(Reading time: 29 - 57 minutes)

05. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

ந்நேரத்தில் தன் மீது வந்து ஏதோ படுகிறது என்று உணர்ந்த சுகவிதா பதறும் முன் தன் மேல்பட்டது யார் கை எனவும் உணர்ந்துவிட்டாள்.

“ஹயா செல்லம் எழுந்துட்டீங்களா….? நான் வர்றப்ப தூங்கிட்டு இருந்தீங்களே…” திரும்பி இவள் கழுத்தில் கைவைத்த மகளை தன்னோடு வாங்கிக் கொண்டாள் அரண் கையிலிருந்து.

 அத்தனை இரவிலும் முழு உற்சாகத்தில் இருந்தாள் ஹயா. இவளிடம் வரும் போதே வலக் கையால் சுகவி இடக் காதிலிருந்த டிராப்ஸை பிடித்து ஆட்டியபடியேதான் தொவ்வினாள். இவளிடம் வந்ததும் மறுகையால் தன் தலையிலிருந்த பிங்க் நிற உல்லன் குல்லாவை கழற்றி எறிந்தாள்.

Nanaikindrathu nathiyin karai

வெளியில் சிறிது பனி மூட்டம். அதனால் மகளுக்கு குல்லா அணிவித்துக் கொண்டு வந்திருப்பானாயிருக்கும் அரண்.

ஹயாவுக்கு தலையில் எது அணிவதும் பிடிக்காது. சற்று சுருண்ட முடி அவளுக்கு. அதில் எதாவது பேபி க்ளிப், பாண்ட் அணிந்தால் பார்க்க படு அழகாக இருக்கும். ஆனால் சுகவியோ அவளது அம்மாவோ அப்படி குழந்தை தலையில் எதையாவது வைத்தால் போதும், வைத்துவிட்டு அவர்கள் தங்கள் கையை எடுத்த வேகத்தில் ஹயாகுட்டி அதை உருவி எறிந்துவிடும்.

இதில் கேப் குல்லா என்றால் சாத்தியமே கிடையாது. கட்டாயபடுத்தினால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர்விட்டு ஏங்கி ஏங்கி அழுதுவிடுவாள். ஆனால் இன்று இவ்வளவு நேரம் வரை பொறுமை காத்து அம்மாவை கண்ட பிறகுதான் கழற்றி எறிகிறது குழந்தை.

வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் சுகவி, குழந்தை  ஒரு வகையில் அரண் சொல்வதற்கெல்லாம் ஆடத்தான் செய்கிறாள்.  ஏழு மாத குழந்தைதான் ஆனால் இப்பொழுதே தன் அப்பாவிற்கு ஐஸ் மஸ்கா ஜால்ரா எல்லாம்.

இதற்குள் மகள் கழற்றி இருந்த குல்லாவை மீண்டுமாய் அவள் தலையில் வைக்க வருகிறான் அரண்.

“இல்ல…..வேண்டாம் அவளுக்குப் பிடிக்காது….வீட்லனா அழுதுறுப்பா….உங்கட்டதான் என்னமோ இவ்ளவு நேரம் தலைல வைக்கவே விட்றுக்கா…”

“ஏன்டா செல்லம் பிடிக்கலைனா அப்பாட்ட சொல்ல மாட்டீங்களா….?” சொல்லியபடி சுகவிதாவின்  முதுகுப்புறம் நின்ற அரண், தன் அம்மாவின் காதிலாடிய ட்ராப்ஸை தீவிர ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஹயாவின் முகத்தினருகில் குனிந்து, மகளின் நாடியைப் பிடித்து மென்மையாக ஆட்டினான்.

அப்பா தன் உயரமே குனிந்து நிற்பதைப் பார்த்த ஹயா படு குஷியாகி  ஆ என்ற பொக்கை  சிரிப்புடன் தன் இரு கைகளையும் சத்தமின்றி ஒரு முறை தட்டிக் கொண்டவள், அடுத்த கட்ட நடவடிக்கையாக அப்பாவின் கண்களை தொட்டுப் பார்க்க முயன்றாள்.

தன் முகத்தை மட்டும் இடப்பக்கம் திருப்பி இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாலும் சுகவிக்கு இது எதுவும் மனதில் பதியவில்லை. காரணம் பிடிக்கலைனா அப்பாட்ட சொல்ல மாட்டீங்களாமா? என்ற அரணின் வார்த்தையில் அவளுக்கு ஏதேதோ காட்சி ஞாபகம் வருகிறது.

னக்குப் பிடிக்கல்லைங்கிறதுக்கு ஒரு உருப்படியான காரணம் சொல்லு, நானும் ஒத்துக்கிடுறேன்….அவன்ட்ட என்ன குறை? ஸ்ட்ராங்க் பேக்ரவ்ண்ட்….படிச்சிருக்கான்…..நல்லாவே எர்ன் செய்றான்…..அப்பியரன்ஸும் உனக்கு ஏத்த மாதிரி….முக்கியமா விசாரிச்ச வரை எந்த கெட்ட குணமும் கிடையாது…..எல்லாத்துக்கும் மேல கல்யாணத்துக்குப் பிறகும் நீ விளையாடலாம்னு சொல்றான்…..வேற என்ன வேணும் உனக்கு…..?” இவளது அப்பா இவளிடம் அழுத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். கட்டுபடுத்திய கோபம் இருக்கிறது அவர் வாயிலும், வார்த்தையிலும் முழு முகத்திலும்…

 “அ..து……அது வந்து …….” எப்படியாவது அப்பாவுக்குப் புரிகிற மாதிரி சொல்லி ஆக வேண்டும். ஆனால் எப்படி என தெரியாமல் தவித்தபடி நிற்கிறாள் சுகவிதா.

“காதல், கத்ரிக்கா, கல்யாணம் செய்தா அவனத்தான் செய்வேன் அப்டின்னு ஏதாவது இருக்குதுன்னா இப்பவே சொல்லிடு…..அப்டியே எனக்கும் உங்கம்மாவுக்கும் ரெண்டு பாட்டில் தூக்க மாத்திரையும் வாங்கி கொடுத்துடு….வலி இல்லாம செத்து போய்டுறோம்…..”

“ஐயோ…அப்பா…என்னப்பா இது….?”

“பொட்டப் பிள்ளய குட்டப் பாவடை போட்டு விளையாடுற விளையாட்டு விளையாட வச்சுகிட்டு இருக்க….அவளால உன்ன சந்தி சிரிக்கப் போகுது ஊருன்னு என் ஊர்காரன் தேடி வந்து சொல்லிட்டுப் போனான்….பையனா இருந்தா இந்த விளையாட்டு விளையாட விட்றுக்க மாட்டமா? பொண்ணுங்கிறதுக்காக ஏன் தடுக்கனும்னுதான் அப்பா அத்தனை பேர் வார்த்தையையும் தாங்கிக்கிட்டு உன்னை விளையாட விட்டுறுக்கேன்….என் குடும்பத்துக்காரங்க முன்னால என்ன தலை குனிய விட்றாத…..இதுவரைக்கு நீ சம்பாதிச்ச பேரு புகழ் பணம் எதுவும் எனக்கு தேவையில்ல….ஆனா என் பிள்ளைக்கு நான் தான் கல்யாணம் செய்து வச்சேன்ற கௌரவம் எனக்கு வேணும்….அதுல என்ன தோக்க வச்சுடாத…..அதை தாங்கிகிட்டு நான் உயிரோட இருப்பேன்னும் நீ நினைக்காத….”

“அப்பா…..” எதிராளி மேட்ச் பாய்ண்டில் இருக்கும் போது கூட சுகவிதா இத்தனை தவிப்பை அனுபவித்தது கிடையாது. இப்பொழுது தவிப்பு மன அழுத்தம் திகைப்பு என எல்லாவற்றிலுமாக அழுகை வருகிறது.

“உனக்கு அப்டில்லாம் எதுவும் கிடையாதுன்னு எனக்கு தெரியும் சுகாமா….ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் நீ எங்க போற யாரப் பார்க்கிறன்னு எல்லாம் அப்பாவுக்கு தெரியும்….உனக்கு அப்படி எந்த பழக்கமும் கிடையாது….உன்னை நான் சந்தேகம்லாம் படலமா….உள்ள நிலமைய சொல்றேன்….குடும்பத்துக்காரங்கள எதிர்த்து உனக்கு எல்லா சுந்திரமும் கொடுத்றுக்கேன்…..அவங்கட்ட நான் பிள்ள வளத்தது சரியில்லைனு எனக்கு பேர் வாங்கி கொடுத்துடாத….அவ்வளவுதான்….”

அப்பா கிளம்பிச் செல்ல தாங்க முடியா வலியில் இவள்.

சுகவ்…..சுகவி…” அரண் இவளை அழைத்துக் கொண்டிருப்பது இப்பொழுது உறைக்க மெல்ல நடப்பிற்கு திரும்பினாள்.

ஒருவேளை அந்த ஃபெலிக்‌ஸுடனான திருமணம் இவள் விருப்பமின்றி நிச்சயமானதோ….? அதிலிருந்து காப்பாறத்தான் அரண் இவளை கடத்தி வந்தானோ….? ஆனால்….அப்படியானால்…..இவள் இவனுடன் வரவும் தான் விரும்பியது போல் தெரியவில்லையே….? எது எப்படியோ அப்பா நிச்சயத்த திருமணத்திலிருந்து இவளை அரண் காப்பாற்றி இருந்திருந்தானால் அப்பா அவனை வெறுப்பதில் ஆச்சர்யம் இல்லை.

“பால்குட்டிய என்ட்ட குடுத்துட்டு தூங்கப் போன்னு சொன்னேன்…..அவ தூங்கப் போற மாதிரியே இல்லை….” குழந்தையை தன் கையில் ஏந்த ஆயத்தமாய் நின்றிருந்தான் அரண்.

 ஹயா இப்படித்தான். சில இரவுகளில் இப்படி எழுந்தால் இரண்டு மணி நேரமாவது ஆட்டம் போட்டுவிட்டுதான் தூங்கப் போவாள்.

சுகவிதா அரணைப் பார்த்தாள்.

என் அப்பாட்ட கூட குடுக்க மாட்டேன்னு சொல்லி, குழந்தை என் கைலதான் இருக்கனும்னு சண்டை போட்டு வாங்கிட்டு, இப்டி அவளை தனியா போட்டுட்டு எப்டி போவன்னு இவன் ஏன் கேட்கலை?

“சாரி…..அவ தூங்கிட்டு இருக்றதப் பார்த்துதான் வந்தேன்…..எனக்கு தூக்கம் வரலை….”

சிறு பயத்துடன் தயங்கி தயங்கி சொன்னாள் சுகவிதா.

 “இனி இப்டி வரனும்னா என்ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வா சுகவிமா….” அவன் சொல்ல கரிசனை வந்தது இவள் மனதில்.

 “நீங்க தூங்கிட்டு இருந்தீங்க அதான்…..”

“பரவாயில்லை….இல்லனா பால்குட்டிய என் பக்கத்துல வந்து படுக்க வச்சுட்டுப் போ….ஆமா உனக்கு ஏன் தூக்கம் வரலை….? உடம்புக்கு எதுவும் முடியலைனா எதையும் யோசிக்காம தயவு செய்து சொல்லிடு சுகவி…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.