(Reading time: 6 - 11 minutes)

03. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ஸ்ரீதரை  கூப்பிட்டு விசாரிக்க சொன்னது,  விமலா என்று தொகுப்பாளர் கூறியதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற ஸ்ரீதர் அடுத்த நொடியே கோபத்துடன் அவரை ஏறிட்டான்.

“ஏன் மேடம் ஒரு பொண்ணு வந்து சொன்னா உடனே கேள்வி கேக்க கிளம்பிடுவீங்களா, அது உண்மையா, இல்லையான்னு எல்லாம் தெரிஞ்சுக்க மாட்டீங்களா”

“ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பேர் பார்க்கறாங்க.  அந்த அளவுக் கூட பொறுப்பில்லாம இருப்போமா.  உங்களை ஃபோன் பண்ணி நிகழ்ச்சிக்கு வர வைக்கறதுக்கு முன்னாடி உங்க வீட்டு பக்கத்துலயும், அவங்க வீட்டு பக்கத்துலயும் இருக்கறவங்க கிட்ட விமலா சொன்னது உண்மையா அப்படின்னு கேட்டு, அவங்க பேசினது உண்மைன்னு தெரிஞ்ச பிறகுதான், உங்களை வரவச்சோம்”

Vidiyalukkillai thooram

“ஓ,  அக்கம் பக்கம் இருக்கறவங்க சொன்னதை வச்சு என்னையும், என் குடும்பத்தையும் ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க, இல்லை.  அவங்க உண்மை சொல்லாமக் கூட இருக்கலாமே”

“இங்க பாருங்க ஸ்ரீதர், மறுபடி மறுபடி நீங்க என்னைக் கேள்வி கேக்கறதால ஒரு பிரயோஜனமும் இல்லை.  நிச்சயம் நடந்தது உண்மை, அதுக்குப் பிறகு கல்யாணத்தை நீங்க நிறுத்தினது உண்மை.  இதை நீங்க மறுக்கப் போறீங்களா?”, தான்  எதைக் கேட்டாலும் பதில் சொல்லாமல் தன்னையே திருப்பிக் கேள்வி கேட்கிறானே என்ற கடுப்பில் ஸ்ரீதரிடம் சற்று கடுமையாகப் பேச ஆரம்பித்தார்.

“இங்க பாருங்க மேடம்.  இந்த ஸ்கூல் பையனை டீச்சர் மிரட்டறா மாதிரி எல்லாம் கேள்வி கேக்காதீங்க.  நீங்க சொன்னது கரெக்ட்தான்.  ஆனால் இது எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ள நடந்த நிகழ்ச்சி.  அதனால நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, தொகுப்பாளரை  விட படு கடுப்பாக பதில் சொன்னான் ஸ்ரீதர்.

“அது சரி...... அந்த நிகழ்ச்சி எப்போ பொது சபைக்கு புகாரா வந்துடுச்சோ அப்போ யார் வேண்ணாலும் கேள்வி கேக்கலாம்.  So நீங்க கத்தாம நாங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லப் பாருங்க”

“சரி எங்க மேல என்ன என்ன புகார் எல்லாம் விமலா கொடுத்திருக்காங்க?”

“ஒண்ணா, ரெண்டா ஏகப்பட்ட புகார்.  இந்தக்காலத்துல அதுவும் நல்லாப் படிச்சு நல்ல வேலைல இருக்கற பொண்ணுக்கே இப்படியான்னு இருக்கு”, என்று தொகுப்பாளர் சொல்ல, கடுப்பான ஸ்ரீதர், “மெதுவா நிகழ்ச்சி முடிஞ்சப்பறம் நீங்க இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கோங்க, இப்போ அவங்க எங்களைப் பத்தி சொன்னதை சொல்லுங்க”

“அவங்க கொடுத்த புகாரை பிறகு பார்க்கலாம்.  First நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க.  நீங்க பொண்ணு பார்த்துட்டு போனப்பறம் எத்தனை வாட்டி விமலாக்கு ஃபோன் பண்ணிப் பேசினீங்க”

“நான் முதல் முறை ஃபோன் பண்ணினப்போ  விமலா இந்த மாதிரி பேசறதெல்லாம் அவங்க அம்மாக்கு பிடிக்காது, அதனால அடிக்கடி பண்ண வேண்டாம்ன்னு  சொன்னா.  அதனால நானும் அதுக்கப்பறமா ஒரு ரெண்டு, மூணு வாட்டி பேசி இருப்பேன் அவ்வளவுதான்”

“எடுத்தவுடனே முதல் கேள்விக்கே இப்படி பொய் சொல்றீங்களே ஸ்ரீதர், நீங்க பொண்ணு பார்த்துட்டு போன பிறகு ஒரு வாட்டிதான் விமலாகிட்ட பேசி இருக்கீங்க”

“நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன்.  அதை நீங்க பொய்ன்னு சொல்றீங்க.  நீங்களாவே ஒரு விடை மனசுக்குள்ள வச்சுட்டு அதை நான் சொல்லலைன்னா பொய் சொல்றதா சொல்வீங்களா”

“இது நானா சொன்னது இல்லை ஸ்ரீதர்.  விமலா சொன்னதுதான்”

“விமலா சொன்னா அது உண்மை. நான் சொன்னா அது பொய்யா, இது எந்த ஊர் ஞாயம் மேடம்.  இனி வர்ற கேள்விகளுக்கும் அவங்க சொன்ன பதிலை நான் சொல்லலைன்னா அப்போவும் இதே மாதிரிதானே பேசுவீங்க.  இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல பாதி நிகழ்ச்சிக்குப் பிறகு, புகார் கொடுத்தவங்களை கூப்பிடுவீங்க இல்லை.  அதை இப்போவே செய்ங்க, எந்தக் கேள்வியா இருந்தாலும் எங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரே நேரத்துல கேளுங்க”

“நீங்க சொல்றா மாதிரி எல்லாம் நாங்க கேக்க முடியாது ஸ்ரீதர்.  நாங்க ஏற்கனவே விமலாக்கிட்ட  பேசியாச்சு.  இப்போ நீங்கதான் பேசணும்”

“விமலா இங்க வராம உங்க எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்றதா இல்லை”, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விவாதத்தில் ஈடுபட, என்ன முயன்றும் தொகுப்பாளரால், அவனிடம் இருந்து பதில் வாங்க முடியாமல் போக வேறு வழி இல்லாமல் விமலாவை அழைத்தார் அவர்.

“வாம்மா விமலா.  இவர்தான் நீ கல்யாணம் பண்ணிக்க இருந்த ஸ்ரீதரா”, என்று கேட்க, இதைவிட மொக்கைத்தனமான கேள்வியை யாராலும் கேட்க முடியாது என்பது போல் பார்த்தான் ஸ்ரீதர்.

“ஆமாம் மேடம், அது இவங்கதான்”, மிகுந்த துயரத்துடன் அவனைப் பார்த்தவாறே பதில் சொன்னாள் விமலா.  இவ எதுக்கு இப்படி பார்க்கிறா என்று புரியாமல் அவளைப் பார்த்தான் ஸ்ரீதர்.

“ஏம்மா நீ பொண்ணு பார்த்துட்டு போன பிறகு அவர் ஒரு வாட்டித்தான் பேசினார்ன்னு சொன்ன, ஆனா அவரைக் கேட்டா ரெண்டு, மூணு முறை பேசினதா சொல்றாரே”

“இல்லை மேடம் அவரா பண்ணினது ஒரு வாட்டிதான்.  மத்தபடி அவங்க அம்மா பேசும்போது இவரும் ஒரு ரெண்டு வார்த்தை பேசி இருக்கார்”,  விமலாவின் பதிலைக் கேட்ட தொகுப்பாளர், முழு விவரம் தெரியாமல் ஸ்ரீதரிடம் கடுமையாக பேசி விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

“இப்போ என்ன மேடம் சொல்றீங்க.  என்னவோ விமலா மட்டும்தான் அரிச்சந்திரன் பரம்பரை, அவ மட்டும்தான் உண்மை பேசுவா, நான் பொய் சொல்றேன்னு சொன்னீங்களே”, படு நக்கலாக ஸ்ரீதர் கேட்க, இதை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார் தொகுப்பாளர்.

“ஸ்ரீதர், நான் கேட்டது நீங்க எத்தனை வாட்டி ஃபோன் பண்ணிப் பேசினீங்க அப்படின்னுதான், உங்க அம்மா பேசினது இல்லை”, என்று சமாளித்தார்.

“மறுபடி திருத்தம் மேடம்.  நான் பண்ணிப் பேசும்போதுதான் எங்க அம்மா பேசினாங்க”

“இல்லை மேடம் அவர் போய் சொல்றாரு, அவங்க அம்மா பேசும்போதுதான் கடைசியா ஒரு நிமிஷம் இவர் பேசிட்டு வச்சுடுவாறு”

“சரிம்மா விடு, ஏன் ஸ்ரீதர் நீங்க முதல் தடவை விமலாக்கூட என்ன பேசினீங்க அப்படின்னு ஞாபகம் இருக்கா?”

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் கடுப்பின் உச்சத்திற்கு சென்றான் ஸ்ரீதர்.

“ஏன் மேடம் இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேக்கறது உங்களுக்கே அதிகமாத் தெரியலை.  உங்களுக்கும் கல்யாணம் ஆகி இருக்கும்ன்னு நினைக்கறேன்.  யாராவது உங்ககிட்ட வந்து நீங்களும், உங்க கணவரும் என்ன பேசினீங்கன்னு வந்து கேட்டா உங்களால பதில் சொல்ல முடியுமா?”

அவன் பதிலில் சற்று திகைத்த தொகுப்பாளர் சுதாரித்து, “அப்படி என்ன வெளில சொல்ல முடியாத அளவுக்கு பேசினீங்க  ஸ்ரீதர், விமலா சொன்ன பதிலைப் பார்த்தா அப்படி ஒண்ணும் நீங்க தயங்கற அளவுக்கு  பேசலை போலவே.  நீங்க பேசினதெல்லாம் அவங்க என்ன வேலை செய்யறாங்க, எத்தனை சம்பளம் வாங்கறாங்க அப்படின்னு வெறும் பணம் பத்தி மட்டும்தானே பேசி இருக்கீங்க”,  என்று சொல்ல, விமலா படு துக்கத்துடன் தலையைக் குனிந்து கொள்ள ஸ்ரீதர் அவளை கொலை வெறியுடன் பார்த்தான். 

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.