(Reading time: 22 - 44 minutes)

05. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

றைக்கு பின் வாசல் கூட இல்லை. மதுர் எங்கே போய்விட்டான்? எப்படி போய்விட்டான்? நொடியில் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது நல்லிசைக்கு. மதுரின் பெற்றோர்களை கண்டு அல்ல. அவன் அங்கு இல்லை என்ற இல்லாமை உணர்வினால்.

“மதுர்….ப்ளீஸ் மதுர்…..எனக்கு பயமா இருக்கு…..எங்க போய்ட்டீங்க….விளையாடாதீங்க….வாங்க… நீங்க இல்லாம என்னால முடியாது….ப்ளீஸ் திஸ் இஸ் த லிமிட்…ப்ளீஸ் மதுர்ர்ர்ர்ர்……”

அவன் இல்லாத உலகத்தில் நான் என்ற உணர்வு உந்த தாங்க மாட்டாமல் விழித்து எழுந்தாள் நல்லிசை. உடை வியர்வையில் தொப்பல் தொப்பலாய் நனைந்திருக்க, உடல் நடுங்க அவன் இல்லை என்ற சூன்யம் மனம் நிறைக்க எழுந்தும் சில நிமிடங்கள் தேவைப்பட்டன அவளுக்கு அது கனவு என புரிபட.

Nagal nila

அவசர அவசரமாக தன் மொபைலை எடுத்தவள் நேரம் காலம் என எதையும் எண்ணாது மதுரனை அழைத்தாள். அவன் குரலையாவது கேட்டே ஆக வேண்டும்!!!!

“என்னடா இந்த நேரத்துல….? இன்னுமா…” அவன் என்ன சொல்ல வருகிறான் என கவனிக்கும் நிலையில் எல்லாம் பெண் இல்லை. கதற ஆரம்பித்துவிட்டாள் இசை.

 “எனக்கு உங்களை பார்க்கனும்….இப்பவே நீங்க வேணும்….ஐ கான்ட் கோ த்ரூ திஸ்…எனக்கு நீங்க வேணும்…..எப்பவும் வேணும்….நீங்க இல்லாம என்னால ஒரு நொடி கூட முடியாது….ப்ளீஸ் மதுர் என்னை விட்டு போய்டாதீங்க….”

“ஹேய்…என்ன….என்னடா…என்ன ஆச்சுமா? நான் எங்க போறேன்….உன் கூட தான் எப்பவும்….இசை….ப்ளீஸ் சொல்றத கேளுடா…” அவனை அவள் பேசவே விடவில்லை. அவன் பேசுவது எதுவும் அவள் காதில் விழவே இல்லை. கதறி அழுதாள்.

ல்லூரியில் இருந்து கூர்க் மடிகேரி வந்திருந்தனர் நல்லிசையின் வகுப்பினர். அன்று மதியம்தான் கிளம்பி இரவு அங்கு வந்து சேர்ந்திருந்தனர். களைப்பில் தனக்கான அறையில் தூங்கியவள் இரவு ஒரு மணிக்கு இப்படி கதறிக் கொண்டிருந்தாள்.

மொபைலில் அவள் இணைப்பை கட் செய்யாமல் அவன் பேசிக் கொண்டே இருந்தான். காலை 7 மணிக்கு அவளது அறை தட்டப்படும் வரையுமே.

ஓரளவு கனவின் தாக்கம் குறைந்திருந்தாலும் மனம் ஏனோ இன்னும் நிலைக் கொள்ளாமல் தவித்தது நல்லிசைக்கு. இதயம் கீறப்பட்டது போல் ஒரு வலி.

காதில் மொபைலை வைத்துக் கொண்டே” யாரோ வந்திருக்காங்கபா….ஒரு நிமிஷம்…” என்றபடி கதவருகில் போய் “ஹூ இஸ் திஸ் ?” என்றவளுக்கு

“ஏய் வாலு கதவ திற” என்ற அவனது குரல் மொபைலிலும் நேரிலுமாக கேட்க எதையும் யோசிக்காமல் ஒரு விம்மலுடன் கதவைத் திறந்து அவன் மார்பில் சரண் அடைந்திருந்தாள்.

அவள் அழுகை தாங்காமல் அந்த நேரத்தில் நண்பனின் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்திருந்தான் மதுரன்.

காதலிக்கப் படுதல் என்றால் என்ன என்பதை முதல் முதலாக அவள் உணர்ந்த தருணம்.

அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் அவனோடு எந்தவித அறிமுகம் கூட இல்லாமல் அவனோடுதான் வாழ்வு என முடிவு செய்ய வைத்திருந்த உணர்வையும் தாண்டி தன் ஆழ்மனதில் அவன் மீது எத்தனை அழுத்தமான பிணைப்பு இருக்கிறது என்பதையும் அவள் அன்று தான் முழுதாக உணர்ந்தாள்.

“ஹேய்….என்ன செய்ற….” அவன் குரலில் அவள் பிடி இன்னுமாய் இறுகியது.

“குட்டிமா இது ஹோட்டல் காரிடார்….ஃப்ரெஷ் அப் செய்துட்டு கீழ உள்ள ரெஸ்டரண்ட்க்கு வா…..அங்க வெயிட் பண்றேன்டா….…” அவன் வந்துவிட்டது கூட அவளுக்கு இழந்த நிம்மதியை முழுதாக மீட்டுத் தரவில்லை. ஆனால் அவன் வராதிருந்தால் அந்த நாளை தாண்டி இருப்பாளா எனவே தெரியவில்லை.

நல்லிசை ஃப்ரெஷ் அப் செய்து கீழே அவனைத் தேடிச் சென்றால் ஒரு மேஜையில் அவன். ஆனால் அவனோடு சென்று அமர முடியாதபடி இவள் வகுப்பு மாணவர்கள் குழு அவனை சுற்றி. “குரு இன்னைக்கு இங்க எங்க கூட இருந்துட்டுதான் போகனும் நீங்க…”

“சம்ஹவ் வி மெட்…இன்னைக்கு நீங்க இங்க தான்…”அவனை கன்வின்ஸ் செய்ய முயன்று கொண்டிருந்தது கூட்டம்.

உர் என முறைத்துக் கொண்டே தள்ளி இருந்த மேஜையில் போய் அவனது மேஜைக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள் நல்லிசை. இவளைப் பார்க்கவென வந்துவிட்டு அந்த வானரங்கள் மத்தியில் போய் அமர்ந்து கொண்டால்? எரிச்சலாக வந்தது. ஆனால் வேறு வழி? கண் பார்வையிலாவது இருக்கிறானே என்றுமிருந்தது.

பாவம் மதுரனும்தான் என்ன செய்வான்? காத்திருந்த நேரத்தில் கண்டவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டால்?

அவள் அங்கு வந்து அமர்ந்ததும் மதுரனை சுற்றி இருந்த சத்தம் சற்று குறைந்தது. அதுவும் இவள் முழியைப் பார்த்ததும் ரொம்பவுமே குறைந்தது. கல்லூரியைப் பொறுத்தவரை இவர்கள் சண்டைக்காரர்கள் அல்லவா?

“ப்ச்…அவளைப் பத்தி யோசிக்காதீங்க குரு….உங்கட்டதான் கொஞ்சம் இப்டி இருக்கிறா… மத்தபடி நல்ல டைப் தான்…இரிடேட் செய்யமாட்டா…..”

இவள் வகுப்பு ராகவ் இவளைப் பற்றி அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்.

என்னைப் பத்தி யோசிக்க கூடாதாமா? உர்ர்ர்ர்ர்ர். இன்னும் எரிச்சல் ஏறியது. தன் மொபைலை எடுத்து அவனுக்கு குறுஞ்செய்தி.

‘மங்கீஸ் பார்க்கவா மைல் கணக்கா வந்தீங்க?’

‘செல்லமே’ அருகிலிருந்த கூட்டம் மெனு கார்டை பார்க்க மதுரனால் முடிந்தது இந்த மெசேஜ்தான்.

“அக்கி ரொட்டியா? நூல் புட்டா? எது சப்டுறீங்க குரு” இவள் வகுப்பு பவன் மதுரனை கேட்பது காதில் விழுகிறது.

‘அடிபட்டு நோகப் போறான் பவன் இப்பொ’ எஸ்எம்ஸ் இவளிடமிருந்து பறந்தது.

“எனக்கு எதுவும் வேண்டாம்…” மதுரன் அங்கு சொல்வது காதில் கேட்கிறது.

‘ஐயோ சாப்டுங்க…’

‘நீதான சொன்ன’

‘என் கூட சாப்டனும்’

‘ஆஃப்டர் மேரேஜ் தினமும்…’

ஒரு கணம் அந்த காட்சி கனவாய் அவள் கண்களில் விரிய, இன்னுமாய் கூடுகிறது ஏமாற்றம்.

‘ம்க்ம், ம்க்ம்…இப்பவும் வேணும்..’

நீ லேட்…. மங்கீஸ் ஃபாஸ்ட்…..

‘மலர்கள் கேட்டேன் மங்கிகள் கூட்டினாய்’

‘நீ தானா திட்டினாலே எனக்கு தாங்காது….இதுல டுயுடர் வேறயா?’ 

‘கோபம் கோபமா வருது’

‘அழகாயிட்டே போற’

‘அடி வாங்க போறீங்க’

‘அது வேற தனியாவா?’

‘அழுகையா வருது’

‘ப்ளீஸ்டா’

‘எதாவது செய்ங்க’

‘ஐ’ல்’

‘மை லவ்’

‘எஸ் யுவர்ஸ் மதுர் ஸ் ஹியர்’

‘மிசஸ் நல்லிசை மதுரன் நீட்ஸ் யு’

அவனையும் அறியாமல் அவளை நிமிர்ந்து பார்த்தான் மதுரன். அவளுமே நொடி நேரம் திரும்பிப் பார்த்தவள் திரும்பிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.