(Reading time: 57 - 114 minutes)

17. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

மின்மினியின் தந்தையைப் பார்த்தவுடன் எரிந்துவிழுந்தான் மிஹிர்.

“அவளை தனியாவிட்டுட்டு இங்க என்ன செய்றீங்க...?”

“அது...வந்து மாப்பிள்ள..சாரி...நான்..” அவர் வார்த்தை தேடி தடுமாற.... நின்று கவனிக்கவேயில்லை மிஹிர்.

Ennai thanthen veroduலிஃப்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய் போனான்.

அவன் செல்வதைப் பார்த்தவர், மீண்டுமாய் மிர்னாவிடம் திரும்பி கெஞ்சத் தொடங்கினார்.

“நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான் மா....இவ இப்டி செய்வான்னு நான் நினைச்சே பார்த்தது இல்லமா.... என் உலகமே என் பொண்ணுதான்மா....அவ செய்தது முழுக்க முழுக்க தப்பு....குற்றம்...ரொம்பவே பெருசு.....ஆனா நான் கெஞ்சி கேட்டுகிறேன்மா...என் கடைசி காலத்துல என் மகளை என்னைவிட்டு பிரிச்சுடாதம்மா....எப்படியும் எதுவும் தான் ஆகலையே....தயவு செய்து போலீஸ்ட்ட போகாதீங்கம்மா....அவ அவ்ளவு ஆசப்பட்டு விரும்பி மிஹிரை கல்யாணம் செய்ய இருந்தா...இப்போ அவரை இழந்துட்டா....அதுவே அவளுக்கு வாழ்க்கைக்கும் வலிக்கும்....அவளை ஜெயிலுக்கு வேற அனுப்பிடாதீங்க....”  அழுதார்.

“ஏய்....கதவத்திற....மின்னி....”

மிஹிரின் அலறல் எங்கேயோ கேட்க

இப்போழுது மின்மினி இருந்த அறை நோக்கி ஓடுவது அனைவரின் முறையானது.

“ஐயோ!!! அம்மா....என்னைவிட்டுட்டு போயிடாதம்மா....கதவ திறடா கண்ணா...”

 மின்மினியின் தந்தையின் அலறலுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்வது என மற்றவர் நொடியில் முடிவெடுத்து ஒருவர் அடுத்த அறையின் பால்கனி வழியாக மின்னியின் அறையின் பால்கனியில் நுழைந்து அவள் அறைக்குள் செல்ல முயல்வது என்றும்

மற்றொருவர் ரிஷப்ஷனிலிருந்து மின்னியின் அறைக்கு வேறு சாவி வாங்கி வருவது என்றும் முடிவாகி...மிஹிர் அடுத்த அறையை நோக்கி ஓட......கவின் தரை தளத்தை நோக்கிப் பாய...

ஓடிய வேகத்தில் அந்த வழு வழு பிரேசிலியன் க்ரனைட் தரையில் கால் வழுக்கிய மிஹிர் அருகிலிருந்த படிகட்டுகளை நோக்கி உருள...”ஐயோ மிஹிர்..”.என்று அனிச்சையாய்...மிர்னா கத்த...

“மிர்.....”கதவைத் திறந்து கொண்டு பதறி ஓடி வந்தாள் மின்மினி.

ஒருவிதமான  அமைதி.

தர்மசங்கடமான மௌனம்.

எழுந்த நின்ற மிஹிர் சுவரைப் பார்த்து திரும்பி நிற்க...

அவனை மட்டுமே பார்த்தபடி மின்மினி நிற்க

அனைவரும் செய்கையற்று நின்றனர் அரை நிமிடம்.

“ஐ...லவ் யூ மிர்....நான் செய்தது எல்லாமே தப்புதான்....பட் என் காதல் நிஜம்...உண்மை...”

கதற ஆரம்பித்தாள் மின்மினி.

வெடித்தான் மிஹிர்.

“ஷட் அப்....ஃபார் ஹெவன் சேக்...ஷட் அப்....உண்மை காதலாம்....சொல்ல வந்துட்டா... மண்ணாங்கட்டி.....உண்மை கூட சேராத  எதுவே உண்மை காதல் கிடையாது....உண்மைனா என்னன்னாவது தெரியுமா உனக்கு...? ஐ’ம் த்த்த ட்ரூத்...ந்னு கடவுளே தன்னை உண்மைனுதான் அடையாளபடுத்திக்கிறார்........ அவருக்கும் நீ செய்து வச்சிருக்கிற வேலைக்கும் எதாவது ஒரு துளி சம்பந்தம் இருக்கா.... ? ஒரு சின்ன நியாயம்... ஒரு சின்ன நேர்மை.....ஒரு சின்ன பொதுநலம்..எதாவது இருக்கா உன் பக்கம்... உண்மை பத்தி பேச வந்துட்ட....”

“நான் செய்தது தப்புன்னு முழுசா உணர்ந்துட்டேன்பா....” அவனைப் பார்த்து கெஞ்சினாள் மின்மினி.

“எப்போ மாட்டிகிட்ட பிறகா?”

அறை வாங்கியவளாய் ஒரு கணம் அவள்.....பின் தொடர்ந்தாள்...

 “அங்க மிர்னா மெடல்காக நிக்றப்ப....நீங்க இங்க என் அப்பாக்காக வெயிட் செய்துகிட்டு இருந்தீங்களே அப்ப....

மிர்னா ஜெயிச்சா அது நீங்களே ஜெயிச்ச மாதிரின்னு எப்பவும் பேசுவீங்க...ஆனா அவ மெடல் வாங்கிற டைம்...இங்க என்னை தனியாவிட்டுட்டு போனா  நான் எதாவது செய்துப்பேன்னு நீங்க வெயிட் செய்தீங்க....இத்தனைக்கும் உங்களுக்கு என் மேல கடும் கோபம்... வெறுப்பு எல்லாம்...ஆனாலும் செத்து ஒழின்னு விட முடியலை...அப்ப புரிஞ்சுகிட்டேன்....

சாகுறதுக்காக தூக்கு கயிறை இப்போ கழுத்துன மாட்டின நொடி.... எல்லோரையும் திரும்பி பார்க்கவே முடியாதுன்னு உணர்ந்த அந்த நொடி..... மிர்னாவுக்கு எதிரா நான் என்ன செய்ய இருந்தேன்னு புரிஞ்சுகிட்டேன்...

நான் செய்தது எவ்ளவு பெரிய அநியாயம்னு தெரிஞ்சிகிட்டேன்...” வலியும் கெஞ்சலுமாக மிஹிரைப் பார்த்தாள்.

“காதலையும் கல்யாணத்தையும்விட நட்பு மேலன்னு ஒரு காலமும் நான் குழம்பிகிட்டது கிடையாது...மேரேஜைவிட மேலான ஒரு மனுஷ உறவு இருக்குன்னு நினைக்கிறவனுக்கு மேரேஜ்னா என்னன்னு தெரியலைனு அர்த்தம்னுதான் நான் சொல்லுவேன்...ஆனா நியாயம்னு ஒன்னு இருக்கு பார்த்தியா அது நட்பு...காதல்... கல்யாணம் எல்லாத்தைவிட மேல...அது இல்லாத எந்த உறவும் செத்த பிணம் தான்....அதை குழி தோண்டி புதைக்க வேண்டியதான்.....இல்லனா அழுகி நாறும்...” கட கடவென ஹோட்டலை விட்டு வெளியேறினான் மிஹிர்.

“முடிஞ்சா என்னை மன்னிச்சிரு மிர்னா....நீங்களும் தான்....” சுற்றி இருந்தவர்களை பார்த்து சொல்லிவிட்டு அறை நோக்கி நடந்தாள் மின்மினி.

அவள் மனதில் என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என அனைவருக்குமே வார்த்தையின்றி புரிந்தது.

“நீ இன்னுமே திருந்தல மின்னி...” அமைதியாய் கோபம் எதுவுமின்றி சொன்னாள் மிர்னா.

விரக்தியாய் இவளைப் பார்த்தாள் மின்மினி.

“தப்பு செய்திருக்கேன் நான்.....அதை செய்த நேரங்களைவிட உணர்ந்த இந்த நேரம்....ரொம்பவுமே தாங்க முடியலை......நீ எவ்ளவு முடியுமோ என்னை அவ்ளவு திட்டு...அடிக்க வேணாலும் செய்...அப்பவாவது எனக்கு கொஞ்சமாவது நிம்மதி கிடைக்குதான்னு பார்ப்போம்....ஆனால் நான் முன்னமாதிரி இல்லபா...உணர்ந்துட்டேன்..”

“திருந்திடீங்களா....? அப்டின்னா அதை நீங்க செயல்ல காமிக்கனும்..... ஆனா அப்டி எதைப் பத்தியும் நீங்க யோசிக்ற மாதிரியே  இல்லையே.....திருடுனவன் திருந்துனா திருடனதை 5 மடங்கா திருப்பி கொடுக்கனும்.....இல்லனா அது எப்டி திருந்துறதாம்...?.”

“அப்படி நான் செய்றதுக்கு என்ன இருந்தாலும் செய்ய தயாரா இருக்கேன் மிர்னி....ஆனா அப்டி என்ன இருக்குது செய்றதுக்கு...?” ஒரு ஆவல் அதனோடு சேர்ந்த இயலாமை...விரக்தி அவளிடம்....

“ ஏன் இல்லை...? திருந்திட்டேன்னு சொன்னீங்கன்னா.... முதல்ல உங்க செயலுக்கு பொறுப்பேத்துகோங்க...ஆமா செய்துட்டேன்னு சொல்லுங்க......கடவுளுக்கு எதிரா நடந்திகிட்டதால அவர்ட்ட மன்னிப்பு கேளுங்க.... உலகத்துக்கு எதிரா நடந்துகிட்டதால உலகம் தாரதை ஏத்துக்க தயாரா இருங்க.....ஃபேஸ் த கான்சிக்கியூயன்ஸ்.......”

“கடவுள் மன்னிச்சி மறக்கதானமா சொல்லிருகாரு...” இடையிட்டார் மின்மினியின் தந்தை. அதை இதை சொல்லி மகளை கஷ்டபடுத்தாமல்விட்டுவிட்டு போய்விடமாட்டார்களா என்றிருக்கிறது அவருக்கு....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.