(Reading time: 28 - 56 minutes)

09. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

ஜோடியாக உள்ளே நுழையும் தன் மகனையும், மருமகளையும் தன் கண்களில் நிறைத்துக் கொண்டவர்,

"என்னப்பா வாக்கிங்கா", என்றார் பொதுவாக. "அம்மா எனக்கு என் சத்துமாவு கஞ்சி ரெடியா? என்றவனிடம், "ஆல்ரெடி டேபிளில் உட்கார்ந்து இருக்கிறது பார்" என்ற சியாமளா துளசியிடம் திரும்பி,

"என்னம்மா துளசி, இன்னும் கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திருந்திருக்கலாமே? ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்து வாக்கிங் சென்று விட்டாய்... நேற்று முழுவதும் நிறைய நின்றிருந்தாய்? " மருமகளின் நிலையறிருந்து பாசத்துடன் கேட்டார். 

Nizhal nijamagirathu

"இல்லை அத்தை, தூக்கம் வரவில்லை.. தினமும் ஐந்து மணிக்கு எழுந்து பழக்கம்.. அதுதான், ராமுடன் இனி வாக்கிங் செல்லலாம் என்று வந்தேன்".

அத்தை என்று இயல்பாக அழைக்க பழகியிருந்த துளசியை கண்டு புன்னகைத்த சரண், "அம்மா, துளசிக்கும் ஏதாவது முதலில் குடிக்க கொடுங்கள்"

"டேய், ரொம்ப கவலைபடாதே.. உன் பெண்டாட்டியை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்வோம்.. நீ முதலில் உன் சத்து மாவு கஞ்சியை முடி"

"அம்மா, நாங்கள் என்றால் யார் யார்? இங்கு இப்பொழுது இருப்பது, நீங்கள், நான், துளசி மட்டுமே. ம்ம்ம்... அப்பாவைக் கூட இல்லையே?" என்று தலையில் தட்டிக் கொண்டு பெரும் யோசனை செய்வது போல பாவித்தவனை கண்டு சிரித்தனர் மாமியாரும், மருமகளும்.

"என்னடா சரண் இன்று என்ன ஆயிற்று உனக்கு"...

தன்னை முழுவதுமாக மேலும் கீழும் பார்த்துக் கொண்டவன், "இல்லையே.....ஒன்றும் ஆகவில்லையே.. நேற்று இரவு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ அப்படியேதானே இருக்கிறேன்.. ஏதாவது என் முகத்திலோ, உடம்பிலோ எந்த மாறுதலையும் நான் காலையில் கண்ணடியில் பார்க்கும் பொழுது அது காட்டவில்லையே", என்றான் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.

இப்பொழுது வாய்விட்டே பெரிதாக சிரித்தாள் துளசி... சியாமளாவும் சிரித்து விட்டு, "டேய், என்னமோ, போ.. எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றார்.

"ஐய்யோ, என் செல்ல அம்மா, வேறு ஒன்றுமில்லை.. வீட்டில் எல்லோரும் ஒரே சீரியஸாகவே இருக்கிறீர்கள்... அதுதான் , நீங்களும், துளசியும் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கட்டுமே என்று மொக்கை போட்டேன்.. சரி, சரி, என் சத்து மாவு கஞ்சி என்னை அழைக்கிறது" என்று டைனிங் டேபிள் நோக்கிச் சென்றான் சரண்.

மீண்டும் சியாமளா, "துளசி, உனக்கு என்ன வேண்டும் குடிக்க? காப்பி வேண்டாம்.. மாதுளை ஜூஸா... அல்லது சாத்துக்குடி, தர்பூஸ்.. இல்லையென்றால், நீயும் சத்து மாவு கஞ்சியே குடிக்கிறாயா? உடம்புக்கும் நல்லது" என்று அடுக்கி விட்டு, "இன்னொன்று, துளசி நீ இப்படி காலையில் வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்யாதே.. தலை சுற்றும்.. ஒரு டம்ளர் பாலாவது குடித்துவிட்டுச் செல்.. உன் உணவு பழக்கம் எனக்குத் தெரியாது"?

"அப்படியே அத்தை.. என்று ஒத்து கூறியவள், "எனக்கு காலையில் இரண்டு தடவையாவது காப்பி குடிக்க வேண்டும் அத்தை.. இந்த சத்து மாவு கஞ்சி, ஜூஸ் இதெல்லாம் அவ்வளவு பழக்கமில்லை.. எங்கள் வீட்டில், காலையில் காப்பி குடித்துவிட்டு, நான் காலேஜ் செல்லும் முன் டிபன் ஏதாவது உண்டுவிட்டு, மதிய உணவு சிம்பிளாக செய்து பாட்டிக்கு வைத்துவிட்டு எனக்கு கையில் எடுத்துச் சென்று விடுவேன்.. ஆனால் ஏனோ, இப்பொழுது காப்பி பிடிக்கவில்லை.. வயிற்றை பிரட்டி, வாந்தி வருமோ என்று பயமாக இருக்கிறது.. பெட்டர் நானும் சத்து மாவு கஞ்சியே குடிக்கிறேன்.. எப்படி இருந்தாலும், காலை டிபனுக்குப் பிறகு சிறிது நேரம் கழிந்து ஏதாவது ஜுஸ் குடிக்கிறேன்"

"அப்படியே துளசி.. காலையில் வெறும் வயிற்றில் முதலில் ஏதாவது ஒரு ஜூஸ் குடி.. பின்னர் கொஞ்சம் வாக்கிங் போய்விட்டு வந்து, சத்து மாவு கஞ்சி குடி.. நான் இவர்களுக்காக ஸ்பெஷலாக, நல்ல புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, கூட முளை விட்ட தானியங்களயும் சேர்த்து வறுத்து, அதனுடன் கொஞ்சம் முந்திரி, பாதாம் எல்லாம் போட்டு அரைத்து சத்து மாவு கஞ்சியாக்குவேன்.. இனி உனக்காக கொஞ்சம் பார்லியும் சேர்த்து அரைத்து விடுகிறேன்.. பார்லி சேர்ப்பதால், நன்றாக நீர் பிரிந்து, கால் வீக்கம் இல்லாமல் இருக்கும்.. சத்து மாவு கஞ்சி உடம்புக்கும் நல்லது.. சரி வா இப்பொழுது நீயும் கஞ்சி குடி" என்றார் சியாமளா.

சரணோ, " குட் ..சோ, நீயும் உஜாலாவுக்கு மாறி விட்டாய்.. வா துளசி வா.. அம்மா நான்கு பேருக்கு குடிக்கும் அளவிற்கு எனக்கு கஞ்சி கொடுப்பார்கள்.. வளரும் பிள்ளையாம் நான்.. இனி நீயும் மாட்டிக் கொண்டாய்.. வா.. இன்று இதில் நீயும் பாதி குடி.. நீ பாதி, நான் பாதி.".. என்று அவளுக்கு ஒரு டம்ளர் கஞ்சியை நீட்டினான்.

இயல்பாக அவன் நீட்டிய கஞ்சியை சிரித்துக் கொண்டே வாங்கிய துளசியை நோக்கிய சியாமளா, 'கடவுளே இப்படியே இவர்கள் சிரித்து பேசிக் கொண்டு காலம் முழுவதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தவர், வெளியே,

"போதும் டா உன் மொக்கை.. சிரிப்பே வரவில்லை" என்றவர் மெல்ல சிரித்தார்.

"ஓ. கே ம்மா.. சீரியஸ்.. என்ற சரண், "அம்மா, நான் இனி துளசியை காலை வாக்கிங்கு, கூட்டி செல்கிறேன்.. மாலையில் நீங்கள் தான் பார்க்க வேண்டும்.. துளசிக்கு என்ன என்ன வேணூமோ அதெல்லாம் உங்கள் பொறுப்பு.. என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்".... நகைக்காமல் சொன்னவன், "அம்மா, இன்னும் ஒன்று, துளசி ஏன் ஏதாவது மேலே படிக்கக் கூடாது?.. மேத்ஸ் டிகிரி முடித்திருந்தாலும், கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்திருக்கிறாள்.... துளசிக்கு, கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன் இஷ்டமாம்.. அதில் மேற்படிப்பு படிக்கலாமே? என்ன சொல்லுகிறீர்கள்".. அப்பொழுது,

"குட் மார்னிங்... சியாமளா எனக்கு ஒரு கப் காப்பி, என்னப்பா சரண்.... என்ன சீரியஸாக டிஸ்கஷன் நடக்கிறது இங்கே" என்று கேட்டபடியே அங்கு வந்தார் கிருஷ்ணன்.

காப்பியை அவருக்கு கொடுத்த சியாமளா, சரண் துளசியின் படிப்பு பற்றி கூறியதை சொன்னவர், மனதிற்குள், 'இன்று இந்த பையனுக்கு என்னவாயிற்று? ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறான்.. எப்படியோ இந்த வீடு இப்பதான் கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறது.. எல்லாம் துளசி வந்த வேளை தான்... இந்த ஆனந்தம் எப்பொழுதும் நிலைக்க வேண்டும்.' மனதார இறைவனை வேண்டினார்.

"என்னம்மா, என்ன யோசனை... நான் சொன்னதை பற்றி யோசிக்கிறீர்களா?"

"உ ம்.. தன்னை சுதாரித்த கொண்டவர், நீ சொல்வது சரிதான்.. ஆனால் துளசி இப்பொழுது கர்பமாக இருப்பதால், முழு நேர கிளாஸ் செல்வது சாத்தியமா? என்று தெரியவில்லை.. அதற்கு அவள் உடம்பும் ஒத்துழைக்க வேண்டும்.. வேண்டுமானால், நீ காலையில் ஆபிஸ் செல்லும் பொழுது அவளை கிளாசில் விட்டிவிடு.. பார்ட் டைமாக படித்துவிட்டு, மதியம் டிரைவருடன் வந்து விடட்டும்.. மத்தியானம் கொஞ்சம் ரெஸ்ட் கண்டிப்பாக துளசிக்கு தேவை.. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை நீ போன் செய்து பேசி விடு.. இதனால் எந்த அலைச்சலும் துளசிக்கு வரக் கூடாது.. இது ஐ.வி.எப் பேபி.. டாக்டர் அட்வைஸ் கேட்டு நடப்போம்.. டாக்டர், சரி என்றால் எனக்கு ஓ.கே. தான்.. அதற்கு முன் , துளசி நீ என்னம்மா, சொல்லுகிறாய்.. உனக்கும் எதாவது மேற் படிப்பு படித்தால், நல்லது தானே.. மூன்றாம் மாதத்தில் இருந்து நீ கொஞ்சம் வெளியே சென்று வந்தால் கூட பரவாயில்லை.. என்னம்மா என்ன சொல்லுகிறாய்?"

"நீங்கள் சொல்லுவது சரிதான் அத்தை.. எனக்கும் ஏதாவது படிப்பது என் எதிர் காலத்திற்கு நல்லதே.. ஆறு மாதம் கோர்ஸ் படிக்கிறேன்.. பின்னர் வேண்டுமானல் மேலே படிக்கிறேன்"

"என்னடா, சரண், இப்பொழுது சந்தோஷம் தானே.. உன் ஆசைப்படி துளசி படிக்கட்டும்.. கம்ப்யூட்டர் தொடர்பாக படிப்பதால், நாளை, கரணது கம்பெனியை பார்க்கும் பொழுது உனக்கு உதவியாகவும் இருக்கும்.. சரி.. துளசி, நாளை ஞயிற்று கிழமைதானே.. உன்னால் முடியுமானால் நாம் கொஞ்சம் ஷாப்பிங் போகலாமா?" என்றவறை,

"ஷாப்பிங்கா.. எதற்கு அத்தை?" என்று குழப்பத்துடன் நோக்கினாள் துளசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.