாக இந்த அளவுக்கு செல்லும் இத்திருமண ஏற்பாடு என மிர்னா முதலில் நினைக்கவே இல்லை.

அவளது அம்மா மாலினிதான் முதலில் இந்த திருமண விஷயம் குறித்து தொடங்கியது. சர்ச்சில் இவளை பார்த்தார்களாம் அந்த கவினின் பெற்றோர். பிடித்துவிட்டதாம். தங்கள் மூத்த மகனுக்கு மணம் பேசி வந்தார்களாம், இவள் பெற்றோரும் சம்மதிக்க மணம் நிச்சயமாகி விட்டது என்பதுதான் இவளுக்கு தந்த முதல் தகவலே. அதோடு  அவர்கள் எத்தனை பெரிய கொம்பர்கள், கோடீஸ்வரர்கள், பில்கேட்ஸுக்கே பினான்ஸியர்கள் என்ற ரீதியில் ஒரு அல்டாப்பு பில்டப் வேறு.

ஆனால் இடி மின்னலுக்கே இழுத்து வச்சி ஃப்யூஸ் போடுவாளாங்கும் நம்ம மிர்னி என நட்பு வட்டத்தால் நற்சாட்சி பெற்ற மிர்னி @ எம் எம் இந்த சலசலபுக்கெல்லாம் டென்ஷன் ஆவுறதாவது.?

அம்மா மாலினி இட்லிய இமய மலைனும், இடியாப்பத்த இன்டியானா ஸ்பின்னிங் மில்னும்  எப்பவும் உயர்வு நவிற்சி அணிக்கே உதறலெடுக்குற அளவுக்கு உதார் காமிக்கிற பார்டினு மிர்னிக்கு தெரியும்ங்கிறதால, கல்யாணம் நிச்சயமாகி இருக்காதுங்கிற நம்பிக்கையோட, தன் மறுப்பை அம்மாட்டயும் அப்பாட்டயும் சொல்லிப் பார்த்துட்டு சாட்சிகாரன் கால்ல விழுறதவிட, சண்டக்காரன் கழுத்த பிடிக்கலாம்னு ஒரு முடிவோட அந்த கவின் கடுகு டப்பா வீட்ல இருந்து பொண்ணு பார்க்க வரட்டும், கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுகிடலாம்னு கவலையே இல்லாமதான் இருந்தா.

பாட்டி இறந்து பிறகு, பாட்டிவீட்டிலிருந்து இப்பதான் இவள் வீட்டோடு வந்துவிட்ட இவள் தங்கைட்ட கூட தன் திட்டத்தை  சொல்லி, சிரிக்கவே தெரியாத அந்த சிந்தனைவாதி சிரியா அழகியை  கூட சிரிக்க வைத்தாளே.

ஆனா ஒருநாள் இவள் ஜிம்மிலிருந்து வீட்டுக்கு வந்து குளிச்சு முடிசுட்டு, கைல கிடச்ச சல்வாரை எடுத்து போட்டுகிட்டு, கீழ இறங்கி வந்தா ஹால்ல யாரோ ரெண்டு பேர் உட்கார்ந்து இவ அம்மா அப்பாட்ட பேசிகிட்டு இருக்காங்க.

பார்த்ததும் அவங்க இவ அம்மாவோட அலட்டல் கிளப் ஆள்கள் மாதிரி தெரியலையேன்னு அலர்ட் ஆகியிருக்கனும்னு இப்போ தெரியுது...அப்போ பாவம் யாரோ நல்லவங்க வயாசனவங்க.. இப்படி இவ அம்மாட்ட மாட்டிகிட்டாங்களேன்னு போய் அவங்கட்ட நல்லபடியா பேசி அவங்கள காப்பாத்தி வழியனுப்பி வைக்கதான் தெரிஞ்சிது...

அவங்க போன பிறகுதான் இவளுக்கு தெரியுது அவங்கதான் மாப்பிள்ள வீட்டுகாரங்க, அவங்க வந்தது இவள பொண்ணு பார்க்கன்னு...

அடுத்து இனி அந்த மாப்பிள்ளை வர்றப்ப தனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு தெளிவா, பேசி முடிச்சிடனும்னு இவ இங்க படு கேர்ஃபுல்லா இருக்க, அவன் வரவே இல்லை.

அதுக்கு பதிலா கல்யாணம் மூனு வாரத்திலனு தகவல் வருது.

பார்க்காமலே கல்யாணம் பண்ண அவன் என்ன பார்வை இல்லாதவனா? அப்பதான் அந்த கவினை மொதல்ல பிடிக்காம போச்சு தனிப்பட்ட வகையில.

முட்டாள்கள்ல முதல் முட்டாள் யாருன்னு போட்டி வச்சா அது இவனாதான் இருக்கும்னு மிர்னி தன் தங்கை வேரிட்ட பல தடவை அடிச்சு சொல்ல அந்த கவின் காரணமாயிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.