(Reading time: 15 - 30 minutes)

12. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

மெல்லிய கொலுசு சத்தம் யுவியின் சிந்தனையை கலைத்து, வள்ளியின் வருகையை நினைவூட்ட, அவன் அவள் வரும் திசையை பார்த்து நின்றான்…

அழகான இள மஞ்சள் நிற புடவை, இரண்டு தோளையும் தொட்டு விளையாடும் மல்லிகை, நெற்றியின் வகிட்டில் ரத்த நிற குங்குமம், கழுத்தில் மஞ்சள் மணம் மாறாத, அவன் கையால் அணிவித்த புத்தம் புது தாலிச்சரடு…

தாலி… ஆம்… அது சொல்லிய உறவை அவனால் நம்பவும் முடியவில்லை… நம்பாமல் இருக்கவும் முடியவில்லை…

Piriyatha varam vendum

அவள் அருகில் வந்துவிட்டதை உணர்ந்தவன், அவள் முகத்தில் இருந்த சிந்தனையைக் கண்டு யோசிக்கலானான்…

அவன் யோசிக்க ஆரம்பித்த வேளையில், அவள் அவனைப் பார்வையால் அளக்க ஆரம்பித்தாள்…

பட்டு வேஷ்டி சட்டை, அவனது கம்பீரத்திற்கு மேலும் மெருகேற்றியது… காற்றில் லேசாக ஆடி அசைந்து கொண்டிருந்த அவனது சிகை, அழகான சின்ன மயக்கும் கருவிழிகள், கூர் நாசி, சேர்த்து வைத்தாற் போல் இறுக மூடிய இதழ்கள், சிரிப்புடன் இருந்தால் வெகு அழகாக இருக்கும்… ஆனால், எங்கே அவன் தான் சிரிக்க மாட்டேன்கிறானே….

கணவனை பார்வையாலே ஆராய்ந்து கொண்டிருந்தவள், அவன் சட்டென்று அவளைப் பார்க்கவும், தனது பார்வையை தழைத்துக் கொண்டாள்…

எதுவோ சொல்ல நினைக்கிறாள்… என எண்ணிக்கொண்டவன், பின் அவளிடமே கேட்டு விடலாம் என முடிவெடுத்து, அவளிடம் எப்படி கேட்க என்று தவித்தான்…

பின், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “வள்ளி, எதும் பேசணுமா எங்கிட்ட?... தயக்கம் வேணாம்… சொல்லு…” என்றதும்,

சட்டென்று நிமிர்ந்தவளின் பார்வை அவனின் விழிகளோடு கலந்துவிட, அதன் பின் அங்கே இருவருக்கும் பேச்சே எழவில்லை…

அவளுக்கு அவனிடம் பேச வேண்டியது, சொல்ல வேண்டியது நிறைய இருந்தது…. அதுபோலே அவனுக்கும்… ஆனால், இருவருக்கும் வார்த்தைகளே தெரியாதது போல் ஊமையாகி போயினர் ஒருவர் மற்றொருவரிடத்தில் தொலைந்து…

எவ்வளவு மணி நேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தனரோ…. அறை சுவர் கடிகாரம் ஒலி எழுப்ப, சட்டென்று இருவரும் தன்னுணர்வு பெற்றனர்…

“அசதியா இருக்கும்… தூங்கு…” என கட்டிலை காட்டி அவளிடம் சொல்லிவிட்டு, படுக்கையறையை ஒட்டி இருந்த அவனது அலுவலக வேலையை பார்க்கும் அறைக்குள் சென்றுவிட்டான் யுவி…

அவன் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, அவனைத் தடுக்கவும் இயலவில்லை… அவனிடம் பேசவும் நா முயலவில்லை…

விடிய விடிய விழித்தே இருந்தவள் அதிகாலை வெளிச்சம் அறையினுள் பரவிய போதும் படுக்கையை விட்டு எழவில்லை…

ந்நேரம்,

“வாம்மா பாலா… வா இந்த விளக்கேத்து…” என அம்பிகா சொல்லுகையில், என்ன சொல்லி மறுப்பது என யோசித்துக்கொண்டிருந்தாள் பாலா…

“என்னம்மா யோசனை??... வா… வந்து விளக்கேத்து…”

“இல்ல… அத்தை… வீட்டுக்கு மூத்த மருமகள் தான்…” என அவள் இழுக்கையிலே,

“இங்க பாரும்மா, இந்த வீட்டுக்கு நீ, வள்ளி, மஞ்சரி எல்லாரும் மருமகள்கள் தான்… அதும் எனக்கு நீ செல்ல மருமகள்… பின்னே நீ விளக்கு ஏத்தாம வேற யாரு ஏத்துவா?... வா… இங்க…” என அவளின் கைப்பிடித்து இழுத்து அம்பிகா சொல்ல…

அவளும் புன்னகையோடு விளக்கு ஏற்றினாள்…

பூஜையறையை விட்டு வெளியே வந்தவளிடம், “இங்க பாரு மஞ்சரி கூட வந்துட்டா…” என்றார் அம்பிகா…

“குட்மார்னிங்க் பெரிய அத்தை… ஹாய் பாலா…” என்றபடி மஞ்சரி வந்தாள்…

“ஹ்ம்ம்… வாம்மா… ஆமா… எங்க உன் இன்னொரு ஃப்ரெண்டைக் காணோம்…???...”

“வள்ளியைக் கேட்குறீங்களா பெரிய அத்தை?... தெரியலையே… ஆனா அவ எப்பவுமே சீக்கிரம் எழுந்திடுவாளே… இன்னைக்கு ஏன் வரலைன்னு எனக்கும் தெரியலையே…” என மஞ்சரி சொல்ல அம்பிகாவோ சிரித்தார்..

“ஏன் பெரிய அத்தை சிரிக்குறீங்க?...”

“ஒன்னுமில்லம்மா… புது இடம்… ராத்திரி சரியா தூங்கிருக்க மாட்டா… விடியற்காலையில தூக்கம் வந்திருக்கும்… அதனால தூங்கிட்டிருப்பாளோ என்னவோ…” என்றவர் புன்னகை மாறாமலே “என்ன பாலா நான் சொல்லுறது சரிதானே?...” என கேட்க…

அவளோ வெட்கத்துடன்… ஹ்ம்ம்…. என்றாள்……..

அப்போது தான் மஞ்சரிக்கும் நேற்றைய இரவு பொழுது நினைவு வர, தன்னையே கடிந்து கொண்டாள்…

அடடா… நான் கோபத்துல அவரோட சண்டை போட்டு தள்ளி வைச்சேன்… அதுல பாலா, வள்ளியோட சந்தோஷமான வாழ்க்கையை நினைச்சே பார்க்கலையே… என நினைத்தவள், பாலாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை கண்டு, உள்ளம் மகிழ்ந்தாள்…

எனில், வள்ளியும் தனது மண வாழ்வில் அடி எடுத்து வைத்திருக்கணும்… வைத்திருப்பாள்… என்ற நம்பிக்கையுடன், வள்ளியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அவள்…

“ஹேய்… என்ன காலையிலேயே பொதுக்கூட்டம் போட்டுட்டீங்க போல?... அதும் என்னை விட்டுட்டு….?...” என சொல்லிக்கொண்டே துர்காதேவி அங்கே வர,

“அடடா… துர்கா… அதெல்லாம் ஒன்னுமில்லை… நீ வா… இங்க…” என்றழைத்தார் அம்பிகா…

“அதெல்லாம் சரிதான்… நான் வரும்போது ஏதோ சிரிச்சி பேசிட்டிருந்தீங்க?... என்ன அது?...” என துர்கா கேட்க, அவரின் காதில் அம்பிகா விஷயத்தை சொல்ல…

அவருக்கும் முகம் நிறைய சந்தோஷம்… இருந்தாலும், மருமகள் முகத்தில் இருக்கும் அந்த உவப்பைக் காண அவருடன் சேர்ந்து அனைவரும் காத்திருந்தனர் வள்ளியின் வருகையை எதிர்பார்த்து…

அவர்கள் அனைவரையும் ஏமாற்றாது, வள்ளி வந்தாள் வேகமாக…

வந்தவள், நேரே பூஜையறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்து, “சாரி அத்தை… தூங்….கி…ட்…..டேன்… அ….தா…..ன்… லே……ட்… ஆயிடுச்சு…. சா….ரி….” என சொல்ல, அனைவரும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்…

“ஹ்ம்ம்… பரவாயில்லை வள்ளி…” என அம்பிகா சொல்லிக்கொண்டிருக்கும்போது,

“வள்ளி……..” என்ற யுவியின் குரல் கேட்க… அனைவரும் மேலே இருக்கும் யுவியின் அறையைப் பார்த்தனர்…

அறையைப் பார்த்துவிட்டு அவர்கள் அனைவரும் அவளைப் பார்க்க….

“வள்ளி… எல்லாருக்கும் காபி கொடு…. எனக்கும்…” என்றவாறு மாடியிலிருந்து இறங்கி வந்தவன், “நான் ஒரு டென் மினிட்ஸ் ஜாக்கிங்க் போயிட்டு வந்துடுறேன்… சரியா????” என அவளிடம் சொல்லிவிட்டு சென்றுவிட,

அனைவரின் பார்வையும் அவள் முகத்தில் தான் இருந்தது…

வெட்கத்தோடு அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தவளையே அனைவரும் பார்க்க, அவளோ அமைதியாக சிரிப்புடன் நின்றாள்…

“ஹ்ம்ம்… காஃபி… எனக்கும்….” என்றவாறு அம்பிகா சொல்லிக்காட்ட…

“போங்க… அத்தை…” என்றபடி ஓட முயன்றாள் அவள்…

“ஹேய்…. நில்லு… எங்க ஓடுற… முதலில் எங்க மெனு என்னன்னு கேட்டுட்டு போ…” என மஞ்சரி கிண்டல் செய்ய… வள்ளியோ அவளை முறைத்தாள்…

“பாருங்க அத்தை என்ன முறைக்குறா இவ…” என தேவியிடம் மஞ்சரி புகார் கொடுக்க…

“சரி சரி… எல்லாருக்கும் என்ன வேணும்னு வள்ளிகிட்ட சொல்லுங்க… வள்ளி செஞ்சு தருவா… ஆனா, காஃபி முதலில் வேலனுக்கு கொடுத்துட்டு தான் அடுத்த மெனு எல்லாம்… அப்படித்தானே வள்ளி…?...” என தேவியும் தன் பங்கிற்கு அவளை கிண்டல் செய்ய, அவள் அடுத்த நொடி அங்கே நிற்கவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.