(Reading time: 10 - 19 minutes)

22. கௌரி கல்யாண வைபோகமே - ஜெய்

சிக்னல் விழுந்தவுடன் இடது பக்கம் ஒதுங்கி சாலையின் ஓரத்திற்கு கௌஷிக் வண்டியை விட கத்திப்பாரா சந்திப்பில் கௌஷிக்கின் வண்டியை இடித்துத் தள்ளி விட்டு சுமோ பறந்தது. கௌரியும், கௌஷிக்கும், அவனின் இரண்டு சக்கர வாகனத்திலிருந்து வாகன நெரிசல் மிகுந்த சாலையில் தூக்கி எறியப்பட்டார்கள் .

கௌஷிக் சுமோ தங்களைப் பின் தொடர்வதைப் பார்த்த உடன் இடது பக்க ஓரத்திற்கு வந்து விட்டதால் அவர்களை சுமோ இடித்துத் தள்ளியவுடன் இருவரும் சாலையின் ஓரத்தில் இருந்த நர்சரியில் சென்று விழுந்தனர். அங்கு இருந்த பூத்தொட்டிகளை இடித்துத் தள்ளியபடியே இருவரும் விழ, விழுந்த வேகத்தில் இருவருக்கும் பலமான அடி பட, கௌரி கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள்.   கௌஷிக் தள்ளாடியபடியே எழுந்து கௌரியின் அருகில் செல்ல அதற்குள் அவர்கள் விழுந்ததைப் பார்த்து கூட்டம் கூட ஆரம்பித்தது.

“தலைவரே சொன்ன வேலையைக் கச்சிதமா முடிச்சுட்டேன்”, சுமோவிலிருந்த வாகன ஓட்டி போனில் கூற,

Gowri kalyana vaibogame

“டேய் லைட்டா தானே தட்டினே, உசுருக்கு ஒண்ணும் பாதகம் இல்லையே”

“இல்லை தலைவரே, லேசாதான் தட்டினேன், அப்பால போய் விழுந்தாங்க. விழுந்த வேகத்துல கையோ, காலோ ஒடஞ்சிருக்கும். மத்தபடி பெருசா எதுவும் இருக்காது”

“சரிடா நீ சுமோல நம்பர் பிளேட் மாத்திட்டு ஊருப் பக்கம் போயிரு. ஒரு பத்து நாள் கழிச்சு நானே உனக்கு போன் பண்றேன். அப்பறமா இங்க வந்தாப் போதும், சரியா”

“சரி தலைவரே, நீ சொல்லிட்ட இல்லை. இனி உன் போன் வர்ற வரைக்கும், நான் சென்னை பக்கமே வர மாட்டேன், கவலைய விடு. அப்பாலக்கி துட்டு தலைவரே.....”

“உன்னைப் பத்தியும், உன் வேலையைப் பத்தியும்தான் எனக்கு தெரியுமே சங்கரா, நீ வண்டில ஏறின உடனேயே உன்னோட அக்கௌன்ட்ல பணத்தைப் போட்டுட்டேன். போ போய் பத்து நாள் சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வா”

“ரொம்ப தேங்க்ஸ் தலைவரே. இதுதான் உன்கிட்ட எனக்கு பிடிச்சதே, ரெண்டாவது வாட்டி கேக்கனும்ன்னே வச்சுக்க மாட்டே. கரெக்டா பணத்தைத் தந்திருவ. அடுத்து எதுனா வேல இருந்தாக் கூப்பிடு. பக்காவா காரியத்தை முடிச்சுத் தரேன். இப்போ வைக்கறேன் தலைவரே”, என்னவோ அவர்கள் வீட்டுக் கல்யாணத்தை இவன் கச்சிதமாக முடிப்பதைப் போல் பேசி கைபேசியை வைத்தான் சங்கரன்.

ராமன் வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வீட்டுத் தொலைபேசி அப்பொழுது அழைத்தது. ராமன் அனைவரையும் பார்த்து, “பத்து கூப்பிடறார்ன்னு நினைக்கிறேன். இங்க நாம எல்லாரும் என்ன பேசினோம்ன்னு சொல்றேன்னு சொல்லி இருந்தேன். பொறுமை போய் அவரே கால் பண்ணிட்டார் போல இருக்கு. இருங்க பேசிட்டு வந்துடறேன்”, என்று கூறியபடியே சென்று தொலைப்பேசியை எடுத்து பேச ஆரம்பிக்க, அதில் வந்த செய்தியைக் கேட்டவுடன், “ஐயோ கடவுளே, எப்படி ஆச்சு... எந்த ஹாஸ்பிடல்....... சரி உடனே கிளம்பி வரோம்”, என்று பதை பதைப்புடன் பேசி வைத்தார் ராமன். அவர் கத்தி உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைக் கேட்டபடியே உள்ளறையிலிருந்து ஹரியும், ஜானகியும் வந்தார்கள்.

“என்னாச்சு ராமன். யாருக்கு என்ன. எதுக்கு இவ்வளவு எமோஷனலா இருக்கீங்க. உங்க சொந்தக்காரங்க யாருக்கானும் உடம்பு சரி இல்லையா?”

“இல்லை பாலு சார், நம்ம கௌஷிக்கும், கௌரியும் வண்டில போகும்போது accident ஆகிடுத்தாம். பக்கத்துல இருக்கற பாலாஜி நர்சிங் ஹோம்ல சேர்த்திருக்காங்களாம்”

“ஐயோ காமாட்சி, இது என்ன சோதனை. குழந்தைகள் ரெண்டு பேரும் எத்தனை சந்தோஷமா கிளம்பினா, இப்படி ஆயிடுத்தே. ஏன்னா அடி ரொம்பப் பட்டிருக்கா? வாங்கோ நாம உடனே கிளம்பலாம். சம்மந்திக்கு தெரியுமான்னு தெரியலையே. நீங்க எதுக்கும் ஒரு வாட்டி போன் பண்ணிப் பாருங்கோளேன்”

ராமன் உடனே பத்துவிற்கு அழைத்துக் கேட்க அவர் தனக்கும் போன் வந்ததாகக் கூறி தாங்களும் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.

“ராமன் எனக்கு இது என்னவோ விபத்து மாதிரி தெரியலை, ஏன்னா எனக்கு தெரிஞ்சு கௌஷிக் ரொம்ப பொறுமையா டிராபிக் ரூல்ஸ் follow பண்ணிதான் ஓட்டுவான்.   அதே மாதிரி ராஷ் ட்ரைவிங்கும் கிடையாது”

“பாலு சார் நாம இங்க இருந்து பேசறதுக்கு ஹாஸ்பிடல் போய் பேசிக்கலாம்”

“சரி வாங்க நான் கார்லதான் வந்திருக்கேன். ஆனந்தன் நீங்களும், ராமுவும் உங்க வண்டில வாங்க. நான் இவங்க மூணு பேரையும் என் கார்ல கூட்டிட்டு வந்துடறேன்”

“சரி சார். நாம அங்க மீட் பண்ணலாம்”, என்றபடியே ராமுவும், ஆனந்தனும் கிளம்ப, பாலு தொலைபேசி இலாக்காவிற்கு போன் செய்து ராமு, ஆனந்தன், ராமன் இவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ரெகார்ட் பண்ண சொன்னார்.

“ஏன் பாலு சார், நீங்க எங்களை சந்தேகப் படறேளா, நாங்க ஏதானும் நியூஸ் லீக் பண்ணி இருப்போம்ன்னு”

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை ராமன்”

“பின்ன எதுக்காக எங்களுக்கு வர்ற கால்ஸ் எல்லாம் ரெகார்ட் பண்ண சொன்னேள்”

“இல்லை ராமன். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.   இப்போ நடந்திருக்கறது நிஜமாவே ஒரு விபத்தாக் கூட இருக்கலாம். இருந்தாலும் நாம அவனைப் பிடிக்க திட்டம் போடும்போது இப்படி நடக்கறதால இது விபத்தா இல்லாம இருக்கலாமோன்னு யோசனையா இருக்கு”

“அச்சோ, பேசாம அந்தப் பணம் போனாப் போகட்டும் சார், யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லாம இருந்தாப் போறும். இது எல்லாத்தையும் நிறுத்திடலாம் “, அழுதபடியே கூறினாள் ஜானகி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.