(Reading time: 16 - 32 minutes)

09. காதல் உறவே - தேவி

ன்றைய அளவில் பிரச்சினைகளை அப்படியே விட்டுவிட்டு, அடுத்து நடக்கவிருக்கும் விழாக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள். முதலில் விழாவிற்குத் தேவையான புடவை, நகை முதலியவற்றை முடித்தார்கள். குழந்தைக்கு பட்டு ஜிப்பா எடுத்தார்கள். பிறகு அஸ்வின் காது குத்துக்கான நகைகள், சபரிக்கும் அவள் கணவர் முரளிக்கும் புடவை வேஷ்டி எடுத்தனர்.

எல்லாவற்றிற்கும் மைதிலியின் அபிப்ராயத்தையும் கேட்டனர். மைதிலியும் தயங்காமல் எல்லாம் செய்தாள். ஆனால் அவள் மனதிலும் வருத்தம் இருந்ததை கௌசல்யாவும், சுபத்ராவும் உணர்ந்தனர். விசேஷம் முடிந்த பிறகு அதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தனர்.

இந்த விழாவிற்கான அழைப்பிதழில் பேர் எழுதிக் கொண்டிருக்கும் போது, எல்லோரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர். அப்போது மைதிலி தாத்தாவிடம் “என்னுடைய பெரியம்மாவும், அத்தையும் திருச்சி அருகே இருக்கிறார்கள். அவர்கள் முகவரி இதோ. இவர்களுக்கும் அனுப்பலாமா?” என்று கேட்டாள்.

Kathal urave

எல்லோரும் அவளை வியந்து பார்த்து விட்டு ராமைப் பார்க்க, ராமின் முகத்திலும் வியப்பைப் பார்த்தனர். தாத்தா அவளிடம் “இவர்களைப் பற்றியெல்லாம் தெரியாது என்று உன் திருமணத்தின் போது சொன்னாயேம்மா? இப்பொழுது எப்படிக் கண்டு பிடித்தாய?” என்று கேட்டார்.

மைதிலி எல்லாரையும் பார்த்து “என் அம்மா இருந்தவரை அப்பாவைத் தவிர யாரைப் பற்றியும் தெரியாது. அம்மாவின் மறைவுக்குக் கூட அக்கம் பக்கதிலுள்ளவர்களின் மூலம் தான் எல்லாம் செய்தேன். பிறகு தனியாக இருக்க முடியாமல் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டேன். ஆனால் என் திருமணத்தில் யாருமே என்னோடு இல்லாதது வருத்தமாக இருந்தது. சபரியின் திருமணத்தின் போது எல்லோரும் அவளோடு இருந்தது, பிறகு திருமணத்திற்கு முன்னும் பின்னுமான சடங்குகள் இதையெல்லாம் பார்த்த போது உறவினர்களின் அவசியம் புரிந்தது. சடங்குகளுக்காக மட்டுமில்லாமல், நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல யாராவது வேண்டும் என்று தோன்றியது. மேலும் ஷ்யாமும் என்னைப் போல் அவன் உறவினர்களைப் பற்றித் தெரியாமல் இருக்கக் கூடாது என்று அவர்களைக் கண்டுபிடித்தேன்.

என் அம்மா அலுவலகத்திலிருந்து அவர்களின் பழைய முகவரிகளை எடுத்து அங்கிருந்து அம்மா அப்பாவின் சொந்த ஊரான திருச்சியில் விசாரித்ததில் இவர்களின் முகவரி கிடைத்தது. அம்மா அப்பாவின் காதல் திருமணத்திறகு வீட்டில் எதிர்க்கு என்றும், அப்பா இறந்தபோது இருந்த தாத்தாவால் அவர்கள் யாரும் இறப்பிற்கு வரவில்லையாம். அதனால் அம்மா இவர்களைப் பற்றி எனக்குச் சொல்ல வில்லை. அதனால்தான் அம்மா இறந்ததும் யாருக்கும் தெரியாது. என்னைப் பார்த்த பிறகு அவர்களுக்குச் சந்தோஷம். அவர்களோடு அவ்வப்போது தொடர்பு கொள்வேன்.” என்றாள்.

ராமின் அப்பா “ அவர்கள் ராமைப் பற்றி உன்னிடம் கேட்கவில்லையா?” என்றார். அதற்கு மைதிலி “கேட்டார்கள். நான் அவர் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன். மேலும் நான்தான் அவர்களைச் சந்தித்து விட்டு வந்தேன். அவர்களிடம் ஷ்யாமின் அப்பா வந்தபிறகு வீட்டிற்கு அழைப்பதாக் கூறியிருந்தேன். அதனால் இந்த சமயத்தில் அவர்களைக் கூப்பிட்டால் சரியாக இருக்கும்” என்றாள். பிறகு தாத்தா அவர்களுக்கு பத்திரிகை அனுப்பியது மட்டுமில்லாமல் போனிலும் அவர்களை அழைத்துப் பேசினார்.

அன்று இரவு ராம் மைதிலியிடம் “நீ உன் சொந்தங்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லையே? ஏன் “ என்றான். மைதிலி அவன் முகத்தைப் பார்க்காமல் “நீங்கள் இதுவரை நான் வீட்டை விட்டு போன பிறகு என்ன செய்தேன் என்று என்னிடம் கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை.” என்றுவிட்டு அவள் அறைக்குப் போய்விட்டாள். அவன் அவளை வேதனையுடன் பார்த்தான்.

விசேஷத்திற்கு முதல் நாள் மண்டபத்திற்குச் சென்று சில சடங்குகளைச் செய்தனர். மைதிலியின் உறவினர்கள் எல்லோரும் விசேஷத்திற்கு வந்திருந்தனர். மைதிலிக்கு ராமை முதலில் சந்தித்ததே மனதில் ஓடியது. இன்றும் அன்று போல் அவர்கள் இளைய தலைமுறையின் கச்சேரி நடந்தது. அதில் அவன் அப்பாவிற்கு பிடித்த பாடல்களைப் பாடினான்.

மைதிலி ராமைப் பார்த்தால் பழைய ஞாபகம் வரும் என்று எண்ணியவளாக ஏதோ வேலையிருப்பதைப் போல் அந்த ஹாலுக்கே வரவில்லை. குரலை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

கச்சேரி முடியும் போது ஷ்யாம் அவன் அப்பாவிடம் காதில் ஏதோ சொல்ல, ராம் மைக்கைக் கொடுத்தான். தன் மழலைக் குரலில் அழகாக “அழகே அழகே” என்று பாட மண்டபமே அதிர்ந்தது. ராமிலிருந்து தாத்தா வரை அசந்து போய் அமர்ந்திருந்தனர். பாடி முடித்தவுடன் ஓடி வந்து அப்பாவிடம் ஏறிக் கொள்ள, எல்லோரும் எழுந்து கைதட்டினர். ஷ்யாம் பாட ஆரம்பிக்கும் போது ஹாலுக்கு வந்த மைதிலி, ஷ்யாமை எல்லோரும் பாராட்டுவதைக் கேட்டு மகிழ்ந்தாள்.

அப்போது கௌசல்யா மைதிலியிடம் வந்து “என்னை மன்னித்து விடு மைதிலி. இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை” என்று அழுதாள். மைதிலி “அத்தை, என்ன இது? நீங்கள் பெரியவர்கள் இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்” என்றாள்.

பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும், பாட்டியும் அவளருகே வந்து அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தனர். ராமின் உறவினர்கள் எல்லோரும் அவளிடம் கை குலுக்கி வாழ்த்தினர்.

ராம் தன் மகனைப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு முத்தம் கொடுத்தான். ஷ்யாம் மைதிலியிடம் “அம்மா நான் மைக்ல பாட்டு பாடினேன். ஆல் குட் சொன்னா” என்று சொன்னான். மைதிலி எப்போதும் போல் ஷ்யாமிடம் “நீ யாரு?” என்று கூறி நிறுத்தி விட்டு “ஷ்யாமாச்சே” என்றாள். உடனே ஷ்யாம் “அப்படி இல்ல. ராம் பையன் ஷ்யாம் சொல்லு” என்றவுடன் எல்லோரும் சிரித்தனர். மைதிலி முகம் சிவக்க “ஷ்..” என்றாள். ராம் மெல்லச் சிரித்தான்.

றுநாள் காலை மனதில் இருந்த கசடுகள் நீங்க எல்லோரும் விசேஷத்திற்கு தயாராயினர். குறித்த நேரத்தில் விழா நடைபெற எல்லோரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு ஆசீர்வாதம் வாங்கினர்.

அப்போது ஆசீர்வாதம் வாங்கி விட்டு கீழே இறங்கிய ஒரு குடும்பத்தை ராம் மைதிலிக்கு அறிமுகப் படுத்தினான்.

“மைதிலி, இவர்கள் சுபத்ரா அத்தையின் நாத்தானர், அவர்கள் கணவர், இவர்கள் பெண் ஸ்ருதி. “ என்று கூறவும் மைதிலி ஒருகணம் திகைத்து விட்டு பிறகு வணக்கம் கூறி வரவேற்றாள்.

“அத்தோடு இவள் தற்போது சந்தோஷின் பியான்ஸி” என்று மேலும் கூறினான்.

“வாழத்துக்கள் ஸ்ருதி” என்றாள் மைதிலி.

“ராம் அண்ணாவிற்குதான் தேங்க்ஸ் சொல்லணும் அண்ணி” என்றாள்.

“ஓ..” என்றவள் பிறகு அவர்களை சாப்பிட அனுப்பினாள். ராம் அவளை தீர்க்கமாகப் பார்த்து விட்டுச் சென்றான். மைதிலிக்குச் சற்று தனிமை தேவைப்பட்டது. அதனால் அவர்களுக்குரிய அறைக்குச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

ராமின் பார்வை புரிந்தாலும், இதை அன்றே சொல்வதற்கென்ன என்றுதான் தோன்றியது. தான் கேட்டவிதம் தப்பாக இருந்தாலும் கேட்டதில் தப்பில்லை என்றுதான் தோன்றியது.

பிறகு சற்றுக் கழித்து முகத்தைச் சீராக்கிக் கொண்டு வெளியே வந்ததை ராம் கவனித்தான். மைதிலியின் உறவினர்கள் கிளம்பி விடவே, ராம் எல்லோரிடமும் தன்மையாக பேசி வழியனுப்பி வைத்தான். மைதலியின் உறவினர்களுக்கும் மிகவும் திருப்தியே. எல்லோரும் அன்று இரவு சபரி குழந்தை ஒரு வயது நிறைவு மற்றும் காது குத்து விழாவிற்கு அவர்கள் சொந்த ஊரான மதுரைக்கு அருகே கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.