(Reading time: 13 - 25 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 03 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" விதா "

" ம்ம்ம்ம் ?"

" குழந்தையை இங்க கொடு "

Enna thavam seithu vitten

" இல்ல வேண்டாம்ங்க நான் பார்த்துக்குறேன் " என்று சாதுவாய் பதில் அளித்தாள்  அவள்..

" ப்ச்ச்ச் எதையும் சொன்னவுடனே கேட்குற பழக்கமே இல்லையா உனக்கு ? எப்போ பார்த்தாலும் நான் கத்தனும் , நீ சிங்கம் புலியை பார்த்து பயப்படுற மாதிரி பயப்படனும் அப்படிதானே ? "

" அச்சோ இல்ல வானதி ..உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான் .. "

" எனக்கு சிரமம் தர்ற விஷயத்தை  கேட்டு வாங்கி பண்ணிக்கிற அளவு நான் நல்லவள் கிடையாது .. அது உனக்கும் தெரியும் .. என்னாலே என் அண்ணாவின் பிள்ளையை பார்த்துக்க முடியாதா ? ஜீவாவை என் கைல கொடுத்துட்டு நீ படுத்துக்கோ .. நாம இறங்குற ஸ்டேஷன் வர்ற இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு " என்று சொன்ன வானதி, அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ஜீவா, என்ற அந்த குழந்தையை ஏந்திக் கொண்டாள் ... இதுவரை கொதித்து கொண்டிருந்தவளின் முகம் குழந்தையை பார்த்ததும் மிருதுவாய் மாறியது .. லேசாய் சிரிக்கவும் செய்தாள் .. மின்னல் கீற்றாய் எழுந்த அவள் புன்னகையை ரசித்தாள்  கவிதா என்று அழைக்கபட்ட கவிமதுரா .. கவிமதுரா வானதியை விட மூன்று வயது பெரியவள். வானதியின் அண்ணனை மணந்து கொண்டு அவளுக்கு அண்ணி என்ற உறவில் வந்தவள் .. ஆனால் இன்றுவரை  அவளை வானதி

" அண்ணி " என்று அழைத்ததே இல்லை ..

" உனக்கு சிரிக்க கூட தெரியுமா வானதி " என்று கேட்டு வைக்க அவளுக்கும் ஆசைதான் .. " ஆமா , ஆனா என் வீட்டுக்கு நீ வந்த பிறகுதான் நான் சிரிப்பையே மறந்துட்டேன் " என்று அவள் பதில் அளித்துவிட்டால்  ???? வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தவளை மீண்டும் கலைத்தது வானதியின் குரல் ..

" கவிதா, நீ தூங்கனும்னு தான் நான் குழந்தையை கொடுக்க சொன்னேன் .. இப்படி என்னையே வெறிச்சு பார்க்கத்தான் என்னோடு வந்தியா ? "

" தூக்கம் இல்ல  வானதி "

" அதெல்லாம் படுத்தா தூக்கம் வந்திடும் .. கண்ணை மூடிட்டு தூங்கு"

" ம்ம்ம்ம் " என்று சொல்லி கண்களை மூடி படுத்தவ்ளின் மிக அருகில் வானதி பேசுவது போல இருந்தது .. அவளின் உள்மனம்தான் சற்றுமுன் வானதி கேட்ட கேள்வியை எதிரொலித்தது ..

" இப்படி என்னையே வெறிச்சு பார்க்கத்தான் என்னோடு வந்தியா ??"

" நான் எங்கடி உன்னோடு வந்தேன் ... நீயும் சரி உன் அண்ணனும் சரி என்னை கேட்டா என் வாழ்க்கையை திருப்பி போட்டிங்க ? நான் என்னதான் பாவம் பண்ணேன்?? " என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டவளுக்கு தன்னிரக்கத்தில் கண்ணீர் வந்தது . கவிமதுரா, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வானதியின் அண்ணனை மணந்து கொண்டு அந்த வீட்டிற்கு மருமகளாய் வந்தவள். மருமகளுக்கான எந்த அங்கிகாரமும் வழங்கப்பாடாமல் பணிப்பெண் போல நடந்தப்பட்டாள் ..ராணுவ வீரானான அவளது கணவனும், அண்மையில் போரில் உயிரிழந்தான் ..கணவன் இருந்த போதே அத்தனை கொடுமைகளையும் அனுபவித்தவள், அவன் இறந்த பிறகு தினம் தினம் சித்தரவதைக்க பட்டாள் .. வாழ்வதற்கு எந்த ஒரு காரணமும் அன்பு செலுத்த ஒரு உறவும் இல்லாத நேரம் தான் அவள் கருவுற்றிருப்பது தெரியவந்தது ... எந்த ஒரு பெண்ணும் போற்றி மகிழும் தருணத்தை, முகத்தில் அறைந்து கொண்டு வரவேற்ற தாய் அவள்தான் .. தற்கொலை செய்ய எத்தனித்தவளை  தடுத்து நிறுத்தினாள்  வானதி ...

" உன் உயிர் உன் பொறுப்பு ...ஆனா உனக்குள்ள இருக்குறது இந்த வீட்டு வாரிசு ..அதை கொடுத்துட்டு நீ எங்க வேணும்னாலும் போ " என்றாள் .. ஒரு மருத்துபோன உணர்வில் இருந்தாள்  கவிமதுரா .. குழந்தையை ஈன்றெடுத்து கொடுத்துவிட்டு சாகலாம் என்று நினைத்தவளை தாய்மை தடுத்து நிறுத்தியது .. மூன்று மாதங்கள் கடந்திருந்தது .. அன்று,

காலேஜிலே முதல் மாணவியாக வந்திருந்தாள் வானதி .. அவளுக்கு பிடித்த வணிகத்துறையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதித்தாள் .. அந்த நற்செய்தியை கொண்டாட அவளது தாயார் கற்பகம் இனிப்பு செய்து கொண்டிருந்த நேரம், சீக்கிரமே வீட்டிற்குள் நுழைந்தாள்  வானதி ..

" வாடி என் தங்கம் " என்று தன் செல்ல மகளை கொஞ்சினார் கற்பகம் ..

" என்னம்மா பண்ணுற ? "

" உனக்குத்தான் இனிப்பு பண்ணிட்டு இருக்கேன் "

" நல்லதுதான் .. செய் செய் .. ஆனா கொஞ்சமா செய் "

" ஏன் ??"

" பேசுறதுக்கு நேரம் இல்லம்மா " என்றவள் புயலென கவிமதுராவின் அறையில் நுழைந்தாள் ... குழந்தை ஜீவாவை உறங்க வைத்தவள் அந்த நேரம் வானதியை எதிர்பார்க்கவில்லை என்று அவளது பார்வையே சொல்லியது ..

" கவிதா உன் டிரஸ் எல்லாம் எங்க ?" திரு திருவென விழித்துக் கொண்டே இடத்தை காட்டினாள்  கவிமதுரா .. அதை ஒரு  தொடங்கினாள்  வானதி .. " எதற்கு " என்று கேட்க கூட நாவெழவில்லை  அவளுக்கு ..எங்குதன் குழந்தையை  பறித்து விடுவாளோ என்ற பயத்தில் இருந்தாள்  அவள் .. ஆனால்  இவ்வளவு கலவரத்தில் அமைதி காக்க  கற்பகம் ஊமை இல்லையே

" என்னடி வானதி ?"

"..."

" எதுக்கு இவ துணிமணிய நீ அடுக்கி வைக்கிற ? அவளை அனுப்ப போறியா ?"

" ..."

" ஏன் அதை அவ  அடுக்க மாட்டாளா ? "

" அதில்லை அத்தை ... " என்று கவிமதுரா பேச வர,

வானதி இடைபுகுந்து "  அவங்க என்னை தானே கேட்டாங்க ... எனக்கு பதில் சொல்ல தெரியும் .. அஞ்சு நிமிஷம் டைம் இருக்கு அதுக்குள்ள குழந்தைக்கு வேண்டியதை பேக் பண்ணு " என்றாள் . கண்ணீருடனே கவிமதுரா கிளம்பி வாசலில் வர அங்கு ஏற்கனவே இன்னொரு பை இருந்தது .. "  இது வானதியின் பேக் ???" என்று அவள் விழிக்கும்போதே  கற்பகம் அதை கண்டுகொண்டு

" என்னடி இது ?" என்று கத்தினார்...

" ஷ்ஷ்ஷ்ஷ் இப்போ என்னாச்சுன்னு கத்துற மா ?"

" உன் பை ஏன் அங்க இருக்கு "

" இந்தா அம்மா இதை புடி .. "

" என்னடி ...?"

" இது என் புது  செல் நம்பரு .. இது என் அலமாரி சாவி .. நீ என் கல்யாணத்துக்கு சேர்த்து வச்ச நகை ஒரு சவரன் கூட குறையாமல் லாக்கர்ல இருக்கு .. எனக்கு சென்னையில் நல்ல வேலை இருக்கு .. இவ்வளவு நாள் என்னை வளர்த்து படிக்க வெச்சதுக்கு நான் வேலை சேர்ந்ததும் பணம் அனுப்புறேன் " என்று  விடுவிடுவென நடந்தாள் ...

" என்ன வானதி இது ? அக்கம் பக்கம் என்ன நினைப்பாங்க? எங்க போற இப்போ நீ ? "

" என் வாழ்க்கையை தேடி போறேன்.. அவங்க ஒன்னும் நினைக்க மாட்டாங்க . ஆனா நீ கத்துற கத்துல உன்னைத்தான் தப்பா நினைப்பாங்க "

" ஐயோ இந்த நேரம் பார்த்து உங்கப்பா வெளில போயிட்டாரே ... இவளை  ஏண்டி கெளம்ப சொன்ன ? அவளும் உன்னோடு ஒட்டி இருந்து உன் உயிரையும் குடிக்கவா ? உங்கண்ணன் உயிரை வாங்கினது பத்தாதா ?"

" இத பாரும்மா ... நான் மேஜர் என் லைப் ஆ நான் பார்த்துப்பேன் .. இவ ஒன்னும் என் உயிரை குடிச்சிர மாட்டா ... எங்களை நாங்க பார்த்துக்கறோம் " என்று பேசிக்கொண்டே ஒரு ஆட்டோவை பிடித்து  கவிமதுராவுடன்  விட்டு வந்தே விட்டாள்  வானதி .. இதோ இப்போது , ரயில் பயணம் அவளுடன் .. அவள் பேசியதை வைத்து அவளுக்கொரு வேலை இருப்பதை தெரிந்துகொண்டாள்  கவிமதுரா ... ஆனால் நான் ???? என்ற கேள்வி எழுந்தது அவளுக்கு .. ஆட்டோவில் அவள் சொன்னது ஞாபகம் வந்தது ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.