(Reading time: 16 - 32 minutes)

08. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

ல்லிசை பல வழிகளை யோசித்தாள் என்று இல்லை, ஆனால் மதுரன் மற்றும் அவிவ் வகையில் ஆழ அகலமாக யோசித்துவிட்டாள். சற்று முந்தைய மதுரின் நடவடிக்கைகள் அவளை உடல் தனியாக, உயிர் வேறாக, உணர்வு மாறாக என அடித்து சிதைத்திருந்தது. இப்படி ஒரு நாளைக் காணவா அவள் இத்தனை நாள், இத்தனை பாடனுபவித்து, இத்தனை பாரம் சுமந்து, இத்தனையாய் இழுபட்டாள்.

எல்லாம் மாயை….காதல் மாயை….காலம் மாயை….காணும் உலகும், கைகொள்ளும் செயலும், கற்பனையும், காற்றுபுகும் நாசியும், காற்றிடைப்பட்ட தூசியான இவள் நிலையும், சென்றுவிட்ட நேற்றும் , இந்த இன்றும், இனி வரும் நாளையும் மாயை மாயை. காற்றை துரத்தி கைக் கொள்ள நினைக்கும் கருத்தற்ற முயற்சிதான் வாழ்க்கை. மீனிங்லெஸ், வானிடி…

விரக்தி…. சலனங்கள் செத்திருக்க, உணர்வுகள் மரத்திருக்க, மனதில் ஒருவகை வெறுமை. அதோடு சார்ந்த நிர்மலம்…..அந்நிலையில் நின்று யோசிக்கும் போது  உண்மைகள் வேறுகோணத்தில் அவளுக்கு புரிகின்றன.

Nagal nila

இன்றைய நிலையில் மதுர் ப்ரீத்தாவைக் காதலித்து அவளுக்கும் வாக்கு கொடுத்து, தன் குடும்பம் அவள் குடும்பம் என அனைவரிடமும் கலந்து பேசி, அவர்களையும் சம்மதிக்க வைத்து, திருமணமும் நிச்சயித்திருக்கிறான்.

 இதில் திடீரென யாரோ அவனுக்கு அறிமுகமற்ற பெண், ஆம் அவனைப் பொறுத்த வரை இப்பொழு0து நல்லிசை அறிமுகமற்றவள் தானே, இவள் அவன் காலரைப் பிடித்து உலுக்கி, நீ என்னை காதலித்து ஏமாற்றிவிட்டாய் என்று போய் நின்றால் அவனுக்கு எப்படி இருக்கும்?

ப்ரீத்தா அவனுக்கு நிஜம்…..உணர்வோடு உயிரோடு கலந்தவள், அதோடு அவர்களது குடும்பங்களுக்கும் இந்த காதல் ஏற்புடையது….இப்பொழுது மதுரை விட்டுக் கொடுப்பது இவளுக்கு எப்படி வலிக்கிறதோ, அப்படித்தானே அவனுக்கு இப்போழுது ப்ரீத்தாவை விட்டுக் கொடுக்கவும் வலிக்கும்?

கல்லூரி காலத்தில், காதலர்களாய் தங்களை மதுரும் நல்லிசையும் உணர்ந்த நேரத்தில்,  இப்படி யாரவது ஒருவன் நல்லிசையிடம் வந்து நின்று  முன்பு நீ என்னை காதலித்தாய், இப்பொழுது உனக்கு எல்லாம் மறந்துவிட்டது என்று சொல்லி இருந்தால் இவள் மனம் எப்படி தவித்திருக்கும்…?

 ஏன், அப்பொழுது ப்ரீத்தா வந்து நின்று, இன்று நல்லிசை சொல்லுவது போல், அன்று மதுரிடம் நீ என் முன்னாள் காதலன், என்னை மறந்துவிட்டாய் என்றிருந்தால் இசைக்கு எப்படி இருந்திருக்கும்? மதுருக்கும்தான் எப்படி இருந்திருக்கும்?

ஆக இன்றைய மதுரின் நிலையில் ப்ரீத்தாவை இழப்பது என்பது கொடும்வலி. மறந்து போன ஒரு காலத்தைவிட நினைவில் நெஞ்சில் நிறைந்திருக்கும் காதல் உணர்வு முக்கியமானது மட்டுமல்ல, உரிமையானதுமல்லவா? அதோடு இப்பொழுது ப்ரீத்தா எப்படித் தவிப்பாள்? அவளது குடும்பம் எவ்விதமாய் கலங்கும்? மேலும் மதுரின் பெற்றொரும்தான் எப்படி உணர்வார்கள்? அவர்கள் அத்தனைபேரிடமும் உண்மையாய் நடக்க நினைக்கும் மதுர் என்ன செய்வான்? எப்படி தவிப்பான்? அவனால் எப்படி ப்ரீத்தாவை விட முடியும்?

ஆக இவள் இன்றைய நிலையில் அவன் வாழ்க்கைக்கு பெரும் இடைஞ்சல் கருமுள். அவன் பாதையைவிட்டு இவள் விலகாதவரை அவனால் நிம்மதியாக இருக்க முடியாது.  அவனுக்காகவாவது, அவன் நிம்மதிக்காகவாவது இவள்  வேறு ஒரு வாழ்க்கை அமைத்தாக வேண்டும். அப்பொழுதுதான் அவன் நிம்மதியாக தன் வழியில் போவான்.

மதுர்  இவள் மீது அக்கறையற்றுப் போனால் போகட்டும், ஆனால் இவளுக்கு இன்னும் அவன் மீது அக்கறை அப்படியேதான் இருக்கின்றது. இப்பொழுதைய அவன் செயல்களால் செத்துப் போனது காதல் மட்டும் தான். இவளது மனிதம் இன்னும் மரித்துவிட வில்லை… அவன் வாழட்டும்….

அப்படி வேறு ஒரு வாழ்க்கை என்ற முடிவு வரும் போது, நிக்கி ஒருவகையில் சரியான முடிவுதான்.  நிக்கியை இவள் மணம் செய்து கொண்டால் மதுரன்  நிம்மதியாக தன் வழியில் போய்விடுவான் என்பதோடு, அவிவும் அவனது தந்தையோடு இருப்பான் தானே?

அதுவும் அவிவிற்கு நிக்கியை எவ்வளவாய் பிடித்திருக்கிறது? நாளை என் தந்தையிடம் இருந்து என்னைப் பிரிக்க நீ யார் என அவிவே கேட்டாலும் கேட்பான்…. அதோடு நிக்கியினால் அவிவிற்கு கிடைக்கப் போகும் பாதுகாப்பு…அதுவும் குறிப்பாக மதுர் மிரட்டும் இழுத்தடிப்புகளிலிருந்து கிடைக்கப் போகும் பதுகாப்பு மிகவும் அவசியமாயிற்றே அவிவிற்கு….

ஆனால் நிக்கியிடம் வளர்வதால் நிக்கியின் குணம் அவிவிற்கு வந்துவிடக்கூடும்….அப்படி நடக்காதபடி பார்த்துக் கொள்வது உடனிருக்கப் போகும் இவள் பொறுப்பு... ஆக மதுர் வகையிலும் அவிவ் வகையிலும் இந்த திருமணம் சரியான முடிவே….

ஆனால் இதற்காகவெல்லாம் இவள் எப்படி நிக்கியுடன் குடும்பம் நடத்த முடியும்? இவ்வளவுதானா இவள் வாழ்க்கை…..?

முன்பிருந்த நிக்கியின் நடபடிகள் ஞாபகம் வருகின்றன அவளுக்கு. அப்பொழுது நிக்கி அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்தியதில்லையே…..ஆக அவனது இன்றைய செயல்களுக்கு காரணம் இந்த மதுரனின் ஆர்பாட்டம்தான் போலும்…..

மதுரிடமிருந்து குழந்தையை காப்பற்ற வேண்டும் அதே நேரம் இவளிடமிருந்து அவிவையும் பிரித்துவிடக்கூடாது என்பதற்காக நிக்கி இப்படி செய்கிறானோ…?

மதுரன் இவளை காயப்படுத்தியது மட்டுமில்லாமல் இப்படி கண்ணியிலும் சிக்க வைத்துவிட்டானே….

எது எப்படியோ, நவ்யா விஷயத்தில் நிக்கியை நியாயப் படுத்த எந்த வழியும் தெரியவில்லை, ஆனால் நிக்கிக்கு இவள் மீது நிச்சயமாய் ஸாஃப்ட் கானர் இருக்கிறது…..அதை வைத்து அவனிடம் சில எல்லைக் கோடுகளை இவள்தான் வரைய வேண்டும்…… ஆனால் எது எப்டியானாலும் எதை வைத்து ஒரு ரேபிஃஸ்டை நம்ப? கணவனென்ற உரிமையை கொடுத்துவிட்டு அவன் கை கட்டி இருப்பான் என எப்டி எதிர்பார்க்க? அதோடு கல்யாணத்தை கேலி செய்யலாம் ஆனால் கடவுள் முன் எடுக்கும் வாக்குறுதியை?

இந்த கேள்விக்கு மனம் அடங்குவதாய் இல்லை….ஆனால்…..ஆனால்….?????

நிக்கி  அவ்ளவு மோசமானவனா இருந்தா முன்னால அவன் கூடவே எத்தனையோ தடவ ஆஃபீஸ்ல தனியா இருக்ற சிட்டுயேஷன் வந்துச்சே….அப்போலாம் அவன் ஏன் ஒழுங்கா பிகேவ் செய்தான்?

எல்லை தாண்டா அவனது பார்வைகள்……. இப்பொழுதும் திருமணத்திற்குத்தான் கேட்கிறான்….எதோ இடிக்குதே….உண்மையில் நிக்கி எதோ டிராமா போடுறானா? ஏன்?

மனதிற்குள் அலை அலை எண்ண அலை, நிலை புரிய, நிஜம் அறிய முற்படும் ஆராய்தல் அலை…

ஆனாலும் குழந்தை அவன் கையில் இருக்கிறானே….இப்பொழுதுக்கு இவள் செய்ய வேறு என்ன இருக்கிறதாம்?

 இதற்குள் நிக்கி சொல்லி இருந்த அந்த மணப் பெண் அலங்கார வேலைகளை முடிக்கவென ஒரு வீட்டில் போய் நின்றது கார். சில பெண்கள் மற்றும் சர்வனின் மனைவி சிருஷ்டி.

இவள் எதுவும் சொல்லவில்லை. பொம்மை போல் நின்றவளுக்கு ஏதோ அலங்காரம். மனம் எதிலும் இல்லை.

அது முடிந்த பின்பே அவள் திருமண வென்யூவிற்கு கிளம்ப முடிந்தது.

அங்கும் இவள் நுழையும் போதே மகனைத்தான் தேடுகிறாள் பார்வையால். அங்கு அவிவ் இல்லை.  நிக்கியோ ஆல்டரில். சில பத்திரிக்கையாளர்கள், பல காமிராக்கள். குழந்தை எங்கே????.

மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்…..நிக்கியை நோக்கி நடக்க தொடங்கினாள். திருமண முறை தொடக்கம்.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

இதோ நிக்கியின் அருகில் சென்றுவிட்டாள் இசை. அவன் வந்து இவள் கரம் பற்ற கை நீட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.