(Reading time: 29 - 57 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 29 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" சிவா ரெடியா ? நித்துமா கார்த்தி போன் பண்ணினானா ? .... அத்தை, மாமா இந்தாங்க பால் குடிங்க ... " என்று அனைவரிடமும் பேசிக்கொண்டு பம்பரமாய் சுற்றிக் கொண்டு இருந்தார் அபிராமி .. 

" அபி .. நீ முதலில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்மா .. எல்லாரும் பத்திரமா வந்திடுவாங்க " என்று சொன்னார் சூர்யா .. அவரின் கனிவான குரலுக்கு பதிலாய் அபிராமியின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.. அதற்குள் ஆகாஷ்- சுப்ரியாவின் மூன்று மாத குழந்தையான மாதவ் அழ தொடங்கினான் .. தனது மகனை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள் சுப்ரியா .. அவளுக்கு உதவ அபிராமியும் செல்ல,

" மருமகளே நீ இரும்மா .. நான் பார்க்குறேன் " என்று அவரை அமர வைத்துவிட்டு குழந்தையிடம் சென்றார் வள்ளி பாட்டி .. அதற்குள் அந்த குட்டி இளவரசனின் அழுகுரலில் பானுமதி, லக்ஷ்மி அனைவரும் வந்துவிட்டனர் ..

VEVNP

ஆம், நம்ம பாட்டி தாத்தா, ஆகாஷ் மொத்த குடும்பமும் சென்னையில்தான் இருந்தனர் . பெரியவர்களின் ஆலோசனையின்படி , நம்ம ஜுனியர்சின்  ஜூனியர்கள் ( வந்துட்டங்கயா .. வந்துட்டாங்க )   எல்லோரும், மீரா தங்கியிருந்த அதே வீட்டில் சில மாதங்கள்  ஒன்றாய் இருப்பதாய் முடிவெடுத்து இருந்தனர் .. கிருஷ்ணன்- மீரா, ஜானகி- ராம் , அர்ஜுனன் - சுபத்ரா, மூவரும் தத்தம் குழந்தைகளோடு கோவிலுக்கு சென்று வர, அவர்களது சாரதியாக பொறுப்பேற்று இருந்தனர்  கார்த்தி, சஞ்சய், மீரா மூவரும்.... ( சரி சரி .... குட்டீஸ் எங்க ?? இருங்க சொல்றேன் )

" அம்மா எல்லாரும் வந்துட்டாங்க " என்று குரல் கொடுத்தாள்  நித்யா .. அவளின் ஆவல் அனைவரையுமே  உற்சாகமாக்க, வாசலுக்கு ஓடி வந்தனர் .. கிருஷ்ணன் -மீராவின் கைகளில் தவழ்ந்தான் சின்ன கண்ணன் .. மகனையே கிருஷ்ணன் ரசிக்க, மீராவின் கண்கள் அபிராமிக்கு நன்றி சொல்லியது .. அவரோ அவளை தாய்மை பெருக்கோடு பார்த்து கண் அசைத்தார் .. பானுவின் கண்கள் ஜானகி மீதே இருந்தது .. வாழ்வே முடிந்து விட்டது  என்று இருந்தவள், புது வாழ்வோடு அவரது முன் நின்றாள் ..

" அண்ணா ... உங்க ஆசையை நிறைவேத்திட்டேன் ...பாருங்க நம்ம ஜானு உங்க பேத்தியோடு வீட்டுக்கு வந்திட்டா" என்றார் மானசீகமாய் .. ரகுராமின் ஆசைப்படி குட்டி ஜானகியே பிறந்திருந்தாள் ..

" ஆமா சுபா எங்க ?" என்றார் சிவகாமி ..

" அவ காரில் இருக்காமா .. கேட்டதுக்கு அர்ஜுன் வந்தாதான் இறங்கி வருவாளாம் " என்றான் கார்த்திக் .. அவன் சொல்லி முடிக்கவும் அடுத்த காரில், புவனா ட்ரைவர்  சீட்டில் இருக்க கைகளில் பெண் சிசுவை ஏந்திக் கொண்டு  வந்தான் அர்ஜுனன் .. அனைவரிடத்திலும் புன்னகையை வீசியவனின் கண்கள் மனைவியை தேடியது ..

" இந்த பிடிவாதக்காரியை நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ " என்று சிலிர்த்துக்  கொண்டே முன்னால் இருந்த கார் கதவை திறந்து விட்டான் .. கையில் தங்களது மகனுடன் இறங்கி வந்தவளுக்கு அர்ஜுனனின் கைகளில் தவழ்ந்த குழந்தையை பார்த்ததும்  மனமெங்கும் உவகை பொங்கி வழிந்தது .. அதை பார்வையாலேயே பருகிக் கொண்டான் அர்ஜுனன் ..

" அஜ்ஜு ........ குழந்தை ..... குழந்தை ....."

" நம்ம பொண்ணுதான் குட்டிமா .. நீதானே ஆசைபட்டு சொன்ன, நமக்கும் பையன் பிறந்தா பொண்ணு தத்தெடுக்கலாம், பொண்ணு பிறந்தா ஆண் பிள்ளை தத்து எடுத்துக்கலாம்னு "

" எனக்காகவா அர்ஜுன் ?" என்று பூரிப்பாய் கேட்ட மனைவியை உரசியபடி நின்றுக் கொண்டே

" ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம் எனக்காக டா "

" உங்களுக்காகவா ? "

" ஆமா .. அப்போதான் நான் நம்ம பெண்ணை அதிகம் கொஞ்சுவேன் ..உனக்கு பொறாமை வரும் .. பொறாமை வந்தா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும்ல" என்று கண்ணடித்தான் ..அதற்குள் கிருஷ்ணனே

" டேய் புது மாப்பிளை, இப்படி எங்களை வெயிலில் வேக வைக்கனும்னு எத்தனை நாளுடா திட்டம் போட்ட ? கொஞ்சம் எங்களையும் கவனிக்கிறது " என்றான் சலிப்பாய் ..

" ஹா ஹா .. " என்று சிரித்துக் கொண்டே குழந்தைகளுடன் வந்து நின்றான் அர்ஜுனன் .. அவர்கள் அறுவரையும் பார்த்து பூரித்து போயினர் அனைவரும் .." வீடே நிறைஞ்சிடுச்சு .. " என்றார் சூர்யா ஆத்மார்த்தமாய் ..

வேலு தாத்தாவோ " டேய் மகனே இனி சமையல் வேலை எல்லாம் நமாதாண்டா பார்க்கணும் அங்க பாரு பொண்ணுங்க எல்லாரும் குழந்தைங்க பார்த்துக்க போயாச்சு ... இனி நமக்கு குறைந்த பட்சம் ஆறு மாதமாவது பழைய கஞ்சிதான் " என்றார் .. தாத்தா சோகமாய் சொன்ன தோரணையில் அனைவருமே வாய்விட்டு சிரித்தனர் ..

ரு வருடத்திற்கு பிறகு,

ஊட்டி,

" அபி குட்டி ...... என்னடா பார்க்குறிங்க ? "  என்று கையில் இருந்த ஒரு வயது மகன் அபிமன்யுவை  கொஞ்சினாள்  சுபத்ரா .. அவள் எதிரில் அமர்ந்து கையில் தன் மகள் அனுபல்லவியுடன் சிரித்தான் ரகுராம் ..

" பார்த்தியாடீ பிசாசே, என் மருமகன் என் மேல எவ்ளோ பாசம் .. என்னையே வச்ச கண் வாங்காம பார்க்குறான்  " என்றான் பெருமையாய் ..

" அய்யே .... உன்னை ஜானு பார்க்குறதே பெரிய விஷயம் இதுல என் அபி செல்லம், உன்னை பார்க்குறானா  ? நெனப்புதாண்டா உனக்கு  " என்றாள்  சுபியும் ..

" கல்யாணம் ஆனாலும் உனக்கு வாய் அடங்குதா ? "

" என் சுபி அப்படித்தான் இருப்பா .. உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை? " என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்து நின்றாள்  ஜானகி .. ரகுராம் பதில் சொல்லுமுன்னே அங்கு அர்ஜுனன் நடந்து போவதை பார்த்த சுபத்ரா

" ஜானு, அபிக்குட்டியை  வெச்சுக்கோ " என்று அவள் கையில் மகனை தந்து விட்டு ஓடினாள் ...

" ஹா ஹா .. புதுசா கல்யாணம் ஆனதா நெனைப்பை பார்த்தியா உன் தோழிக்கு " - ரகுராம் ..

" அவளையும் பார்த்தேன் .. உங்களையும் பார்த்தேன் .. நமக்கு மட்டும் என்ன இப்போதான் கல்யாணம் ஆனதா நினைப்பா ராம் .. இப்படி கல்யாண வீட்டுல பேசிக்கிட்டு இருக்கும்போதே நெருங்கி வந்து நின்ன என்ன நினைப்பாங்க எல்லாரும் ?"

" என்ன நினைப்பாங்க ? என் ஜானுவை விட்டு நான்  இம்மியளவும் பிரிய மாட்டேன்னு நினைப்பாங்க " என்றான்  ரகுராம்  காதலுடன் ..

கணவனும் மனைவியும் காதல் பார்வை பார்த்துக் கொள்ள, அபிமன்யுவின் பிஞ்சு கரங்களோ அனுபல்லவின் கரங்களுடன் மோதிக் கொண்டு இருந்தது..

" அஜ்ஜு  " என்று வேகமாய் ஓடிவந்தாள் சுபத்ரா கையில் பழச்சாறுடன் ..

" ஓடி வந்தியா குட்டிமா ...... எத்தனை தடவை சொல்றது .. ஒரு குழந்தை பெத்த பொண்ணு மாதிரியா நடந்துக்குற நீ ? கீழே விழுந்தா என்னாகும்டா " என்று அவளை தோளோடு அணைத்து  கொண்டு பேசினான் அர்ஜுனன் .. அவன் உயரத்திற்கு எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, காற்றில் கலைந்த அவனது கேசத்தை கலைத்தபடி பதில் தந்தாள் அவனது பத்தினி..

" அஜ்ஜு  அபி பொறந்து ஒரு வருஷம் ஆச்சு .. நான் பூரணமா குணம் ஆகிட்டேன் .. இன்னமும் ஏன் பயப்படுரிங்க நீங்க ?"

" பயம்னு இல்லைடா .. ஆனா அன்னைக்கு நீ வலி தாங்க முடியாமல் அழுத அழுகை இருக்கே " என்று நினைத்து பார்த்தவனின் உடலே நடுங்கியது ..

" ஹ்ம்ம்ம்ம்ம் .... கஷ்டம்தான் அஜ்ஜு ..அந்த வலியில்  கூட என் மனசில் என்ன தோணிச்சு தெரியுமா ?"

" இதோட 800 தடவை சொல்லி இருப்ப டா குட்டிமா "

" இருந்தாலும் நான் ஸ்டில் சொல்லுவேன்,..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.