(Reading time: 7 - 14 minutes)

07. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

க்கீல் நோட்டீஸைப் பார்த்த ஸ்ரீதரின் அப்பா அடுத்து என்ன குண்டோ என்ற பயத்துடனேயே அதைப் பிரித்தார்.  பிரித்து படிக்க ஆரம்பித்த பின் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் முகம் கோபத்திற்கு மாறியது.  உடனடியாக தொலைபேசியில் தன் மகனையும், மருமகனையும் வீட்டிற்கு வரச்சொல்லி ஃபோன் செய்தார்.  அடுத்த அரை மணியில் என்னவோ, ஏதோ என்று இருவரும் வந்து சேர்ந்தனர்.

“என்னாச்சு மாமா, எதுக்கு  உடனே வர சொன்னீங்க.  அத்தைக்கு ஏதானும் உடம்பு முடியலையா?”

“இல்லை மாப்பிள்ளை, அந்த கேடு கெட்ட குடும்பம் அடுத்து செஞ்சிருக்கற வேலையைப் பாருங்க”, என்று வருந்தியபடியே கமலிடத்தில் அந்த வக்கீல் நோட்டீஸைக் கொடுத்தார் ஸ்ரீதரின் தந்தை.

Vidiyalukkillai thooram

“என்னப்பா இது வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருக்கு, இவங்க சும்மாவே இருக்க மாட்டாங்களா”, என்று கமலின் அருகில் சென்று அதைப் படிக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

“அடப்பாவிங்களா, இவங்க அடங்கவே மாட்டாங்களா.  நீங்க ஃபோன்ல பேசினதை ஏதோ நேருல போய் சண்டை போட்டுட்டு வந்தா மாதிரியும், அதனால அவங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு  அந்தாளுக்கு முடியாமப் போனமாதிரியும் இப்படித் திரிச்சு வச்சிருக்காங்களே.  அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு பதில் சொல்ல சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வச்சிருக்காங்க.  என்ன அநியாயம்ப்பா இது?”, ஸ்ரீதர் நம்ப முடியாத வேதனையில் புலம்ப ஆரம்பித்தான்.

ஆழம் தெரியாமல், சரியான சாக்கடை குடும்பத்தில் மாட்டிக் கொண்டோமே என்று வேதனைப் பட ஆரம்பித்தார் ஸ்ரீதரின் தந்தை. 

“மாமா, இந்த விஷயத்தை நாம ஈஸியா எடுத்துக்கிட்டோம்.  அவங்க ஏதோ பெரிய லெவல்ல விளையாட பிளான் பண்ணி இருக்காங்க.  இல்லைனா வக்கீல் நோட்டீஸ் வரை போக வாய்ப்பில்லை.   நம்மக் கிட்ட வலுவான ஆதாரம் இல்லைங்கறது வீக் பாயிண்ட்டாப் போச்சு.   அடுத்து எதை செய்தாலும் நாம நல்லா யோசிச்சு செய்யணும் மாமா”

“ஆமாம் மாப்பிள்ளை, நீங்க சொல்றது ரொம்ப சரி.  ஆனால் நாமளும் எத்தனை விதமா யோசிச்சு பார்த்தோம்.  நமக்கு எந்த விதத்துல அவங்களுக்கு பதிலடி கொடுக்கறதுன்னு தெரியலையே”

“இது வரைக்கும் இல்லை மாமா,  ஆனால் இப்போ புரிஞ்சுடுச்சு”

“என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?”

“நம்ம நாலு பேருக்கு உள்ளேயே விஷயத்தை போட்டு வச்சுட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தவிக்காம விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கறது பெட்டர் மாமா.   நான் அவங்க டிவிக்கு போனதோட விட்டுடுவாங்க அப்படின்னு நினைச்சேன்.  ஆனா அடுத்து அவங்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பிட்டாங்க.  இப்பவும் சும்மா இருந்தா அவங்க சொல்றது அத்தனையும் உண்மைன்னு ஆகிடும்.  நாம உடனடியா ஒரு வக்கீலைப் பார்த்து இதுக்கு என்ன விதமா பதில் சொல்றதுன்னு கேக்கலாம், நீ என்ன சொல்ற ஸ்ரீதர்.  உனக்கு வக்கீல் யாரானும் தெரியுமா?”

“மாமா இந்த நோட்டீஸ்க்கு முன்னாடி அவங்க டிவி ஸ்டேஷன் போனதுலேர்ந்து எல்லாத்துக்கும் கேக்கணும் மாமா.  எனக்கு யாரையும் தெரியாது.   என் கூட வேலை பண்றவருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு கேக்கலாம்.  அப்படி இருந்தா அவரைப் பார்த்துப் பேசலாம்”

“ஓ உனக்குத் தெரிஞ்சவங்க இல்லையா ஸ்ரீதர்.  அப்போ வேண்டாம் விட்டுடு,  நல்லாத் தெரிஞ்ச வக்கீல்கிட்ட போனாத்தான் பெட்டர் ஸ்ரீதர்.  டிவி மூலமா நம்ம குடும்பத்தைப் பத்தி தப்பா ஒரு அபிப்ராயம் வந்திருக்கு.  அதையும் மீறி இந்தக் கேஸை எடுக்கணும்ன்னா அது நம்மளைத் தெரிஞ்சவங்களாலத்தான் முடியும்.  ஒரு நிமிஷம் இரு.  நான் என்னோட பாஸ்க்குப் பேசிட்டு வரேன்”, என்று கூறியபடியே தன் மேலாளருக்கு அழைத்துப் பேச ஆரம்பித்தான் கமல். 

“ஸ்ரீதர் என் பாஸோட அப்பாதான் famous வக்கீல் வரதன்.  நாம இப்போ என்னோட  கம்பெனிக்கு முதல்ல போய் என் பாஸைப் பார்த்துட்டு அவர் என்ன சொல்றாரோ அதுப்படி செய்யலாம்”

“நானும் உங்க கூட வரவா மாப்பிள்ளை?”

“இல்லை மாமா வேண்டாம்.  மொதல்ல நானும், ஸ்ரீதரும் போய் அவரைப் பார்க்கறோம்.  நல்ல காலம் அத்தையை,  கண்மணி கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டா.  ஏற்கனவே வருத்தத்துல இருக்கறவங்க, இதைக் கேட்டா இன்னும் உடைஞ்சு போய்டுவாங்க.  இந்த நோட்டீஸ் விஷயம் எதுவும் அவங்களுக்குத் தெரிய வேண்டாம்.  அவங்க வந்தப்பறமும் நீங்க எதுவும் காமிச்சுக்காதீங்க.  நாங்க போயிட்டு வந்து விவரம் சொல்றோம்,  அது வரைக்கும் நீங்க எங்களுக்கு போன்ல கூட பேச வேண்டாம்”, என்று தன் மாமனாரிடம் கூறி விடைபெற்று, ஸ்ரீதருடன் தன் மேலாளரைப் பார்க்க புறப்பட்டான் கமல். 

அலுவலகத்திற்கு வந்து தன் மேலாளரிடம் அனுமதி பெற்று  உள்ளே சென்றார்கள் கமலும், ஸ்ரீதரும்.

“வாங்க கமல்.  என்னாச்சு கார்த்தாலே வந்தீங்க.  திடீர்ன்னு ஆள் அப்ஸ்கான்ட் ஆகிட்டீங்க.  சேல்ஸ் டாக்ஸ் விஷயமா உங்ககிட்ட பேசணும்ன்னு தேடினா ஆளையே காணும்”

“சாரி சார்.  திடீர்னு ஒரு பர்சனல் ப்ரோப்லம்.  அதான் உடனே வீட்டுக்குப் போயிட்டேன்”

“ஓ சரி.  நீங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டீங்களா அதான் கேட்டேன்.   என்ன ஆச்சு, யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா?  நீங்க போன்லயும் விஷயம் சொல்லாம, பார்க்கணும்ன்னு மட்டும் சொன்னீங்க”

“உடம்புக்கெல்லாம் ஒண்ணும் இல்லை சார்.  எல்லாரும் நல்லா இருக்காங்க.  இது வேற விஷயம்.  இவரைப் பார்த்திருக்கீங்க இல்லை.  என்னோட மச்சினன். பேரு ஸ்ரீதர்.  அவனோட friend கூட சேர்ந்து சின்னதா ஒரு  சாப்ட்வேர் கம்பெனி வச்சு நடத்திட்டு இருக்கான்”

“ஹலோ ஸ்ரீதர்.  Nice meeting you.  பார்த்ததில்லை,  ஆனா நீங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.  கொஞ்ச நாள் முன்னாடி கூட இவருக்கு நிச்சயம்னு சொல்லிட்டு இருந்தீங்க இல்லை”

“ஆமாம் சார்.  அது விஷயமாகத்தான் உங்க உதவி எங்களுக்குத் தேவைப்படுது”, என்று கமல், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆரம்பித்து அன்று வந்த வக்கீல் நோட்டீஸ் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“ஓ இந்தக் கால பொண்ணுங்க ரொம்பத் துணிச்சலாதான் இருக்காங்க.  கமல் உங்களை எனக்கு கிட்டத்தட்ட பத்து வருஷமா தெரியும்.  கண்டிப்பா உங்க சைடு தப்பு இருக்காதுன்னு நான் நம்பறேன்.  ஆனா அப்பா அப்படி இல்லை.   அவருக்கு சரின்னு பட்டாத்தான் எடுத்துப்பாரு.  உங்க கேஸ் அவர் எடுத்தாருன்னா உங்க அதிர்ஷ்டம்தான்.  பார்க்கலாம்.  இப்போ அப்பா கோர்ட்க்குப் போய் இருப்பார்.  சாயங்காலம் ஒரு ஏழு  மணிக்கு மேல வீட்டுக்கு வாங்க.  அப்போ அவரைப் பார்த்து பேசலாம்”, என்று கூற, அதற்கு சரி என்று கூறி மேலாளரிடம் நன்றி கூறி விடை பெற்று ஸ்ரீதர் கிளம்ப,  கமல் தன் மேலாளர் கேட்ட சேல்ஸ் டாக்ஸ் விவரத்தைக் கூற ஆரம்பித்தான்.

அன்று மாலை ஏழு மணி அளவில், வக்கீல் வரதனின் வீட்டை ஸ்ரீதரும், கமலும் அடைந்தனர்.  அவர்களை வரவேற்ற கமலின் மேலாளர் ரவி, தன் தந்தை பூஜையில் இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வருவார் என்றும் கூறி அவர்களை அவரின்  அலுவலக அறைக்கு  அழைத்து சென்று அமர வைத்தார்.   பின் பணியாளரை அழைத்து அவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொடுக்க சொல்ல, அவர்கள் அதை மறுத்துக் கொண்டிருக்கும்போதே அந்த அறையின் உள்ளே நுழைந்தார் சென்னையின் புகழ் பெற்ற வக்கீல் வரதன்.

“வாப்பா கமல்,  எப்படி இருக்க.  அம்மா, wife, பசங்க  எல்லாம் நல்லா இருக்காங்களா.  வருஷத்துக்கு ஒரு வாட்டி ஆயுத பூஜை அன்னைக்கு ஆபீஸ் வரும்போதுதான் உன்னைப் பார்க்க முடியுது.  நானும் வருஷா வருஷம் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வான்னு சொல்றேன்.  நீயும் அப்போதைக்கு மண்டையை ஆட்டிட்டு அதோட அதை மறந்து போய்டற.  கடைசியா உன் மச்சினர்னால வீடு வரைக்கும் வர வேண்டியதாப்  போச்சா”

“அச்சோ சார், வரக்கூடாதுன்னு இல்லை.  வேலை, பசங்க படிப்பு இப்படியே எல்லா நாளும்  பிஸியா ஓடிதுது, அதுதான்.  அது மட்டும் இல்லாம, நீங்களும் பயங்கர பிஸியாத்தானே இருக்கீங்க சார்.  ரவி சார்கிட்ட எப்போ உங்களைப் பத்தி கேட்டாலும் நீங்க ஏதோ கேஸ் விஷயமா வெளியூர் போய் இருக்கறதாவே சொல்லுவாரு”

“நல்லா சமாளிக்கற போ.  சரி ரவி சொன்னான் ஏதோ உன் மாமனார் வீட்டு சைடு பிரச்சனை.  அதுக்காக என்னைப் பார்க்க வர்றேன்னு.  என்ன ஆச்சு?”, வரதன் கேட்க, ஆதியோடந்தமாக ஸ்ரீதர் வீட்டுக்கு நிகழ்ந்தவற்றை கூறினான் கமல்.

“நீங்க சொன்னதெல்லாம் இந்தக் கல்யாணம் நின்னு போனதுக்கு அப்பறம் அந்தப் பொண்ணு வீட்டுல பண்ணினது சரியா,  ஆனா இது எல்லாத்துக்கும் காரணமா ஏன் அந்தக் கல்யாணம் நின்னுது அப்படின்னு ஒரு கேள்வி இருக்கே.  அதுக்கு இப்போ பதில் சொல்லுங்க.  அதே மாதிரி என்கிட்ட எந்தப் பொய்யும் கலக்காம, முழுசா உண்மையை மட்டும் சொல்லுங்க”

“இதுல பொய் அப்படிங்கறதே இல்லை சார்.  எங்க சைடுலேர்ந்து எந்தத் தப்பும் இல்லை.  அதனால பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அறைக்குள் ஒரு பெண் நுழைந்தாள்.  அவளை தன் மகள் என்று கமலிற்கும், ஸ்ரீதர்க்கும் அறிமுகப்படுத்திய வரதன், அவர்கள் இருவரும் வந்த நோக்கத்தை அந்தப் பெண்ணிடத்தில் கூறினார்.  அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டே ஸ்ரீதரை உற்றுப் பார்த்த அந்தப் பெண், வரதனிடம் திரும்பி.

“சார், என்ன ஆனாலும் இந்தக் கேஸை நீங்க எடுத்து நடத்தக் கூடாது.  இவங்கள மாதிரி குடும்பத்துக்கு தண்டனை கிடைச்சே ஆகணும்”, என்று கூற கமலும், ஸ்ரீதரும் அதிர்ந்து போனார்கள். 

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.