(Reading time: 46 - 92 minutes)

காதல் நதியில் – 32 - மீரா ராம்

ந்து…. பார்த்துடா… பார்த்து போ… என்று சொல்லிய சித்து… இரு இரு… நானும் வரேன்… என்றபடி அபியின் பின்னே ஓடிக்கொண்டிருந்த தனது தங்கையின் பின் ஓடியபடி சென்று கொண்டிருந்தான்…

அனு, சீக்கிரம் வா… நேரமாச்சு… என்ற காவ்யா, அனுவின் கைப்பிடித்து இழுத்து சென்று கொண்டிருந்தாள்…

அண்ணி… தாம்பூலப்பை ரெடி… சரியான்னு பாருங்க என்று கேட்ட செல்விக்கு கோதை பதில் சொல்லும் முன்னர், அங்கே வந்த ராஜசேகர், அதை அப்புறமா வந்து சரி பார்த்துக்கலாம்… இப்போ சீக்கிரம் வாங்க… நேரமாச்சு என்றார்…

kathal nathiyil

சரியா சொன்னடா என்றபடி அங்கே வந்த சுந்தரம், வாங்க வாங்க… என்று அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வரும்போது,

இங்கே தான் இருக்கிறீர்களா?, உங்களை எங்கே எல்லாம் தேடுறது?... விரைவாக வாங்க என்றபடி ராசு முன்னே செல்ல, அவரைப் பின் தொடர்ந்து அனைவரும் சிரித்தபடி சென்றனர்…

மணமேடையில்,

மாப்பிள்ளை களை முகத்தில் தாண்டவமாட, மனதிற்கு பிடித்தவளைக் கரம் பிடிக்க போகும் பூரிப்பில், புன்னகையுடன் பட்டு வேஷ்டியில் அமர்த்தலாக அமர்ந்திருந்தனர் முகிலன், ஹரீஷ் மற்றும் அவ்னீஷ்…

டேய்… அந்த மாலையை தொடாதே… டேய்…. ஆடாமல் உட்கார்…. என்றபடி ஷ்யாமும் தினேஷும், முகிலனையும், அவ்னீஷையும் மிரட்டிக்கொண்டிருந்தனர்…

என்ன கோதை… எங்கே போயிருந்த நீ?... முகூர்த்த நேரம் வந்துட்டு… சீக்கிரம் வா… என்றபடி அங்கே அனைவருடனும் வந்து கொண்டிருந்த கோதையை செல்லம்மாப்பாட்டி அழைக்க…

ஏ செல்வி… உனக்கு வேற தனியா சொல்லணுமா?... விரசா வா இங்க… என்றபடி பர்வதம் தனது பக்கத்தில் செல்வியை நிற்க வைத்துக்கொண்டார்…

மணப்பெண்களின் காலில் அணிந்திருந்த சலங்கை அவர்களின் வருகையை தெரிவிக்க, பொண்ணு வந்தாச்சு… பொண்ணு வந்தாச்சு… என்றபடி அவர்களுக்கு முன்னே நந்துவும் அபியும், மனதை கவரும் பால் ரோஜாவின் நிறத்தில் பட்டுப்பாவாடையில் அழகாக ஓடி வர,

அவர்களைத் தொடர்ந்து கரும்பச்சை நிறத்தில் சட்டையணிந்து பட்டு வேஷ்டியில் இப்பொழுதே தோன்றிவிட்ட கம்பீரத்துடன் அழகாக நந்துவையும், அபியையும் மெதுவாக போக சொல்லி வந்து கொண்டிருந்தான் சித்து…

ராமர் பச்சை நிறத்தில் உடலும், சந்தன நிறத்தில் சிறு சிறு வேலைப்பாடுகள் அமைந்த பெரிய பெரிய வண்ணத்துப்பூச்சியும், அதன் அருகே சிகப்பு நிறத்தில் சிறிய பூக்களும் கொண்ட பட்டுப்புடவையில், அனுவும், காவ்யாவும், மணப்பெண்களின் பின்னே வந்து கொண்டிருந்தனர் தத்தமது கணவன்மார்களை ரசித்தபடி…

அவர்கள் அணிந்திருந்த அதே நிறத்தில் சட்டையும் சந்தன நிற பட்டு வேஷ்டியும் அணிந்திருந்த ஷ்யாமும், தினேஷும், தங்களது மனைவியை புன்னகையுடன் ரசித்தனர்…

ஹ்ம்…ஹூம்… போதும்… போதும்… நாங்களும் இங்கே தான் இருக்கோம்…  என்றான் அவ்னீஷ்…

அதானே… நல்லா சொல்லுடா… கல்யாணம் எங்களுக்கு உங்களுக்கு இல்லை… என்றான் முகிலன் அவர்களிடத்தில்…

ஆனால் அவர்களோ, அவர்களது மனைவிமார்களை ரசிப்பதிலேயே குறியாக இருந்தனர்…

என்னடா இவங்க இப்படி சிலையாட்டம் நிற்கிறாங்க… என்ற முகிலனிடத்தில், அண்ணா அங்கே பாருங்க… என்றபடி கை காட்டினான் அவ்னீஷ்…

மயில் கழுத்து பச்சை நிறத்தில் உடல் முழுவதும் தோகை விரித்தாடும் மயிலும், கொடியுமாய், தங்க நிற சரிகை இழையோடிருந்த பட்டுப்புடவையில், முகத்தில் பூரிப்பும், வெட்கமும் நிறைய, பொன் நகைகளோடும், கழுத்தில் ரோஜா மாலையோடும், வாசம் வீசும் மல்லிகையை கூந்தலில் சூடியும் அழகாக வந்து அமர்ந்தனர் தங்களது இணையின் அருகில் மயூரி, மைத்ரி, மற்றும் ஷன்வி…

மயூரியையும், ஷன்வியையும் அழைத்துக்கொண்டுவந்த அனுவும், காவ்யாவும், அவர்களை முகிலன் மற்றும் அவ்னீஷின் அருகே அமர வைத்துவிட்டு அவர்களின் பின்னே நின்று கொண்டிருந்த தங்களது துணையின் அருகே சென்று காதல் கதை பேசிக்கொண்டிருந்தனர்…

அருகில் வந்து அமர்ந்தவளிடம், சற்று சரிந்து எதையோ சொல்லி, அவர்களை மேலும் வெட்கப்பட வைத்து அதை ஆனந்தத்தோடு கண்டுகளித்து புன்னகை பூத்தனர் மணமகன்கள் மூவரும்…

பொன் நிறப் பட்டுப்புடவையில் பெண் சிலையா, இல்லை பொன் சிலையா என்று தோன்றும் வண்ணம் தோளிரண்டிலும் மல்லிகையை கொஞ்ச விட்டு முகத்தில் நாணத்தை தவழ விட்டு கண்கள் இரண்டிலும் எல்லை இல்லாத காதலை பிரதிபலித்து மைத்ரியை அழைத்து வந்து ஹரீஷின் அருகே அமர வைத்து விட்டு, ஹரீஷின் பின்னே இமைக்கவும் மறந்து போய் தன்னையேப் பார்த்துக்கொண்டிருந்த தனது காதல்கணவன் ஆதர்ஷ் ராமின் அருகே சென்று நின்று கம்பீரமாக அழகின் மொத்த உருவமாய் வடிவம் கொண்டு பட்டு வேஷ்டி சட்டையில் தன் மனதை கொள்ளை கொள்ளும் விதமாய் இருப்பவனை விட்டு பார்வையை எப்படி அகற்ற என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் சாகரிகா சீதை…

அந்நேரம், கெட்டிமேளம், கெட்டிமேளம் என்ற ஐயர் குரலைத் தொடர்ந்து, நாதஸ்வர, மேள இசை முழங்க, இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்…

மணமகன்கள் மூவரும், மன நிறைவுடன் தத்தமது காதலிகளின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு மனைவியாக்கிக்கொண்டனர்…

பெண்களுக்கோ, மேலே விழுந்த பூச்சிதறல்கள் போல், மனம், இனியவனைக் கைப்பிடித்த மகிழ்ச்சியில் பறக்க, கண்களோ, மின்னும் காதலை காட்டியது விழிகளில்… இதழ்களில் தோன்றிய குறுஞ்சிரிப்புடன்…

தத்தமது கணவன்மார்களின் தோளில் சற்று பட்டும் படாமலும் சாய்ந்து, அவர்களை இன்ப அவஸ்தைக்கு ஆளாக்கிவிட்டு, நெற்றி வகிடில் குங்குமம் வாங்கிக்கொண்டனர் பெண்கள் மூவரும் புன்னகைத்தபடி…

மாலை இடும் சம்பிரதாயத்தின் போது, விழியோடு விழி பார்த்து காதலை அழகாக வெளிப்படுத்திய வண்ணம் மாலை மாற்றிக்கொண்டனர் புதுஜோடிகள்…

உடையோடு உடை சேர்த்து முடிச்சுப்போட்டு, ஒருவரின் ஒருவர் கரம்பற்றி, அக்கினியை வலம் வந்தனர் மூன்று ஜோடிகளும்…

விரலோடு விரல் பிணைத்திருந்த நேரத்தில், பெண்கள் மூவரின் உள்ளங்கையிலும் சற்றே ஆண்கள் மூவரும் தீண்ட, வார்த்தைகள் இருந்தும் சொல்லமுடியாது, வெட்கத்தை மட்டும் வெளிக்கொணர்ந்தவாறு தங்களுக்குள்ளே நகைத்துக்கொண்டனர் நிலம் பார்த்தபடி மைத்ரி, ஷன்வி மற்றும் மயூரி மூன்று பேரும்…

அம்மி மிதித்து மெட்டிப்போடும் வேளையில், வேண்டுமென்றே அவர்களின் காலை நீண்ட நேரம் பிடித்து பொறுமையாக விரலுக்கும் மெட்டிக்கும் வலித்திடுமோ என்றெண்ணி தன் விரல் ஸ்பரிசத்தினால் பெண்களை திண்டாட வைத்தனர் ஹரீஷ், அவ்னீஷ் மற்றும் முகிலன் மூன்று பேரும்…

இதுதான் அருந்ததி நட்சத்திரம், தெரிகிறதா என்று கேட்ட ஐயரிடம், எனக்கு என் பக்கத்தில் இருக்கும் இந்த மயூ நட்சத்திரம் தான் ஐயரே தெரிகிறது என்று மெதுவாக மயூரிக்கு மட்டும் கேட்கும்படி சொன்ன முகிலனை மெல்ல யாருக்கும் தெரியாமல் முழங்கை கொண்டு இடித்தாள் மயூரி அளவில்லாத வெட்கத்தோடு…

பாரும்மா… நல்லா கேட்டுக்கோ… ஐயர் தான் பார்க்க சொல்லுறார்… அந்த அருந்ததி பொண்ணை… நானா பார்க்கலை… அப்புறம் ஏண்டா பார்த்தேன்னு என்னை கேள்வி கேட்கக்கூடாது என்று ஷன்வியிடம் ரகசியமாக சொல்லிய அவ்னீஷ், எங்கே ஐயரே, அந்த அருந்ததி?... ஆளையேக்காணோமே… என்ற அவ்னீஷிடம்

தம்பி, அருந்ததி ஒரு நட்சத்திரம்பா… நீ அவளை இங்கே தேடினா கிடைக்கமாட்டா… கொஞ்சம் அண்ணார்ந்து வானத்தைப் பாரு தெரிவா… என்றார் ஐயர் சிரித்தபடி…

சற்றே அசடு வழிய நின்றிருந்த அவ்னீஷின் அருகே குனிந்து நல்லா வேணும் உங்களுக்கு… என்று சிரித்து அழகு காட்டினாள் ஷன்வி…

கிண்டலா பண்ணுற… தனியா மாட்டுவடி… அப்போ பேசிக்கிறேன் உன்னை… என்றவன் அவள் காதில் எதுவோ சொல்ல, அவள் சட்டென்று முகம் சிவந்தபடி உங்களை…. என அவன் கைகளில் கிள்ள, அவன் அதை ரசித்தான் கலகலவென்று நகைத்தபடி…

உனக்கு தெரியுதா அருந்ததி?... என்று கேட்ட ஹரீஷிடம், ஹ்ம்ம்.. தெரியுது… என்ற மைத்ரி உங்களுக்கு???…. என்று எதிர்கேள்வி கேட்க… தெரியுது என்றவன், ஆனால், அதை விட பிரகாசமா, உன் முகம் தான் என் மனதிலேயும், என் கண்ணிலேயும் தெரிகிறது… என்றவனை இமைக்கவும் மறந்து போய் காதலுடன் பார்த்தாள் மைத்ரி…

ஹேய்… போதும்டி… ப்ளீஸ்… எல்லாரும் இருக்குறாங்க… என்னை இப்படி பார்த்து கொல்லாதே… அப்புறம்… நான் என்றவன், இழுக்க… அவள் வெட்கத்துடன் அவனை செல்லமாக அடித்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.