(Reading time: 32 - 63 minutes)

15. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

" முதல்மழை நம்மை நனைத்ததே

மூடி வைத்த ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத பறவை அழைத்ததே

Ithanai naalai engirunthai

மனமும் பறந்ததே, இதயமும் இதமாய் மிதந்ததே "  மழைக்காற்று முகத்தில் முத்தமிட அதை ரசித்தபடி உல்லாசமாய் பாடலுடன் இணைந்து பாடினாள்  தேன்நிலா. சாலையில் காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்த மதியழகன் இவள்  புறம் திரும்பாமல் இருக்க பெரும்பாடுபட்டான்..

" என்ன மது ரொம்ப சைலண்டா வர்ற ?"

" ம்ம்ம் சும்மாதான் வேண்டுதல் "

" ஹா ஹா," என்று களுக்கென சிரித்தவள் அவன் தோள்  சாய்ந்து அமர்ந்தாள் ..

" மது"

" சொல்லு குட்டிமா "

" உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் "

" ம்ம்ம்ஹ்ம்ம்ம் சொல்ல மாட்டேன் போ "

" டேய் சொல்லுடா "

" ஹே பொண்டாட்டி, நீ எத்தனை முறை இதே கேள்விய கேட்டாலும் நான் பதில் சொல்ல மாட்டேன் "

" ஏனாம் ??"

" அது அப்படித்தான் .. காதல் உணர வேண்டிய விஷயமடி பட்டு, இப்படி தராசுல எடை போட கூடாது "

" ஹலோ மிஸ்டர் கேடி, அது எங்களுக்கும் தெரியும் !இருந்தாலும் உன் வாயல கேட்டா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்ல .. சரி விடு உன் அறிவுக்கு எட்டினது அவ்வளவுதான் . என்னதான் இருந்தாலும் நீ தேன்நிலா  அளவுக்கு பாஸ்ட் இல்லப்பா " என்றவள்  அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ..

" அடியே, ரொம்ப அநியாயம் டீ இது.. இரு அம்முகிட்ட சொல்லுறேன் "என்று விரல் நீட்டி மிரட்டியவனை பார்த்து கண்கள் மின்ன சிரித்தாள் தேன்நிலா ..

" ஹய்யோ மது ..மது .. இந்த பழைய அஞ்சு காசு மூஞ்சிய நீ எங்குதான் வாங்கின ?" தேன்நிலா  போலியாய் சலித்துக் கொள்ளும்போதே  அவளது செல்போன் சிணுங்கியது..

" அழகா வேல் அழகா, வேல் பிடிக்கும் கரம் அழகா ? உன் விழி அழகா உன் முகம் அழகா ? கண்வியப்புடன் நோக்கும் திருமுருகா " ..அது ஏதோ முருகர் பக்தி பாடல்தான். ஆனால் " அழகா " என்ற வார்த்தைகாகத்தான் அதை அவள் ரிங்க்டோன்னாக  பதிவு செய்திருந்தாள் .. அது புரிகிறதா ? என்பதுபோல நிலா அவனைப் பார்க்க, மதியழகன் போலியாய்

" உனக்கு பக்தி முத்தி போச்சு குட்டிமா .. கூடிய சீக்கிறம் பழனிக்கு கூட்டிட்டு போயி மொட்டை போட்டுடலாம்" என்றான்.. " வெவ்வெவ்வெவ்வெ " என்று சிணுங்கியவள் அதே மலர்ச்சியுடன் போனை எடுத்தாள் .. அவளது மலர்ச்சிக்கு எதிர்மாறாய் பதட்டமாய் இருந்தது சங்கமித்ராவின் குரல்.

" ஹெலோ டாக்டர் தேன்நிலா  ?"

" எஸ் ஸ்பீகிங் .. நீங்க ??"

" நான் .. நான், உங்க பேஷன்ட் ஷோபா வீட்டுல இருந்து பேசறேன் "

"ஷோ ...ஷோபா ... நீங்க இனியாவா ?"

" இல்லை இனியாவுடைய ப்ரண்ட் .. டாக்டர் இப்போ நான் யாருன்னு முக்கியம் இல்லை . நீங்க கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா ப்ளீஸ் ? வீட்டில் பெரியவங்க வேற யாருமில்லை .. ஷோபா அக்காவுக்கு பைன்  வந்துருச்சுன்னு நினைக்கிறேன் "

" சரி ..பதட்டபடாதிங்க சங்கமித்ரா.. நான் இங்க பக்கத்துலதான் இருப்பேன். இன்னும் அஞ்சு நிமிஷத்தில் அங்க இருப்பேன் " என்று போனை வைத்தாள்  தேன்நிலா.

"என்னாச்சு குட்டிமா "

" மது நாம இன்னொரு நாள் டின்னர் போலாமா மது ? என்னுடைய ஒரு பேஷன்ட்க்கு அர்ஜண்ட் .. "

" அவங்க வீடு எங்க இருக்கு சொல்லு " என்று கேட்டவன் , யாரையும் காக்க வைக்காமல் இயன்றவரை வேகமாகவே அங்கு வந்து சேர்ந்தான். ஷோபாவை அமரவைத்து விட்டு வாசலிலேயே அவர்களுக்காக காத்திருந்த சங்கமித்ரா, நிலாவை பார்த்ததுமே அவளை கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

" டாக்டர், வாங்க .. அக்காவுக்கு என்னாச்சுன்னு பாருங்க " என்றவளை  எரிப்பதுபோல பார்த்துக் கொண்டே வீட்டினுள் விரைந்தாள் தேன்நிலா . நிலாவின் பார்வையின் பதில் அறியாமல் தான் நின்றனர் மதியழகனும், சங்கமித்ராவும். இருப்பினும் அதை பற்றிய ஆராய்ச்சி இப்போது அவசியம் இல்லை என்று உணர்ந்தவர்கள் அவளை பின்தொடர்ந்து நடந்தனர். மித்ராவின் மனநிலையை அவளது முகத்தை பார்த்தே யூகித்த மதியழகன்

" கவலை படாதிங்க சிஸ்டர். பீ ஸ்ட்ரோங் " என்றான் மெல்லிய குரலில். மித்ரா அவனது ஆதரவான குரலில் மிருதுவாய் புன்னகைத்து தலை அசைக்க, நிலாவோ அவன் பேச்சை கேட்டு " வெட்டி பேச்சு பேசாம இங்க ஹெல்ப் பண்ணு மது " என்று அதட்டினாள் .. அவளது இந்த கோபமுகம் அவனுக்குப்  புதிதாய் இருந்தாலும், எதிர்கேள்வி கேட்காமல் ஷோபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவினான்  மதியழகன். மித்ரா என்ற ஒருத்தி அங்கு இல்லாததை போலவே அவள் செயல்பட, ஷோபா தான் " மித்ரா கூட வா " என்றாள் ..மறுப்பேதும் பேசாமல் காரில் அவர்களுடன் வந்தாள்  சங்கமித்ரா. தாயையும் சேயையும் காப்பற்றிவிடு  இறைவா என்ற வேண்டுதலில் தவித்தது மூவரின் உள்ளமும்.

மருத்துவமனையில் பதட்டமாய் அமர்ந்திருந்தாள்  சங்கமித்ரா.. மீண்டும் மீண்டும் இனியாவை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்று தோற்று போனவளிடமிருந்து பெருமூச்சு எழவும் அவள் அருகில் வந்தான் மதியழகன்.

" எதுக்கு இவ்வளவு பதட்டம் சிஸ்டர். எல்லாம் நல்லபடியா நடக்கும்..கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க " என்றான்.

" ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா " என்றவள் சோர்வை சுவரோரம் கைகட்டி சாய்ந்து அமர்ந்திருந்தாள். கலைந்த ஓவியமாய் ஏதோ சிந்தனையிலே இருந்தவளை அப்படியே விட்டுவிட்டு போல மதியழகனுக்கு மனம் எழவில்லை. அவள் " அண்ணா " என்றழைத்தை மீண்டும் நினைவு கூர்ந்தான். " எனக்கொரு தங்கை இருந்திருந்தா  இவ வயசுதான் இருக்கோமோ " என்று சட்டென தோன்றிய எண்ணத்தைக்  கண்டு வியந்தான்..அறுவைசிகிச்சை அறையிலிருந்து தேன்நிலா  இன்னும் வராமல் இருக்கவும் மித்ராவின் மனதில் கலக்கம் குடிக்கொண்டது. அதை உணர்ந்த மதியழகனும்

" இன்னும் நேரமாகும் நினைக்கிறேன்.. பக்கத்துல தான் கேண்டின் இருக்கு ..வாங்க ஏதாச்சும் சாப்பிடலாம் " என்றான். அவன் சொல்லவும்தான் தனக்கு பசிப்பதையே உணர்ந்தாள்  மித்ரா.. எனினும் தயக்கமாய் " வேணாமே அண்ணா, டாக்டர் வரும்போது இங்கு யாரும் இல்லைன்னா எப்படி ?" என்றாள் ..

" நிலாவுக்கு ஷோபாவை நன்றாக தெரியும் மித்ரா... அதுவும் நாம எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா வந்திடலாம் ..உங்களுக்காக இல்லைனாலும் எனக்காக வாங்க ப்ளீஸ்.. ரொம்ப பசியில இருக்கேன் "என்றான் அவன் பாவமாய் .. அவன் கெஞ்சுதலுக்கு பதில் கிடைத்ததின் சான்றாய்  அவனுடன் பின்தொடர்ந்தாள் சங்கமித்ரா.

உணவில் கவனம் செலுத்தினாலும் மித்ரா தன்னிடம் ஏதோ கேட்க முனைவதை உணர்ந்தான் மதி. அவளை அதிகம் சோதிக்காமல் அவனே பேச்சைத் தொடங்கினான் .

" என்னமோ கேட்கனும்னு நினைக்கிறிங்க ! ஆனா கேட்காமல் இருக்கீங்க .. என்ன விஷயம் மித்ரா.. ?"

" அதுவந்து, டாக்டருக்கு நீங்க ?"

" நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம் "

" ஓ  கங்க்ராட்ஸ்! உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா ?" என்று மீண்டும் தயங்கினாள்  அவள்.

" அதான் கேளுங்கன்னு சொல்லிட்டேனே "

" அது... என்னைவிட ஷோபா அக்காவை டாக்டருக்கு தெரியும்னு சொன்னிங்களே , அதற்கும் அவங்க என்மேல கோபப்பட்டதுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா ?" அவளது ஆராயும் கேள்வியை மனதில் பாராடினான் மதியழகன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.