(Reading time: 12 - 24 minutes)

மனதோர மழைச்சாரல்... - 01 - வத்ஸலா

இக்கதையும், இதில் வரும் கதாபாத்திரங்களும், காட்சிகளும் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல......

ட்சத்திரங்கள்!!!

இங்குமங்கும் சிதறிக்கிடக்கும் வைரங்களாக வானமெங்கும் மின்னிகொண்டிருந்தன நட்சத்திரங்கள்.

முதுகில் மாட்டப்பட்டிருந்த பையுடன், தன்னை சுமந்து வந்த விமானத்தை விட்டு இறங்கி, நடந்தவன் கண்கள் தனிச்சையாக மேலே நிமிர்ந்தன.

Manathora mazhai charalகண் சிமிட்டும் அந்த விண்மீன் கூட்டத்துடன், வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு பந்தம் அவனுக்கு எப்போதும் உண்டு . அவற்றை பார்க்கும் போது எப்போதுமே சின்னதான புன்னகை கீற்று அவன் இதழோரத்தில் மலரும்.

சிரித்து, ஜொலித்து, கண்சிமிட்டி, மற்றவர்கள் மனம் ஈர்த்து விளையாடும் அந்த வைரங்களின் ஒளி மட்டுமே எல்லார் கண்களிலும் படுகிறது. அதனுள்ளே எப்போதுமே தகித்துக்கொண்டிருக்கும் வெப்பத்தை உணர்ந்தவர்கள் யாராம்?

இதை  உணராதவர்கள் பலர்.!!! உணர்ந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் சிலர்!!!!! அந்த வெப்பத்தில் குளிர் காய நினைப்பவர்கள் இன்னும் சிலர்!!!! ஒரு தீர்கமான சுவாசம் அவனிடத்தில்

நீல நிறத்தில், மிக அதிகமாக ஒளி வீசும் நட்சத்திரம்தான் உள்ளுக்குள்ளே அதிகமாக கொதிக்குமாமே? எங்கோ படித்த ஞாபகம்!!!

நடந்தவனின் பார்வை வடக்கு பக்க வானத்தை அடைய, கண்கள் ஒரு நொடி அந்த நட்சத்திரத்தில் நிலைத்து திரும்பியது. அவன் இரவில் எப்போது வானத்தை பார்த்தாலும் அந்த நட்சத்திரத்தை பார்க்காமல் திரும்பியதில்லை அவனது பார்வை.

ஏதேதோ நினைவலைகள், உள்ளம் வருடிப்போயின சில. மனம் கீறிப்போயின சில.

பார்வையை தாழ்த்திக்கொண்டு யோசனையுடன் நடந்தான் அவன். அவனது நடையில் அப்படி ஒரு கம்பீரம். எதையோ சாதித்து விட்ட கம்பீரம். அந்த கம்பீரத்துடன் கலந்த ஒரு நிதானம்.

நடந்தான் அவன். அவன் ரிஷி.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து, இந்திய மண்ணில் கால் பதிக்கிறான் ரிஷி என்ற அந்த ரிஷிகேஷ் கண்ணன்.

'வேண்டாம்டா ரிஷி. அங்கே எதுக்கு மறுபடியும்? எனக்கு பயமா இருக்குடா. அங்கே உன்னை யாராவது ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்குடா.' அவன் இந்தியா கிளம்புகிறேன் என்று சொன்ன போது அம்மா சொன்ன வார்த்தைகள் இவை. 

'பயம்' இந்த வார்த்தை அம்மாவிடமிருந்து வந்து இவன் இது வரை கேட்டதில்லை. இது தான் முதல் முறை.

ஒண்ணும் ஆகாதும்மா. நீ தைரியமா இரு. அவன் போகணும். போயிட்டு வரட்டும். சந்தோஷமா திரும்பி வருவான் அவன். --- இது அப்பா.

அப்பாவுக்கு எல்லாம் தெரியும். பார்வையிலேயே மனம் படித்துவிடும் கலையில் ஞானி அவர். மகனின் உள்ளம் அவருக்கு புரிந்திருப்பதில் என்ன பெரிய ஆச்சரியம்.?

மனம் ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது இந்தியா வந்து சென்றாலும், அவன் இங்கே வருவதற்கான அவசியம் இருப்பதாக ஐந்து, ஆறு நாட்களுக்கு முன்னால் வரை தோன்றவில்லை அவனுக்கு. காலம் எல்லாருக்கும், எல்லாவற்றையும் மறக்க செய்து விடும், என்று தான் நம்பி இருந்தான் அவன்.

ஆனால் ஐந்தாறு நாட்களுக்கு முன் ட்விட்டரில் வந்த அந்த பதிவு. அந்த ஒற்றை பதிவு, அவனை சுழற்றிப்போட்டது. இதோ!!! அவனை கட்டி இழுத்துக்கொண்டு வந்து இந்தியாவில் தள்ளி இருக்கிறது அது. !!!!

தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் அவன். எவ்வளவு சக்தி அந்த வார்த்தைகளுக்கும், அதற்கு சொந்தமான அந்த இதயத்துக்கும்.???

பெங்களூரு விமான நிலையத்தில் நடந்துக்கொண்டிருந்தான் அவன். நேரம் இரவு பன்னிரெண்டை தொட்டிருந்தது. காலை ஐந்து மணிக்கு சென்னைக்கு விமானம்.

தான் வருவதாக இங்கே யாரிடமும், தனது உற்ற நண்பர்களிடம் கூட சொல்லவில்லை அவன்.

சென்னைக்கு போய் இறங்கி அங்கே ஈ.சி.ஆரில் இருக்கும் தனது கெஸ்ட் ஹவுசுக்கு போவதாக திட்டம். சரி அதன் பிறகு என்ன செய்வது? சத்தியமாக புரியவில்லை அவனுக்கு.

ஒரு சில பார்வைகள் அவன் முகத்தை ஊடுருவிப்போக தனது சட்டை பையில் இருந்த ரே- பேனை  எடுத்து அணிந்துக்கொண்ட படியே நடந்தான் ரிஷி.

பக்கத்து மாநிலம் என்ற போதும் அவனை சுற்றி நடந்த பலரின் கண்களுக்கு மிகவும் பரிச்சயமானவன்தான் ரிஷி. அவன் தமிழ் நாட்டை சேர்ந்த மிகப்பிரபலமான இளம் நடிகன்.

கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவன். அவன் வந்து நின்றால் போதும் படம் வெற்றி பெற்று விடும் என்ற நிலைதான் இருந்தது. அது எல்லாவற்றையும் விட்டு விட்டு  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லண்டன் வாசம்.

நடந்தான் அவன். நான்கு ஐந்து நாள் தாடியும், அவன் அணிந்திருந்த தொப்பியும் அவன் முகச்சாயலை கொஞ்சம் மாற்றி இருந்தன.

கஸ்டம்ஸ் செக். அவனது பாஸ்போர்ட்டை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரிந்துக்கொண்டார் அந்த அதிகாரி. 'ரிஷி சார். நீங்களா? நான் உங்க பெரிய ஃபேன் ஸார்.'

'சந்தோஷம்'. என்றான் மெலிதான குரலில்.

'உங்க படம் ஒண்ணு கூட நான் மிஸ் பண்ணதே இல்லை. '

'தேங்க்ஸ்.....' என்றான் அடிக்குரலில். அவன் பின்னால் வரிசையில் நின்றவர்களிடம் சலசலப்பு

'இஸ் எவ்ரிதிங் ஓகே? நான் போகலாமா? அந்த அதிகாரியிடம் கேட்டான் ரிஷி.

அதற்குள் அவனுக்கு பின்னால் நின்றவர் முன்னால் வந்து அவனிடம் கை நீட்ட கை குலுக்கினான் அவன்.

'உங்களை சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம் ஸார். அந்த டிசம்பர் முப்பத்தி ஒண்ணாம் தேதியை, அன்னைக்கு நீங்க பேசினதை எதையுமே என்னாலே  மறக்கவே முடியாது ஸார். நீங்க செஞ்சது ரொம்ப சரி'.

அதற்குள் அவர்கள் அருகில் மூன்று நான்கு பேர் வந்து விட்டிருந்தனர்.

ஏன் ஸார்,? எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சிட்டு ஏன் ஸார் நாட்டை விட்டு போயிட்டீங்க? அவரிடமிருந்து அடுத்த கேள்வி.

அவனுக்குள்ளே லேசாக எரிச்சல் மண்டியது.

'ஒரு வேளை பயந்து ஓடிட்டாரோ?' பின்னாலிருந்து ஒரு குரல். அங்கே சிரிப்பலை.

உள்ளுக்குள்ளே சுள்ளென கொதிப்பெரியது .ஆனால்  தெரியும் அவனுக்கு. அவனது ஒவ்வொரு வார்தைகளும், ஏன் அசைவுகளுமே கூட மீடியாவுக்கு உணவாகிப்போகும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி புன்னகைக்கும் வித்தை அவனுக்கொன்றும் புதியதல்ல.

புன்னைகையையே எல்லாவற்றுக்கும் பதிலாக்கி விட்டு, அந்த அதிகாரி நீட்டிய பாஸ்போர்ட்டை கிட்டதட்ட பிடுங்கிக்கொண்டு, தனது கைக்கு வந்திருந்த பெட்டியையும் இழுத்துக்கொண்டு எல்லாரையும் விலக்கிக்கொண்டு விறுவிறுவென நடந்தான்.

எப்படி வந்தான் என்று அவனே அறியாமல், அடுத்த அரை நிமிடத்தில் வி.ஐ.பி லாஞ்சுக்குள் வந்து விட்டிருந்தான் ரிஷி.

உள்ளே நுழைந்தவனிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு. அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் சற்று ஆயாசமாக அமர்ந்தான்.

சில நொடிகள் கழித்து பார்வையை அந்த அறையை சுற்றி சுழல விட்டான். ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர் அந்த அறையில்.

மெல்ல திரும்பியவனின் பார்வையில் பட்டான் அவன். கையிலிருந்த தினசரியில் பார்வையை பதித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

ஒரு கணம் வியப்பில் விழுந்து மீண்டான் ரிஷி. இவன் எப்படி சரியாக நான் வரும் வேளையில்  இங்கே வந்து அமர்ந்திருக்கிறான்.?

சொல்லி வைத்தார்ப்போல் தினசரியை மூடியபடியே இவன் பக்கமாக திரும்பினான். ஒரு நொடியில் ரிஷியை அடையாளம் கண்டுக்கொண்டான் அவன். ரிஷியை உரசி திரும்பியது அவனது அலட்சிய பார்வை.

அவன் சஞ்ஜீவ். சஞ்ஜீவ் கிஷோர். தமிழ் நாட்டின் இன்னொரு பிரபலமான நடிகன். ரிஷிக்கு திரைத்துறையில் நேரடிப்போட்டி என்றால் அது சஞ்ஜீவ் மட்டுமே. இவன் ஆர்.கே என்றால் அவன் எஸ்.கே.!!!!

சினிமாவை பொறுத்த வரை, ரிஷியை விட இரண்டு வருடங்கள் சீனியர் சஞ்ஜீவ். சொல்லபோனால், ரிஷி வந்த புதிதில், அவன் திரைப்படங்களினால் சஞ்ஜீவின் படங்கள் சரிய துவங்கியது உண்மை.

சோஃபாவிலிருந்து எழுந்தான் சஞ்ஜீவ். தினசரியை சோஃபாவின் மீது போட்டு  விட்டு மெல்ல நடந்து ரிஷியின் அருகில் வந்து அவன் நிற்க இறுக்கையிலிருந்து எழுந்தான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.