(Reading time: 22 - 44 minutes)

'ப்படி பண்ணிட்டியே ரிஷி. எத்தனை நாள் ஆனாலும் நீ எனக்கு தான் தாலி கட்டுவே அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா? குரலில் நிறையவே வருத்தத்தை பூசிக்கொண்டு அந்த அந்த நடிகை சொல்ல,

'யக்கா... உனக்கு எங்க அக்கா வயசு. நீ பத்து வயசு குறைச்சு 24ன்னு சொல்லிட்டு, மேக் அப் போட்டுட்டு  திரியற. உனக்கு ரிஷி கேட்குதா. இதெல்லாம் ரொம்ப அநியாயம்' சஞ்சீவ் சீண்ட, அவள் அவனை துரத்திக்கொண்டு ஓட, கூட்டம் கலகலத்து, சிரித்து, 'ரொம்ப டயர்டா இருக்கே அருந்ததி ரெஸ்ட் எடு' என்றபடியே விடைப்பெற்று கிளம்பியது. அவர்களை வழி அனுப்ப தொடர்ந்தார் இயக்குனர்.

இப்போது பிறந்தது அவர்கள் இருவருக்குமான தனிமை. அவளருகில் வந்து அமர்ந்தான் ரிஷி. கட்டிலின் மேலேயே இருந்தது அவன் கொண்டு வந்த பூங்கொத்து. அதில் பல வண்ணங்களில் ரோஜாப்பூக்கள்!!!!

அதை கையிலெடுத்து அவளிடம் நீட்டினான் ரிஷி. கண்களை கூட நிமிர்த்தவில்லை அவள். அதை அவள் மடியில் வைத்தான் அவன். 'எனக்கு எதுவும் வேண்டாம்.' என்றபடியே அதை கட்டிலின் மீது வைத்தாள் அருந்ததி.

ஒரு ஆழமான மூச்சு அவனிடம். அவள் முகம் தொட்டு நிமிர்த்த விழைந்தது உள்ளம். ஆனால் அவள் மனநிலை புரிந்தவனாக, 'அட்லீஸ்ட் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தா, நான் என் மனசிலே இருக்கிறதை சொல்ல வசதியா இருக்கும்' மெதுவாக சொன்னான் அவன்.

முகம் நிமிர்த்தவில்லை அவள் 'எனக்கு எதுவும் வேண்டாம்'

புரிகிறது  அவனுக்கு!!!. அவளது எண்ணங்கள் செல்லும் திசை ஓரளவுக்கு புரிகிறது. ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட, இனி அவளை தனது கண் பார்வையிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தவிப்பு அவனுக்குள் அதிகமாக இருந்தது. அவன் மீது கத்தி வைத்தவர்கள் இனி அவளையும் நெருங்ககூடும். 'தனது உயிர் என்ற போது கூட பெரிதாக தெரியாத விஷயம் இப்போது பயமுறுத்தியது' இதை அவளுக்கு எப்படி புரிய வைப்பது.???

'ரோஜாப்பூ..... ' என்றான் இதத்திலும் இதமான குரலில்.

'எ....ன...க்கு எ.....துவும் வே......ண்டாம்...' சட்டென உயர்ந்து வெடித்தது அவள் குரல்.!!!! இதை அவளிடமிருந்து  நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை அவன்.!!!!

திகைத்து போனவனின் பார்வை, தனிச்சையாக அறையின் வாசலுக்கு போக அங்கே கதவின் அருகே இவர்களையே பார்த்தபடி நின்றிருந்தார் மேகலா!!! அவனிடம் அவள் குரல் உயர்ந்தது அவருக்கு நிறையவே வியப்பை கொடுத்திருக்க வேண்டும். அவரது கேலிப்பார்வையில் அவனுக்குள் ஏதோ ஒன்று பட்டென அடிப்பட்டது.

அதே நேரத்தில் அவள் பார்வையும் வாசலுக்கு போக, சூழ்நிலையின் அழுத்தம் புரிய மெல்ல தணிந்து ஒலித்தது அவள் குரல் 'எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கணும் ப்ளீஸ்.........'

எழுந்து விட்டிருந்தான் ரிஷி. ஒரு முறை அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு  'சரிமா . நீ ரெஸ்ட் எடு நான் அப்புறம் வரேன்' என்றபடி வாசலை நோக்கி நடந்தான் அவன்.

கதவை திறந்துக்கொண்டு, மேகலாவை தாண்டி அவன் நகர எத்தனித்த நேரத்தில் 'முடிஞ்சு போச்சுடா.!!!! உன் ராஜ்ஜியம் முடிஞ்சு போச்சு!!!!!.' அவனுக்கு மட்டும் கேட்குமாறு எள்ளலாக ஒலித்தது மேகலாவின் குரல்.  'இனிமே அவளை வெச்சே உன்னை நான் ஜெயிச்சிடுவேன்'

சுள்ளென்று உச்சத்திற்கு போன கோபத்தை அடக்கி, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவர் முகத்தை அலட்சியமாக பார்த்தபடியே  அழுத்தமான குரலில்  சொன்னான் ரிஷி  'அப்படியா? முடிஞ்சா முயற்சி பண்ணுங்க. அதையும் பார்ப்போம்'.

ஒரு முறை திரும்பி அவன் அவளை பார்க்க, அதற்குள் கட்டிலில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டு கிடந்தாள் அருந்ததி. கதவை சாத்திக்கொண்டு விறு விறுவென வெளியேறினான் ரிஷி.

மேகலா அருந்ததியை தொந்தரவு செய்ய விரும்பாதவராக அந்த அறையின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துக்கொண்டார்.

சில நிமிடங்கள் கழித்து மெதுவாக கண் திறந்தாள் அருந்ததி. அவளுக்கு அருகில் இருந்தது ரிஷி வாங்கிக்கொண்டு வந்த பூங்கொத்து.!!!! அவன் அவளுக்காக வாங்கிக்கொண்டு வந்த முதல் பரிசு பொருள்.'!!!!! அவள் கை அதை தொட்டு தனது பக்கமாக இழுத்தது. அவள் விரல்கள் அதை வருடிக்கொடுத்தன., அதை அணைத்தபடியே கண் மூடி உறங்கிப்போனாள் அருந்ததி.

றுநாள் காலை. லண்டனில் ரிஷியின் வீட்டில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார் அவனது அம்மா. நேற்றிரவு தான் மருத்துவமனையிலிருந்து திரும்பி இருந்தார் அவர். அவரின் அருகில் யோசனையிலே ஆழந்தவாராக அமர்ந்திருந்தார் ரிஷியின் தந்தை கல்யாண ராமன்.

'வெரி மைல்ட் அட்டாக்' என்றுதான் சொன்னார்கள் மருத்துவர்கள். பயப்பட எதுவுமே இல்லை என்றார்கள். ரிஷி சென்னையை அடைந்த சில மணி நேரங்களில் வந்தது இந்த நெஞ்சு வலி. லேசான மாரடைப்பு.

'தேவை இல்லாம, ரிஷியை பயமுறுத்தாதீங்க. எனக்கு ஒண்ணுமில்லை. நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அவன் பறந்தடிச்சு ஓடி வருவான். ஊருக்கு போனது போயாச்சு. எல்லாரையும் பார்த்திட்டு வரட்டும்' என்றார் வைதேகி. அது சரி என்றே தோன்ற அப்பா அவனிடம் எதையும் இதுவரை சொல்லவில்லை.

அதே நேரத்தில், சென்ற இடத்தில் அவனது திருமணம் முடிந்து விட்டது என்று சொன்னால், அதுவும் இந்திரஜித் மகளுடன் என்று சொன்னால், அவள் உடலிருக்கும் நிலையில் எப்படி எடுத்துக்கொள்வாள் வைதேகி.?????

நினைக்கும் போதே அப்பாவினுள்ளே கொஞ்சம் பயம் பரவத்தான் செய்தது. சொல்லவில்லை. திருமணம் முடிந்து மூன்று நாட்கள் முடிந்து விட்ட போதிலும் வைதேகியிடமும் எதையும் சொல்லவில்லை அவர்.

தனது மனைவியின் அருகில் அமர்ந்து, அவரது தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தவரின் கண்களில் பட்டது வைதேஹியின் டைரி. தனது மனைவிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு என்பது அவருக்கு தெரியும். அவ்வபோது தனது டைரியை கணவரிடம் காட்டியதும் உண்டு வைதேகி. அவர்களுக்கிடையில் பெரிய ஒளிவு மறைவுகள் இருந்ததில்லை.

வெகு இயல்பாக அவர் டைரியை எடுக்க, அதிலிருந்து விழுந்து சிதறின சில பழைய புகைப்படங்களும், சில கடிதங்களும். அந்த புகைப்படங்களில் ஒன்றை எடுத்த கையிலெடுத்தார் அப்பா அதில் சிரித்துக்கொண்டிருந்தார் நடிகை மேகலா.!!!! அதன் பின்னால் மேகலாவின் கையெழுத்து.!!!

அது மட்டுமில்லாமல், ஒரு ரசிகையாக வைதேகி எழுதிய கடிதங்களுக்கு மேகாலவிடமிருந்து வந்த பதில் கடிதங்களும் இருந்தன அந்த டைரிக்குள்ளே. ஒரு பெருமூச்சு எழுந்தது அவரிடம். இப்படித்தானே ஆரம்பித்தது மேகலாவுக்கும், வைதேகிக்குமான பழக்கம்.!!!!!

எல்லா புகைப்படங்களையும் அடுக்கி மறுபடியும் டைரிக்குள் வைக்க அவர் நினைத்தபோதுதான் கண்ணில் பட்டது அந்த புகைப்படம். அது ரிஷியும்- அருந்ததியும் சேர்ந்திருக்கும் புகைப்படம்.!!!!! அதை பார்த்ததும் கொஞ்சம் திடுக்கென்றது அப்பாவுக்கு.

ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். இதை எதற்கு வைத்திருக்கிறாள் இவள். இதற்கு என்ன அர்த்தமாம்??? ஒன்றுமே புரியாமல் மனைவியையும், அந்த புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்த படி அமர்ந்திருந்தார் கல்யாண ராமன்.

நேரம் மாலை ஏழு மணியை தொட்டிருந்தது. சென்னையின் அந்த பெரிய திரையரங்கதில்  அடுத்த சில நாட்களில் வெளியாகப்போகும் அந்த திரைப்படத்தின், (முதல் காட்சி) பிரிமியர் ஷோவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தன. சில டி.வி கேமராக்களுடன் பத்திரிக்கையாளர்கள், அந்த திரைப்பட குழுவினர் அவர்களுடன் வெகு சில நடிக - நடிகையர், மட்டுமே கூடி இருந்தனர் அங்கே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.