(Reading time: 18 - 35 minutes)

மனதோர மழைச்சாரல்... - 04 - வத்ஸலா

'ஞ்சா... எங்கிருந்தாவது ஒரு தாலி வாங்கிட்டு வரச்சொல்லுடா' என்ற ரிஷியின்  வார்த்தைகளை கேட்ட மறு நொடி முகமெங்கும் மகிழ்ச்சி பரவ எழுந்தான் சஞ்சீவ். அடுத்த சில நொடிகளில் அவர்களது பாதுகாவலர் ஒருவரை தாலி வாங்கி வர அனுப்பி விட்டிருந்தான்.

அவர்களிடையே நடந்த அந்த பேச்சு இன்னமும் அஸ்வத்தை எட்டியிருக்கவில்லை. அவன் ஒரு ஓரத்தில் நின்றிருந்தான்.  கண்கள் மூடி அமர்ந்துவிட்டிருந்தார் அவள் தந்தை. வந்துவிடவேண்டும் அவள். எப்படியாவது கண் திறந்து விட வேண்டும் அவள். 'ரிஷியின் எண்ணமெங்கும் இது மட்டுமே எதிரொலித்துக்கொண்டிருந்தது.

'எ..எனக்கு இ... இன்னைக்கு பூரா  உ...உன் கூட இருக்கணும்'  குரல் கொஞ்சம் நடுநடுங்க கெஞ்சும் பார்வையுடன் சொன்னாளே அவள்.!!!!. 'அவளை என்னுடன் இருக்க அனுமதித்திருந்தால் இது நடந்திருக்காதே!!! அழுந்தியது அவன் மனம் ஒரு முறை இந்த ஒரு முறை மீண்டு வந்து விடு என் தேவதையே. இனி என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உன்னுடனே பகிர்ந்துக்கொள்கிறேன். 

Manathora mazhai charal

அடுத்த சில நிமிடங்களில் அவன் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பளபளக்கும் தாலி. அதை கையில் எடுத்துக்கொண்டு அவன் நான்கு அடிகள் முன்னேறிய நொடியில் அவனுக்குள்ளே அவனே அறியாமல் வெப்பம் பரவியது. சரேலென விழி நிமிர்தினான் ரிஷி. அவன் வழியை மறித்துக்கொண்டு நின்றிருந்தார் அந்த பெண்.

நேருக்கு நேராக அவர் கண்களை பார்த்தான் ரிஷி. கண்ணீரில் ஊறிப்போயிருந்த அந்த கண்களில் கண்ணீரையும் மீறி பரவிக்கிடந்த கோபத்தை, வன்மத்தை  நன்றாய் புரிந்துக்கொள்ள முடிந்தது ரிஷியால். இத்தனை நாட்களில்  கொஞ்சமும் மாற வில்லையா இவர்? அந்த பெண்ணின் விழிகளில் வேரூன்றி கிடந்தது வெறுப்பு. ரிஷியின் மீதான வெறுப்பு.

'ரிஷி' அவரது வாழ்கையில் தோல்வி எனும் பக்கங்களை எழுதிவிட்டு போனவன். பல வருடங்களாக அவர் கட்டி காத்து வைத்திருந்த கௌரவத்தை ஊருக்கு முன்னால் மிக சுலபமாக கிள்ளி எறிந்துவிட்டு போனவன். அவரை நேருக்கு நேராக பார்த்து பேசும் தைரியம் கொண்ட இரண்டே பேர்களில் அவனும் ஒருவன்.

அவன் கண்களின் ஓரமாய் பூத்திருந்த நீர் கூட அவருக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. எதற்கும் பணியாத சிங்கமாக வலம் வந்தவனையே அழ வைத்திருக்கிறதா காதல்? அவரது இதழோரம் இகழ்ச்சி புன்னகை.

'எங்கேடா போறே? தாலி கட்டப்போறியா அருந்ததிக்கு? என்ன தைரியம்டா உனக்கு? ஒலித்தது அவரது கணீர் குரல்.

அவரது கனல் பார்வையிலும், குரலிலும் அவனுக்குள்ளே சுள்ளென கோபச்சூடு பரவுவதை உணர்ந்தான் ரிஷி. கண்களை மூடி தனக்குள்ளே எல்லாவற்றையும் அழுத்திக்கொண்டான். 'உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது என் ரோஜாப்பூ. இப்போது அவள் சுவாசம் திரும்புவதை தவிர வேறே எதுவும் முக்கியமில்லை.

தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு எந்த பதிலும் சொல்லாமல் அவரை தாண்டி செல்ல ரிஷி எத்தனிக்க, அந்த பெண்ணின் அருகில் அஸ்வத்தும் வந்து நிற்க 'டேய்.... உயர்ந்தது அவர் குரல்.

அடுத்த நொடி 'மே...க...லா.... அந்த பெண்மணியின் குரலையும் தாண்டி அதிர்ந்து ஒலித்தது இந்திரஜித்தின் குரல். அவனுக்கு வழி  விடுங்க ரெண்டு பேரும். தேவை இல்லாம பிரச்சனை பண்ணாதீங்க.'

'முடியாது....' என்றார் மேகலா அதே உயர்ந்த தொனியில் 'என் பொண்ணுக்கு இவன் தாலி கட்டுறதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்'

'உன் பொண்ணா? யாரு உன் பொண்ணு.? நீ என்ன அவளை பெத்தவளா? அருந்ததி என் பொண்ணு. அவளுக்கு யாரை மாப்பிளையா ஆக்கணும்னு எனக்கு தெரியும். அவ கல்யாணத்திலே தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது.' அழுத்தம் திருந்தமாய் சொன்னார் இந்தரஜித்.

பளீரென கன்னத்தில் அறை வாங்கிய உணர்வு பரவ, திடுக்கிட்டு திரும்பினார் மேகலா. எந்த வார்த்தையில் மேகலாவை  மொத்தமாக அடக்கி விட முடியுமென தெரியும் இயக்குனருக்கு. மேகலா!!!! மணிமேகலை என்ற மேகலா!!! ஒரு காலத்தில் தமிழ் நாட்டின் புகழ் பெற்ற நடிகைகளில் அவரும் ஒருவர். இயக்குனர் இந்திரஜித்தின் இரண்டாவது மனைவி. அவருடைய முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு, மேகலாவை மணந்துக்கொண்டார் இந்திரஜித்.

இயக்குனரின்  மீது மேகலாவுக்கு அப்படி ஒரு காதல். இயக்குனரை துரத்தி துரத்தி மணந்தவர் மேகலா. அஸ்வத்தும், அருந்ததியும் அவரது முதல் மனைவியின் பிள்ளைகள். இந்த நிமிடம் வரை அவர்கள் இருவரையும் தனது பிள்ளைகளாகவே  நினைத்து பாசம் காட்டுபவர் தான் மேகலா.

அந்த நேரத்தில் அவர்களை கடந்து சென்ற சில கண்கள் இந்திரஜித்தின் குரலில் அவர்களை சுவாரஸ்யமாய், கேலியாய் திரும்பி பார்த்து விட்டு நகர்ந்தன. அவர்கள் கதை தான் ஊரறியுமே! மற்றவர்களின் பார்வையை கூட தாங்கிக்கொள்ள முடிந்தது மேகலாவால். ஆனால் அந்த நொடியில் வெகு இயல்பாய் அவர் மீது ஒரு முறை பதிந்து விட்டு விலகிய ரிஷியின் பார்வையில் மேகலாவின் தலை முதல் கால் வரை  கோபப்பிரவாகம்.

'அப்பா.... என்ன பேசறீங்க அம்மாவை பார்த்து.? அதுவும் இவனுக்காக.......???' பாய்ந்தான் அஸ்வத். .இவனெல்லாம் நம்ம வீட்டு மாப்பிள்ளையா?... அதுவும் அந்த திமிர் பிடிச்ச பொம்பளை....' அவன் முடிப்பதற்குள் சரேலென அவனை நோக்கி பாய்ந்தது ரிஷியின் நெருப்பு பார்வை, அதற்குள் அஸ்வதை நோக்கி நீண்டுவிட்டிருந்தது இயக்குனரின் ஆள்காட்டி விரல்......

'போதும் அஸ்வத்.... இதுக்கு மேலே நீ ஏதாவது பேசினா எல்லார் முன்னாடியும் நான் உன் மேலே கை ஒங்க வேண்டி இருக்கும்.'

'அப்பா ....' கொஞ்சம் அதிர்வுடன் ஒலித்தது அஸ்வத்தின் குரல்.

'இப்போ எனக்கு எல்லாத்தையும் விட என் பொண்ணு பிழைச்சு வரதுதான் முக்கியம். அவ கடைசியா என்கிட்டே கேட்டது ரிஷியை தான். அவனை அவ கிட்டே கொடுத்திட்டா அவ எழுந்து வந்திடுவா. எனக்கு நம்பிக்கை இருக்கு...' என்றார் இந்தரஜித்.

'முட்டாள்தனமா இருக்கு உங்க நம்பிக்கை....' அஸ்வத் எகிற அவன் தோளில் அழுந்தியது மேகலாவின் கை. 'போதும் அஸ்வத். வா நாம வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வரலாம்'

'இல்லைமா.... இவனை நான் ' அவன் ஏதோ மறுத்து சொல்ல வாயெடுக்க...

வேண்டாம்.... நாம போகலாம்' அழுத்தம் திருத்தமாய் சொன்ன மேகலாவின் கண்கள் அஸ்வத்திடம் பல செய்திகளை சொல்லின. கொஞ்சம் தணிந்தான் அவன். 'வா போகலாம்' அவர் முன்னால் நடக்க, ஒரு முறை அவன் பார்வை எல்லாரையும் உரசி விட்டு திரும்ப, மேகலாவின் பின்னால்  நடந்தான் அஸ்வத்.

வர்கள் நகர்ந்தவுடன் ரிஷியின் தோளை பற்றி ஆதரவாக அழுத்தினான் சஞ்சீவ். 'இப்போ அருந்ததியை தவிர வேறே எதையும் யோசிக்காதே. அவ பிழைச்சு வரணும்கிறது மட்டுமே உன் மனசிலே இருக்கணும் வா.'

உள்ளே செல்ல டாக்டரின் அனுமதி அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. 'ரொம்ப கிரிடிகலா இருக்காங்க. நீங்க எல்லாரும் உள்ளே போனீங்கன்னா ஏதாவது இன்பெக்ஷன் ஆக நிறைய சான்ஸஸ் இருக்கு.'

கடைசியில் ரிஷி மட்டும் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. கைகளில் சேனிடைசரை தடவிக்கொண்டு, வாயில் மாஸ்க் சகிதமாக கையில் தாலியுடன் உள்ளே நுழைந்தான் ரிஷி.

படுத்துக்கிடந்தது ரோஜாப்பூ. கட்டுகளுக்கிடையில், வயர்களையும், டியூப்களையும் பொருத்திக்கொண்டு கஷ்டப்பட்டு சுவாசித்துக்கொண்டு கசங்கிகிடந்தது அவனது ரோஜாப்பூ. அவன் கண்களில் நீர் கட்டிகொண்டது. 'எவ்வளவு வலித்திருக்குமோ? எப்படியெல்லாம் துடித்திருக்குமோ என் தேவதை'

'ரோஜாப்பூ' மெல்ல உச்சரித்தான் ரிஷி. எந்த அசைவும் இல்லை அவளிடத்தில். 'நான்...' குரல் பிசிறியது அவனுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.