(Reading time: 9 - 18 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 04 - வத்ஸலா

நிமிடத்திற்கு ஒரு முறை வாசலுக்கு போய் ,போய் திரும்பிக்கொண்டிருந்தது அவன் பார்வை. சில நிமிடங்களில் அங்கே வந்து நின்றார் அவள் அப்பா.

'வாங்கோ...' என்றார் மதுசூதனன். புன்னைகயுடன் அவர் உள்ளே நுழைய, அவருக்கு பின்னால் கொஞ்சமாக பதுங்கிய படியே வந்தாள் அவனவள்!!!! கோதை!!!. அவள் முகமெங்கும் பூரிப்பு.

அவனுக்கு எதிரில் இருந்த அந்த சோபாவில், தனது அப்பாவின் அருகில் அமர்ந்துக்கொண்டாள் கோதை. அவனது கண்கள் அவளை சரணடைந்திருக்க, அவன் கண்களை சந்தித்தவளிடம் பளீர் புன்னகை.

Katrinile varum geetham

அவளது திடீர் வருகையால் அதிர்ச்சியில் விழுந்து மீண்டவாராக இருவரையும் சிறிது நேரம் மாறி மாறி கொண்டிருந்தார் அவன் அருகில் இருந்த அம்மா.

'என்னமா கோதை சௌக்கியமா? கேட்டார் அவன் தந்தை. அழகாய் தலை அசைத்தாள் கோதை.

'கோகுலுக்கு வரப்போற பொண்ணு எப்படி இருக்கான்னு பார்க்கணுமாம் அவளுக்கு. அதுதான் பிடிவாதம் பிடிச்சு என் கூட கிளம்பி வந்திருக்கா' சின்ன சிரிப்புடன் சொன்னார் ஸ்ரீதரன். அந்த வார்த்தைகளில் ஒரு நொடி வியப்பில் விழுந்து மீண்டான் கோகுல்.

மதுசூதனன் தனது மகளை அழைத்தார். உள்ளிருந்து வந்தாள் ஸ்ருதி. அவள் வந்து விட்டாள் என்பதை கோதையின் முக பாவதிலிருந்தே புரிந்துக்கொண்டான் அவளையே பார்த்திருந்த கோகுல். கோதையின் முகமெங்கும் அப்படி ஒரு பரவசம்.

அவன் பார்வை கோதையை விட்டு விலகாமல் இருக்க, 'கண்ணா.... லேசான காரம் கலந்த அடிக்குரலில் அம்மா  அழைக்க  ஒரு நொடி திரும்பி ஸ்ருதியை பார்த்தான் கோகுல்..

பார்த்தவர்களை பார்த்த மாத்திரத்தில் வசீகரித்து விடும் விதத்தில்தான் இருந்தாள் ஸ்ருதி. ஆனால் எதுவுமே அவனது கருத்தில் பதியவே இல்லை அவள்.. மரியாதை நிமித்தமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தான் அவளை பார்த்து. பின்னர் தன்னாலே திரும்பிய அவன் பார்வை மறுபடியும் கோதையிடமே தஞ்சம்.

பூரிப்பில் மிதந்தது அவளது முகம். இது எந்த வகையான சந்தோஷம்??? என்னுடைய மகிழ்ச்சி தான் அவளுடைய மகிழ்ச்சி என்பதற்கான அடையாளம் தானே இந்த பூரிப்பு.??? என் மீது அவள் வைத்திருக்கும் அவளே உணராத அளவு கடந்த நேசத்தின் அடையாளம் தானே இந்த சிரிப்பு???  இமை தட்ட மறந்திருந்தான் கோகுல்.

அம்மாவின் தொண்டை செருமல் அவனை மறுபடியும் தரை இறக்கியது. அவன் மெல்ல திரும்ப அங்கே இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.

அவனுடைய அம்மா தேவகி, அவளிடம் என்னென்னவோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அம்மாவிற்கு பதில் சொல்லிய படியே அவனை பார்வையால் அளந்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.

ஸ்ருதியின் அம்மா எல்லாருக்கும் காபியை கொடுத்துவிட்டு அவளருகில் சென்று நின்றுக்கொண்டார். ஸ்ருதியை பார்த்துக்கொண்டே தேவகி காபியை பருக, காபி டம்பளரில் வாயை வைத்து உறிஞ்சி காபியை சுவைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

அம்மாவுக்கு அது சுருக்கென்று உறுத்தி இருக்க வேண்டும். 'எங்காத்துக்கு நீ வந்தேன்னா கொஞ்சம் ஆசாரமா இருக்கணும்மா' சொல்லியே விட்டிருந்தார் அவர்.

'ஆசாரமான்னா எப்படி???' ஸ்ருதியிடமிருந்து பிறந்தது கேள்வி.

'நான் மடி, எச்சில் இதெல்லாம் கொஞ்சம் பார்ப்பேன். ஆத்திலே பெருமாளுக்கு நிறைய பண்ணுவோம்.'

'நீங்க மட்டும் தானா? இல்லை உங்காத்திலே எல்லாருமா? குடித்து முடித்த காபி டம்பளரை கீழே வைத்தவளின் பார்வை. கோகுலை ஊடுருவியது.

காட்சி திசை மாறுவது போல் தோன்ற சுவாரஸ்யத்துடன் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தான் கோகுல். இப்போது ஸ்ருதியின் முகத்தை நேராக பார்த்தான் அவன்,

'ஏன் மா? எங்காத்திலே எல்லாரும் தான். என் பையன் தினமும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுவான். பெருமாளுக்கு ஆராதனை பண்ணுவான்.. தினமும் கோவிலுக்கு போவான்' அவர் குரலில் பெருமை. ஆனால் மெல்ல மாறியது ஸ்ருதியின் முகம்.

'குடுமி ஒண்ணுதான் பாக்கியா? இல்லை அதையும் வெச்சுண்டிருக்காரா? கேலியான புன்னகையுடன் கேட்டே விட்டிருந்தாள் ஸ்ருதி. அவளது அம்மா அப்பாவே  கொஞ்சம் திகைத்து தான் போயினர். கோதையின் முகமும் கொஞ்சம் நிறம் மாறியது.

அவனது இதழ்களில் கம்பீரமான புன்னகை ஓடியது 'எனக்கு குடுமி வெச்சுக்கணும்னு தோணித்துன்னா கட்டாயம் வெச்சுப்பேன் மிஸ் ஸ்ருதி.' என்றான் அழுத்தமான குரலில்.

சட்டென எழுந்து விட்டிருந்தாள் ஸ்ருதி. 'உங்களையெல்லாம் சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம். கையெடுத்து வணங்கி விட்டு' உள்ளே போக எத்தனித்தாள் அவள்.

'ஹேய்... ஸ்ருதி என்னதிது மரியாதை இல்லாம? அவளது அம்மா கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டார்.

'நான் உள்ளே போறேன்மா.'

'உட்காரு....' அவளது அம்மா பல்லைக்கடித்துக்கொண்டு சொல்ல 'இல்லைமா எனக்கு வேண்டாம்...' என்றாள் அவள்.

குரலில் கோபம் தெறிக்க 'ஸ்ருதி.... என்றார் அவள் அப்பா 'உட்காரு முதல்லே.....'  

எல்லார் முன்னிலையிலும் அப்பா காட்டிய கோபத்தில், அவளது தன்மானம் பட்டென்று அடிப்பட்டது. அதற்கு பதிலடியாக எகிறியது அவள் குரல்  'எனக்கு பிடிக்கலைபா. எனக்கு இந்த கோகுலை பிடிக்கலை'

அந்த வார்த்தையில் முதலில் அதிர்ந்து போனவள் கோதை. அவள் முகத்தில் சுரு சுறுவென பரவியது கோபம்

'எனக்கு வரப்போற மாப்பிள்ளை மாடர்னா இருக்கணும். இந்த மாதிரி சாமியார் குடும்பத்திலே போய் என்னாலே குப்பை கொட்ட முடியாது. இதுக்கு மேலே என்னாலே எக்சிபிஷன் பொம்மை மாதிரி இங்கே உட்கார முடியாது. நான் உள்ளே போறேன்.' சொல்லிவிட்டு விறுவிறுவென உள்ளே போய்விட்டிருந்தாள் ஸ்ருதி..

'ஸ்ருதி சொன்ன அந்த வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவே முடியாதவளாக முதல் ஆளாக  எழுந்து விட்டிருந்தாள் கோதை. அந்த இடத்தை விட்டு விலகி வாசலில் போய் நின்று விட்டிருந்தாள் அவள். அவளே அறியாமல் அவளது ஒவ்வொரு அசைவும் அவளது காதலை கோகுலிடம் சொல்லிக்கொண்டிருந்தது.

அதன் பின்னர் ஒவ்வொருவராக எழுந்தனர். இருக்கையை விட்டு எழுந்த வாசுதேவன் மதுசூதனனை எரித்து விடும் பார்வை பார்த்தார். அந்த இடத்தில எதையும் பேசி தனது கௌரவத்தை இழக்க விரும்பாதவராக கோபத்தை அப்படியே விழுங்கிக்கொண்டு விறு விறுவென நடந்து காரில் போய் அமர்ந்தார் வாசுதேவன். அவரை பின் தொடர்ந்தார் தேவகி.

ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் தர்ம சங்கடத்தில் நின்றிருக்க, திகைப்பிலிருந்து மீளாமல் நின்றிருந்தார் ஸ்ரீதரன்.

மெதுவாக நடந்த கோகுல் கோதையின் அருகில் சென்று நின்றான். தவித்து போய் கிடந்த அவளின் கண்களில் நீரேற்றம்.. அவள் காதலை கண்ணெதிரில் பார்த்துவிட்ட நிறைவில் அவன் இதழோரத்தில் மென் சிரிப்பு. 'வரேன்டா... சீக்கிரமே பார்க்கலாம்...' அவளிடம் சொல்லிவிட்டு நடந்தான் கோகுல்.

டந்தவைகளை ஜீரணித்துக்கொள்ளவே முடியாத மன நிலையில் வாசுதேவன் காரை செலுத்திக்கொண்டிருக்க பின் சீட்டில் மௌனசிலையாக அமர்ந்திருந்தார் தேவகி. அவருகில் அமர்ந்திருந்தான் கோகுல். கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் அவர் கன்னம் தொட்டது.

'அம்மா.... இப்போ எதுக்கு அழுதிண்டு இருக்கே நீ.???

'தாங்கிக்க முடியலடா.. அது எப்படிடா அவ உன்னை பிடிக்கலைன்னு சொல்லலாம்???.'

கலகலவென சிரித்தான் கோகுல் 'பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு தானே மா சொல்லுவா'

'அதுக்காக இப்படியா??? எல்லார் முன்னாடியும்...' கண்கள் இன்னும் அதிகமாக நீரை சுரந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.