(Reading time: 23 - 46 minutes)

காதல் நதியில் – 24 - மீரா ராம்

திரவனின் ஒளி கொடுத்த வெளிச்சத்தினால், லேசாக அசைந்த ஆதி, கண் விழித்துப் பார்த்தான் அது வரை அவன் நீந்தி கொண்டிருந்த அவனின் காதல் நதியிலிருந்து எட்டிப்பார்த்து… விடியும் வரை அவன் தூங்கவில்லை… அவளருகிலே இருந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டான்…

அவளிடம் மாற்றம் ஏதேனும் உண்டாகி அவள் சரியாகி விடமாட்டாளா என்ற தவிப்புடன் ஆதர்ஷ் அவளருகில் இருந்தான்…

அவனை மேலும் தவிக்கவிடாமல், அவள் விழிகள் லேசாக அசைந்தது…

kathal nathiyil

அவளின் அசைவு அவனுள் உயிர் சிறிது ஊற்ற, அவளையேப் பார்த்திருந்தான் அவன்…

ஹரீஷ் வேகமாக மருத்துவனாக அவளின் கைப்பிடித்துப் பார்த்தான்…. சீரான சுவாசம் அவளிடமிருந்து வர, சற்றே, ஆசுவாசம் அடைந்தான் ஹரீஷ்…

ரிகா… இங்கே பாருடா… ரிகா… பாருடா… என்று ஹரீஷ் அவளிடம் பேசி, அவள் விழி திறக்க வைக்க முயற்சித்தான்…

அவன் முயற்சிக்கும் பலன் கிடைத்தது… அவள் கண் திறந்தாள்… திறந்தவள் ஹரீஷைப் பார்த்து, அண்ணா, நான்…. எனக்கு……….. என்று இழுக்க…

ஒன்னுமில்லைடா…. உனக்கு…. ஒன்னுமே இல்லம்மா…. என்று சிரித்தவாறே சொல்ல, அவள் விழிகள் அவனருகே இருந்த தினேஷ், காவ்யா, ஷன்வி என்று பார்த்து அறையினுள் ஹரீஷ் இருந்த பக்கம் சுழற்ற….

ஹரீஷ் மெதுவாக ஆதி இருந்த பக்கம் பார்க்க, அவளும் ஹரீஷ் பார்வை சென்ற திசையில் பார்க்க….. அங்கே நின்றிருந்தான் அவளின் ஆதர்ஷ் ராம்…

அவள் பார்வை அவனிடம் சென்றதை உணர்ந்து அனைவரும் வெளியே செல்ல…. அவள் அவனை பரிதவிப்போடு பார்த்தாள்…

அவன் எங்கேயும் செல்லவில்லை…. என்பதே அவளுக்கு போதுமானதாக இருக்க, அவள் விழி மூடி அதனை அனுபவித்தாள்…

இதழ்களில் உதித்த புன்னகையோடு விழிகளில் நிறைவுடன் அவள் அவனைப் பார்த்து பார்த்து திருப்தியடைய…. அவனோ, சுவாசமே இப்போது தான் வந்தது போல் உணர்ந்து மூச்சை அழுந்த இழுத்து வெளிவிட்டான் மெதுவாக…

உன் உதட்டில் உண்டான இந்த சின்ன சிரிப்பு எனக்கு போதும்டி… நேற்று இரவு நான் கொண்ட துயர் அனைத்திற்கும் மருந்தாய்…. என்று அவன் மனம் அவனுக்குள்ளே சொல்லிக்கொண்டது….

மெல்ல அவளருகில் வந்தவன், நான் எங்கேயும் போகலைடா… நீ உடம்பைப் பார்த்துக்கோ…. என்றான்….

அவள் பதிலுக்கு, சாப்பிட்டீங்களா என்று கேட்க….

நீ சாப்பிட்டு தூங்குடா…. நேரத்துக்கு… என்றான் அவன் மெலிதான புன்னகையுடன்….

மெல்ல அவள் எழுந்து அமர்ந்து அவனையேப் பார்க்க, அவனும் அவள் பார்வையை எதிர்கொண்டான் தயக்கமில்லாது…

அவள் விழிகள் கலங்கி, நீர் சூழ்ந்த போது, அவன் வேண்டாம் என தலைஅசைக்க….

நான் சாபம் வாங்கியவள்… என்னை விட்டு விலகிடுங்க…. என்னை மற….ந்து….டு….ங்க…. என்றவள் வார்த்தைகளை கொட்டிவிட்டு, தலை குனிந்து கொள்ள…

நிமிர்ந்து பாருடா… என்று அவன் குரல் அழுத்தமாக சொல்ல…

நீ என்னை மறந்துடுவேன்னு சொல்லு…. நான் நீ சொன்னதை செய்யுறேன்…

அவனின் பதிலில் அவள் அதிர்ந்து பார்க்கையிலே, என்னடா பார்க்குற…. நீ ரசிச்சி, ரசிச்சி, காதலிச்சியே அந்த ராம் தான் நான்… என் மேல உயிரையே வச்சிகிட்டு உன் உயிரை கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கிறியே இப்படி அழுது அழுது… நிஜமாவே உன்னை நான் மறந்துடுவேன் தான்… நான் போயிடுறேன்னு சொன்ன ஒரு வார்த்தையை தாங்க முடியாம, தன்னுணர்வு கொஞ்சம் கூட இல்லாம என் நினைவை மட்டும் மனசுல வச்சிகிட்டு நேற்று நைட் முழுவதும் என் பேரை சொன்னியே சாப்பாடு, தூக்கம் இல்லாம…. கண்டிப்பா உன்னை நான் மறந்துடுவேன் தான்…

முழுசா, 15 மணி நேரம் என் பேரை மட்டும் சொன்னடி…. என் நினைவோட மட்டும் இந்த கட்டிலில் கிடந்தடி…. என் கையை உன் தலையில் வச்சி வருடினப்போ எல்லாம் உன் உளறல் கட்டுப்பட்டுச்சுடி…. இப்படி என் மேல பைத்தியமா இருக்குற உன்னை நான் மறந்துடுவேன் தான் சத்தியமா…

என அவன் அழுத்தம் திருத்தமாக சொல்லி அவளைப் பார்த்தான் ரத்தமென சிவந்திருந்த விழிகளுடன்…

அவனின் பார்வை வீச்சையும், அவனின் வார்த்தைகளையும் தாங்க முடியாதவள் மௌனமாக கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்…

அழு… நீ அழறது இதுதான் கடைசி தடவையா இருக்கணும்… அழு… அழுது தீர்த்துடுடி… இன்றோட நீ அழுகையை மறக்கணும்… அழு… நல்லா…  என்று அவன் சொல்ல, அவள் மேலும் அழுதாள்…

அழுது அழுது ஓய்ந்து போனவளாய் அவள் நிமிர்ந்த போது, அவளருகில் வந்தவன், உன்னை விட்டு நான் விலகமாட்டேண்டி இனி… என்று சொல்ல,

அவள் வேகமாக விலகணும்… நீங்க விலகியே ஆகணும்…. என்று சொல்ல…

உன் மனம் முழுக்க நான் தான் இருக்கேன்… அதை உன்னால மறுக்க முடியுமாடி?... முடியாதுல்ல… அது மாதிரி தான், என் உயிர் உன்னை விட்டு என்னால விலகி இருக்க முடியாதுடா இனியும்… என்னைப்புரிஞ்சிக்கோடா… என்று அவன் கெஞ்சியபடி சொல்ல…

என்னை நீங்க புரிஞ்சிக்கோங்க... ப்ளீஸ்…. நான் சொல்லுறதை கேளுங்க… என்று அவள் சொல்ல….

இத்தனை நாள் நீ சொன்னதை தான் கேட்டேன்… கேட்டு தானே உன்னை நான் பிரிஞ்சி போனேன்… என் வாழ்க்கையில உன்னை பிரிந்து போன அந்த தப்பை திரும்ப நான் செய்ய மாட்டேன்… அதையும் மீறி நீ வற்புறுத்தினால், உனக்காக சம்மதிப்பேன்… ஆனால், அடுத்த கணம் என் உயிரை மாய்ச்சிப்பேன்…

அவனின் வார்த்தைகளை கேட்டவள் எழுந்தே விட்டாள் கட்டிலிலிருந்து…

என்ன வார்த்தை சொல்லிட்டீங்க… என்றபடி நிமிர்ந்தவளின் பார்வை, என்னிடம் இப்படி சொல்ல உங்களுக்கு மனசு எப்படி வந்தது?... சொல்லலாமா நீங்க… இப்படி ஒரு வார்த்தையை  என்ற குற்றச்சாட்டுடன் அவள், அவன் முகம் பார்க்க…

நிஜமா தான் சொல்லுறேன்… அணுஅணுவாய் உன்னை நீயே இப்படி சாகடிச்சிட்டு இருக்குறதை பார்க்குறதுக்கு நான் போய் சேருவது எவ்வளவோ மேல் தாண்டி… என்னை விலக சொன்னா விலகுவேன்… ஆனா, உன் முன்னாடியே செத்து போயிடுவேன்டி… நிஜமா செத்து போயிடுவேன்… இது உன் மேல் ஆணை….

ராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்ற கதறலுடன், அவன் முன் மண்டியிட்டவள், வேண்டாம்… சொல்லாதீங்க… சொல்லாதீங்க… அப்படி… சொல்லாதீங்க…. நீங்க வாழணும்… வாழணும்… நீங்க வாழணும்னு தானே நான் இன்னும் உயிரோட இருக்கேன்…

உங்களை சாக கொடுக்குறதுக்கா நான் அத்தனை துன்பத்தையும் தாங்கி உங்களை விட்டு விலகி போனேன்???... உங்க வாயாலே இப்படி ஒரு வார்த்தையை கேட்குறதுக்கா நான் இன்னும் உயிரோட இருக்கேன்???...

நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும்…. அதை நான் தூரத்தில் இருந்தே பார்த்தாலும் போதும்… போதும்… என்றாள் அவள்…

இப்ப கூட தூரத்தில் இருந்து தான் பார்ப்பேன்னு சொல்லுறியே தவிர, என் கூட சேர்ந்து வாழணும்னு சொல்லலையே நீ?... என்றான் அவன் ஆற்றாமையோடு…

அவள் சிறிது நேரம் அமைதியானாள்… பின், என்னால உங்ககூட சேர்ந்து வாழ முடியாது... எனக்கு அதற்கு கொடுத்து வைக்கலை…. கொடுத்து வைக்கலை… என்றாள் அவள் கண்ணீரோடு…

அப்படி நீயா நினைச்சிட்டு தானே இத்தனை நாள் என்னவளை துடிக்க வைச்ச?... இனியும் அவ துடிக்க நான் விடமாட்டேன்… கொடுத்து வைக்கலை தாண்டி… இத்தனை நாள் உன்னோட துன்பத்துல நான் கூட இருக்க எனக்கு கொடுத்து வைக்கலை தான்…

அய்யோ… புரிஞ்சிக்கோங்க ராம்… உங்க சீதை சொல்லுறதை கேளுங்க…

எதைடா புரிஞ்சிக்கணும்?... எதை கேட்கணும்?... நீ பட்ட கஷ்டத்தை நேற்று பார்த்தப்பவே துண்டு துண்டா நான் சிதைஞ்சு போயிட்டேனே… இனியும் நான் புதுசா நீ சொல்லுறதையும் கேட்டு உன்னை விட்டு விலகி போயி இன்னும் நான் உரு தெரியாமல் அழிஞ்சி போகணுமாடா?... என்று அவன் பொறுமையாக கேட்க, அவளிடமிருந்து பதில் இல்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.