(Reading time: 10 - 19 minutes)

05. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ன்னடி  இது, குடு குடுன்னு போய் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி வச்சிருக்க”

விமலாவின் அம்மா ப்ரோக்ராம் பார்த்துவிட்டு கத்த, அவளின் அப்பாவும் என்ன இது என்பது போல் பார்த்தார்.

“அம்மா சும்மா கத்தாதம்மா.  அவங்க பண்ணினதுக்கு பதிலடி கொடுத்தேன்”

Vidiyalukkillai thooram

“என்னது பதிலடி கொடுத்தியா.  நாம, இல்லை இல்லை, நீ முன்னாடி பண்ணின வேலைக்கு அவங்க உன்னை அடிக்காம விட்டாங்களேன்னு  சந்தோஷப்படு.  ஏண்டி இப்படி ஒரு காரியம் பண்றதுக்கு முன்னாடி எங்க யார் கிட்டயும் சொல்லணும்ன்னு தோணலையா உனக்கு.  ஆனாலும் உனக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்திடி.  சம்பாதிக்கற திமிரு”

“என்ன திமிரும்மா.  கல்யாணம் நின்னு போன உடனே நீயும், அப்பாவும் எத்தனை கஷ்டப்பட்டீங்க.  அதனாலதானே அப்பாக்கும் உடம்பு சரி இல்லாமப் போச்சு.  இதுக்கெல்லாம் அவங்க கொஞ்சமானும் அனுபவிக்க வேண்டாம்”

“உங்கப்பாக்கு உடம்பு சரி இல்லாமப் போனது உன்னோட நடத்தையால.  நீ பண்ணின வேலைக்கு அவங்க கல்யாணத்தை நிறுத்தினதோட விட்டாங்களேன்னு சந்தோஷப்படு.  நானும், அப்பாவும் அவங்க கைல, கால்ல விழுந்து விஷயம் வெளில போகாமப் பார்த்துட்டோம்.  ஆனால் இப்போ நீ செஞ்சிருக்கற வேலையால என்ன ஆகப் போகுதோ”

“விடு சாவித்ரி.  சும்மா அவளைத் திட்டாதே.  நானுமே இந்தக் கல்யாணத்தை அவங்க நிறுத்தி, அதுக்காக அவங்க கிட்ட மன்னிப்பு கேக்கற அளவுக்கு போனதுல மனசு ஒடிஞ்சு போய்தான் இருக்கேன்.  எத்தனை தலை குனிவாப் போச்சு”

“என்னங்க சொல்றீங்க.  தப்பு செஞ்சது நாம.  அப்போ நாம தலை  குனிஞ்சுதானே ஆகணும்”

“என்ன பெரியத் தப்பு.  இந்தக் காலத்துல இதெல்லாம் ஒண்ணுமே இல்லை”

“நீங்க கொடுக்கற செல்லம்னாலதான் அவ இப்படி ஆடறா.  இதெல்லாம் நல்லதுக்கே இல்லை சொல்லிட்டேன்”

“நீ கொஞ்சம் நேரம் வாய மூடிட்டு இருக்கியா.  எதுக்கு எடுத்தாலும் நொட்ட பேசிட்டு.  ஏம்மா விமலா, நீ இப்படி விஷயத்தை வெளில கொண்டு வந்துட்டியே.  அவங்க இதைப் பெரிசாக்கினா கஷ்டம் இல்லையாம்மா”

“அப்பா, கவலையேப்படாதீங்க. நான் ஸ்ரீதர்க்கிட்ட முன்னாடி பேசின வரைக்கும் முடிஞ்ச வரைக்கும் எதுக்கும் சண்டை, சச்சரவுன்னு போகாத ஆளுங்கன்னு தெரிஞ்சுகிட்டுதான் இதைப் பண்ணினேன்.  இன்னைக்கு அவங்க மாத்தி, மாத்தி அத்தனைக் கேள்வி கேட்டும் கல்யாணம் நின்ன உண்மையான காரணத்தை அந்த ஆள் சொல்லவே இல்லை.  ப்ரோக்ராம்ல கேள்வி கேட்டவங்களையும் கண்டபடி பேசிட்டான் அவன்.  அதனால இனி அவங்க என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க”

“என்னடி நம்ப மாட்டாங்க.  நீ பண்ணினதை வெளில சொன்னாலே போதுமே.  அவர் பெருந்தன்மையா சொல்லாம இருக்க, அதை நீ நக்கலா சொல்ற”

“அம்மா அப்படியே விஷயத்தை சொன்னாலும் ஒண்ணும் இல்லை.  அதை நிரூபிக்க ஏதானும் ஆதாரம் இருக்கா.  இல்லையே.  அதைத்தான் அப்பா ரொம்ப அழுது கேட்டாங்கன்னுட்டு அவங்க வீட்டு ஆளுங்க கொடுத்துட்டாங்களே”

“அவங்க பெருந்தன்மையா நடந்ததை நீ உனக்கு சாதகமாப் பயன் படுத்த பார்க்கிற.  ரொம்பத் தப்பு விமலா.  நமக்கு நல்லது செஞ்சவங்களுக்கு நல்லது செய்யாட்டாலும் பரவா இல்லை.  கெட்டது செய்யக்கூடாது”

“சாவித்ரி, உன்னோட புலம்பலைக் கொஞ்சம் நிறுத்தறியா.  நீ சொன்னதும் நல்ல பாயிண்ட்மா, அவங்க இனி எதை  வச்சும் உன் தப்பை நிரூபிக்க முடியாது.  கவலைப்படாதே.  இனி உன்னோட நானும் இருக்கேன்.  அவங்களை ஒரு கை பார்த்துடலாம்”

இவர்களின் ஆட்டம் எதில் கொண்டு போய் விடுமோ என்று தன்  மகளையும், கணவரையும்  கவலையுடன்  பார்த்தாள் சாவித்ரி.

ஸ்ரீதர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மலைத்து நிற்க, அவனின் தாயின் அழுகுரல் கேட்டு உள்ளறையிலிருந்து வந்த அவனின் தந்தை, “என்ன ஆச்சுடா ஸ்ரீதர், அம்மா எதுக்கு இப்படி அழறா?”, என்று அவரின்  மனைவியை ஆசுவாசப்படுத்தியபடியே கேட்டார்.

“என்னங்க நம்ம மொத்த குடும்ப மானமும் போச்சுங்க.  கடவுளே இதுவரைக்கும் யாருக்கும் ஒரு கெடுதலும் பண்ணலையே ஏன் நமக்கு இப்படி எல்லாம் நடக்குது”

“என்னம்மா ஆச்சு.  டேய் ஸ்ரீதர் நீயானும் சொல்லேண்டா.  யாருக்கானும் உடம்பு சரி இல்லையா.  ஃபோன் வந்துச்சா”

“அப்பா நாம கல்யாணத்தை நிருத்தினதைப் பத்தி விமலா வீட்டுல இருந்து டிவில போய் சொல்லி இருக்காங்க.  டிவி ஸ்டேஷன்லேர்ந்து  போன வாரம் என்னைக் கூப்பிட்டு ஏன் இது இப்படி ஆச்சுன்னு கேள்வி கேட்டாங்க.  நான் குடும்ப விஷயத்தை எல்லாம் வெளில சொல்ல முடியாதுன்னு சொல்லி அவங்கக்கிட்ட  கத்திட்டு வந்துட்டேன்.  ரெகார்ட் பண்ணி பத்து நாள் ஆச்சு.  என்கிட்ட இருந்து பதில் வாங்க முடியாததால அவங்க அதை டெலிகாஸ்ட் பண்ணலை அப்படின்னு நினைச்சேன்.  ஆனா இன்னைக்கு அதை போட்டுட்டாங்க”

“ஐயோ, என்னடா எங்க கிட்ட உடனே விஷயத்தை சொல்ல மாட்டியா.  சரி விடு, ஏம்மா அவங்க கேட்ட கேள்விக்கு இவன் பதில் சொல்லலை.  அவ்வளவுதானே.  அதுக்கு எதுக்கு இப்படி அழற.  விடு.  டிவிக்காரங்க கேக்கற கேள்விக்கெல்லாம் எல்லாரும் பதில் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை.  இதைப் போய் பெரிசா  எடுத்திட்டு அழுதுட்டு இருக்க.  கண்ணைத் தொடைச்சுட்டுப் போய் வேலையைப் பாரு”

“இல்லைப்பா அவங்க அங்க நடந்ததை அப்படியே போடல.   அவங்க பேசினதை கட் பண்ணிட்டு நான் கத்தினது, அவங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னது இதை எல்லாத்தையும் தேவையான இடத்துல மாத்தி போட்டு எடிட் பண்ணி இருக்காங்க.  அதைப் பார்த்தா முழுத் தப்பும் நம்ம மேல இருக்க மாதிரி இருக்கு”

“என்னடா சொல்ற.  அந்தப் ப்ரோக்ராம் மறுபடி பார்க்க முடியுமா”

“ஹ்ம்ம் நெட்ல பார்க்கலாம்ப்பா.  டிவி சீரியல்லேர்ந்து இந்த மாதிரி ப்ரோக்ராம் வரை எல்லாத்தையும் சில வெப்சைட்ல போஸ்ட் பண்றாங்க.  அதுல போனாப் பார்க்கலாம்.  ஒரு அரைமணி டைம் ஆகும் அவங்க அப்லோட் பண்றதுக்கு”

“ஓ, இங்க பாரு மதி.  நீ மொதல்ல அழுகையை நிறுத்து. போன வாரம் முழுக்க உனக்கு ஜுரம்.  இப்போதான் சரி ஆகி இருக்கு.  இதோட இப்படி அழுது மறுபடி இழுத்து விட்டுக்காத.  நம்ம மேல ஒரு தப்பும் இல்லை.  அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்.  ஸ்ரீதர் நீ அக்கா வீட்டுக்கு ஃபோன் போடு”

“எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க.  நீங்க பார்த்தாதான் அவங்க எந்த அளவுக்குப் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியும்.   நாம ஏதோ வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தினா மாதிரி அந்தப் பொண்ணு சொல்லி இருக்கு”

“என்னது என்ன சொல்ற மதி.  ஏண்டா ஸ்ரீதர், நீ என்ன சொன்ன.  விமலா வீட்டு ஆளுங்க அப்படின்னுதானே.  அந்தப் பொண்ணா அந்த மாதிரி வந்து பேட்டி கொடுத்து இருக்கு”

“ஆமாம்ப்பா, அவதான் இந்த மாதிரி பண்ணி இருக்கா.  சில உண்மைகள் நமக்குத் தெரிஞ்சு கல்யாணத்தை நாம நிறுத்தின உடனே அவங்க வீட்டு ஆளுங்க நம்மக்கிட்ட வெளில விஷயம் தெரிஞ்சா கெட்டப் பேரு.  அதனால தயவு செய்து வெளில சொல்லாதீங்கன்னு எப்படி எல்லாம் அழுது நம்மக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க”

“ஆமாடா அதுவும் விமலாவோட அப்பா அப்படி கெஞ்சி கேட்டாரே.  கடைசில இப்படி முதுகுல குத்தற ஆளுங்க மாதிரி இருக்காங்க.  அதுவும் நாம தப்பே பண்ணாத போது”, என்று இவர்கள் ஆற்றாமையில் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டுத் தொலைபேசி அடிக்க ஸ்ரீதரின் அப்பா அதை எடுத்தார்.

“அப்பா, நான் கண்மணி பேசறேன்ம்ப்பா.  இப்போத்தான் அந்தப் ப்ரோக்ராம் பார்த்தேன்.  இது என்னப்பா இது இந்தப் பொண்ணு இப்படி பண்ணி வச்சிருக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.