(Reading time: 18 - 36 minutes)

06. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

ல்லிசையே நம்புவதுதான் நவ்யா சதீஷுடன் இணையக் கூடாது அவனுக்கு இரங்கக் கூடாது என்று, ஆனால் இன்றைய உணர்ச்சி பெருக்கில் அவை எதுவும் மனதில் தோன்றவேயில்லையே. இவள் இவளே உணராமல் நவ்யாவை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாளெனில் நவ்யா உடைந்து அழ தொடங்கியதும் அடுத்து செய்வதென்ன எனத் தெரியாமலும் திகைத்தாள்.

அதுவும் அவள் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்தவுடன் எல்லாப் பெண்ணையும் போல் நல்லிசையின் மனமும் பரிதவித்துப் போனது.

“நவ்யா…ப்ளீஸ்…..ப்ளீஸ்….இங்க பாருங்க….முதல்ல இப்டி அடிக்றதை நிறுத்துங்க….” அவசர அவசரமாக அவளது கைகளை தடுத்து நிறுத்த முயன்றாள். ஆனால் இது எதையும் நவ்யா உணர்ந்ததாகவே தெரியவில்லை…..

Nagal nilaஇவளிடமிருந்து கைகளை அசுரத்தனமாக உருவிக் கொண்டு இன்னும் ஆக்ரோஷமாக செய்துகொண்டிருந்ததை தொடர்ந்தாள்.

”இந்த வயித்லதான்……இந்த வயித்லதான் சுமந்து பெத்து வச்சுருக்கனே…..எனக்கு மட்டும் ஏன் இப்டில்லாம் ஆச்சுது….ஐயோ தெய்வமே…..அது மட்டும் இல்லனா இந்நேரம் என்ன ஆனாலும் பிரவால்லன்னு போயிருப்பனே…. ஐயோ….…ஐயோ என்னால தாங்க முடியலையே…..” நவ்யாவின் அடியும் அழுகையும் இன்னும் கூடிக் கொண்டு போனதே தவிர குறையவில்லை. ஆனால் கேள்விப் பட்ட செய்தியில் ஸ்தம்பித்து போய்விட்டாள் நல்லிசை. குழந்தையா? நவ்யாவிற்கா? அது எங்கே? யார் பாத்துகிறாங்க? முக்கியமா அதோட அப்பா யாரு? சதீஷ்க்கு இந்த விஷயம் தெரியுமா?

ஆனால் விஷயத்தை விசாரிக்க இது தருணமில்லை, அதற்கு வழியுமில்லை.சதீஷ் கோலத்தினால் அதிர்ச்சியிலிருந்த நல்லிசை இப்பொழுது இந்த அதிர்ச்சியில் சுதாரித்துவிட்டாள்.

காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்தாள். சூழலை உணர்ந்தாலும் இன்னும் கட்டுபடுத்தமுடியாமல் அழுது கொண்டிருந்த நவ்யாவை கைதாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லும் போதே சத்தம் கேட்டு அம்மாவும் அப்பாவும் கூட வந்துவிட்டனர்.

நவ்யா அழுத கோலத்தில் அம்மாவிற்கும் அதாக கண்கலங்கிவிட்டது. ஓடி வந்து நவ்யாவை அரவணைத்துக் கொண்டார் “எல்லாம் சரியாயிடுமா……ஒன்னும் ஆகாது …..பயப்படாதமா…..” என்ன விஷயம் என்று தெரியாவிட்டாலும் ஆறுதல் சொல்லிக் கொண்டே கை தாங்கலாக உள்ளே அழைத்துப் போனார்.

 அப்பாதான் கலங்கிப் போயிருந்த இவளைக் கவனித்தார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து கண்ணீருடன் தவித்துப் போய் நின்றிருந்தவளை ஆசுவாசப்படுத்தி பின் நடந்ததை விசாரித்தார்.

“யாருக்கு என்ன ஆச்சு லிசிமா?”

“தெரிஞ்சவங்களுக்கு ஆக்சிடெண்ட்பா….அதப் பார்த்துட்டு….” மீண்டும் நினைவில் நீர் நிரம்பி வழிகிறது விழிகளில்.

அதற்கு மேல் என்னதை சொல்ல? “அப்பா ப்ளீஃஸ்பா….இன்னைக்கு ஒரு நாள்பா….அவரை இங்க வரச் சொல்லுட்டுமாப்பா…..நவ்யாவுக்கு வேற யாரும் கிடையாதுபா….” அப்பா ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்தார். பதிலே சொல்லாமல்.

“மாப்ள……கொஞ்சம் கஷ்டம் பாராம வீடு வரை வர முடியுமா….? கொஞ்சம் அர்ஜென்ட்….”

அடுத்த அரை மணி நேரத்தில் இவர்கள் வீட்டில் இருந்தான் மதுரன். அப்பா கொஞ்சம் விலகியே இருந்தாலும் அம்மா அந்த சூழலிலும் மதுரனை நன்றாக கவனித்துக் கொண்டார். அதுவும் இன்றுதான் அவர் அவனை முதன் முதலாக பார்ப்பதுமே….

வ்யாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்துதான் தூங்க வைக்க வேண்டியதாக இருந்தது. அவள் தூங்கப் போனபின்பு அம்மா மதுரனுடம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அவனை அறிந்து கொள்ளும் ஆவல். அதனோடு அவனுடன் நல்ல உறவு தங்களுக்கு ஏற்பட வேண்டுமே என்ற தவிப்பும் அப்பட்டமாக தெரிந்தது அம்மாவின் வார்த்தைகளில். மதுரனும் எதிர்கால உறவு நிலை தங்களுக்குள் சுமுகமாகத்தான் இருக்கப்போகிறது என்ற நம்பிக்கை அம்மாவிற்கு வரும்படி நடந்து கொண்டான். அவன் அப்படித்தான். மதுரனல்லவா? இனிமையின் இருப்பிடம்.

சதீஷ் விஷயம் ஒருபுறம் மனதை குத்தி கிழித்தால், நவ்யா குழந்தை விபரம் மறுபக்கம் குழப்பி அடித்து கொண்டிருந்தது எனினும் மனத்திற்குள் தன் காதல் விஷயத்தில் படு நிம்மதி பரவுகின்றது நல்லிசைக்கு.

அப்பாவுமே அம்மாவின் முயற்சியில் முழுவதும் சரியாகி விடுவார் என தோன்றதொடங்கிவிட்டிருந்ததே காரணம்...

கடைசியில் அவன் விடை பெறும் தருணம்தான் மதுரனுடன் நல்லிசைக்கு நிமிடக் கணக்கில் தனிமை கிடைத்தது. அவசரமாக சதீஷ் விஷயத்தையும், நவ்யா குழந்தை விஷயத்தையும் சொன்னாள்.

அதற்குள் அப்பா வந்துவிட்டார். இன்னும் இவள் தங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட மதுரனிடம் பேசியிருக்கவில்லை. நவ்யாவிற்காக மதுர் இங்கு வரலாமாம். இவளுடன் மட்டும் ஒரு வார்த்தை கூட பேசிவிடக் கூடாதாம்….நவ்யாவிற்கு மட்டுமா வலிக்கிறது….இவளுக்கும்தானே..? நவ்யாவிற்காக காட்டும் அக்கறை கூட இவளுக்கு கிடையாதாமா?

தன்னவன் முகத்தைப் பார்த்தாள். அவன் கிளம்ப ஆயத்தமாவது தெரிகிறது. அப்பா அதைத்தானே எதிர்பார்க்கிறார். இந்த நொடி அவன் நிலை புரிய வலிக்கிறது இவளுக்கு. அப்பா வா என்றால் இவளுக்காக அவன் வர வேண்டும், போ என்றால் போக வேண்டும்.

“மதுர்…..ஐ மிஸ்ட் யூ வெரி பேட்லி மதுர்…..உங்களுக்காகத்தான் ஒவ்வொர் செகண்டும் வெயிட் செய்துட்டு இருக்கேன்…..” அப்பா கவனித்துக் கொண்டு இருக்கிறார் என நன்றாகத் தெரிந்தும் தன் மனதை அவனிடம் கொட்டினாள்.

“இசை “என்றான் ஒற்றை வார்த்தையாக, காதல் சொல்ல கோடி வார்த்தை தேவையா என்ன? அவன் குரலில் இவள் பெயர். இவள் கண்ணில் எட்டிப் பார்த்தது திரும்பவும் ஒரு துளி விழி நீர். இது காதல் நீர்.

அப்பாவுக்கு இந்த சூழல் நிச்சயம் பிடித்தமானதாக இல்லை. எப்படி பிடிக்குமாம்?

“எக்‌ஸாம் முடிஞ்சிட்டுனு கேள்விப்பட்டேன் மாப்ள….”

“ஆமா அங்கிள்….இன்னும் இன்டர்வியூ இருக்குது…தென் ரிசல்ட் வரனும்….”

“நீங்க இன்டர்வியூ முடிஞ்சு வந்த அன்னைக்கே கூட எங்கேஜ்மென்ட் வச்சுகிடலாம்……ஏன் உங்களுக்கு ஓகே னா அன்னைக்கே கல்யாணம் கூட வச்சுகிடலாம்….யோசிச்சு முடிவு சொல்லுங்க…” சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் செல்வநாதன்.

முன் வாசல் அருகிலிருந்த வெளி அறையில் நின்றிருந்த காதலர் இருவரும் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை.

விஷயம் புரிபட சில நொடி தேவைப் பட்டது நல்லிசைக்கு. காத்திருப்பதே மதுரன் ஆயத்தமாவதற்காக நேரம் கொடுக்க மட்டும்தான் என்பதை மட்டுமல்ல, பரீட்சை முடிவு எப்படி இருந்தாலும் திருமணம் என்றும் சொல்லிவிட்டு போகிறாரே அப்பா.

அப்படியானால் தன் நிர்வாகத்தை கூட அப்பா அவனுடன் பகிர்ந்து கொள்ள தயாராகிவிட்டார் என்றுதானே அர்த்தம். மதுர் இதற்கு ஒப்புவானா மாட்டானா என்பது அடுத்த விஷயம் ஆனால் அப்பா அவனை தன் குடும்பத்தில் ஒருவனாக ஏற்க ஆயத்தமாகிவிட்டார் தானே…

 முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மதுரனைப் பார்த்தாள். அவனோ கூர்மையான சிந்தனையில் இருந்தான்.

“என்னாச்சு மதுர்..?”

“ஒன்னுமில்ல…நீ எதை பத்தியும் கன்ஃபியூஸாகம இரு இசை…எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்….”

அதேபோல் அடுத்து வந்த காலங்கள் இவளது காதல் வாழ்வை பொறுத்த வரை ஒருவகையில் எல்லாம் சரி ஆகிக் கொண்டிருக்கின்றன என்றுதான் நம்ப வைத்தன. ஆனால் சதீஷ் பற்றிதான் அதன் பின் எந்த தகவலும் கிடைக்காமல் அவன் உயிரோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையை கூட சிறிது சிறிதாக சிதறடித்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.