(Reading time: 30 - 59 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 11 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ரு நொடி  கிரிதரனின் கைப்பிடியில் இருந்த கவிமதுரா , நிமிர்ந்து பார்த்ததும் தீ பட்டது போல விலகி நின்றாள் .. பதட்டமா ? அன்பா ? அதிர்ச்சியா ? காதலா ? எந்த உணர்வில் ஆட்கொள்ள பட்டு இருக்கிறாள் என்பது அவளுக்கே புரியாத புதிராய் இருந்தது ..இத்தனை நாட்கள் தூரத்தில் இருந்து அவளை பார்த்து நின்றவனோ இன்று அவள் தனது கையணைப்பில் இருப்பாள் என்று எதிர்பார்க்காத ஆச்சர்யத்தில் இருந்தான் . " இவள் என்னுடையவள் .. இறைவனே எங்களை இணைத்து வைக்கத்தான் காத்திருக்கிறான் " என அவனது மனதிற்குள் அசரீரி கேட்டது . தூரத்தில் இருந்து மகனை  தொடர்ந்த கண்ணன் - மீராவின் பார்வையும் ஆச்சர்யத்தில் உறைந்தது ..  " மதுரா அண்ணி " என்று சந்தோஷின் இதழ்களும் லேசாய் முணுமுணுத்தன. கனத்த மௌனம் அங்கு நிலவ, குழந்தை ஜீவாவின் கண்ணீர் குரல்தான் அனைவரின் கவனத்தையும் கலைத்தது .. அங்கிருந்து திரும்பி நடக்க முயன்றவளை  வானதி கைப்பிடித்து இழுத்தாள் .. கிரிதரனை பார்த்த ஆச்சர்யத்தை மனதில் மறைத்தப்படி

" அண்ணி வாங்க அண்ணி , அவர் குடும்பம் இங்கதான் இருக்காங்க " என்றாள்  இறைஞ்சும் குரலில் .

" இல்ல வானதி .. நான் " என்று அவள் தயங்கும்போதே கிரிதரன் வெடுக்கென அவ்விடத்தை விட்டு சென்று விட்டான் ..

Enna thavam seithu vitten

" டேய் கிரி " என்று பின்தொடர்ந்த கண்ணன் மீராவின் குரல் கூட அவனை தடுத்து நிறுத்தவில்லை.

ஏதோ ஒன்று அங்கு சரியில்லை என அனைவராலும் உணர முடிந்தது . அவன் வெடுக்கென திரும்பி நடந்த அந்த சில நொடிகளில் "தரூ " என்று தன்னையும் மீறி அவனை அழைத்து இருந்தாள்  கவிமதுரா . அந்த அழைப்பே அவனுக்கு போதுமானதாய் இருக்க, கேட்டும் கேட்காதவன் போல திரும்பி நடந்தான் அவன்.

மீண்டும் கவிதாவை அழுத்தமாய் அழைத்தாள்  வானதி ..

" அண்ணி ப்ளீஸ் வாங்க முதலில் உட்காரலாம் . ஜீவா வேறு அழுதுகிட்டே இருக்கான் " என்றபடி குழந்தையை கையில் இருந்து வாங்கி கொண்டாள்  ..மனதில் இருந்த அதிர்ச்சிகளை மறைத்து கொண்டு அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் கூறிவிட்டு அருள் , வானதி  அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்  அவள். சாஹித்யாவோ இன்னமும் அருளையே பார்த்து கொண்டு இருந்தாள் . அவள் தோளில்  ஆதரவாய் படர்ந்திருந்த சந்தோஷின் கைகளும் அங்கு இப்போது இல்லாமல் போனது . அவன் கவிமதுராவை பார்த்த அதிர்ச்சியில் இருந்தான் .

அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலையில் கொஞ்சம் இயல்பாய் இருந்ததற்கு காரணம் அர்ஜுன் மற்றும் ரவிராஜ் தம்பதியர் தான் .. இருப்பினும் அவர்களது கலகலப்பான பேச்சு தனது மகளின் மனதில் தீ மூட்டி கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை . ஒருவாறு அனைவரும் பரஸ்பர அறிமுகங்களை பரிமாறி கொண்டனர் . வானதியின் அண்ணியாகவே அங்கு அறிமுகமானாள்  கவிமதுரா .. தனது அண்ணியை " அண்ணி " என்று அழைக்கும் வானதியை அப்போதே தங்கையாய்  மனதிற்குள் ஏற்றுகொண்டான் சந்தோஷ். ஓரளவிற்கு அங்கு நடப்பது அவனுக்கு புரிந்தமையால் , அருளோடு சேர்ந்துகொண்டு சூழ்நிலையை இயல்பாக்கும் செயலில் இறங்கிவிட்டிருந்தான் சந்தோஷ் .

" இப்படி சும்மா அறிமுகப்படுத்தி வெச்சா என்ன அர்த்தம் அருள் ? என் சத்யூ முகத்தை பாரு .. செம்ம ஷாக்ல இருக்காங்க மேடம் . கொஞ்சம் உங்க காதல் கதையை பற்றி எடுத்து சொன்னா நாங்களும் தெரிசுப்போம்ல " என்றான் .. அவனது கேள்வியில் மனதிற்குள் எரிச்சல் மூண்டாலும் தனக்கும் உண்மை தெரியவேண்டும் என்ற காரணத்தினால் அமைதியாய் இருந்தால் சாஹித்யா . அருளோ மந்தகாச புன்னகையுடன் வானதியை பார்த்தான் .. பெற்றோர்கள் அவரவர் எண்ணத்தில் இருந்தாலும் கூட சந்தோஷின் பேச்சில் கலந்து கொண்டனர் .. கவிமதுரா மட்டும் பார்வையாலேயே கிரிதரனை தேடி கொண்டு இருந்தாள் ..

" நீ கேள்வி கேளு மச்சி நான் பதில் சொல்லுறேன் .. நியாயப்படி உன் ஆளுதான் நாயகியாய்  பொறுப்பேற்று என்னை  துளைச்சு எடுத்து இருக்கணும் .. ஆனா அதிசயமா மேடம் ரொம்ப அமைதியா இருக்காங்க " என்று சந்தோஷையும்  சாஹித்யாவையும் பார்த்து உரைத்தான் அவன். சாஹித்யாவோ அப்போதும் மௌனமே என் மொழி என்பது போல அமைதி காத்தாள் ..

" எவ்வளவு நாளாக இந்த காதல் கதை ஓடுது ?" என்று கேட்டான் சந்தோஷ் ..

" எவ்வளவு நாள்ன்னு கேட்காதிங்க சந்தோஷ் .. எத்தனை வருஷமான்னு கேளுங்க " என்றார் ரவிராஜ் ..

" வருஷமாகவா ? ஓஹோ ... சூப்பர்  போங்க ... " என்று சந்தோஷ் கண்ணடிக்க  சாஹித்யாவிற்கு தலையே சுற்றிவிடும் போல  இருந்தது.

" அப்போ வானதி நம்ம கம்பனியில் சேர்ந்தது இயல்பாய் நடந்த விஷயம் இல்லையா ?" என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டாள்  சாஹித்யா .. தான் இருந்த கலகலப்பான ,மனநிலையில் அவளது கொதிக்கும்  மனதை உணர்ந்து கொள்ளாமல் போய்விட்டான்  அவன் ..

" எல்லாம் ஒரு குட்டி டிராமா டீ குரங்கு " என்று சிரித்தான். சாஹித்யாவும் சிரித்து கொண்டே

" ஓஹோ அது என்ன டிராமா சார் ?" என்றாள்  . அருளோ வானதியை பார்க்க, முதல்முறை அவளது முகம் அந்திவானமாய் சிவந்தது .. சன்னமான குரலில்

" இதெல்லாம் தனியா பேசிக்க கூடாதா அருள் .. பெரியவங்க எல்லாரும் இருக்காங்களே " என்றாள்  .. அவளது நாணத்தைரசித்தபடி

" என் டார்லிங், கட்டளை போட்டுட்டா சத்யா .. அதனால நான் இந்த கதையை உனக்கு தனியா சொல்றேன் " என்று கண்ணடித்தான் . சாஹித்யாவோ அவனது இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை அதே நேரம் நேரடியாய் முகம் சுளிக்கவும் விரும்பவில்லை .. ஏனோ அருளின் எதிரில் அவளால் இயல்பாய் காட்டி கொள்ள இயலவில்லை .. மெல்ல சந்தோஷின் காதில் கிசுகிசுத்தாள் ..

" சந்து "

" சொல்லு செல்லம் "

" நான் சைந்தவி அக்கா பக்கத்துல உட்கார்ந்துக்கவா ?"

" ஏனடா ? நான் உன்னை எதுவும் தொந்தரவே பண்ணலையே "

" ப்ச்ச்ச் நான் இப்போ அப்படி சொன்னேனாங்க  ? எனக்கு அவங்ககிட்ட பேசணும்போல இருக்கு அவ்வளவுதான் " என்றாள்  அவள் ..

" ஹே என்ன திடீர்னு நீங்க வாங்கன்னு பேசுற ? "

" அது அப்படித்தான் " என்று அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சைந்தவியின் பக்கம் அமர்ந்து கொண்டாள்  சாஹித்யா .. அருளோ வானதியுடன் சேர்த்து கவிமதுராவுடன் பேச்சில் இணைந்தான் .. அவனுக்கு அவளது நிலை வானதியின் மூலம் தெரியும் என்பதால் , அவளிடம் இயல்பாகவே பேசினான் அவன் .. அவனுடன் பதில் சொல்லி கொண்டிருந்தாலும் கூட, மதுரா அவ்வப்போது கிரிதரனையும் தேடி கொண்டே கண்ணன்- மீரா இருவரையும் பார்த்தாள் .. மழையில் நனைந்த பறவைக்கு தேவைப்படும் கதகதப்பு போல அவள் கண்களில் அத்தனை தவிப்பு .. ஏனோ மீராவின் அன்பான அணைப்பிற்குள்  அடங்கிவிட வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு .. இங்கு மீராவோ அதே உணர்வுகள் தனது கணவனிடம் கூறி  கொண்டிருந்தார்..

" என்னங்க "

" சொல்லுடா "

" நாம மதுராகிட்ட பேசலாம்ங்க ."

" எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா மீரு  ? ஆனா அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலையேம்மா .. இவ்வளவு பேரு இருக்குற இடத்துல வேற வழி இல்லாமல் அவ நம்மகிட்ட பேசுன மாதிரி ஆகிட கூடாது இல்லையா ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.