(Reading time: 23 - 45 minutes)

06. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்த சரித்ரன் ஷாலுவின் முகத்தைப் பார்த்து ஒரு கணம் குழம்பிப் போனான். தண்ணீரின் சத்தத்தில் பிறர் பேசிய எதுவும் அவன் காதில் விழுந்திருக்கவில்லை….

“ஷாலுமா…இன்னும் முடியலையா….ஹாஸ்பிட்டல் போவோமா…?” வேகமாக அவளை நோக்கி வந்தான்.

பக்கத்தில் வந்தவனை இன்னும் அதிக பயத்தோடு பார்த்தாள்.

Eppadi solven vennilaveஅவள் பார்வையின் பயமொழி அவனுக்கு புரியாதா என்ன?

“என்னாச்சுமா?”

“எ…என….” அவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.

“ஷாலு…. ஷாலுமா” இவன் பக்கத்தில் வர விறு விறு என வேகமாக திரும்பி நடந்தவள் கடைசியில் கார்பார்க்கிங்கையும் தாண்டி நடக்கத் தொடங்கவும் தான் அதுவரை அமைதியாக அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சரித்ரன் தன் கைநீட்டி அவளை பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“கார் இங்க ஷாலு…”

“இல்ல நான் ஆட்டோ இல்லைனா டாக்சி பிடிச்சு போய்டுவேன்….” அவன் பிடியிலிருந்த  கையை தீபட்டது போல் உதறினாள்.

“ஷாலு….” இப்போதைய அவன் குரலில் அழுத்தம் வந்திருந்தது.

“என்ன கோபம்னாலும் சொல்லிட்டு கோபப்படு…” அவள் கையை இன்னும் அழுத்தமாக பிடித்தான் அவன்.

முன்னைவிட பலமாக உதற தொடங்கினாள் அவளும்.

“நான் என்ன தப்பு செய்தேன்….?” அவன் குரலிலா அல்லது கேள்வியினாலா அல்லது இரண்டினாலுமா தெரியவில்லை அவனிடம் மாட்டியிருந்த தன் கையின் மேல் மாத்திரம் வைத்திருந்த அவள் பார்வை இப்பொழுது அவன் முகம் நோக்கிப் போக கை உதறல் நின்றது.

இவன் என்ன தப்பு செய்தான்…?

“இந்த இடத்துல இந்த நேரத்துல உன்னைவிட்டுட்டு நான் எப்டி போவேன்?”

 விழித்தாள்.

ஆமா எப்டி போவான்?

அவன் தன் கையிலிருந்த கீயை ப்ரஸ் செய்ய கார் கதவு திறந்துவிட்டதற்கு அடையாளமாக சமிஞ்சை செய்தது. இப்பொழுது அவளது கையை விட்டிருந்தான் அவன்.

காரின் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தாள் மௌனமாக. கதவை அறைந்து சாத்தினாள். அவனும் பின் சீட்டில் ஏறி அமர்ந்தான் அவள் எதிர்பாரா வண்ணம். ஆனால் அவன் புற கதவை மூடவே இல்லை. கிளம்ப போவதில்லை என்று அவளுக்கு புரிய வைக்கிறானாம்.

“காரை எடுங்க சரன்…” கோபமும் மன்றாடலுமாய் ஒரு குரல்.

“என்ன விஷயம்னு சொல்லு…” பிடிவாதம் மட்டுமே குரலாய்.

“ப்ச்…எல்லாத்தையும் உங்கட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா?”

“இப்ப கொஞ்சம் முன்னாலதான் உங்கட்ட ஃபீல் பண்ற ஃப்ரீடம் வேற எங்கேயும் இல்லனை சொல்லிட்டு இருந்த…..”

மௌனமாகிப் போனாள் அவள்.

சற்று நேரம் பொறுத்திருந்தவன் கண் மூடியபடி இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டான்.

அதாவது அவள் சொல்லாமல் இவன் கிளம்பப் போவதில்லையாம்.

நிமிடங்கள் கழிய அவள்தான் தன் முடிவை மாற்றிக் கொள்ளும் படியாய் ஆனது.

“சரன் ….அது வந்து நம்மளை யாரோ தப்பா சொன்னாங்க சரன்…”

“ஓ….ஓகே..யாரவங்க…?” மிக சாதாரண விஷயமாக அவன் அத் தகவலை எதிர்கொள்ள அவளுக்கு அடுத்து என்ன சொல்லவென ஒரு கணம் புரியவில்லை.

‘அவங்க யாருன்னு கேட்டேன்…?”

“யாரோன்னு சொன்னனே…”

“முன்ன பின்ன தெரியாதவங்க சொன்னதுக்கெல்லாம் முழுசா தெரிஞ்ச ஒருத்தன் மேலதான் கோப படுவியோ…?”

“கோபம்னு இல்லை சரன்….ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…”

“அடுத்தவங்க பேசுறதுக்கெல்லாம் கஷ்டப்பட்டா……வாழ்நாள்ல ஒரு நாள் கூட, ஏன் ஒரு நிமிஷ நேரம் கூட நிம்மதியா இருக்க முடியாது…”

“………………………”

“எவ்ளவு சந்தோஷமா இருந்த கொஞ்சம் முன்னால…..அதை போக்க எவனோ பேர் தெரியாத பொறுக்கி போதும் என்ன?”

அவன் இன்னும் அவள் முகத்தைப் பார்த்துப் பேசவில்லை.

“ரொம்ப பயமா இருந்துச்சு…”

இப்பொழுது திரும்பி அவளைப் பார்த்தான்.

“நான் கூட இருக்கேன்தானே…அப்புறம் ஏன் பயந்த ஷாலு…?”

அவன் குரலில் ஒரு ஆறுதல் நதி நிறைந்து ஓடினாலும், நான் போதுமானவனாய் உனக்கு தோன்றவில்லையே என்ற ஆதங்கமும் அங்கே ஒலி எழுப்பியது.

இவள் பயம் அவனுக்கு என்னதாய் புரிந்திருக்கிறது என்பதே அவளுக்கு இப்பொழுதுதான் தெரிகின்றது. யாரோ பொறுக்கிகளைப் பார்த்து இவள் பயந்துவிட்டதாக நினைத்திருக்கிறான்.

“அப்டி இல்லை சரன்…”

“பிறகு எப்டி…?”.

“இப்டி பயந்தே பழகிட்டுது….”

“என்ன விஷயம்னு சொல்லுடா…உனக்கே பெட்டரா ஃபீல் ஆகும்….உங்கப்பா சம்பந்த்ப் பட்டது சரிதானே..” இப்போது விஷயம் வேறு கோணம் என்பது சரித்ரனுக்கும் தோன்றிவிட்டது.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் சொல்ல தொடங்கினாள். “அப்ப நான் 9த் போன புதுசு…..ஒரு டென் டேஸ் லீவ் எடுத்து வீட்ல இருக்ற மாதிரி ஒரு சூழ்நிலை…அப்புறமா நான் ஸ்கூல் போக ஆரம்பிச்ச முதல் நாள், அன்னைக்கு ஸ்கூல்ல இருந்து எங்க  க்யுஸ் டீமை  இன்னொரு ஸ்கூல்ல நடந்த காம்படிஷனுக்கு அனுப்பினாங்க….வழக்கமா எல்லா க்யுஃஸ் ப்ரோக்ராமுக்கும் என்னை அனுப்புவாங்கன்றதால…..நான் இந்த தடவை செலக்க்ஷன் ரவ்ண்ட்ஸ் பார்டிசிபேட் செய்யலைனாலும் எனையும் டீம்ல சேர்த்துட்டாங்க….நானும் எதையும் யோசிக்காம சந்தோஷமா போய்ட்டேன்….ஸ்கூல்ல இருந்து அனுப்றப்ப அதுல யோசிக்க எதுவும் இருக்றதா எனக்கு படலை…..காம்படிஷன் முடிய கொஞ்சம் லேட்டாகிட்டு. அரவ்ண்ட் 7. என் ஃப்ரெண்ட் அவ அம்மா கூட வந்திருந்தா…..அந்த ஆண்டிதான் இருட்ட ஆரம்பிச்சுட்டு……தனியா போகாத……இவங்க வீடு உங்க வீட்டு பக்கம்தான்….கூட போன்னு  அந்த ஸ்கூல் சார் ஒருத்தங்க கூட அனுப்பி வச்சாங்க…..நடந்துதான் வந்தோம்…….கொஞ்ச நேரம்தான்….அதுக்குள்ள அப்பா ஸ்கூல்ல விசாரிச்சு என்னை தேடி அங்கயே வந்துட்டாங்க….. எனக்கு அப்பா காரைப் பார்க்கவும் சந்தோஷமா இருந்துது…ஆனா அப்பாவோ அப்டியே காருக்குள்ள இழுத்துப் போட்டுட்டு வீட்டுக்கு வந்து அடி பின்னிட்டாங்க….எனக்கு முதல்ல எதுக்கு ஏன்னு ரொம்ப நேரம் புரியவே இல்லை…..என் பக்கம் என்ன தப்புன்னே புரியலை……அதோட விட்றுக்கலாம் மறுநாள் என் அத்தைட்ட போய் இத என்னன்னு கேளுங்கன்னு சொல்லி…..மொத்த குடும்பமும் உட்கார்ந்து தோண்டி துருவி கேள்வி கேட்டு….எனக்கு அட்வைஸ் செய்தாங்க பாருங்க….அப்பதான் நடந்த விஷயத்தை எங்கப்பா என்னதா நினைக்காங்கன்னே எனக்கு கொஞ்சம் புரிஞ்சுது….ரொம்ப அவமானமா…….” அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திவிட்டாள்.

“ஷாலுமா….” சிவந்து இருந்த கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இதுக்கெல்லாம் என்ன சொல்லனும்னு எனக்கு தெரியலை…பட் இத மாதிரி ஒரு சிச்சுவேஷன் இன்னொரு தடவை உன் லைஃப்ல வராது…”

அவளிடம் ஒரு விதமான விரக்தி கலந்த புன்னகை வந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.