(Reading time: 22 - 44 minutes)

மூங்கில் குழலானதே – 03 - புவனேஸ்வரி

காதல் ..! பல கோடி அர்த்தங்களை சுமந்து கொண்டிருக்கும் வார்த்தை! ஒவ்வொருவரின் சிந்தனையையும் வேறுபடுத்தி பார்க்கும் உணர்வு .

காதல் வாழ்க்கையின் அங்கம் என்பான் ஒருவன்

காதல் தான் வாழ்கை என்பான் இன்னொருவன் !

Moongil kuzhalanathe

காதல் சுமைகளை குறைக்கும் என்பான் ஒருவன்

காதலே பெரிய  சுமை என்பான் ஒருவன் !

காதல் அழகை பார்த்து வரும் என்பான் ஒருவன்

காதல் அகத்தை பார்த்து தான் வரும் என்பான் ஒருவன் !

காதலை போல தேவதை இல்லை என்பான் ஒருவன்

காதலை போல ராட்சசன் இல்லை என்பான் ஒருவன் !

மாறுபட்ட சிந்தனைகளை ஏந்தி நிற்கும் மாயவலையே காதல் !

காதல் ஒரு மந்திரகோட்டை  தான் .. கோட்டைக்குள் புகுந்தவன் வெளிவர துடிக்கிறான். கோட்டை  வெளியில் நின்று அழகை மட்டுமே ரசிப்பவன் உள்ளே நுழைய வழி தேடுகிறான் ..

காதல் வலியா  வாழ்க்கையா ? அந்த கோட்டையில் காவல் காப்பவனுக்கு கூட தெரியாத ஒரு மர்மம் தான் !

ஆனால் காதலை அறிந்தவர் பலரும் மாற்று கருத்துகள் அதிகம் சுமக்காமல் கூறும் வசனம் ஒன்று இருக்கிறது !

" நாம் நேசிப்பவரை விட , நம்மை நேசிப்பவரையே திருமணம் செய்து கொள்வது சாலச்சிறந்தது !"

இது எந்த விதத்தில் உண்மை ? "நம்மை நேசிப்பவர் " என்று நாம் குறிப்பிடும் நபர் யார் ? வேற்று கிரக வாசிகளா ? பண்பட்ட மாந்தர்களா ? ஒருதலை காதலுக்காகவே தம்மை அர்பணித்தவர்களா  ?

முற்றிலும் ஆம் என்று தலையாட்டி விட முடியாது .. " நம்மை நேசிப்பவர்களை " வேறொருவர் நேசிக்க வாய்ப்புகள் இருக்கும்போது இந்த அறிவுரையை எப்படி செயல்படுத்தி விட முடியும் .?

ஆக, நம் வாழ்வு யாரோடு இணையும் என்பது நமது கணிப்பு அப்பாற்பட்ட விஷயம் .. இதை சிந்தித்து பார்த்து ஆமோதிக்க சிந்தனை திறன் இருந்தாலும் ..மனம் மட்டும் ஏன் அந்த காதலுக்காக தனது தேடலை தொடங்கி நிறுத்தாமல் ஓடி கொண்டே இருக்கிறது ? சிந்திக்கிறேன் சகிதீபன்.

" பி, எங்க கெளம்பிட்ட நீ ? வா வந்து சாப்பிட்டுட்டு போ " என்று அபிநந்தனை  அழைத்தார் தாத்தா அருண். தாத்தா, தந்தை , தாயார் , தங்கை நால்வரும் அமர்ந்து இருப்பதை ஒருகணம் பார்த்தவன், இறுகிய குரலில்

" இல்ல எனக்கு பசிக்கல .. கொஞ்சம் வேலை இருக்கு .. வரேன் " என்று திரும்பி நடந்தான்.

" டேய் நில்லு " என்று குரல் கொடுத்து அதட்டினார் வேணுகோபாலன். சற்றுமுன்பு தனது தந்தை முன் அடங்கி இருந்தவர், இப்போது தந்தை என்ற முறையில் மகனை அதட்டினார் ..

" என்னடா பொல்லாத வேலை ? சரியான நேரத்தில் சாப்பிடாமல் நீ உழைச்சு போட்டு இப்போ அதை யாரு அனுபவிக்க போறாங்களாம் ? முதலில் வந்து சாப்பிடு ..தாத்தா கூப்பிடுறார்ல .. ?"என்று ஒரு அதட்டல் போட்டார் .. எப்போதும் வேணுகோபாலன், அனைவருக்கும் முன்பே காலை உணவை முடித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவதால், வீட்டில் நடக்கும் இதுபோன்ற சின்னஞ்சிறு பனிப்போர்களை கவனிக்காமல் விட்டுவிட்டார் . மேலும் அந்த வீட்டில் நடக்கும் சில பிரச்சனைகளை அவர் காதில் எட்டாமல் கையாள்வது சாரதா தான் ! எந்த வகையிலும் கணவருக்கு மன உளைச்சல் வந்துவிட கூடாது என்பதற்காக பொதுவாய் அவர் இது போன்ற விஷயங்களை அவருக்கு கூறுவதில்லை ..

" இவன் இப்படித்தான் சாப்பிடாமல் வேலைக்கு ஓடுகிறானா சாரதா ?" என்று மனைவியை கேட்டார்  அவர் ..

" அப்படியெல்லாம் இல்லைங்க .. பாவம் இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருக்கு போல " என்று அவர் பதில் சொல்வது தாத்தாவின் காதில் விழுந்தது ..

" அட நீயேன்மா, இவனை காப்பாற்றி விடுற ? வேணு கேட்குறதும் சரிதானே ? சாப்பாடு விடவா வேலை இப்போ முக்கியம் " என்று தனது நாரதர் வேலையை தொடங்கிவிட்டு தோசையுடன் கதைப்பேச தலைகுனிந்து கொண்டார் தாத்தா.. தாத்தாவை முறைத்து கொண்டே வந்து அமர்ந்தான் அவன்.

" அம்மா எனக்கு ஒரு தோசை போதும் " என்று அவன் கூறவும்,

" சாரதா ஒரு நிமிஷம் இரு " என்று தடுத்தார் வேணு ..

" அட முருகா , என்னடா என் மகன் ஒரு தோசையை கூட சாப்பிட விட மாட்டுறானே ?" என்று மனதிற்குள் முருகரிடம் முறையிட்டு கொண்டே நிமிர்ந்தார் அருண்.

" என்னங்க ?" என கணவனை பார்த்து வினவினார் சாரதா . அவருக்கு பதில் சொல்லாமல் மகனை பார்த்தார் வேணு .. இதில் எதிலுமே பங்கு கொள்ளாமல் ஆப்பிளை  சாப்பிட்டு கொண்டிருந்தாள் விஷ்வாநிகா .

" டேய் "

" என்னப்பா "

" உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு உனக்கு நியாபகம் இருக்கா ?" என்றார் வேணு. அவர் கேட்ட விதத்தில் பெரிதாய் பூகம்பம் வெடிக்குமோ என்ற கலவர உணர்வில் இருந்தனர் தாத்தாவும் சாரதாவும் . அபிநந்தனோ

மிகவும் சாதாரணமாய்,

" இருக்கு அப்பா .. நம்ம குடும்பத்தில் முதல் கல்யாணம்னு தடபுடலா நடத்துனிங்களே  எப்படி அதையெல்லாம் மறப்பேன் ?" என்றான் கொஞ்சம் கேலியும் நிறைய ஆதங்கமுமாய் .

" நியாபகம் இருந்து என்ன பயன் ? உன் மனைவி இங்க இல்லையே .. அவளை கூப்பிட்டு அவ கையாள சாப்பிடுவோம்னு தோணுதா உனக்கு ? இத்தனை வருஷம் ஆகியும் உங்க அம்மாவை தவிர வேற யாரும் பரிமாறி நான் சாப்பிட்டு இருக்கேனா ?" என்றார் வேணு..

" அதான் அவ இங்க இல்லைல.. அம்மா பரிமாறின என்ன தவறு ? ஏற்கனவே எனக்கு லேட் ஆகுது .. இதுல மகாராணி வர்ற வரை நான் காத்திருந்து சாப்பிடனுமா ?" என்று கேட்டு வைத்தான் அபிநந்தன்.   அதுவரை அழுது கொண்டிருந்தவள்  முகம் கழுவிவிட்டு வெளியில் வந்த நேரம் அவன் வார்த்தைகள் காதில் விழ , எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல்  அங்கு வந்து நின்றாள்  நந்திதா ..

" மன்னிச்சிருங்க மாமா .. கொஞ்சம் தலைவலின்னு படுத்திருந்தேன் " என்றவள்  குனிந்த தலை நிமிராமல் உணவை பரிமாற தொடங்கினாள் ..

" அச்சோ , ஏன்டா வாயில என்னடா வெச்சு இருந்த ? அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருக்கலாமே " என்றார் வேணு .. மெல்ல நிமிர்ந்து கணவனையும் மாமனாரையும் பார்த்து லேசாய் புன்னகைத்தவள்

" பாவம் மாமா , அவரே எனக்காக ஆபிஸ் போகலைன்னு தான் சொன்னார் ..நான்தான் மீட்டிங் இருக்கேன்னு போக சொன்னேன் ..அதே நினைவில் சொல்ல மறந்திருப்பார் " என்று அவனுக்கு சாதகமாய் பேசினாள்  ..

வழக்கம்போல ஆச்சர்யத்தில் விரிந்தன அபிநந்தனின் விழிகள் . ஆச்சர்யத்தில் உறைந்தது என்னவோ சில நொடிகள் தான் , அதற்குள் தன்னிலை அடைந்தவன் இறுகிய முகத்துடன் உணவில் கவனம் செலுத்தினான் .. தன் தந்தையின் ஆராயும் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்தவன் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.. இதெயெல்லாம் கவனித்து கொண்டிருந்த சாரதா சமையலறையில் நந்திதாவிடம் நடந்ததை கேட்க முயன்றார் ...

" நந்து "

" சொல்லுங்க அத்தை "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.