(Reading time: 21 - 42 minutes)

05. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

ந்த தனியார் மருத்துவமனையின் பெரிய 'ஸ்பெஷல்' அறையில் உட்கார்ந்து இருந்தாள் துளசி. எதிரில் அந்த நீல சீருடை அணிந்த செவிலி பாட்டிக்கு பி.பி. பரிசோதனை செய்து கொண்டு இருந்தாள்.. பின்னர் ஏதோ ஊசியை போட்டுவிட்டு, சிறிது நேரத்தில் பெரிய டாக்டரும், கார்டியாலஜிஸ்ட்டும் வருவார் என்று கூறி சென்றாள்.

பாட்டியின் அருகே சென்று அமர்ந்த துளசி, "என்ன பாட்டி வலிக்கிறதா?"

"இல்லை", என்று தலையாட்டிய அந்த மூதாட்டி, "எனக்கு ஒன்றுமே புரியவில்லையடி... இந்த மருத்துவ மனையின் பிரம்மாண்டம் ஏனோ என்னை அச்சுறுத்துகிறது.. இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று? நிஜமாகவே சர்ஜரிக்கு பணம் கட்ட தேவையில்லையா? ஏதாவது நீ என்னிடம் மறைக்கிறாயா? சொல்லும்மா, நான் வாழ்ந்து முடித்தவள்.. வைரம் பாய்ந்த கட்டை.. பணம் நிறைய செலவாகுமே? என்னால் நம்ப முடியவில்லை.

Nizhal nijamagirathu

"பாட்டி.. நீங்கள் ஒன்றும் கவலை பட வேண்டாம்.. நான் எதையும் உங்களிடம் மறைக்க வில்லை.. நிஜமாகவே இந்த சர்ஜரி உங்களுக்கு இலவசமாகத் தான் நடக்க போகிறது.. யாரோ ஒரு புண்ணியவான் தன் பிறந்த நாளில் இப்படி மருத்துவ பணத் தேவைக்காக கஷ்டப் படுபவர்களுக்கு தங்கள் சார்பில் பணம் தந்து உதவுகிறாராம். டாக்டர் உங்களைப் பற்றி கூறியவுடன், இந்த முறை உங்களுக்கு, தங்கள் தொண்டு நிறுவனத்தில் இருந்து உதவி செய்ய சொல்லியிருக்கிறார்.. அவ்வளவு தான். இல்லையென்றால் நான் தான் நினைத்தேனா!.. நேற்று தான் இந்த சென்னைக்கு வந்து டாக்டரை மீண்டும் சந்திப்பேன்.. இதோ உடனே இன்று உங்களை ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து இங்கு அட்மிட் செய்வோம் என்று.. டாக்டர். கிரிதரனுக்குத் தன் முதலில் நாம் நன்றி கூற வேண்டும்.. அவர் இந்த டாக்டரைப் பற்றி கூறி என்னை சென்னைக்கு அனுப்ப வில்லை என்றால் இது நடந்திருக்குமா? நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்குங்கள்.. சீப் டாக்டர் வந்தவுடன் எழலாம்" என்று பாட்டியின் கையைப் பற்றி அழுத்தி விட்டு அங்கிருந்த மற்றொரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.

'கடவுளே இப்படி பாட்டியிடம் பொய் கூற வேண்டி இருக்கிறதே? டாக்டர் வந்து மெதுவாக திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்கும் வரை மறைக்க வேண்டுமே!'

"ஏன் தான் இங்கு வந்து இந்த டாக்டரை சந்தித்தோமோ?"

"அன்று கீழே விழுந்த பர்ஸ் ஐ எடுத்துக் கொடுத்த பொழுது அறியவில்லையே அந்த இரட்டையர்களால் தான் தன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று ?"

'அந்த குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் திருமணம் நடக்க போகிறதே, ஆனால் கூடுதல் போனஸ்ஸாக நான் குழந்தையை வேறு சுமக்க வேண்டும்.. இது எந்த மாதிரி கல்யாணம்? எல்லாம் விதி தான்.. இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறதோ?

ஒன்று மட்டும் நிச்சயம்.. எப்படியோ என் கழுத்தில் தாலி ஏறிவிடும்.. அதற்குபின் நான் குழந்தையை சுமந்தாலும் ஒன்றும் தப்பில்லை.. பாட்டியும் சந்தோஷமே படுவார்கள்.. ஆனால் ஒன்று, ஒரு வருடம் கழித்து குழந்தையை கொடுத்து விட்டு நான் மட்டும் திரும்பினால் என்ன நடக்குமோ? அதற்கு முன்னரே, அவருக்கு ஏதாவது ஆகி விட்டால்? அய்யோ, அம்மா நினைக்கவே பயமாக இருக்கிறதே"

'எது எப்படியோ.. நடப்பது நடக்கும்.. இவ்வளவும் நாம் பாட்டிக்காகவே செய்கிறோம்.. பின்னர் நடப்பதை பார்த்துக் கொள்வோம்.. இப்பொழுது பாட்டியின் சர்ஜரி தான் முக்கியம்" என்று எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள்.

டாக்டர். பாலாஜி, கார்டியாலிஜிஸ்ட் டாக்டர். சுதாகரனுடன் கதவை திறந்து உள்ளே வருவதைக் கண்டு புன்னகைத்தவாறு எழுந்து நின்றாள்.

"என்னம்மா துளசி! பாட்டி என்ன சொல்லுகிறார்? ஆம்புலன்சில் வந்த பயணம் சௌகரியமாக இருந்ததா?"

"பாட்டிம்மா, இவர் தான் டாக்டர் சுதாகரன் கார்டியாலஜிஸ்ட்.. என்ற டாக்டர் பாலாஜி,

"உங்களுக்கு நாளை ஆஞ்சியோகிராம் செய்யப் போகிறோம்.. ஒன்றும் பயப்பட வேண்டாம்.. பி.பி., சுகர் இப்பொழுது கன்ட்ரோலில் இருக்கிறது.. முதலில் 'ஆஞ்சியோகிராம்' நாளை செய்து விடலாம்.. ஒரு பத்து நாட்கள் கழித்து உங்கள் உடல் நிலை தேறுவதை பார்த்து 'பை பாஸ் சர்ஜரி' அல்லது வேறு ஏதாவது முறையில் குணப்படுத்தலாமா? என்று தீர்மானிப்போம் என்றவர்

பின்னர் அங்கு இருந்த செவிலியரை பார்த்து, "நர்ஸ், நாளை காலை ஒன்பது மணிக்கு பாட்டியை தயார் செய்து விடு.. தைரியமாக இருங்க பாட்டி" என்று கூறி விட்டு அங்கிருந்த அகன்றார்.

டாக்டர். பாலாஜி , "துளசி, நீ என் ரூமிற்கு வா.. ஹாஸ்பிடல் பார்மாலிடீஸ் சிலது பார்க்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

"டாக்டர்." என்ற பாட்டியின் குரலுக்கு திரும்பி வந்தவர், "என்ன பாட்டிம்மா... ஏதாவது வேண்டுமா?, என்றவரின் கைகளைப் பிடித்தக் கொண்டவர்,

"மிகவும் நன்றி டாக்டர்.. அந்த திருப்பதி பாலாஜியே உங்களை அனுப்பியிருக்கிறார். அந்த புண்ணியவான் யாரோ? இப்படியும், சில நல்லவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது.. முடிந்தால் அவரை பார்த்து நன்றி கூற வேண்டும் டாக்டர் தம்பி".... என நா தழுதழுத்தார்.

பாட்டியின் கையை மெல்ல அழுத்தி, "உங்கள் பேத்தி மிகவும் நல்லவள். அவள் மனதிற்கு பிடித்த பாட்டிக்கு, எல்லாம் நல்லதே நடக்கும்" என்று சொன்னவர், துளசியை பிறகு வருமாறு கூறி அகன்றார்.

டாக்டர் சென்றவுடன், "துளசி, நீ கீழே போனால் ஒரு போன் போட்டு மாமிக்கு தெரிவித்து விடு.. டாக்டர் கிரிதரனுக்கும் சொல்லிவிடம்மா.. அதுதான் முறை" என்று நினைவு படுத்தினார்.

பாட்டியிடம் சொல்லிவிட்டு வெளியே இருந்த செவிலிப் பெண்ணிடம் பாட்டியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு , கீழே ரிசப்ஷன் நோக்கி முதலில் சென்றாள். முதலில் மாமாவுக்கு போன் செய்து விட்டு, பாட்டியை ஹாஸ்பிடலில் நல்லபடியாக அட்மிட் பண்ணி விட்டதையும், நாளை ஆஞ்சியோகிராம் செய்யப் போவதையும் சொன்னாள்.. இருவருக்கும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறியவள், நாளை மாமா அங்கு வரட்டுமா என்று கேட்டதற்கு இரண்டு நாட்கள் கழித்து வருமாறு கூறினாள்.

பின்னர், டாக்டர் கிரிதரனுக்கும் போன் செய்தாள்.. அவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு பாட்டியின் உடல் நலம் பற்றியும் கூறினாள். போன் பேசி முடித்தவுடன், டாக்டர். பாலாஜியின் அறைக்குள் சென்றாள்.

அங்கு அவளுக்காக காத்திருந்த டாக்டர். சுபா, "துளசி.. நாளை பாட்டி ஆபரேஷன் தியேட்டருக்குப் போனப் பின் உனக்கு மேலும் சில டெஸ்ட்டுக்கள் செய்ய வேண்டி இருக்கிறது.. நீ இங்கே வந்து விடு" என்றார்.

"நான் தான் ஏற்கனவே ரத்தம் கொடுத்து விட்டேனே சோதனைக்காக" என்றவளை,

கனிவுடன் பார்த்த டாக்டர். சுபா, "வெறும் ரத்தம் மட்டும் போதாதம்மா.. இன்றைக்கு ஸ்கேன் செய்து பார்த்து உன் கருப்பையின் தரம் பார்க்க வேண்டும்.. இதில் உங்கள் இருவர் உயிர் அணுக்களும் சம்மந்தப் பட்டிருக்கிறது.."

டாக்டர், "பாட்டிக்கு இதை பற்றி நான் எப்படி கூறுவது?"

துளசி. "ஒரு இரண்டு நாட்கள் போகட்டும், இந்த டெஸ்ட் முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.. உன் சினை முட்டை கரணுடன் ஒத்துப் போகிறாதா? இந்த மாத சூழற்சியிலேயே உனக்கு கருதரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.. அதனால் பிறகு பாட்டிக்கு திருமணம் பற்றி கூறலாம்".

"டாக்டர், ஒரு வேளை என்னால் இந்த முறை கருதரிக்க முடியவில்லை என்றால்? என்று கேட்ட துளசிக்கு,

"கவலை படாதே.. கரணின் மோசமடையும் உடல் நிலை காரணமாக முடிந்த அளவு அவனது விந்தணுக்களை நாங்கள் சேகரித்து வைத்து விட்டோம்.. இந்த முறை முடியாவிட்டால் அடுத்த முறை முயற்சிப்போம். நீ முதலில் நல்லதையே நினை.. என்ன ஆனாலும் உன் பாட்டியின் மருத்துவ செலவை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. நீ பயப்பட வேண்டாம். அவர்கள் உயர்ந்தவர்கள்.. சொன்ன சொல் மாறாதவர்கள்.. நீ தைரியமாக முதலில் இரு" என்று கூறி சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.