(Reading time: 10 - 19 minutes)

01. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

ந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அதன் பின் ஆட்டோ எடுத்து செல்லலாம் என்று நினைத்துதான் நல்லிசை அங்கு தன் மகனுடன் இறங்கினாள்.

 அவிவ் அவளுக்கும் முன்னாக குதித்து இறங்கினான். ஷாப்பிங் செல்லும் உற்சாகம் அவனுக்கு. சனிக் கிழமை அரை நாள் அலுவல்.

வேலை முடிந்ததும் அருகில் உள்ள லேண்ட் மார்க்கில்  அவிவ் கேட்டபடி அவனது ஃபேவரைட் ஸ்டாரின் லேட்டஸ்ட் மியூசிக் ஆல்பம் வாங்கி  தருவதாக சொல்லி இருக்கிறாள்.

Nagal nilaஅவிவிற்கு வயது 7தான் என்றாலும் இந்த பைத்தியம் பிடித்தாட்டுகிறது. பாடல்களை அவ்வப்போது பாடிக் காண்பிப்பதும்  நடனம் ஆடிக் காண்பிப்பதும்....ம்....இவள் வாழ்வின் ஒரே சந்தோஷம்  இந்த அவிவ்தான்.

அதனால் தான் வசந்த காலம் என்ற பொருளில் அவனுக்கு அவிவ் என்று பெயரிட்டாள்.

“பார்த்துடா குட்டிபா....பார்த்து இறங்குன்னு அம்மா எத்தனை தடவை சொல்லிருக்கேன்..”

“கேர்ஃபுல்லாத்தான் மம்மா இறங்குறேன்...நீங்க தான் கேர்லெஸ்ஸா பேசுறீங்க...”

நொடி நேரம் புரியவில்லை எனினும் மகன் விளக்கும் முன் அவன் எதைக் குறிப்பிடுகிறான் என புரிந்துவிட்டது நல்லிசைக்கு.

“சரிடா இனிமே கவனமா இருப்பேன்....பப்ளிக்ல உன்னை இப்படி குட்டிபான்னு கூப்ட மாட்டேன்......”

“இப்டித்தான் தினமும் சொல்றீங்க...” என்றவன் கவனம் வந்து கொண்டிருந்த காரின் புறம் சென்றது.

“மம்மா...உங்க ஃபேவரைட் கலர் கார்...” சில்லிரெட் கலர் காராயிருக்கும்.....மனதிற்குள் சிறு முனுக்குடன் இவள் காரைப் பார்த்த நேரம்… சிறு ட்ராஃபிக் ஜாமின் காரணமாக அந்த கார் அவர்கள் அருகில் வரும்போது நின்றது.

அதன் ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவன் இவள் கண்களில் பட்டான்.

மதுரன்!!!!!!!!!!

சர்வமும் நின்று போனது இவளுள்.

இன்னும் இவள் மதுர் உயிருடன்தான் இருக்கிறானா?????

அவனும் ஏதோ உள்ளுணர்வில் இவள் புறம் திரும்பியவன் எந்த முகவேறுபாடும் இல்லாமல் மீண்டுமாய் அவன் முன்னிருந்த சாலையில் கண்பதித்தான்.

இவளைப் பார்த்தும்....????

சூழல் சுற்றுபுறம் எல்லாம் மறந்து அவனை நோக்கி ஓடினாள். அதற்குள் வழி கிடைத்துவிட அவன் காரை கிளப்பிகொண்டு சென்றான்.

குழந்தையின் கையைப் பிடித்தபடி வெறித்தபடி அந்த வாகனம் சென்ற திசைபார்த்து நின்றாள் நல்லிசை.

உயிருடன் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறான். அதுவும் இங்கு இவள் வாழும் இந்த சென்னையில் தான் இருக்கிறான்.

ஆனால் இவளைத் தேடவில்லை. இவ்வளவுதானா இவன்? உயிர் காதல் என்றானே...அத்தனையும் பொய்யா?

இவள்தான் அவனே உலகமென்று பெற்றோரை கூட பகைத்துகொண்டாளே....... கொதிப்பும் கொந்தளிப்புமாக இவளுக்குள் சுய பிரளயம் துடிக்க, அவள் பார்வைக்குள் இருந்த அந்த சில்லி ரெட் சாலையில் இருந்து திரும்பி, அருகிலிருந்த அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது.

இங்குதான் வேலை பார்க்கிறானா?

ஒருவேளை இவளை இத்தனை நொடிக்குள் அடையாளம் காணமுடியவில்லையோ அவனால். அவசரமாக குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

அவன் இவளுடன் சுற்றிய கால கொடி இடை போய் சற்று உருண்டு திரண்டிருந்தாள்.

ஜீன்சிலும், ஸ்கர்டிலும், நீ லென்த் ஃப்ராக்ஸிலும் மட்டுமாக இவளைப் பார்த்திருப்பான் அவன்.

இன்றைய வெண்சல்வார் அடுத்த குழப்ப காரணி.

என்ன ஆனாலும் சரி அவனைப் பார்த்தே ஆகவேண்டும்....பேசியே ஆகவேண்டும்.

மகனை கையில் பிடித்தபடி வேக வேகமாக அந்த வளாக வாசலை நோக்கி ஓடினாள்.

“மம்மா....ஆட்டோ அந்த பக்கம்...”

மகன் என்ன பேசுகிறான் அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற எதுவும் நல்லிசையின் கருத்தில் படவே இல்லை.

இவள் வேகமாக மதுரனை நோக்கி ஓட்டமும் நடையுமாக செல்ல, “மம்மா.... ஷாப்பிங்மா....சி டி ம்மா.....” அவிவின் சத்தம் சிணுங்கலாய் ஆரம்பித்து, நொடியில் உயர குழந்தையின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தான் மதுர்.

ஒடிப்போய் அவனருகில் நின்றாள் நல்லிசை.

மூச்சிளைத்தது.

“எனி ஹெல்ப் மேம்...?”

இவ்வளவு அருகில் கூடவா அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.

“நா...நான்....ந...நல்லிசை....இ..இசை”

“ஓ...கிளாட் டூ மீட் யூ மேம்...? என்ன விஷயம்...? எதுனாலும் உள்ள என்கொயரில கேட்டீங்கன்னா தெளிவா சொல்லுவாங்க....அந்த என்ட்ரில போனீங்கன்னா என்கொயரி....”

அவன் இயலபாய் இவளை இப்பொழுதுதான் முதல் முறையாய் பார்ப்பதுபோல் சொல்லிக்கொண்டு போக.... இவளை புறகணிக்க வேண்டும் என நடிக்கிறான் என்பது இவளுக்கு தெளிவாக புரிகின்றது.

இதற்கு நேரடியாக எனக்கு மணமாகிவிட்டது...புது வாழ்க்கை தொடங்கிவிட்டேன்...நடந்தைவைகளுக்காக வருந்துகிறேன் என்ற வகையில் எதையாவது சொல்லிவிட்டு போகலாமே...

எச்சூழலிலும் உண்மை பேச வேண்டும் என்பானே....எத்தனையாய் மாறிப்போனான்...

இவள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தவித்து நிற்க .....மதுர்  எதுவுமே நடக்காதது போல் இயல்பாய் இவளைக் கடந்து போனான்.

“மதுர்....நீங்க பண்றது சரி இல்லை மதுர்..”

அத்தனை கோபத்தையும் முடிந்த வரை கட்டுபடுத்திக் கொண்டு அவள் கடிபட்ட பற்களுக்கிடையே வார்த்தைகளை ஒலிக்கவிட...

அவன் முக பாவம் மாறியது.

வேகமாக இவளை தவிர்த்து அலுவலகத்திற்குள் சென்றான்.

இவள் உள்ளே வர மாட்டாள் என்று நினைத்தான் போலும்....

ஆனால் அவன் பின் ஓடினாள்....

 அலுவலக ஹாலிலில் லிஃப்டிற்கு அருகில் நின்ற அவனின்

ப்ளூ கலர் சட்டை காலர் அவள் கையில் கிடைத்தது....அவனை பிடித்து சுவற்றோடு சாய்த்து மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி.... திட்டி தீர்த்துவிட்டாள்.....

கூட்டம் கூடி விட்டது...

செக்யூரிட்டி இவளைப் பிடித்து இழுக்க....

“படிச்ச பொண்ணு மாதிரி இருக்கியேமா...எதுனாலும் பேசி தீத்துக்க....இப்டியா பொது இடத்துல பிள்ளயவும் கூட வச்சுகிட்டு......”

அப்பொழுதுதான் அவிவ் ஞாபகம் வருகிறது நல்லிசைக்கு....

அவன் இவள் காலை இருகைகளாலும் கட்டிக் கொண்டு உச்ச ஸ்தாதியில் அழுது கொண்டிருக்கிறான் என்பதே இப்பொழுதுதான் புரிகிறது...

“மம்மா....விட்ருங்கமா....யார் கூடயும் ஃபைட் பண்ண கூடாதுன்னு சொன்னீங்களேமா....எனக்கு பயமா இருக்குமா....போலீஸ் வந்து உன்னை அடிச்சிடுவாங்கமா.....”

குழந்தை முன் என்ன செய்திருக்கிறோம் என்பதே இப்பொழுதுதான் உறைக்கிறது நல்லிசைக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.