(Reading time: 10 - 19 minutes)

03. விழிகளிரண்டு..! - அன்பு சுடர்

ல்லி மலர்களை அள்ளிச் சென்றது மட்டுமல்லாமல் அவளை நினைக்க மட்டுமே வைத்திருந்த அவன் மனதையும் மலர்களோடு அள்ளிச் சென்றுவிட்டாள்.அவளின் திருமுகமே கண்களில் தோன்றி மறைய,எதிரில் வந்த அப்துல்லா தாத்தாவைப் பார்த்ததும் அவன் கண்கள் மீண்டும் ஒளியேற்றிக் கொண்டன.

அப்துல்லா தாத்தா அவன் வாழும் ஊரில் வாழும் பழம்பெரும் விடுதலைப் போராட்ட வீரர்.தோல்கள் சுருங்கிக் காணப்பட்டாலும் தேகத்தில் அதே வீரமும்,விடுதலை உணர்வும் கொஞ்சமும் அவரிடத்தில் குறையவில்லை.

நீர் கண்டால் சிலிர்க்கும் செடி போல,அவரைக் காணும் போதெல்லாம் தனக்குள் உற்சாகமும்,தான் மேற்கொள்ள வேண்டிய கடமையும் முகிலனிடத்தில் தீப்போல் உண்டாகும்.உண்டாக வேண்டுமென்று அவன் தன் மனதிற்கு சொல்லிக்கொடுத்திருந்தான்.நாம் என்ன நினைக்க வேண்டுமென்று மனதிற்கு நாம் தானே கட்டளையிடவேண்டும்.

Vizhigalirandu

"ஊருக்கு என்னைக்குயா போற?” அன்பும் அக்கறையும் கலந்த குரலில் கேட்டார் பெரியவர்.

“இன்னைக்கு ராத்திரி கெளம்புறேன் ஐயா!”

“உன் தாத்தா மாதிரி இன்னொருத்தர பாக்க முடியாதுயா!..உன்ன பாக்கும்போதெல்லாம் அவன் நெனப்பு தான் வருது..! உன் அப்பாவும் சும்மா இல்ல..20 வயசுலேயே ஆங்கிலேயன் கண்ணுல வெரல விட்டு ஆட்டினவன் இல்ல.அதெல்லாம் நெனைக்கும் போதே ..” குரல் தழுதழுத்தார்.மலைபோல் இருந்தவர் மேல் அருவி வந்து பாய்ந்ததைப் போல் அந்த உணர்வு பொங்கிய கண்களில் நீர் கண்டார்.

முகிலன் தன்னிடம் இருந்த கைக்குட்டையால் அவரின் விழிகளை துடைத்து,” விடுங்க ஐயா!, ஒவ்வொருத்தருக்கும் இங்க ஒரு கனவு இருக்கு.ஆனா உங்க காலத்துல உங்க எல்லாருக்கும் ஒரே கனவு தான் இருந்தது..விடுதலை..அது மட்டும் தான்..உங்கள பத்தியும்,உங்க குடும்பத்த பத்தியும் கவலை படாம..ஒட்டு மொத்த மக்களுக்காக சிந்திச்ச அந்த மனசு இப்ப இருக்க எங்களுக்கு இருக்கா இல்லையானு தெரியலையா..அப்பா தாத்தா காப்பத்த நெனச்சு முடியாம போனத,நான் காப்பாத்தி நம்ம ஊருக்கு கண்டிப்பா கொண்டு வருவேன்யா..இது என் முப்பாட்டன் சோழன் ராஜன் மேல சத்தியம் !” என்று அவன் நரம்புகள் மேலெழுந்து அவன்  சொல்லி முடிக்கும் போது கோபமும்,ஏமாற்றமும் மாறி மாறி அவனுள்ளே எழுந்தன.

“எனக்கு தெரியும்யா..நீ கண்டிப்பா கொண்டுவருவேன்னு எனக்கு தெரியும்யா..உன்கூட எப்பவும் உன் தாத்தாவும் அப்பாவும் இருப்பாங்கயா..உனக்கு தேவையானத இதோ இந்த பெட்டில வச்சிருக்கேன்..எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று அவர் கூறிய நம்பிக்கையில் எவர் கண்ணுக்கும் தெரியாத கடவுள் முகிலனின் கண்களுக்கு புலப்பட்டார்.

அதே நம்பிக்கையோடு அவர் கொடுத்தப் பெட்டியை வாங்கிக்கொண்டு வேகத்தோடும்,தான் சிறுவயது முதலே கொண்டிருந்த அந்தக் கனவோடும் அவரிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டு நடக்கலானான் முகிலன்.

அதே சோழ நடை..

அதே தளராத கம்பீர நடை..

நடந்து செல்லும் நதி கூட எழுந்து நின்று அருவியாய் கொட்டி மகிழும் அந்த தேர் போன்ற நடையைக் கண்டால்..

இவன் அந்த சோழனே தான் என்று தனக்குள் சொல்லி மகிழ்ந்தார் அப்துல்லா பெரியவர்.

கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் சிறிய ஊர் தான் தாராசுரம்.முகிலன் பிறந்து வளர்ந்து,தமிழில் இளங்கலை முடித்ததெல்லாம் அந்த ஊரில் தான்.அவனது தாத்தா பழனிவேலன் அப்துல்லா பெரியவரோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

1857-மார்ச் 29.

மங்கல் பாண்டே தனது உயர் அதிகாரியைச் சுட்டு கொன்றார் “ என்ற செய்தி நாடு முழுவதும் தீப்போல் பரவியது.எங்கு பார்த்தாலும் கலவரங்களும் விடுதலை கோஷங்களும் தீராமல் வளரத்தொடங்கியது.

இந்த செய்தி தமிழகத்தை எட்டிய போது ஆங்கிலேய அரசு தான் பிடித்து அடைத்து வைத்திருந்த இந்தியர்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் துன்புறுத்தத் தொடங்கியது.எவர் எதிர்த்து பேசினாலும் வாயிலே லத்தியைக் கொண்டு அடித்தார்கள்..பாவம் அவர்களுக்கு நாம் மனிதர்கள் என்பதை எப்படி புரியவைப்பது என்பதறியாமல் மக்கள் வலியை பொருத்துக் கொண்டனர்.வந்தாரை வாழவைத்தது மட்டுமன்றி,வந்தவர் ஏறி மிதித்தாலும் பொறுத்திருந்தது நம் முன்னோர் மனம்.இது வீரமல்ல என்று நாம் நினைத்தாலும் ஆயுதங்களின்றி போருக்கு அழைப்பதும்,முதியோரை துன்புறுத்துவதும் போர் நெறிக்கு புறம்பானது என்பதை அந்த அரக்க ஆங்கிலேயர்களிடம் எதிர்ப்பார்த்தது நம் தவறுதான்.

நீங்க எல்லாம் இப்படியே தான் காலத்துக்கும் அடிமையா இருக்க வேண்டியவங்க.உங்களுக்கெல்லாம் எதுக்கு விடுதலை ..” என்று ஓங்கி அடித்தான் அந்த வெள்ளைகார சிப்பாய் பழனிவேலனின் நடுமுதுகில்.

“நீங்க எல்லாம் இந்த நாட்டை விட்டு போற நேரம் நெருங்கிடுச்சு..இனி நாங்க சந்தோஷமா உயிர விடுவோம் ..வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !”என்று அவர் தன் குருதி கொதிக்க கத்தினார்.உடனிருந்த அப்துல்லாவும் மீண்டும் “வந்தே மாதரம்!வந்தே மாதரம் !” என்று உயிர் இனிக்க,உடல் சுருங்க கத்தினார்.சிறையில் வெகுநாட்கள் உணவின்றி இருவரும் மெலிந்து போய் இருந்தனர்.

சில மாதங்கள் சிறையில் இருந்து வெளியேறினர் இரண்டு இளைஞர்களும்..ஆம் அப்போது அவர்களுக்கு வயது 25,26 தான் இருக்கும்.இளமைக்கே உண்டான துடிப்பும்,எதையும் எவ்வளவு கடினமான செயலையும் விரும்பி ஏற்கும் மனம் படைத்திருந்தனர்.

சாலையோர கடை ஒன்றில் ஒரு மாலையில் இருவரும் அமர்ந்து எப்போதும் போல் தேநீர் அருந்தி கொண்டே நாட்டின் நிலை குறித்து ஆர்வமாய் பேசிக்கொண்டிருந்தனர்.

“இது இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் வேலு..நாம கஷ்டபட்டதுக்கெல்லாம் சீக்கிரம் முடிவு தெரிய போகுது..நீ பார்த்துட்டே இரு..சீக்கிரம் இந்த மண்ணு நமக்கான இடமா மாறும்” என்று கீழே குனிந்து கொஞ்சம் மண்ணை அள்ளி நம்பிக்கையோடு சொன்னார் அப்துல்லா.

“ம்ம் ..மங்கல் பாண்டே மாதிரியான வீரன அநியாயமா தூக்குல போட்டுட்டாங்க.அதனால என்ன அடுத்து நான் போவேன்..எனக்கடுத்து நீ வருவ.என் பிள்ள வருவான்..அப்புறம் என் பேரன் வருவான்..என் மனைவி மக்கள் எல்லோரும் வருவாங்க.இந்த ஊரே ஏன் ?இந்த நாடே கிளம்பும்.எவ்ளோ பேர இவங்களால தடுக்க முடியும்னு பாக்குறேன்” என்று சினந்தார் பழனிவேலன்.

அவரின் சொற்களுக்கு சம்மதமாய் அவரின் தோள்கள் மீது தனது கையைப் போட்டுக் கொண்டார் அப்துல்லா.

“அப்பா!,சீக்கிரம் எங்கேயாவது போய்டுங்க..உங்கள தேடி போலீஸ் வீட்டுக்கே வந்துட்டாங்க “என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான் அப்துல்லாவின் மகன் இக்பால்.

“நீ இரு அப்துல்.நான் போய் என்னனு பாத்துட்டு வரேன் “என்று எழுந்தார் பழனிவேலன்.

“வேண்டாம் வேலு..இப்ப நீ போன தேவையில்லாத பிரச்சனைல மாட்டிக்குவ.போனா ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்.இல்லைனா வா இப்படியே வேற எங்கேயாவது கொஞ்ச நாள் மறைஞ்சு இருப்போம்”என்றார் அப்துல்லா.

சிறிது நேர யோசனைக்கு பின்,இக்பாலை பார்த்து ”இக்பால்!நம்ம ஊர் பெருமைக்கு முக்கிய காரணமா இருக்கறது எதுய்யா?”என்றார் பழனிவேலன் அவனின் மழலை கன்னங்களைத் தொட்டுக் கொண்டே.

“நம்ம ஊர் மக்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து காப்பாத்திட்டு வர அந்த கோயில் நிலவறைப் பொக்கிஷம் தான் மாமா” என்றான் இக்பால்.

“ம்ம்..அது நம்மள விட்டு எப்பவும் எங்கேயும் யார்க் கிட்டேயும் போய்ட கூடாது தெரியும் தான ?”

“ஆமாம் மாமா..அது எப்பவும் இந்த ஊர விட்டு போகக்கூடாது”

“ஆனா இப்ப அதுக்கு ஆபத்து வந்திருக்கு.நானும் அப்பாவும் அதை காப்பாத்தி நம்ம ஊர் பக்கத்துல இருக்க சின்ன கெணத்துல வச்சிருக்கோம்.நீயும் குமரனும் நாங்க போனதுக்கு அப்புறம்..”

“மாமா !”என்று அழத் தொடங்கிவிட்டான் இக்பால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.