(Reading time: 15 - 30 minutes)

மனதோர மழைச்சாரல்... - 03 - வத்ஸலா

ரவில் அவன் விழி மூடுவதற்காகவே காத்திருந்ததை போல், அவன் கண்கள் சொருகிய மறுநிமிடம் கண்களுக்குள் வந்து குடியேறிவிடும் அந்த ரோஜாப்பூ, அறை வாசலில் வந்து நிற்பதை கூட அறியாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் ரிஷி.

அறை வாசலில் நின்றிருந்தாள் அந்த ரோஜாப்பூ. அந்த ரோஜாப்பூவின் மற்றொரு பெயர்  அருந்ததி. ஒரு நொடி யோசித்துவிட்டு கதவை மெல்ல தட்டிவிட்டு காத்திருந்தாள் அவள். ஒரு நிமிடம் கடந்திருக்க, உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. யோசித்தபடியே கதவின் கைப்பிடி மீது அவள் கைவைக்க திறந்துக்கொண்டது கதவு. உள்ளே தாழிடப்படவில்லை போலும்.

'நின்றே விட்டாள் அருந்ததி.!!. தவம்! ஒன்றரை வருடமாக அவனை பார்த்துவிட மாட்டோமா என்று தவமிருந்திருக்கின்றன  அவள் கண்கள். ஒரு தீர்கமான சுவாசம் அவளிடம்.

Manathora mazhai charal

இதோ! இதோ பார்த்தேவிட்டேன் என்னவனை.!!' எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறான் என்னவன் '  இதழ்களில் புன்முறுவல் பூத்தது.

அவள் கால்கள் தன்னால் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தவனை நோக்கி நகர்ந்தன. அவன் அருகில் சென்று அமர்ந்தாள். சில நிமிடங்கள் பார்வையால் அவனை பருகியபடியே அமர்ந்திருந்தாள். அவனையே ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு அது தெரியவில்லை.!!! இன்னும் சில மணி நேரங்களில், அவன் அவளுக்கு கணவனாகவே மாறி விடப்போகிறான்  என்று அறியவில்லை அவள்.

அவன் நெற்றியின் மீது பூத்திருந்தன, முத்து முத்தான வியர்வை பூக்கள். 'ஏசி கூட போடாம தூங்குறான் பாரு' என்றபடியே குளிர்சாதனத்தை இயக்கி விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள். இதழ்களில் புன்னகை ஓட, தனது துப்பட்டாவால் மெல்ல ஒற்றி எடுத்தாள் அவனது நெற்றியை. அப்போதுதானா ஒலிக்க வேண்டும்.? ஒலித்து தொலைத்தது அவள் கைப்பேசி. அழைத்தது அவள் தோழி. அதை அவள்  துண்டிப்பதற்கு முன் அதன் சத்தத்தில் சட்டென விழித்துக்கொண்டான் ரிஷி.

கண் திறந்தான் ரிஷி. அவளை அந்த நேரத்தில் அங்கே எதிரே பார்த்திராத கண்களும் நெஞ்சமும் அவன் கட்டுப்பாட்டையும் மீறி மகிழ்ந்துதான் போயின.

'குட் மார்னிங் வசி' பளீர் புன்னகை அவளிடத்தில். மெல்ல எழுந்து அமர்ந்தான் ரிஷி.

'வசி' அவள் இப்படிதான் அழைப்பாள் அவனை.!!!! அவனது அம்மாவுக்கு பிறகு அவன் மீது உண்மையான அன்பு வைத்த பெண் என்றால் அது இவள் மட்டுமே.

பல நேரங்களில் அவனும் அறியாமல் அவளுக்குள் கரைந்து விட துடிக்கும் அவன் உள்ளம். அடுத்த சில நொடிகளில் அவனை கட்டுப்படுத்திவிடும் அவனது சூழ்நிலையின் அழுத்தம். அப்படியும் தன்னை மறந்தான் ஒரே முறை. சரியாய் மூன்று நொடிகள், 'மழை தேடி காத்திருந்தேன்' பாடலின் படப்பிடிப்பில்..... எண்ண அலைகளிலிருந்து சட்டென மீண்டு அவளைப்பார்த்தான் ரிஷி.

.'விரல் தீண்ட கேட்கவில்லை... தோள் சாயும் எண்ணமில்லை... ஒரு முறை முகம் காட்டிப்போ... ஒரு வருடம் உயிர் தாங்கும்'

அவளது ட்விட்டர் பதிவு அவனுக்குள் வந்து போனது. அவன் கைக்கு எட்டுகிற இடைவெளியில்  அவனுடைய ரோஜாப்பூ

'வந்திட்டேன்டா ரோஜாப்பூ நீ கூப்பிட்டதும் ஓடி வந்திட்டேன்.' சொல்லத்தான் விழைந்தது உள்ளம். அவளையே பார்த்திருந்தான் அவன். ஓடி வந்து என் தோளில் சாய்ந்துக்கொள்ளப்போவதில்லையா அவள்? தவிப்புடன் அவளை பார்த்தன அவன் கண்கள். என்ன இது எதிர்ப்பார்ப்பா? ஏக்கமா? அவனுக்கே புரியவில்லை. அவளை நோக்கி நீண்டு விட அவன் கைகள் துடிக்க, அதற்குள் மறுபடியும் ஒலித்தது அவள் கைப்பேசி. மறுபடியும் அதே தோழி.

'என்னடி வேணும் உனக்கு? அவன் முகத்தை பார்த்தபடியே அழைப்பை ஏற்று கேட்டாள் அருந்ததி. அவளுக்கு தோழிகள் அதிகம்.

'ம். வந்தாச்சு. பார்த்திட்டேன்...... அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டியே அப்புறம் என்ன கேள்வி?..... இன்னைக்கு பூரா இங்கேதான் இருக்கப்போறேன்... அடி வாங்கப்போறே.... வந்து சொல்றேன் வை.' கட்டிலை விட்டு எழுந்து விட்டவனை பார்த்தபடியே உரையாடிக்கொண்டிருந்தாள் அருந்ததி. சில நொடிகளில் கைப்பேசியை துண்டித்து விட்டு அவனருகில் வந்தாள்.

விழித்துக்கொண்டது அவனது அறிவு. அவன் முகத்தில் பரவியது கல்லின் இறுக்கம். 'எங்கே வந்தே நீ? புத்தியே வராதா உனக்கு.

அவன் கேள்வியில் அவள் புன்னைகை கூட மாறவில்லை.

முதல்லே உன்னை யார் உள்ளே விட்டது?

'அதைக்கேளு முதலிலே' என்றாள் அவள். என்ன கெஸ்ட் ஹவுஸ் வெச்சிருக்கான் உன் பிரென்ட்? அப்படியே திறந்து கிடக்கு. நான் படியேறி உள்ளே வர வரைக்கும் யாரும் பார்க்கலை. நீ தூங்கிட்டு இருந்தே. யாரவது உன்னை அப்படியே தூக்கிட்டு போயிட்டா நான் என்ன பண்றது.?

'பச். இங்கிருந்து போயிடு அருந்ததி'

அவன் சொன்னதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தாள் அவள் 'நீ வரப்போறேன்னு சஞ்சா சொன்னதிலேர்ந்து எனக்கு எந்த வேலையும் ஓடலை. இப்போதான் நீ இங்கே இருக்கேன்னு சொன்னான் நான் ஓடி வந்திட்டேன். '

இது அவன் வேலையா?'' யோசித்தவன் நிதானமான குரலில் சொன்னான். 'தயவுசெய்து கிளம்பு அருந்ததி.'

'வாய்ப்பே இல்லை'

'ஹேய்....'  பார்வையிலும் வார்த்தைகளிலும் வலுக்கட்டாயமாக கோபத்தை திணித்துக்கொண்டு சொன்னான் 'உன்னை பார்த்தாலே வெறுப்பா இருக்கு எனக்கு. உன்னை பார்த்தா உங்க வீட்டிலே உள்ளவங்க ஞாபகம் தான் வருது. இங்கிருந்து போய் தொலை.

'நீ என்ன திட்டினாலும் இன்னைக்கு பூரா உன்கூடத்தான் இருக்கப்போறேன்' குரலில் கூட கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் பழையே உற்சாகமான தொனியிலேயே  சொன்னாள் அவள்

'இப்போ என்னடி வேணும் உனக்கு' கிட்டத்தட்ட கர்ஜித்தான் ரிஷி. கொஞ்சம் நடுங்கித்தான் போனது ரோஜாப்பூ.

'எ..எனக்கு இ... இன்னைக்கு பூரா  உ...உன் கூட இருக்கணும்'

'அவ்வளவுதானே... கதவை சாத்து.' என்றபடி .தனது சட்டையை கழற்றி கட்டிலில் எறிந்தவனை புரியாமல் பார்த்தாள் அருந்ததி. அவன் பார்வையில் பரவியிருந்த அருவெறுப்பு அவளை என்னவோ செய்தது. அவன் ஒரு நடிகனாய் மிளிர்ந்து கொண்டிருந்தான் அங்கே.

'எனக்கு பு.. புரியலை ....'

'என் கூட இருக்கணும்னு சொன்னியே.... அதுக்குதான். கதவை சாத்து'. உனக்கு என்ன? 'தி கிரேட் ரிஷியோட ஒரு நாள் பூரா இருந்தேன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்டே பெருமை அடிச்சிக்கணும் அவ்வளவுதானே.? அதுக்குதானே வந்தே?

அவன் வார்த்தைகளின் அர்த்தம் தீ கங்குகளாய் அவளுக்குள் இறங்க, மெல்ல மாறியது அவள் முகம்.

'ஏன் வசி அப்படியெல்லாம் பேசறே. என்னை பத்தி அப்படித்தான் நினைக்கிறியா?'

'வேறே எப்படி நினைக்க சொல்றே.? இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும், நான் உன்னை விட்டு விலகி விலகி போகும் போதும் வெக்கமில்லாம வசி வசின்னு என் பின்னாலேயே சுத்தினா வேறே என்ன அர்த்தம்?' என்றபடியே கதவின் அருகில் சென்றான் ரிஷி.

'வசி... ப்....ளீஸ்....'  கிரீச்சிட்டது அவள் குரல். உள்ளம் அடிப்பட்டு தத்தளித்தது. கண்ணீர் வரவில்லை. கோபம் கூட எழவில்லை. அவள் நெஞ்சமெங்கும் வெறுமை மட்டுமே படர்ந்தது. 

ஒரு நொடி கண்களை மூடி திறந்தாள் .'நான் வரேன் வசி' குரல் தேய சொல்லி விட்டு விறு விறுவென நடந்தாள் அவள்.

அப்படியே கட்டிலில் அமர்ந்தான் ரிஷி. 'பேசி விட்டான். பேசியே விட்டான். தனது உயிருக்கு உயிரானவளை காயப்படுத்தி விட்டான். ரோஜாப்பூவை கசக்கி எரிந்து விட்டான். அறியாமல் வந்த வார்த்தைகள் இல்லை இவை. தெரிந்து புரிந்து நிதானமாக அவன் சொன்ன வார்த்தைகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.