(Reading time: 4 - 8 minutes)

02. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

தொகுப்பாளர்  விமலாவை சற்று நேரம் வேறு அறையில் இருக்க சொல்லி விட்டு ஸ்ரீதரை அழைக்கும்படி அங்கிருந்த பணியாளரிடம் தெரிவிக்க அவர் சென்று அவனை அழைத்து வந்தார்.

அறையின்   உள்ளே வந்த ஸ்ரீதர் ‘இங்க என்னடா நடக்குது’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.  தொகுப்பாளர் ஸ்ரீதரை வரவேற்று அங்கிருந்த சோஃபாவில் அமர சொன்னார்.  இங்கே நம்மள எதுக்கு வர சொன்னாங்க என்று யோசித்தபடியே ஸ்ரீதர் அமர்ந்தான்.

“வணக்கம் ஸ்ரீதர்.  இந்த நிகழ்ச்சிக்கு எங்க தொலைக்காட்சி சார்பா உங்களை வரவேற்கறேன்”

Vidiyalukkillai thooram

“வணக்கம் மேடம்.  என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தாங்கன்னு தெரியலை.  ஏதோ தப்பு நடந்து போச்சுன்னு நினைக்கறேன்.  கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க.  ஏதோ டெக்னிகல் பிரச்சனை,  அதை சரி பண்ணனும் அப்படின்னு என் கம்பெனிக்கு ஃபோன் வந்தது.  அதுக்காகத்தான் நான் வந்தேன்”

“நாங்கதான் அப்படி பேச சொல்லி சொன்னோம் ஸ்ரீதர்.  நேரடியா உங்களை இந்த நிகழ்ச்சின்னு சொல்லி வர சொன்னா நீங்க வர மாட்டீங்கன்னு தெரியும், அதனாலதான் அப்படி சொன்னோம்”

“அப்படியானும் பொய் சொல்லி என்னை வர சொல்ற அளவு என்ன இருக்கு மேடம்”

“உங்களுக்கு விமலா அப்படிங்கற பொண்ணோட கல்யாணம் நிச்சயம் ஆகி நின்னு போச்சா?”

“ஆமாம், அதுக்கும் நீங்க என்னை இங்க கூபிட்டதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?”, தன் சொந்தப் பிரச்சனையை பற்றி பேச இவர்கள் எதுக்கு கூப்பிட்டார்கள், அதுவும் இல்லாமல் இவர்களுக்கு எப்படி விஷயம் தெரிந்தது என்று புரியாமல் பார்த்தான் ஸ்ரீதர்.

“அப்படி நின்னதைப் பத்தி  எங்க நிகழ்ச்சிக்கு ஃபோன் பண்ணி விமலா குடும்பத்துக்கு  எங்க மூலமா நியாயம் கிடைக்க பேச சொன்னாங்க”

“நியாயமா...... நீங்க பேசறது சுத்தமா புரியலை.  மொதல்ல நாங்க என்ன அநியாயம் பண்ணினோம் அப்படின்னு சொல்லுங்க, அப்பறம் நியாயத்தை பத்திப் பேசலாம்”, பொய் சொல்லிக் கூப்பிட்டதும் இல்லாமல், தன்னைக் குறை கூறிப் பேசும் தொகுப்பாளரைப் பார்த்து கடுப்புடன் கூறினான் ஸ்ரீதர்.

“என்ன சார், பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறீங்க, விமலா குடும்பத்துக்கு நீங்க செஞ்ச அநியாயமெல்லாம் தெரிஞ்சுகிட்டுதான் நாங்க இங்க உங்களைப் பேச கூப்பிட்டு இருக்கோம்”

“நீங்க யாரு எங்க குடும்ப விஷயத்துல தலை இட, எதுக்கு எங்க வீட்டு விஷயத்தை இப்படி பப்ளிக்ல கூப்பிட்டு பேசறீங்க”

“உங்க வீட்டு விஷயம் வீட்டுக்குள்ளயே இருந்தா நாங்க ஏன் பேசப்போறோம்.   எங்க கிட்ட புகார் வந்ததாலதான், இப்போ கூப்பிட்டு பேசறோம்”

“அப்படி யார் உங்க கிட்ட வந்து புகார் கொடுத்தாங்க, அப்படியே இருந்தாலும் அதைக் கேட்டு தீர்ப்பு சொல்ல நீங்க யாரு நீதிபதியா, இல்லை போலீசா?”, தேவை இல்லாமல் தன் குடும்பத்தை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசும் தொகுப்பாளரை கோவத்துடன் பார்த்தான் ஸ்ரீதர்.

“இங்க பாருங்க ஸ்ரீதர், நீதி மன்றமோ, இல்லை போலிஸோதான் தப்பைத் தட்டிக் கேக்கணும் அப்படின்னு இல்லை.  எங்களை மாதிரி மீடியாக்கும் அந்த ரைட்ஸ் இருக்கு”

“நல்லா இருக்கட்டும்.  சரி நீங்க என்னைக் கூப்பிட்ட விஷயத்தை சொல்லுங்க”

“உங்களுக்கும் விமலாங்கற பொண்ணுக்கும் கல்யாண நிச்சயம் வரை நடந்ததா, அப்பறம் ஏன் நின்னுப் போச்சு?”

“ஆமாம் நிச்சயம் முடிந்து சில பிரச்சனைகளால கல்யாணத்தை நிறுத்த வேண்டியதாப் போச்சு”

“கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு முடிவு பண்ணி சொன்னது யாரு,  உங்க குடும்பமா, இல்லை விமலா குடும்பமா?”

“எங்க சைடுலேர்ந்துதான் நிறுத்திடலாம்ன்னு சொன்னோம்.  ஏகப்பட்ட மனக்கசப்புகள், அதோட தொடர்ந்தா இன்னும் இன்னும் கஷ்டம், யாருக்கும் நல்லதில்லைன்னுதான் நிறுத்திட சொன்னோம்.  இதனால எங்களுக்கும் ஏகப்பட்ட மன வருத்தம்தான்”

“உங்களுக்கு கல்யாணம் அப்படிங்கறது விளையாட்டாப் போச்சா ஸ்ரீதர்.  நீங்க என்ன ஆம்பளை,  எத்தனை வாட்டி கல்யாணம் நின்னாலும், நடந்தாலும் பிரச்சனை இல்லை.  யாரும் பெரிசா அதைப் பத்தி கவலைப்பட மாட்டாங்க, பெரிய விஷயமா எடுத்துக்கவும் மாட்டாங்க, அதே  பொண்ணு பக்கத்துல இருந்து யோசிச்சுப் பார்த்தீங்களா.   இந்தக் கல்யாணம் நின்னதுக்கு ஏதோ அவங்கதான் மொத்தக் காரணம் அப்படின்னு அத்தனை பேரும் பேசி அவங்க  குடும்பத்துக்கு ஏகப்பட்ட மனக் கஷ்டம் கொடுத்திருக்காங்க”

“நீங்க சொல்றது உங்களுக்கே காமெடியா இல்லையா மேடம்.  யாரோ பேசினாங்க அப்படின்னு என்னைக் கூப்பிட்டு கேள்வி கேப்பீங்களா?”                       

“அப்படி யாரோவைப் பேச வைத்தது நீங்க கல்யாணத்தை நிறுத்தினதுதான”

“சரி இப்போ அதுக்கு என்ன பண்ணன்னும்ன்னு சொல்றீங்க.  யாரு உங்க கிட்ட வந்து எங்களைப் பத்தி சொன்னது?”

“நீங்க மொதல்ல எதுனால இந்தக் கல்யாணத்தை நிறுத்தினீங்கன்னு சொல்லுங்க”

“அதை என்னால சொல்ல முடியாது மேடம்.  எங்க குடும்ப விஷயத்தை உலகம் முழுக்க தெரியறா மாதிரி தண்டோரா போட முடியாது.  உங்கக்கிட்ட  வந்து சொன்னது யாருன்னு சொல்லுங்க, நான் அவங்ககிட்ட தனிப்பட்ட முறைல பேசிக்கறேன்”

“இங்க வந்து உங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் கொடுத்து அதை விசாரிக்க சொன்னது நீங்க கல்யாணம் பண்ணிக்க சம்மதித்திருந்த விமலா”, என்று தொகுப்பாளர் கூற அதிர்ந்து நின்றான் ஸ்ரீதர். 

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.