(Reading time: 13 - 26 minutes)

06. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

வேண்டிய மட்டும் அழுதாயிற்று. இப்பொழுதும் பாட்டியின் நினைப்பு வர துக்கத்தில் நெஞ்சு அடைத்தாலும், கண்ணீர் வரவில்லை. கண்ணீர் சுரப்பிகள் வற்றி விட்டன போலும். துக்கம் மட்டும் பந்தாய் திரண்டு நெஞ்சுக்குள் அடைத்திருக்கிறது. இயல்பாய் பேச்சு வரவில்ல. வெளிவாசலுக்கு, போகப் பிடிக்கவில்லை. அக்கம் பக்கத்தவர்கள் ஆறுதல் பேச்சு வெறும் வாய் வார்த்தையாய் இருந்தது.

ஆயிற்று... . இன்றுடன் பதினைந்து நாட்கள் முடிந்து விட்டன.... நேற்று தான் பாட்டி மூச்சு திணறலில் அவதிபட்டது போல் இருந்தது.... சட்டென்று தனக்கு திருமணம் முடிந்தது, அந்த சந்தோஷத்திலேயே பாட்டி தன் கடைசி மூச்சை விட்டது.... எல்லாம் ஏதோ கனவு போல இருந்தது. பாட்டியின், ஈமச் சடங்குகளை கடமைத் தவறாத மருமகனாக பூர்த்தி செய்திருந்தான் கரண். மாமி, மாமவுடன் ஊருக்கு வந்திருந்தாள் துளசி, சென்னை செல்லும் முன்பு, வீட்டையும், நிலத்தையும் பார்க்க வேண்டும் என்று. அழைப்பு மணி ஒலிக்க, எழுந்து போனாள் துளசி.

"வாங்க, மாமி". தன் பருத்த உடலை சற்றே சாய்த்து, சாய்த்து நடந்து உள்ளே வந்தாள் மாமி.

Nizhal nijamagirathu

"என் மகளும், மருமகனும் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உனக்கு பிடித்த அடையும், அவியலும் செய்திருந்தேன். எடுத்து வந்திருக்கிறேன். சாப்பிடு துளசி" என்று அவள் பக்கத்தில் உட்கார்ந்து பிளேட்டில் எடுத்து வைத்தார்.

"ஒன்றும் பிடிக்கவில்லை மாமி", என்றவளை,

"அப்படி சொல்லக் கூடாதும்மா. போனவர் போய் விட்டார். ஆனா உனக்கு சொச்ச வாழ்க்கை இருக்கேடீம்மா! பாட்டி உனக்கு ஒரு வழி செய்து விட்டுத் தான் போயிருக்கிறார்.... அன்று நம்மை கொண்டு விட்டுச் சென்ற பிள்ளையாண்டான் பத்து நாட்களாக காணவில்லேயே என்று நினைத்தேன்.... உங்கள் திருமணம் அவர்கள் பெற்றோர், சகோதரன் கூட இல்லாமல் அவசர கதியில் நடந்து விட்டது... என்ன செய்வது.... அவரும் அங்கு ஏற்பாடு செய்ய வேண்டுமே".

மாமி, திருமணம் பற்றி பேசியவுடன், அவளையும் அறியாமல் பாட்டியின் இழப்பும், தன் அவசர திருமணமும் ஞாபகம் வந்து துளசிக்கு கண்ணீர் பெருகியது...

"அழாதே, துளசி.... சற்று முன் தான் உன்னவர் போன் செய்தார்... இன்று மாலை மூன்று மணி அளவில், உன்னை தன்னுடன் சென்னைக்கு அழைத்து போவதாக சொன்னார். முதலில் நீ சாப்பிடு.... நான் மதிய சாப்பாடு அனுப்புகிறேன்.... பார் உன் தலையெல்லாம் எப்படி வரண்டு இருக்கிறது... நன்றாக தலைக்கு குளித்து மூன்று மணி அளவில் நல்ல புடவை கட்டி ரெடியாக இரு... பூ வாங்கி வைக்கிறேன்.... உன் புகுந்த வீட்டுக்கு, சென்னைக்கு செல்ல வேண்டும்" என்று கூறி விட்டு தன் வீடு நோக்கிச் சென்றார்.

மனம் எதிலும் ஒன்றவில்லை. இன்று அவன் வந்தால் மீண்டும் சென்னைக்கு போக வேண்டும். நம்மை வீட்டுக்கு அழைத்து போவானா? இல்லை ஹாஸ்பிடல் அல்லது ஹோட்டல் எங்காவது தங்க வைப்பானா?

'பாட்டிதான் இறந்து போய் விட்டார்களே? இனி இந்த தாலி அவசியமா? ஒன்றும் புரியவில்லை...... ஒரு வேளை மீண்டும் ஏதாவது டெஸ்ட் எடுக்க வேண்டுமோ?.... இந்த வீட்டை என்ன செய்வது?'...... ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

மாலை மூன்று மணிக்கு தன்னிடம் இருந்த ஒரு நல்ல புடவையை உடுத்திக் கொண்டு துளசி ரெடியாகவே இருந்தாள். மாமியும், வந்து அவள் தலையில் கொஞ்சம் மல்லிகை பூவை சூட்டி விட்டு, "துளசி, என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு. எவ்வளவு அழகுடி நீ. போற இடத்தில் சந்தோழமாக இருக்கனும் நீ. அப்ப தான் உன் பாட்டியின் ஆன்மா சாந்தி அடையும்", என்றவர், அவளுக்கு திருஷ்டி சுத்தி, அவளுக்கு வேண்டிய துணிமணிகள் மற்ற பிற பொருட்கள் பெட்டியில் அடுக்கி வைக்க உதவி புரிந்தார்.

வாசலில் கார் நிறுத்தும் சத்தம் கேட்டது. அதற்குள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்திருந்த மாமா, அவனன வரவேற்று, துளசியின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். எளிய புடவையில் வெகு பொருத்தமாய் அழகாக இருந்த தன் மனைவியை பார்த்தவன், வீட்டிலேயே இருந்ததாளோ, இல்லை பாட்டியின் இழப்பினாலோ என்னவோ, சற்று மெலிந்து , வெளுத்து இருப்பதாக நினைத்தான்.

"துளசி, எப்படி இருக்கிறாய்? மெலிந்து விட்டாய்" என்றவனுக்கு, ஒன்றும் சொல்லாமல், வெறும் தலை ஆட்டினாள்.

மாமா, மாமியிடம் நலம் விஜாரித்தவன், மாமி கொடுத்த காப்பியை வாங்கி குடித்தான்.

"துளசி, போகலாமா?... இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்" என்றவனை அப்பொழுதுதான் அவளும் சற்று உற்று பார்த்தாள். சரியாக மழிக்கப் படாத தாடி, மீசையுடன் சற்று, கறுத்து, அவனும் மெலிந்திருந்தான். மெலிந்து இருப்பதால் இன்னும் உயரமாக இருந்தான்

"மாமி, இந்த வீட்டு கடனையும், நிலக் கடனையும் அடைத்து விட்டேன். எல்லாம் துளசியின் பெயரில் இப்பொழுது இருக்கிறது...... மாமி, இனி நீங்கள் அந்த வாடகை வீட்டில் இருக்க வேண்டாம்.... இந்த வீட்டிற்கு குடி வந்து விடுங்கள்.... வாடகை எதுவும் தர வேண்டாம்... பாட்டி இருந்த இந்த வீட்டில், உங்கள் காலம் முழுவதும் நீங்கள் இருக்கலாம்.....

ஏதோ பேச வந்த மாமியை தடுத்து, "ஒன்றும் பேச வேண்டாம். பாட்டியை இழந்த துளசிக்கு, நீங்கள் தான் இனி பிறந்த வீட்டுச் சொந்தம்.. யாராவது பெற்றவர்களிடம் வாடகை வாங்குவார்களா? மற்றும், நில குத்தகைப் பணம் துளசியின் பேரிலும், மாமியின் பேரிலும் ஒரு ஜாயிண்ட் அக்கௌண்ட் ஓபன் செய்து இருக்கிறேன். அதில் போட்டு விடுங்கள்....உங்கள் தேவைக்கு போக மீதியை போட்டால் போதும்" என்றவனை,

அவனது பெருந்தன்மையை கண்டு வியந்த மாமி, "இதெல்லாம் எதற்கு? எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை".... என்று கூறி அவனுக்கு நன்றி கூறினார்.

"துளசியின் மனதில் இருந்தவை தான் இது. நான் ஒன்றும் தனியாக செய்ய வில்லை என்றவனுக்கு, துளசியும் ஆமோத்திதாள்..

பின்னர் அனைவரிடமும் விடை பெற்று, துளசியை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்...... கண்களில் கண்ணிருடன் மாமியிடமும், மாமாவிடமும் விடை பெற்று, வீட்டுச் சாவியை மாமியிடம் ஒப்படைத்து விட்டு காரில் ஏறினாள் துளசி. காரில் ஏறி அமர்ந்தவள். இத்தனை நாள் வளர்ந்த வீட்டையும், கண் முன்னே மறையும் ஊரையும், ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே வந்தாள்...

"துளசி, கலங்காதே.... பாட்டி வாழ்ந்து முடித்தவர்.... உன்னை நல்ல இடத்தில் ஒப்படைத்த திருப்தியில் சென்று விட்டார்.... என்ன செய்வது? எல்லாம் நல்லதுக்கே என்று நினை..... மேலும், துளசி, சற்று கவனமாகக் கேள்... நம் திருமணம் பற்றி, அங்கு நம் வீட்டில், ஒருவருக்கும் தெரியாது.... பெற்றோரிடம் எப்படி சொல்லுவது என்று தயக்கமாக இருந்தது.... உன்னை நேரில் அழைத்துக் கொண்டு போய் சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன்... என்ன ஆனாலும் நீ இப்பொழுது என் மனைவி. அதை நீ எப்பொழுதும் மறக்காதே.... அங்கு யார் என்ன சொன்னாலும் பெரிதாக நினைக்காதே...நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன்"....

ம்ம்..."

“துளசி, நாளை காலை பத்து மணிக்கு உனக்கு டாக்டரிடம் அப்பாயிண்மெண்ட் இருக்கிறது....உனக்கு எதோ பரிசோதனை செய்ய வேண்டுமாம்.... சொல்ல மறந்து விட்டேன்"

ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு, சன்னல் புறம் திரும்பி, 'எது எப்படியானால் என்ன... அவன் காரியம் முடிந்து விட்டது... ஆனால் நானோ, எதற்காக இதை ஒத்துக் கொண்டேனோ, அந்த காரணத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது... மொத்தத்தில் என் பக்க இழப்பு மிக அதிகம்'... என்று எண்ணி சாலையை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள். மேற் கொண்டு அவனும் பேசாமல் அமைதியாக காரை ஓட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.