(Reading time: 11 - 22 minutes)

05. விழிகளிரண்டு..! - அன்பு சுடர்

த்தகைய துன்பம் நேர்ந்தபோதிலும் துவளாத நெஞ்சு படைத்த அப்துல்லா அன்று போல் என்றும் கலங்கியதே இல்லை.நீர் கண்ட வேர்போல் தன் நண்பனை அணைத்தபடியே கண்களில் நீர்த்தேக்கினார்.

“உனக்கு என்னமோ ஏதோனு நான் பயந்துட்டேன் வேலா..இனி எப்பவும் உன்ன பாக்க முடியாதுனு நெனச்சேன்.ஒரு நிமிஷம் சரணடஞ்சுடலாம்னு கூட நெனச்சேன்..உன்ன அந்த அல்லா தான் காப்பாத்தி இருக்கார்..”என்று உணர்ச்சி பொங்க மீண்டு வந்த தன் நண்பனைக் கண்டு ஆனந்தத்தில் நெகிழ்ந்தார் அப்துல்லா.

“அப்துல்..இப்ப பேச நேரமில்ல..விடியறதுக்குள்ள நாம இங்க இருந்து கெளம்பியாகனும்.போற வழியில நடந்தத எல்லாம் உனக்கு விவரமா சொல்றேன்..சீக்கிரம் போகணும்.உயிர் போறது பத்தி கவலை இல்ல..ஆனா அது மத்தவங்களுக்கு உபயோகமா இருக்கணும்னு நீ தான அடிக்கடி என்கிட்ட சொல்லுவ..அதனால உடனே கெளம்பு..”என்று அவசரப்படுத்தினார் வேலன்.

Vizhigalirandu

இருள் குடித்து ஒளிவீசி உலா வர ஓர் செம்பழம் வானில் காத்துக்கொண்டிருந்த வேளையில் இருவரும் ஊரை விட்டு வெளியேறி இருந்தனர்.மரங்கள் அடர்ந்திருந்த சாலை ஓரத்தில் நின்ற வேலன்,”சரி நீ இங்க இருந்து கெளம்பு.எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு..அதை முடிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு  பெரிய கோயிலுக்கு  காலைல ஆறு மணிக்கு வந்துடு..அங்க இருந்து நம்ம அடுத்த நடவடிக்கை பத்தி சொல்றேன் ..”வேலன் சொல்ல சொல்ல குழப்பமாய் கேட்டுக்கொண்டிருந்தார் அப்துல்லா.

“நானும் வந்தா உனக்கு உதவியா இருக்கும்ல”-அப்துல்லா.

“இப்ப நான் பண்ண போற காரியம் ரொம்பவும் ஆபத்தானது..தவிர இன்னும் செய்ய வேண்டிய வேலை நெறைய இருக்கு.உனக்கு எல்லாம் விவரமா கோயில்ல சொல்றேன்..”-வேலன்

“சரி ஒருத்தனைக் கொன்னுட்டு தப்பிச்சுட்டேன்னு சொன்ன..உன் மேல இப்ப கொலை வழக்கு இருக்கு வேலா..நீ வெளிய நடமாடுறதே ஆபத்து தான்” வேலனின் நிலையை நினைவுப்படுத்தினார் அப்துல்லா. 

“காலம் காலமா நம்மள்ள எத்தனை பேர இழந்திருக்கிறோம்.நம்ம வீட்டுக்கு வந்து நம்ம சாப்பாட்டையே நமக்குப் பிச்சையா போடுறானுங்க.நம்ம நிலத்துல நம்மளையே அடிமையாக்கி அவனுங்க வாழுறானுங்க.நமக்கு சட்டம் எழுத இவன் யாரு.குனிஞ்சிட்டே இருந்தா குட்டிக்கிட்டே தான் இருப்பாங்க.கொஞ்சம் திருப்பிக் குடுத்தாதான் நாமளும் மனுஷங்கன்னு தெரியும்.நமக்குள்ள இருக்க உணர்வை எழுப்ப மங்கல் பாண்டே உயிர் தேவைப்பட்டிருக்கு பாரு ..அது தான் வேதனை ..வேலூர்ல கலவரம் வெடிச்சிருக்கறதா அந்த வெள்ளையனுங்க பேசினத நான் கேட்டேன்.இங்க இருந்து நம்ம மக்கள் இந்த வழியாதான் அங்க  போவாங்க.

நீ அவங்களோட வேலூர் போராட்டத்துல கலந்துக்க.நான் இங்க வேலைய முடிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு உன்ன பாக்குறேன்”என்று முடித்தார் வேலன்.

“சரி நிலவறை...”

“ஷ்ஷ்ஷ்ஷ்...அதோ மக்கள் கிளம்பிட்டாங்க..நீ அவங்களோட சேர்ந்துடு”

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! சொல்லிய படியே மக்கள் வெள்ளம் நடந்தபடி வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.லேசாக வெளிச்சம் எங்கும் பரவத்துவங்கியது.அப்துல்லா அக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.வேலனும் அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார்.

நேராக மூர்த்தி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி சென்றார் வேலன்.முகம் மறைத்தபடியே மூர்த்தியை கிடத்தி இருந்த அறைக்குச் சென்றார்.

அறையில் யாருமில்லை மூர்த்தியின் சடலத்தைத் தவிர.சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு அவன் சட்டைப் பையில் தான் வைத்த சாவி ஒன்றைத் தேடி எடுத்தார்.யாரும் காணும் முன் அவ்விடத்தை விட்டு விரைந்து வெளியேறி தான் செய்யத் துணிந்த வேலையைச் செய்ய துணிவுடன் நடக்கலானார்.

அரசாங்க கட்டிடத்தின் சில முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை அவ்வளவு காவல் மீறி சென்று எடுப்பது சுலபமான காரியமல்ல.

பூலித்தேவன்,மருது சகோதரர்கள்,சத்யமூர்த்தி ஆகியோரின் வீரத்தை கனவில் கூட மறக்காத வேலன் போன்ற பல்லாயிரக்கணக்கான சுதந்தர போராட்ட வீரர்கள்,நாட்டின் வளமும்,மக்களின் நிலையம் குன்றி குறைப்பட்டு போனதைக் கண்டு எப்போதும் துடித்த வண்ணம் இருந்தனர்.

தனக்காக வாழ்வதைக்காட்டிலும் தன் மக்களுக்காக,அவர்தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற குணமே எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது.தான் இன்ன மதத்தவர்,இன்ன வகுப்பினைச் சேர்ந்தவர் என்கிற எண்ணம் அன்று மக்களிடத்தில் குறைந்தே காணப்பட்டது.அதனால் தான் வேலன் அப்துல்லாவை கோயிலில் காத்திருக்கச் சொன்னபோது கூட மறுக்காமல் அதனை ஏற்றுக் கொண்டார் அப்துல்லா.

அந்த கட்டிடத்தின் வாசலில் இருட்டும் வரை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தார் வேலன்.நன்கு இருட்டிய பின்னர் முன்பு அப்துல்லாவுடன் செய்யத்துணிந்த வேலையை இன்று தான் மட்டும் செய்யப்போகிறார் வேலன்.

வழக்கம் போலவே மாறுவேடமணிந்து உள்ளே நுழைந்து விட்டார் நம் வேலன்.இருவரின் படங்களும் முக்கிய குற்றவாளிகள் என்று குறிக்கப்பட்டு,ஆங்காகங்கே தொங்கவிடபட்டிருந்தன.அவற்றை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் மெல்ல மெல்ல உள்ளே சென்று கொண்டிருந்தார் வேலன்.

அறை முழுக்க காவலாளிகள் நிரம்பி வழிந்தனர்.இதனைத் தேடி அவர்கள் எப்படியும் வரக்கூடும் என்பதனை அவர்கள் முன்பே அறிந்திருந்தனர்.அவர்கள் உணவுக்கு செல்லும் வேளை  வரை காத்திருந்தார்.ஒரு காவலாளி மட்டும் உள்ளே இருக்க மற்றவர் அனைவரும் உணவருந்த சென்ற சமயத்தில் யாருக்கும் தெரியாமல் கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டார்.

அறையின் விளக்குகளைக் கதவுக்கு பின்னிருந்து அணைத்தார்.காவலாளி அறிக்கேன் விளக்கைத் தேடி கதவருகே வந்த நேரத்தில் அவனை அழுத்திப் பிடித்து வாயில் துணியை வைத்து அடைத்தார்.விளக்கை எடுத்துத் திரியைத் தூண்டி அலமாரியை திறந்து பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் விளக்கை அணைத்து விட்டு கட்டிடத்தை விட்டு வெளியேறினார் வேலன்.

விடுதலை கோஷங்கள் முழங்கிய படியே அப்துல்லா வேலூர் போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.அவருக்கு மக்களிடத்தில் பெரிய மதிப்பும், மரியாதையும் அன்பும்  வளர்ந்திருந்தது.

சிறுவர்கள் இருவர் கதர் அணிந்தபடி துண்டு பிரசுரங்களைக்  கொடுத்துக்கொண்டிருந்தனர்.அவர்களின் செயல்களைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அப்துல்லா,அருகில் சென்று அவர்களை வாழ்த்த முற்பட்டபோது அவருக்கு ஆச்சர்யமும் ஆனந்தமும் மனதில் துள்ள ஆரம்பித்தது.

“இக்பால்..குமரா ..”என்று அவர்களை அணைத்துக் கொண்டார் அப்துல்லா.

“நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க?அம்மா எங்க ?..ஏன் இவ்வளவு இளைச்சு போய் இருக்கீங்க ?”என்று சொல்லவியலா ஆச்சர்யத்தில் இருந்தார் அப்துல்லா.

“அப்பா நீங்களும் மாமாவும் போனதும் அந்த காவலாளிங்க எங்களையும் அம்மாவையும் ரொம்ப தீவிரமா விசாரணை பண்ணினாங்க”

“உங்கள அடிச்சாங்களா இக்பால் ..குமரா உனக்கு ஏன் கன்னத்துல கீறல் இருக்கு..இங்க வா இதென்ன கையில காயம் ..ஐயோ முட்டியிளையும் காயம்..”என்று அதிர்ந்தார் அப்துல்லா.

“எனக்கு மட்டுமில்ல மாமா..இக்பாலுக்கும்..”என்று அவனது தோளினை அப்துல்லாவிடம் காட்டினான் குமரன்.

எலும்பொன்று நன்றாக தன்னை வெளிக்காட்டிகொண்டிருந்தது.துடித்து விட்டார் தகப்பன்.

“அப்பா விடுங்க! இதெல்லாம் என்ன..இன்னும் நெறைய நாட்டுக்காக பண்ணனும் பா..அம்மா இங்க தான் ஒரு பாட்டி வீட்டுல தங்க வச்சிருக்கோம்.ஆமா வேலன் மாமா எங்க ?”-இக்பால்.

“அப்பா எங்க மாமா ?.அவருக்கு ஒன்னுமில்லையே ”என்று தயங்கியபடியே கேட்டான் குமரன்.

Page 02

“அப்பா இன்னும் அங்க தான் இருக்கார்  பா..சீக்கிரம் நாம எல்லாம் பழைய படி ஒன்னாகிடுவோம்.சரி நீங்க எதாவது சாப்டீங்களா?...காயத்துக்கு மருந்து கூட போடாம இப்படியா வெளிய சுத்துறது..சரி மணி இப்பவே மூணு.எதாவது சாப்பிட்டுட்டு நீங்க வீட்டுக்கு போங்க..நான் அங்க ஆறு மணிக்கு வரேன்..”என்றார் அப்துல்லா.

மதிய உணவை முடித்து சிறுவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்று தந்தையைப் பார்த்ததைப் பற்றி இக்பால் தாயிடம் மகிழ்ச்சியாக சொல்லி கொண்டிருந்தான்.தாய் இல்லாமல் வளர்ந்த குமரனின் கண்களில் ஏக்கமே மேலோங்கி இருந்தது.ஆனால் இக்பாலின் தாய் குமரனையும் தன் மகன் போலவே பார்த்துக்கொண்டார்.

அப்துல்லா வீட்டிற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் மனைவியிடம் கூறினார்.இதற்கெல்லாம் என்று தான் விடிவு காலம் வருமோ என்று கலங்கிக்கொண்டிருந்தார் அவரின் மனைவி நசீமா.

“நான் இங்க வந்து ரெண்டு நாள் ஆகபோகுது.நாம நாளைக்கு பெரிய கோயிலுக்கு போறோம்.வேலன் இந்நேரம் அவன் வேலையை முடிச்சிருப்பான்..அங்க இருந்து நாம வேற எங்கயாவது போய்டுவோம்..”

“சரிங்க..நிலவறை..”

“அதபத்தி எல்லாம் கவலை படாத..நமக்கு சொந்தமானது நம்மள விட்டு எப்பவும் போகாது..யாரும் அவ்வளவு சீக்கிரம் கொண்டு போகவும் முடியாது.”

“நான் ஒன்னு கேட்டா கோபப்படக்கூடாது..”

“என்ன ?”

“அந்தப் பெட்டியில என்ன தான் இருக்கு?”

“இதையே நீ எத்தன முறை கேட்ப ?”

“ஒரு முறை சொல்லி இருந்தா நான் ஏன் இத்தனை முறை கேட்க போறேன்”

“அது பெரிய வரலாறு”

“எவ்வளவு பெரிய வரலாறா இருந்தாலும் பரவாயில்ல..சொல்லுங்க நான் கேட்குறேன்”

“அதுக்கு முன்னாடி நீ சில உண்மைகள தெரிஞ்சுக்கணும்”

“என்ன உண்மை?”

“உனக்கு எத்தனை கண்ணு ?”

முறைத்தார் நசீமா.

“முறைக்காம சொல்லு..”

“ஏன் எல்லோருக்கும் பத்து கண்ணா இருக்கும்?”

“கேட்டதுக்கு பதில் மட்டும் சொல்லு நசீ..”

“சரி ரெண்டு கண்ணு..”

“ஏன் ரெண்டு கண்ணு?”

“இதென்ன கேள்வி?”

“கேள்வின்னு தெரிஞ்சா பதில் சொல்லு”..அந்த துயர நேரத்திலும் புன்னகைத்தார் அப்துல்லா.

“ஏன்னா..”கொஞ்சம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் நசீமா.

“ம்ம் சொல்லு ..ஏன்னா..??”

“சரி எனக்கு தெரியல..நீங்களே சொல்லுங்க”

நிலா ஒளிக்கீற்றுகளைத் தென்னங்கீற்றின் வழியே அவ்விருவர் மீதும் பொழிந்து கொண்டிருந்தது.

“ஒரு கண் உனக்காக பாக்குறதுக்கு..ஒரு கண் நமக்காக பாக்குறதுக்கு..”

“புரியல..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..”

“நம்ம மனசுல இருக்க துக்கமோ சந்தோஷமோ..முதல்ல வெளிக்காட்டுறது கண்கள் தான்..”

“சரி அதுக்கும் இதுக்கும் என்ன?”

“பொறு..சொல்றேன்..ஒரு செயல் உனக்கு துக்கத்தையும்..மத்தவங்களுக்கு சந்தோஷத்தையும் குடுத்த..உன் கண் முதல்ல எத வெளிப்படுத்தும் நசீ??”

தன் மனைவியின் கைகளைத் தன் கைகளுக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார் அப்துல்லா.

தன்னைச் சுற்றிலும் எத்தகு கொடிய நிகழ்வுகள் நடந்த போதிலும் தனக்காக ஓர் உயிர், தன்னைக் காக்க ஓர் உயிர் ..தனக்கு மட்டுமேயான ஓர் உயிர் அருகில் இருக்கும் போதும் பெண்ணுக்கு இவ்வுலகில் வேறு எந்த துணையும் தேவையே இருக்காது.

அந்த உணர்வை நசீமா தன் கணவனின் கைகளில் உணர்ந்தார்.வெகுநாட்கள் கழித்து கணவன் தன்னுடன் செலவிடும் நேரம்,நசீமாவுக்கு பேரானந்தத்தை அளித்தது.அப்துல்லாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த நசீமாவை இயல்புக்கு கொண்டு வந்தார் அப்துல்லா.

“என்ன நசீ?சொல்லு...சந்தோஷபடுவியா? துக்கப்படுவியா?”

“இப்படி கேட்டா நான் என்ன சொல்லுவேன்?”

“கண்டிப்பா நீ துக்கத்தை தான் வெளிப்படுத்துவ..ஒரு கண்ணுல துக்கத்தையும் இன்னொரு கண்ணுல சந்தோஷத்தையும் ஒரே நேரத்துல வெளிப்படுத்த முடியாது..அது தான் சொன்னேன் ..ஒரு கண்ணு உனக்காக..ஒரு கண்ணு நமக்காக..ஆனா ரெண்டு கண்ணுக்குமான ஒளி ஒன்னு தான?”

“எனக்கு குழப்பமா இருக்கு..”தன் விழிகளை உயர்த்தினார் நசீமா.

“சரி..உனக்கு புரியற மாதிரியே சொல்றேன்.நாடு விடுதலை ஒன்னு,நம்ம இத்தன வருஷமா பாதுகாக்குற அந்த பெட்டி ஒன்னு.

அந்த பெட்டியில கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் தான் கைப்பட எழுதிக்கொடுத்த அரசு ஆணையும்,கரிகால சோழன் கல்லணை கட்டுறதுக்கு எடுத்துக்கிட்ட அறிவியல் முறைகளும்,முப்போகம் பார்த்த நெற்பயிர் வகையைப் பத்தியும்,அதுக்கான வளர்ப்பு முறைகளும் சோழ காலத்துலேயே எழுதியாச்சு.

இதோ இங்க தூங்குறானே குமரன்,இவன் அந்த சோழ வம்சத்தோட நேரடி வாரிசு.ஆனா இந்த வெள்ளையனுங்க இந்த அறிவியல் முறைகளைத் திருடி தங்களோடதா காட்ட முயற்சி பண்ணுறாங்க..அந்த நெற்பயிர் வகைய குறிப்பிட்ட வெப்பதுல வச்சு,தேவையான இயற்கை உரம்...உரம்னா சாதாரண உரமில்ல,என்ன உரம் கலந்தா அந்த வகையான விதை நெல் கிடைக்கும்னு ஒரு கணக்க நம்ம முன்னோர்கள் அப்பவே எழுதி வச்சிருக்காங்க.

இப்ப அந்த அளவுக்கு விளைச்சல் இல்ல.ஆனா முன்ன மாதிரி விளைச்சல் கொண்டு வர முடியும்.அதை தடுக்க தான் இந்த வெள்ளையனுங்க இவ்வளவு போராடுரானுங்க..”

“அவங்க ஏன் போராடனும்?”

“அப்போ தான் மக்கள் விவசாயத்தை விட்ருவாங்க..இவங்களுக்கு வேலை பார்ப்பாங்க..இவங்க தர அற்ப கூலிக்கு மாடு மாதிரி உழைக்க சொல்லுவாங்க..”

“இதுல இவ்வளோ இருக்கா ?”

“இன்னும் சொல்றேன் கேளு..அரச பொக்கிஷங்கள் பத்தின குறிப்பும் அதுல இருக்கறதா கேள்விப்பட்டேன்.அது எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல..நம்ம இடத்துல மட்டும் இந்த மாதிரி பழைய கால பெட்டிகள் இல்ல..நாடு முழுக்க நெறைய எடத்துல இந்த மாதிரி இருக்கு..அதை எல்லாம் திருடிட்டு போக தான் இப்ப இவங்க இங்க வந்திருக்காங்க..

ஆனா நம்ம நேரத்தைப் பாத்தியா ?நம்ம கிட்டு இருந்து திருடினது மட்டும் இல்லாம,நம்மளயே அடிமையாக்கி ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல..முன்னூறு வருஷம் கொடுமை படுத்திட்டு இருக்காங்க..நமக்கான பெட்டிய நாம பாதுகாத்து கொண்டுவந்தாலும்,நாட்டோட மத்த இடத்துல இருக்க இந்த மாதிரியான பழமை வாய்ந்த பொருள்கள நாம அவங்களுக்கு இனியும் விட்டுத் தரக் கூடாது.

ஒரு கண்ணு நம்ம பழமை..ஒரு கண்ணு நாட்டோட பழமை..

நம்ம பழமைக்காக சந்தோஷபட்டாலும்,நாட்டோட பழமைக்காக போராடி ஜெயிச்சா தான் முழுமையான சந்தோஷம்..அந்த நாள் எப்ப வரும்..என்னைக்கு வரும்..கடவுளுக்கு தான் வெளிச்சம்..”என்று பெரு மூச்செரிந்தார் அப்துல்லா .

இவர்கள் பேசி முடிக்கவும்,விடிவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

தொடரும்

Episode # 04

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:846}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.