(Reading time: 9 - 18 minutes)

01. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

சென்னை, மே, 2015....

கே தானா?  இல்ல இது ஓவரா இருக்குதா....?

இருபுற சுவரிலுமாக இருந்த அந்த ஆளுயர கண்ணாடியில் அப்படியும் இப்படியுமாக திரும்பி திரும்பி தன்னைப் பார்த்துக்கொண்டாள் அவள்.

Eppadi solven vennilaveஎல்லாம் இந்த சுகந்தியாலையும் சுனிதாவாலையும் வந்த வம்பு...சல்வார் போதாதா...? சாரி தான் கட்டனும்னு சொல்லிகிட்டு...

நேரத்தைப் பார்த்தாள்.

ஓகே இனிமே யோசிச்சு ப்ரயோஜனம் இல்லை.

கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தாள்.

“கிளம்பிட்டியா அன்றில்....?” கேட்டபடி எதிரில் வந்த தந்தையின் பார்வை மகளைத் தொட்டதும் பெருமித பாவம் அவர் முகத்தில்....

“ ஆல் த பெஸ்ட்மா...”

“எதுக்குப்பா ஆல் த பெஸ்ட்...? …அதான் ரிசல்ட் எப்பவோ வந்துட்டே...“

“ உனக்கு பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட் அவார்ட் கிடைக்கிறதுக்குமா....”

“போங்கப்பா...விஷ் பண்ண மட்டும் செய்றீங்க...ஃபங்க்ஷனுக்கு வாங்கன்னா வர மட்டேன்றீங்க...”

.“இல்லமா...” என்ன நினைத்தாரோ சொன்னவர் அருகில் வந்து இவள் கையை பிடித்துக் கொண்டார். “குழந்தைய ஒரு ஸ்டேஜ் வரை தூக்கிட்டு போகனும், அப்புறம் ஒரு காலம் வரை கைய பிடிச்சு நடத்தி கூட்டிட்டு போகனும்...அப்புறம் அந்த கையை கூட விட்றனும்...”

அவர் முகம் குரல் எல்லாம் மாறுவது மகளுக்கு புரியாமல் இல்லை.

சே...இந்த டாபிக் இப்டி போகும்னு நினைக்கலையே...

“ஹூம்...இது எனக்கு முன்னாலயே தெரிஞ்சிருந்தா எவ்ளவோ நல்லா இருந்திருக்கும்...”

“இட்’ஸ் ஓகேபா...இப்பவும் எல்லாம் நல்லாதான் இருக்குது......விஞ்சு குட்டி அங்க உங்க கால்காக வெயிட் செய்துட்டு இருப்பார்...பேசுங்க....பங்க்ஷன் முடிஞ்சு ஆஃபீஸ்ல மீட் செய்யலாம்பா...பை...”

அப்பா முகத்தில் பெருமிதம். எதை சொல்லி அவரை சமாளிக்கிறதென்று மகளுக்கு தெரிந்திருக்கிறதே..அதற்கானது இது.

காரை எடுத்துக்கொண்டு தன் கல்லூரிக்கு விரைந்தாள் அன்றில்.

அவள் எம் பி.ஏ முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது. இன்று கான்வகேஷன். அவள் கல்லூரி நிர்வாகம் அப்படி. எல்லாவற்றிலும் வேகம்.

விழா தொடங்கி இருக்குமோ..?

அவசரமாக பார்க்கிங்கில் சென்று காரை நிறுத்திவிட்டு விழா நடக்கும் ஆடிட்டோரியத்திற்கு விரைந்தாள்.

அதன் முகப்பிலேயே நின்றிருந்தது இவளது கேங்க்..

“ஹேய்...ரேயா வந்தாச்சு....”   அர்பணா தான் முதலில் இவளைப் பார்த்தாள்.

“ரேயு...சேரி உனக்கு சும்மா நச்சு பிச்சுன்னு இருக்குது... “ சுனிதா சொல்ல

“ரொம்ப ஓவரா இருக்கோபா...” தன்னை மீண்டுமாய் மேலும் கீழும் பார்த்துக் கொண்டாள் அன்றில் அலைஸ் ரேயா.

“அதெல்லாம் ஒன்னும் ஓவரா இல்ல....பார்த்த உடனே...பொண்ணுக்கு மாப்ளை பாக்க நேரம் வந்துட்டுன்னு  உங்க அப்பா நினைக்கிற அளவுக்கு இருக்க.......”

முறைத்தாள்  பெண். காலைல அப்பா இதைதான் ஹிண்ட் செய்தாங்களோ...? மனதிற்குள் சிலீர் என ஒரு பயம்.

“அழகா இருக்கன்னு சொல்றதுக்கு அழுகின தக்காளி  லுக் விடுறவ நீ மட்டும் தான்....இன்னைக்கு நீ தான் ஷோ ஃஸ்டாப்பர்...அதுக்கு ஏத்தமாதிரி வந்திருக்க...அவ்ளவுதான்...”

சொல்லிய சுனிதா இவள் கையை பிடித்து இழுத்த படி அரங்கத்தை நோக்கி நடந்தாள்.

 “சுகந்தி அங்க நம்ம எல்லோருக்கும் சீட் பிடிச்சு வச்சிட்டு காத்துகிட்டுருக்கா...சீக்கிரம் போகலைனா கடிச்சு குதறிடுவா.”  சொல்லியபடி அர்பணாவும் இவர்களை தொடர

“இரு இரு நீ மத்தவங்க முன்னாடி சுகந்திய நாய்னு சொல்லிட்டல்ல...இன்னைக்கு இருக்கு உனக்கு...” சுனிதாவின் வார்த்தைக்கு தெறித்தாள் அர்பணா

 “அம்மா...பர தேவதை....உனக்கு கண்டிப்பா இன்னைக்கு கிட்கேட் வாங்கி கொடுத்துடுறேன்....ஆப்பு அடிக்கிற ஐடியாவை  அப்டியே விட்டுடுமா...”

“அது..”

அவர்கள் பேச்சை கேட்டபடி நடந்த ரேயாவின் சிரிப்பு இன்னும் சிறிது நேரம் கூட தொடர்ந்தது.

மேடைக்கு மிக அருகில், ஒரு ஓரத்து இருக்கையில் எளிதாக மேடைக்கு செல்லும் வகையில் சென்று அமர்ந்து கொண்டாள் ரேயா.

“சுகன்...இதையும் வச்சுக்கோபா...நான் ஸ்டேஜ்க்கு போறப்ப இதிலயும் போட்டோஸ் எடு....அப்பா கேட்டாங்க...” தன் கேமிராவை இயக்கும் முறையை அடுத்திருந்த சுகந்தியிடம்  சொல்லி கொடுத்துவிட்டு மேடையைப் பார்த்து திரும்பும் போதுதான் அந்த காட்சியைப்  பார்த்தாள்.

இடியொன்று அவள் மேல் விழுந்து இதயம் முதல் இரண்டு கால் வரையிலுமாய் துடிக்க துடிக்க இறங்கியது மின்சாரம்.

ஆறிவிட்டதாக நினைத்திருந்த அடி மனக் காயம் சுரீலென்று வலிகொண்டு திறக்க, ரத்த சுரப்பு உள்மனதில்.

மேடையின் பக்கவாட்டு அறையிலிருந்து பேசி சிரித்தபடி கல்லூரி முதல்வரும் , சேர்மனும் அழைத்து வந்து கொண்டிருந்தனர் அவனை.

ஆதிக்....!!!

காவல் துறை உடையில் அவன்....

ஆதிக் தான் சீப் கெஸ்ட் அதிரூபன் ஐ பி எஸ்ஸா...?

இவளறிந்த அவன் பெயர் கூட உண்மையில்லையா...?

மருகியது உயிர்.

சொன்னாலும் கேட்காமல்  அவள் கண்கள் அவன் பால்.

புன்னகையுடன் பேசுவது அவன் இயல்பு.

பார்த்தவுடன் தொற்றியது அது இவள் முகத்தில் இத்தனை வலியிலும்....

தனக்கென இடப்பட்ட இருக்கையில் அவன் அமர, இவள் பார்வை அவன் தலை முதல் கால்வரை பரவியது.

மொத்த உருவத்தையும் உயிரில் பொதிந்துவிட பரபரக்கின்றன விழிகள்....

முன்பைவிடவும் கம்பீரமாக தெரிந்தான்.

ஜிம்முக்கு அதிகமாக போகிறான் போலும்.

அவன் பின் கழுத்தை மறைக்கும் விதமாக சற்றே நீளமாக வைத்திருந்த முடி இப்பொழுது காவல் துறை பாணியில் வெட்டப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இன்னும் அந்த சாக்லேட் பாய் சார்ம் அப்படியேத்தான் இருக்கிறது.

கண்ணில் அதுவாக நீர் கோர்க்கிறது...

இத்தனைக்கும் பிறகுமா?

சட்டென எழுந்துவிட்டாள்.

“தலை வலிக்குது சுகன். நான் வீட்டுக்கு போறேன்.....”

கிளம்ப எத்தனித்தவளை நகரவிடாமல் பிடித்துக் கொண்டாள் சுகந்தி.

“என்ன விளையாடுறியா....5 இன்டெர் டிபார்ட்மென்ட் அவார்ட்ஸ் இருக்குது....பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட் அவார்டும் உனக்குத் தான் இருக்கும்....ஒரு தலைவலிக்காக இதையெல்லாம் விட்டுட்டு போறேன்றியே...போட்டோஸ் பார்த்தா அப்பா எவ்ளவு சந்தோஷபடுவாங்க....” ரேயாவை கரம் பிடித்து இழுத்து அமரவைக்க முயன்றாள் சுகந்தி.

அனைவரும் அமர்ந்திருந்த வேளை மேடைக்கு மிக அருகில் இவள் மட்டுமாய் எழுந்து நின்று கொண்டிருந்ததால் அவனின் பார்வையில் தெளிவாக விழுந்தாள் ரேயா.

அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் வேக வேகமாக அமர்ந்து கொண்டாள். கண்கள் இவளையும் மீறி அவன் முகபாவத்தை ஆராய்கிறது.

இவளை அவன் பார்த்துவிட்டான் என அவன் முகம் காட்டிக் கொடுக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.