(Reading time: 20 - 40 minutes)

08. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

ரேயாவுக்கு எங்கு எத்திசை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஓடிக்கொண்டு இருந்தாள். இதற்குள் ஆம்னியிலிருந்து இரு தடிமாடுகள் இறங்கி வேறு இவளை துரத்துகிறது.

சாலையின் வலப்புறம் தெரிந்த சந்தில் நுழைந்து மீண்டும் அடுத்து இடபுறம் தெரிந்த தெருவில் நுழைந்து மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினாள். என்னதான் அவள் அத்லெட்டாக இருந்தாலும், ஆம்னி அவளைப் பிடிக்க எவ்வளவு நேரமாகும்? ஆனால் இப்பொழுதுக்கு ஆம்னி சத்தம் கேட்கவில்லை…

ஆனாலும் இடம் தெரியாத பகுதியில் இவள் ஓடியே தப்பி விட முடியுமா? அந்த தெருவில் நுழைந்ததும் கண்ணில் பட்டது சற்று தொலைவில் வலது ஓரமாக ஒரு சுவர் புறமாக நின்றிருந்த கார்.

Eppadi solven vennilaveசாலையில் சிறுக கசிந்த வெளிச்சத்தில் பளபளக்கிறது அப் புதிய கார். அதன் பக்கவாட்டில் ஒழிந்து கொண்டால்? இருட்டாக இருந்தது அவ்விடம். ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக காரின் ட்ரைவர் யாராவது இருந்தால் இவளுக்கு அது லைஃப் லைன்.

அந்த ஆம்னி இந்த தெருவில் நுழையும் முன் இவள் அந்த காரைப் போய் சேர்ந்துவிட வேண்டும். ஆடி கார். உரிமையாளர் எதாவது ஷாப்பிங் போயிருக்க டிரைவர் காரில் காத்திருக்கலாமே?

அருகில் சென்றுவிட்டாள், காரில் மனித அரவமே இல்லை. இருந்தாலும் இங்கு ஒழியலாம். காரின் டிரைவர் இருக்கை கதவுக்கு பக்கத்தில் போய் பம்மினாள்.

இருள்தான், இருந்தாலும்…..ஆம்னி இங்கு வந்தால் வெளிச்சத்தில் இவள் வெளிப்படுவாளா?

இதயம் வாய் பகுதியில் துடிக்கிறது. பயம்…. பயம்…. பயம்…..இவளது இதய துடிப்பின் சத்தமே முரசு போல் அறைந்து இவளை காட்டிக் கொடுத்துவிடுமோ?

இதற்குள் சாலையில் காலடி சத்தம். கேன்வாஷ் ஷூக்கள் தரையில் சற்றே வேகமாக எதையோ தேடியபடியே ஓடி  வரும் சத்தம். அந்த குடிகார தடியனில் எவனோ ஒருவன் இந்த தெருவில் நுழைந்துவிட்டான்….பிரிந்து பிரிந்து தேடுகிறார்களா? அல்லது இவன் பின் அடுத்தவன் வருவானா?

இது என்ன குழந்தைகள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமா…? எதை நம்பி இங்கு இவள் ஒழிந்தாள்? யேசப்பா ப்ளீஃஸ் ஹெல்ப் மீ….இப்பொழுது எழுந்து ஓடலாமா?

காலடி சத்தம் மிக அருகில் கேட்கிறது. இப்பொழுது எழுந்து ஓடுவதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.

ஒருவிதமான நிசப்தம்.

ஆம்னி இவள் இத் தெருவில் நுழைந்த முனைக்கு எதிர் முனையிலிருந்து இப்பொழுது தெருவுக்குள் நுழைகிறது.

திடுமென  அவளுக்கு பின்னிருந்து அவள் வாயைப் பொத்தி பின்னோடு இழுத்தது ஒரு கை.

ஷாலு வந்துவிட்டாளா என சரித்ரன் அழைத்து கேட்கும் வரையும் ஷாலுவின் சித்தப்பா வீட்டில் எல்லாம் இயல்பாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு வித சந்தோஷ எதிர்பார்ப்பும் கூட, அவர்களுக்கு சரித்ரன் ஷாலு இருவருமே தங்கள் பிள்ளைகள் போலத்தான். அவர்கள் காண வளர்ந்த குழந்தைகள்…

சரித்ரன் கூப்பிட்டு கேட்டதாலேயே ஷாலுவின் பதில் என்னதாய் இருந்திருக்கும் என்பது அவர்களுக்கு புரிந்து போனாலும் அது இறுதியான முடிவல்ல என்றும் அவர்களுக்கு தோன்றியது. தன் தகப்பனுக்கு பயந்து மறுத்திருப்பாள், அவளது தந்தையே சரித்ரனை மணமகானாக சுட்டும் போது அவள் சம்மதித்துவிடுவாள் என்றுதான் எண்ணினர்.

ஆனால் நேரம் செல்ல செல்ல அவர்களுக்கும் பதற்றம் பிடித்துக் கொண்டது. எத்தனை ட்ராஃபிக் என்றாலும் இங்கு வந்து சேர இத்தனை நேரமா?

அவள் மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் எனவும் அடுத்து என்ன என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஹாஃஸ்டலுக்கு 7 மணிக்கு மேல் மாணவிகள் யாரும் உள்ளே செல்ல முடியாது…..வெளி கேட்டை லாக் செய்து விடுவர் என்பதால் அவள் அங்கு போயிருக்க வழி இல்லை என அனைவருக்கும் தெரியும்.

எங்கும் தனியாக செல்லும் பழக்கம் இல்லாதவள் எங்கு சென்றிருக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஊகத்தில் அவளுக்கு பிடித்த இடம் என பீச்சிற்கு சென்று தேடினான் சரித்ரன். தேடாமல் எப்படி இருப்பதாம்? சித்தப்பாவோ சர்ச்சுக்கு அவளை தேடிச் சென்றார்.

ஆனால் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அவள் எங்கும் இல்லை.

அவள் எங்கு சென்றிருந்தாலும் பத்திரமாக இருந்தால் இதற்குள் அடுத்தவர் எண்ணிலிருந்தாவது அழைத்திருப்பாளே. சித்தப்பா வீட்டில் தேடுவார்கள் என்று கூடவா அவளுக்கு தெரியாது?

சித்தப்பாவோ கோபத்தில் மகள் தன் தகப்பன் வீடு கிளம்பிவிட்டாளோ என்று எண்ண தொடங்கிவிட்டார். அப்படி அவள் இடையில் போய் நின்று சித்தப்பா வீட்டிற்கு வரும் சரித்ரன் இப்படி செய்தான் என்று அவள் தன் தகப்பனிடம் சொன்னால், ராஜ்குமார் தன் தம்பியை குறித்து என்ன நினைப்பார்? இவர் தன் அண்ணன் முகத்தில் எப்படி விழிக்க?

சரித்ரனை ஷாலுவின் பதில் ஒரு புறம் நோகடித்தால், அவளைக் காணவில்லை என்ற விஷயம் கொன்று குழியில் புதைத்தது.

இதற்காகவெல்லாம் ஒருத்தி இப்படி கோப படுவாளா? பிடிக்கவில்லை எனில் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே…..இப்படி ஓடி ஒழிந்து கொண்டு எத்தனை பேரை கலங்கடிகிறாள் என முதலில் தோன்றிய எண்ணம், இதனால் தன் அத்தை குடும்பத்திற்குள்  பரச்சனை ஆகிவிடுமோ என்ற வேதனையை தாண்டி அவளுக்கு எதுவும் ஆபத்தோ என்ற நினைவில் அணு அணுவாக செத்துக் கொண்டிருந்தான் அவன்.

சித்தப்பா மகளை  தேடி ரயில் நிலையம் செல்ல, சரித்ரனோ கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம்…திருநெல்வேலி, தென்காசி செங்கோட்டை செல்லும் ஒவ்வொரு பேருந்தையும் ஓடி ஓடி விசாரித்தான். அம்மார்க்கமாக செல்லும் அனைத்து இரவு பேருந்துகளும் கிளம்பிச் சென்ற பின்னும் அவளைத்தான் காணவில்லை.

அவளை கண்ணால் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான் அவன். இனி அவளது ஊருக்கே காரில் தேடிச்செல்லலாம் எனவும் அவனுக்கு தோன்ற தொடங்கிவிட்டது. பேருந்து அங்கு செல்லும் முன் இவன் சென்றுவிடுவான்.

அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் பிடித்துவிடலாம். தெய்வமே அவள் ஊருக்குத்தான் சென்றிருக்க வேண்டும்.

சித்தப்பாவிடம் மொபைலில் தன் திட்டத்தை சொல்லிவிட்டு, அவன் தன் காரை தாம்பரம் நோக்கி செலுத்த தொடங்கினான். வழியில் ஏதோ தோன்ற அவள் கல்லூரி விடுதிக்கு சென்றால் அதன் வெளி கேட் அருகில் அவளது பேக்கை பற்றியபடி ஒரு குட்டி உருவம். அவள்தான். அவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவளை அவனுக்கு தெரியுமே!!

பெரிய கல்லூரி வளாகத்தில் ஒரு ஓரத்தில் இருந்தது மாணவியர் விடுதி. அதுவே தனி காம்பவ்ண்ட் மற்றும் உயர கேட்டுடன் இருக்கும்….7 மணிக்கு மேல் மாணவியர் பாதுகாப்பு கருதி கேட் பூட்டப்பட்டு விடும். அதன் பின் மாணவியருமே உள்ளே செல்ல  அனுமதி இல்லை. ஆக செக்யூரிட்டி கேட் பக்கத்தில் அமர்வதெல்லாம் இல்லை.

விடுதிக்கும் காம்பவ்ண்ட் சுவருக்கும் இடையில் சில மரங்களுடன் பெரிய காலி இடம் உண்டு. அங்கு சில நேரம் மாணவிகள் இரவில் வாக்கிங் போவது உண்டு. ஆனால் மற்றபடி காம்பவ்ண்ட் கேட் போல விடுதி கேட்டும் 7 மணிக்கு பிறகு  பூட்டித்தான் இருக்கும் உள்புறமாக.

ஆக மாணவியர் யாராவது வாக்கிங் என விடுதிக்குள் இருக்கும் க்ரவ்ண்டிற்கு வந்தால் ஒழிய கேட்டிற்கு வெளியே காத்திருக்கும் மாணவியைப் பற்றி அறியவோ கதவை திறந்துவிடவோ வழியே கிடையாது.

ஷாலுவுக்கு இது தெரியும். ஆனாலும் அவள் இருந்த மன நிலைக்கு வேறு எதையும் யோசிக்க முடியவில்லை அவளால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.