(Reading time: 10 - 19 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 01 - வத்ஸலா

ண்ணனுக்கு பிறந்தநாள்!! குழலூதும் அந்த மாயக்கண்ணனுக்கு பிறந்தநாள்!!! கிருஷ்ண ஜெயந்தி.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்

Katrinile varum geethamபூஜையறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டு சட்டென விழித்துக்கொண்டான் அவன். கண்ணனுடனான கோதையின் நேசத்தை, அவளது திருமண கனவை கண் முன்னே கொண்டு வந்த  அந்த  பாடலின் வரிகளில்  கொஞ்சம் லயித்து தான் போனான் அவன். கோகுல கண்ணன்!!!!

கோகுல கண்ணன்!!!! அவனுடைய தனித்தன்மை அவனுடைய புன்னகை. அது எப்படியோ? அவனை பார்க்கும், அவனிடம் பேசும் அனைவருக்கும் அவனை பிடித்துப்போகும்.

அமெரிக்காவில் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு கடந்த வாரம் தான்  ஊர் திரும்பி இருக்கிறான் கோகுல். ஜி.கே கல்வி நிறுவனங்களின் ஏகபோக வாரிசு. அன்பான தந்தை தாய்க்கு ஒரே மகன்.

பல் தேய்த்து, முகம் கழுவி, அவன் தனது அறையை விட்டு வெளியே வருவதற்குள் காலை பூஜையை முடித்துவிட்டு சமையலறையை அடைந்திருந்தார் அம்மா தேவகி.

அம்மா... என்றபடியே சமையலறையினுள் நுழைந்தான் கோகுல்.

வாடா கண்ணா .காபி சாப்பிடறியா? என்றார் அம்மா. எல்லாரும் அவனை கோகுல் என்று அழைத்தாலும் அம்மாவுக்கு அவன் எப்போதுமே கண்ணன் தான்.

அப்பா காலேஜ் போயிருக்காரா? கேட்டான் கோகுல்.

ஆமாம்.......

அம்மாவின் அருகில் வந்து மேடை மேலே ஏறி அமர்ந்தான் கோகுல்

'டேய்! மேலே கீலே பட்டு வைக்காதே. சாயங்காலம் பெருமாள் சேவிக்கற வரைக்கும் நான் மடிடா.' என்றபடியே அவனுக்காக ரெடியாக இருந்த மணக்கும் பில்ட்டர் காபியை நீட்டினார் அம்மா. 'எச்சில் பண்ணாமே டம்பளரை உசத்தி சாப்பிடு'

ஓ! ஆசாரம்??? என்றான் கோகுல்

'முதல்லே இது ஹைஜீன்' பட்டென பதில் வந்தது அம்மாவிடமிருந்து.

புன்னகைத்தபடியே டம்பளரை உயர்த்தி காபியை சுவைக்க துவங்கினான் கோகுல். 'அம்மா உன் காபிக்கு ஈடு இணையே கிடையாது. சூப்பர்'

'எல்லாம் இப்போ அப்படிதான் சொல்லுவே. நாளைக்கு நோக்கு ஒரு ஆத்துக்காரி வந்து அவ காபி கலந்து குடுத்தான்னா, அம்மா காபி மறந்து போயிடும்.' சிரித்தார் அம்மா.

எங்கே!!!! 29 வயசாச்சு. இன்னும் நோக்கு பிடிச்சா மாதிரி பொண்ணு கிடைக்க மட்டேங்கறதேடா. நானும் கண்ணனை  வேண்டிண்டே தான் இருக்கேன் என் கண்ணணுக்கு ஏத்த கோதையை அவன் கண்ணிலே காட்டுடாப்பான்னு. எப்போ காட்றானோ?

கோதையா??? மனமெங்கும் மயிலிறகால் வருடும் ஒரு இதம் பரவ, அவன் இதழோரத்தில் புன்னகை தவழ்ந்தது.

'கோதை'!!! அந்த பெயரின் மீது ஒரு தீராத காதல் கோகுலுக்கு. அந்த கண்ணனின் கோதையை பற்றி அம்மா சொன்ன கதைகளினாலோ என்னவோ அந்த பெயரை கேட்கும் போதே அவனுக்குள் சின்னதாய் ஒரு பரவசம் தோன்றும்.

'எத்தனை அழகான காதல் அவளுடையது.!!!!! இப்படி ஒரு காதலி கிடைக்க அந்த மாயக்கண்ணன் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா???'

சின்னதான புன்னகையுடன் ஏதேதோ எண்ணங்களில் நீந்தியபடியே கேட்டான் கோகுல் 'அம்மா....கோதை ரொம்ப அழகான பேர் இல்லையாமா?' இந்த காலத்திலே யாராவது அந்த பேரெல்லாம் வெச்சுக்கறாளா மா?

மெல்ல திரும்பிய அம்மாவின் கண்கள், மகன் மனதில் ஒளிந்திருக்கும் ஆசையை படிக்க முயன்றன. 'ஏன்டா? அந்த பேர் நோக்கு ரொம்ப பிடிக்குமா?'

அம்மாவின் குரலில் கலைந்தவன் 'அம்மா... இப்போ சொல்றேன். கோதைங்கிற பேரிலே ஒரு பொண்ணை என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்து பார்க்கலாம்!!!!. அவ யாரா இருந்தாலும் சரி. அவளை நான் கண்ணை மூடிண்டு கல்யாணம் பண்ணிக்கறேன்.' என்றான் சட்டென 

அம்மாவின் முகமெங்கும் வியப்பு மின்னியது.

எது செலுத்தியதோ,??? எப்படி வந்ததோ???

'நம்மாத்து வைதீக காரியத்துக்கெல்லாம் வருவாரே வாத்தியார் மாமா (சாஸ்த்ரிகள்) ஸ்ரீதர், அவர் சின்ன பொண்ணு பேர் கோதை தாண்டா. இன்னைக்கு சாயங்காலம் பெருமாளுக்கு திருவாராதனை பண்ண நம்மாத்துக்கு அவரை வர சொல்லி இருக்கேன். என்ன சொல்றே? பேசி முடிச்சிடுவோமா? அம்மாவின் உதடுகள் தாண்டி வந்தே விட்டிருந்தன அந்த வார்த்தைகள்.

ம்????? புருவங்கள் உயர நிமிர்ந்தான் கோகுல்.

நினைவு ஏட்டை மெல்ல புரட்டியவனின் கண்களுக்குள் ஒரு கனவு உருவம் போலே வந்து போனாள் அந்த கோதை. எப்போதோ பார்த்த ஞாபகம்.

பெரிய தேவதை எல்லாம் இல்லை அவள். மிக சாதாரண தோற்றமும், நிறமும் கொண்ட பெண்ணாகத்தான் அவன் நினைவில் இருக்கிறாள் அவள். அவன் அவளை சந்தித்தது ஒரே ஒரு முறை தான்.

சட்டென சில்லென்ற பனிக்காற்றின் வருடலாய் அவளை பற்றி ஒரே ஒரு ஞாபகம் அவனுக்குள்ளே.

கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு முன்னால் நடந்த வீட்டு கிரஹப்ரவேசத்தின் போது......

அப்போது ஒரு பதினெட்டு, பத்தொன்பது வயதிருந்திருக்குமா அவளுக்கு? ஹோமம் செய்து வைக்க அவளது அப்பா வந்த போது அவளையும் அழைத்து வந்திருந்தார் அவர்.

வீட்டில் நிறைய விருந்தினர்கள். இவனுக்கு எப்போதுமே கூட்டம் பிடிப்பதில்லை. உள்ளே ஹோமம் நடந்துக்கொண்டிருக்க தன்னுடைய நாயுடன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் கோகுல்.

அப்போது அந்த பெரிய தோட்டத்தின் ஒரு ஓரத்தில் பூக்களை ரசித்தபடி தனியாக நின்றிருந்தாள் அவள். அவனுடைய நாய் திடீரென்று அவளை நோக்கி ஓட பயந்து பின் வாங்கினாள் அவள்.

ஏனோ அவள் முகத்தை பார்த்த போதே அவளை சீண்டிப்பார்க்க வேண்டுமென சின்னதாய் ஒரு ஆசை அவன் மனதில்.

அவள் பயந்து பயந்து விலக ,கையில் நாயுடன் அவள் பின்னாலேயே சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவளை சீண்டி விளையாடிக்கொண்டே இருந்தான் கோகுல்.

கண்களில் தவிப்பும், கெஞ்சலும், கொஞ்சமான பயமுமாய் அவனை விட்டு விலகி விலகி ஓடியவளின் நினைவில் இப்போதும் அவன் இதழ்களில் புன்முறுவல் எட்டிப்பார்த்தது.

கடைசியில் அவனிடமிருந்து தப்பித்து வீட்டினுள் சென்று ஹோமம் செய்வித்துக்கொண்டிருந்த அவளது அப்பாவின் பின்னால் அமர்ந்துக்கொண்டாள் அவள்.

ஒரு ஓரத்தில் நின்றுக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவள் கண்களுக்கு அவன் தென்படவில்லை. தவிப்புடன் அவனையே தேடிக்கொண்டிருந்தன அவள் கண்கள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் முன்னால் சென்று அவன் நிற்க, மெல்ல விழி நிமிர்த்தி அவனை பார்த்து புன்னைகைத்தாள் அவள். அப்பாவின் பின்னால் சென்று ஒளிந்துக்கொண்டு சிரிக்கும் குழந்தையின் புன்னகை.  ஜெயித்துவிட்டாளாம்!!!!

அதன் பின்னர் அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இவனுக்கு. இப்போது எப்படி இருப்பாள் அவள்.??? அந்த குழந்தைத்தனம் இன்னும் மிச்சமிருக்குமா? இல்லை வயதுக்கேற்ற முதிர்ச்சி வந்திருக்ககூடுமா. யோசித்தபடியே காபியை ருசித்துக்கொண்டிருந்தான் கோகுல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.