(Reading time: 37 - 73 minutes)

15. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

வேரியின் கார் ஆலைக்குள் வந்ததைக் கண்ட நபர் ஒருவர் கவினிடம் அதை குறிப்பிட்டுருந்தார். அதனால் அவள் ஆலைக்கு வந்திருக்கிறாள் என அறிந்த கவின், ஆலையின் முகப்பு பகுதியிலிருக்கும் தன் அறையில் அவள் இருப்பாள் என எண்ணினான். அவள் அழைக்காததால் அவசரம் ஏதுமில்லை என்று நினைத்தவன் அங்கிருந்த தன் வேலையை முடித்துவிட்டு முகப்பு பகுதிக்கு வந்தான்.

ஆனால் அவன் முன்னறைக்கு வந்த போது அவள் அங்கு இல்லை. அதோடு அந்த ஜி.எம் வேறு அவனைப் பிடித்துக்கொண்டார்.

அதன் பின்பு அவன் அவள் அலைபேசியை அழைத்தால் ஸ்வ்ட்ச் ஆஃப் என்றது. ஆலையின் சில பகுதிகளில் சிக்னல் தடங்கலாவது இயல்பு.

Ennai thanthen veroduஆனால் அங்கு வேரிக்கு என்ன வேலை?

பொறுத்துப் பார்த்தவன் அவளை தானே தேட தொடங்க, ஆலை முழுவதும் அவள் இல்லை என்பது உறுதி ஆகும் முன், வீட்டிலிருந்த வேலையாளிடம் இவன் வேரி வந்ததும் தனக்கு தகவல் தரும்படி சொல்லி இருந்ததால், வேலையாள் அழைத்துவிட்டான் வேரி வீடு வந்து சேர்ந்த தகவலுடன்.

என்ன விஷயம்? வந்தவள் இவனைப் பார்க்காமலே சென்றுவிட்டாள்? வேரியாக இவனை அழைத்துவிஷயம் சொல்வாள் என எதிர்பார்த்தான்.

மொபைல் ஸ்வ்ட்ச் ஆஃப் ஆகுமளவு கவனகுறைவாய் சார்ஜ் போடாமலிருக்கும் பழக்கமும் வேரிக்கு கிடையாது. உடல்நிலை எதுவும் சரி இல்லையோ? என்று நினைத்து மீண்டுமாக வீட்டிற்கு அழைத்தவனின் அழைப்பிற்கு வேலையாளிடமிருந்து பதில் “அம்மா கம்யூட்டர்ல உட்கார்ந்திருக்காங்க...”

உடல்நிலையில் ப்ரச்சனை இல்லை என்றானதும் கவினின் மனம் ஒருவித சமாதானத்திற்கு வந்துவிட்டது.

மீதி எதுவானாலும் சரி, அவசரமில்லை நேரில் சென்று பேசிக்கொள்ளலாம் என நினைத்தவன், இருந்த அவசர வேலைகளை முடித்துக்கொண்டே திரும்பினான்.

அவள் வீட்டைவிட்டு செல்லுமளவிற்கு ப்ரச்சனை பெரிதானதாக இருக்கும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் வீட்டைவிட்டு சென்றிருக்கிறாள் என்பதை அவள் கடிதத்தை பார்க்காவிட்டால் நம்பி கூட இருக்க  மாட்டான்.

ன்னால் இப்போதைக்கு சாகமுடியாது. என் வாழ்வை நான் முடிச்சுகவே எனக்கு அதிகாரமில்லைங்கிறப்ப, என் விருப்பத்தின் காரணமாக மட்டுமே எனக்கு கொடுக்கப் பட்ட என் குழந்தைக்காகவாவது நான் உயிர் வாழவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால மட்டும் தான் உங்கட்ட இருந்து தப்பிச்சு போறேன்.....

நீங்க என்ட்ட இருந்து எல்லாத்தையும் திருடிட்டீங்க. ஆனால் அதில் எதையும் நான் திருப்பி கேட்கமாட்டேன்.... ஏன்னா நீங்க என்ட்ட நடிச்சிருக்கலாம்...ஆனா நான் உங்களை காதலிச்சது நிஜம். நான் கொடுத்ததெல்லாம் காதல்ல கொடுத்தது.

நீங்க என் சொத்தை மட்டும் திருடல, என்னையும் திருடிட்டீங்க. இப்ப எனக்குள்ளகூட நான் இல்லை....நீங்க மட்டும்தான்....எனக்குள்ள இருக்கிற உங்க சுபாவம் தான் என்னை இப்படி தைரியமா முடிவெடுக்க வைக்குது...

 தன் இஷ்டபடி  யார்ட்டயும் கேட்காம முடிவெடுப்பதும்ம்...அதை பிடிவாதமாய் இம்ப்லிமென்ட் பண்றதும்....நிச்சயமா இது உங்க சுபாவம் தான்....அதைத்தான் நான் இப்ப செய்றேன்...

உங்களுக்கு உங்க அம்மா அப்பா உங்க தம்பி எல்லோரும் எப்பவும் முக்கியம்....ஆனா இதே உறவுகளை உங்களுக்காக மட்டுமே துறந்து வந்தவள் நான்...அதுவும் உங்கள் மேல் காதல் என்று எதுவும் இல்லாத காலத்திலும் கூட...அப்படிபட்ட களிமண் நான்...

ஆனால் இப்போ உங்களை மாதிரியே என் குடும்பத்தை நேசிக்கிறேன்...காரணம் எனக்குள்ள இருக்கிற உங்க சுபாவம். வியனை காப்பாத்த  நீங்க போக மாட்டீங்களா...?அப்படித்தான் நான் மிர்னாவுக்காக போறேன்...

உங்கட்ட எல்லாத்தையும் இழந்தாலும் ஒருவார்த்தை சண்டையின்றி நான் கிளம்பிபோறேன்.. அதை நம்பியாவது என்னையும், என் அக்காவையும் விட்டுடுங்க....

ஆனால் என்னதான் உங்க சுபாவம் எனக்கு வந்துட்டுனாலும்...இந்த நடிப்பு மட்டும் வரவே மாட்டேங்குது....அதான் உண்மைய சொல்லிட்டு போறேன்...

வேரி

இப்படியாய் ஒரு கடிதம் எழுதிவைத்திருந்தாள் கவினுக்காக.

முதலில் கோபமும்  வெறுப்புமாக கவினை நினைத்து  துடித்தவள் உள்ளம், வீட்டை விட்டு வெளியேறுவது என்ற முடிவிற்கும் வேதனை கொண்டு தவித்தது.

வீட்டிலிருந்து எதையும் எடுத்துச்செல்லும் எண்ணம் அவளுக்கு இல்லை. ஆனால் திருமணத்திற்கு பின் வாங்கியதுதான் அவள் பாஸ்போர்ட் அதை அவள் எடுத்துச்சென்றாக வேண்டும்.

அதை தேடி மாடியிலிருந்த அவர்கள் அறையை நோக்கிச் சென்றாள்.

மாடிப் படியில் இவள் ஏற, மனதிலோ அவன் அவளை இந்த படிகளில் விளையாட்டாக தூக்கிச் சென்ற ஞாபகம். அப்பொழுது அருகில் பார்த்த அவன் முக பாவம்...

அறைக்குள் நுழைந்தால் எதை தேடுகிறாள் என்பதே மறந்து போகும் அளவு அவன் நினைவு ஊர்வலம்.

தன்னை அடிக்க ரூலரை எடுத்து நீட்டிய கவின் மனதில் வந்து வதை செய்தான்.

பாஃஸ்போர்ட் தான் கண்ணில் படவில்லை.

கீழிருந்த அவர்கள்  அறைக்குள் நுழைந்தால் டிரஸிங் டேபிளை தாண்டி நகர மறுக்கிறது மனம்.

எப்பொழுது அவள் அதன் முன் நிற்பதைப் பார்த்தாலும் பின்னிருந்து கட்டிகொண்டு அவள் தோளில் தன் நாடி இருத்தி கதை பேசும் அவன்...அப்பொழுது கண்ணாடியில் ஒளிரும் அவன் கண்கள்....

தரையைப் பார்த்தால் இவளோடு வந்து தரையில் அவன் படுத்த அந்த நேரம்......

படுக்கையையோ பார்க்க முடியவில்லை.....அத்தனையும் பொய்யா....? நடிப்பா? தெய்வமே நம்ப முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றிருக்கிறது இப்பொழுது....

எத்தனை பேசி இருப்பான்...விருப்பு... வெறுப்பு...வேதனை... சந்தோஷம்... கனவுகள் என...

அதோடு எத்தனை சீண்டல்கள்...வேண்டல்கள்...

நெஞ்சை அடைத்துக்கொண்டு வருகிறது அவளுக்கு.

கவின்  பொய்த்துப்போனான் என்பதை அவள் உள்மனம் முழுமையாக நம்ப கூட தயாராயில்லை. அவன் நல்லவனாய் இருந்துவிடமாட்டானா என பாலைமண்ணாய் தாகம் கொண்டது ஒரு புறம்.

இந்த விஷயம் இறுதிவரை அவளுக்கு தெரியாமலே இருந்திருக்க கூடாதா...அவன் இவள் அறியாமல் இவளை கொன்றே போட்டாலும் அவன் தன்னை காதலிக்கிறான் என்ற பொய்யான நிம்மதியுடன் வலியின்றி செத்துபோயிருப்பாளே...

இப்பொழுதோ உயிர்வரை வலிக்கிறதே என்று அரற்றியது மறு மனம்.

உலகோடு அவளை இணைக்கும் வேர் அவன் தான் என இப்பொழுது புரிகிறது அவளுக்கு.

அவனே பொய்த்தபின் வாழ்வென்ன வாழ்வு?

அவன் அவள் வாழ்வில் வருவதற்கு முன்பு உலகின் மீது என்ன பிடிப்பிருந்ததாம் அவளுக்கு?

இங்கேயே இருந்து அவனை எதிர்கொள்கிறேன்...அவன் என்னைக் கொன்றால் கொல்லட்டும்...

இப்படியும் ஒரு எண்ணம்.

ஆனால் கிளம்ப வேண்டும் என்று அவளை உந்தித்தள்ளியது இரண்டு விஷயம். ஒன்று அவளது மேடிட தொடங்கியுள்ள வயிறு, மற்றொன்று மிர்னாவின் உயிர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.