(Reading time: 19 - 38 minutes)

"குழந்தை பிறந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது துளசி... இன்று டாக்டர் உன்னை டிஸ்சார்ஜ் செய்வதாக கூறி இருக்கிறார்."

"துளசி, உன்னை ஒன்று கேட்க வேண்டும். உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை? கணவன், மனனவி பிரச்சனையில் அடுத்தவர் தலையிடுவது சரியில்லை தான். ஆனாலும் கடந்த ஒரு மாதமாகவே ஏன் இருவரும் சரியாக பேசுவது கூட இல்லை. எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்திருந்தேனே.... அவனோ, அலுவலக வேலை என்று காலையில் ஒன்பது மணிக்கு சென்றால், இரவு பத்து மணிக்குதான் வருகிறான். இப்பொழுது கூட இன்று டிஸ்சார்ஜ் செய்ய உன் மாமாதான் டாக்டரிடம் சென்று பில் செய்ய சென்றிருக்கிறார். ... என்னம்மா நடக்கிறது உங்கள் இருவருக்குள்.... என்னவாயிற்று சரணுக்கு... என்னிடம் சொல்ல விருப்பப் பட்டால் செல்லும்மா... தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்றும் இல்லை" என்றார் மெதுவாக.....

ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் துளசி.

"அழாதே துளசி.... ஆபரேஷன் ஆன உடம்பு.... சளி பிடித்து விடும்.. கவலைப் படாதே.. என் பேரன் பிறந்த வேளை, உங்கள் இருவரது வாழக்கையும் சரியாகி விடும்" என்று அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு தேற்றினார்.

சியாமளாவின் தோளில் சாய்ந்து தேம்பிக் கொண்டிருந்தவள் தன்னை தேற்றிக் கொண்டு, " அதெல்லாம் ஒன்றுமில்லை அத்தை... சின்ன மன வருத்தம்... வெறும் ஈகோ... யார் மன்னிப்புக் கேட்பது என்ற தயக்கம்... எல்லாம் சரியாகி விடும்" என்றாள்.

"துளசி, ஒன்று சொல்லுகிறேன் கேள்.... எப்பொழுதும் விட்டுக் கொடுத்துக் கொண்டு போக வேண்டும். சற்றென்று தலை உயர்த்திய உயர்த்தியவளை, எனக்கு புரிகிறது. இப்பொழுது பெண் உரிமை பேசும் டயம் இல்லை... நீ கொஞ்சம் விட்டு கொடுப்பதால் நீ தாழ்ந்து போய் விடவில்லை... நீ புரிந்து கொள். பெண்கள் தோற்றுக் கொண்டே ஜெயிப்பவர்கள்... நீ முதலில் மன்னிப்புக் கேட்டு பார். உன் பின்னாலேயே உன்னை மன்னிப்பு கேட்க விடாமலேயே அவன் உன்னையே சுற்றி சுற்றி வருவான்.... இது தான் மகிழ்ச்சியான வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியம்.....

இன்னொன்று, துளசி... ஒரு வேளை நீ வேறு எதையாவது நினைத்து கலங்காதே..... மறக்காதே..... என்றும் நீ இந்த சியாமளா கிருஷ்ணனின் மருமகள் தான்.... என்ன தான் நீ வாடகை தாயாக வந்தாலும், முறைப்படி, என் மகன் கையால் தாலி வாங்கி வந்திருக்கிறாய்.... இந்த வீட்டுக்கு உரிமையுள்ள வீட்டரசி. எங்கள் வீட்டு மஹா லக்ஷ்மி... இதை நீ மறக்காதே... அக்ரிமெண்ட் உனக்கும் என் மகன் கரணுக்கும் தான். சரணுடன் உனக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆகையால், நீ தர்மப்படி, சட்டப்படி அவன் மனைவி தான்...

எனக்குத் தெரியும்..... உன் மனசு என் மகன் சரண் மேல் படிய ஆரம்பித்து விட்டது.... அது போல் என் மகனும், உன்னை விரும்புவது அவன் செயல்களிலேயே தெரிகிறது... நீ சற்று உற்று கவனித்திருந்தால், அவன் பார்வை சொல்லி விடும் அவன் உன் மேல் கொண்ட காதலை.... நீங்கள் இருவரும், இனியாவது உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் அம்மா", என்று அவள் கைபிடித்து வேண்டினார்.

தலையாட்டிய துளசிக்கு ' அத்தை கூறியது போல நடக்குமா? என் வாழ்வு மலருமா... பார்ப்போம்' என்று நினைத்தபடி தன் குழந்தையை மறுபடி ரசிக்க தொடங்கினாள்..

மாலை நான்கு மணி அளவில் ஹாஸ்பிடலில் இருந்து வீடு வந்தனர்... ஆரத்தி எடுத்து தன் பேரனையும், மருமகளையும் உள்ளே அழைத்துச் சென்றார் சியாமளா.

துளசி ஹாஸ்பிடலில் இருந்து அன்று டிஸ்சார்ஜ் ஆகி வருவதால், மாலை ஆறு மணி அளவிலேயே வீட்டுக்கு வந்து விட்டான் சரண். முகம், கை கால் கழுவி தாயார் கொடுத்த காப்பியை குடித்து விட்டு, அவரிடம் இருந்து துளசியும், வீட்டுக்கு வந்து விட்டதை அறிந்தவன், அவளை பார்ப்பதற்காக துளசியின் அறைக்குச் சென்றான்.

கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவன், "துளசி", என்று மெல்ல அழைத்தான்... மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன், அவளருகே சென்று , அவளிடம் இருந்து , " இந்தா துளசி", என்று சில பேப்பர்களை நீட்டினான்.

"என்ன இது" என்றவளுக்கு, ஒன்றும் விளக்கம் சொல்லாமல், "உனக்கு இது தேவையாக இனி இருக்கலாம்".

அவன் கொடுத்த பேப்பரை படிக்காமல் பக்கத்தில் வைத்து விட்டு, அருகே நின்று கொண்டிருந்த சரணிடம், "இந்தாருங்கள் உங்கள் மகன்.... உங்கள் குல வாரிசு... இனி நான் வந்த வேலை முடிந்து விட்டது.... உங்கள் அண்ணன் கரணுடன் செய்த ஒப்பந்தப்படி, உங்கள் குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்"..... என்று கூறி அவனிடம் கையில் குழந்தையை மெல்ல வைத்தாள்.

கையில் குழந்தையை வாங்கியவன் , 'இவ்வளவு கல் மனசா இவளுக்கு, இபொழுது கூட மனசு வரவில்லையா.... தன் மேல் கொஞ்சம் கூடவா காதல் வரவில்லை' என்று நினைத்தவன்,

"ஓ... பொறுப்பை முடித்து விட்டாயா?... இனி என்றவனை"..... ஒன்றும் கூறாமல் பார்த்தாள்.

'சே... எவ்வளவு திமிர் பிடித்தவன்.... கொஞ்சமாவது என்னை பற்றி யோசிக்கிறானா...... என்னை இங்கேயே இருந்து விடு என்று சொல்லக் கூடாதா?.... என் மேல் அவ்வளவு கோபமா?'

"இனி என்ன.... உங்கள் சொத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்" குழந்தையை பார்த்தாள்...

கையில் இருக்கும் குழந்தையை பார்த்தவன், "அப்ப இவன் மாத்திரம் தான் என் சொத்தா? , அப்பொழுது நீ ...... ஒரு மாதிரியாக அவளை பார்த்தவன், உன் கழுத்தில் என் கையால் தாலி கட்டியிருக்கிறேனே?... அதற்கு என்னம்மா சொல்லப் போகிறாய்... எப்பொழுது உன் கழுத்தில் தாலியை கட்டினேனோ, அன்றே நீ எனக்கு உரிமையானவள்... அப்படியிருக்க, நீயும் என் சொத்து தானே...."

திகைத்துப் பார்த்த துளசியை, " என்ன திகைத்துப் போய் அப்படி பார்கிறாய்?... நீயும், நானும் நிஜமாக திருமணம் புரிந்தவர்கள்... உனக்கும் எனக்கும் எந்த அக்ரீமெண்டும் நடுவில் இல்லை... கரணுடன் நீ போட்ட ஒப்பந்தம், அவன் இறந்தவுடனேயே முடிந்து விட்டது...... அதனால், நான் உன் கழுத்தில் கட்டிய தாலி கட்டியது தான்... முதலில் நீ அந்த பேப்பரை படித்து கையெழுத்து போடு" என்ற சரண் கையிலேயே தூங்கி விட்ட குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தான்.

துளசி புரியாமல் பார்த்தாள்...' என்ன இவன், கட்டிய தாலி கட்டியது என்கிறான்.... நான் அவன் மனைவி தான் என்றும் சொல்கிறான்... பின், எதற்கு இந்த பேப்பரை நீட்டுகிறான்... இது நான் முன்பு கேட்ட டைவர்ஸ் பேப்பரோ'.... நடுக்கத்துடன் அதை பிரித்தவள், அதிர்ந்து விட்டாள்.

அதில், ராம் கரணுக்கு உரிய சொத்து முழுவதும் குழந்தை பேரில் சரண் எழுதி இருந்தான்... தன் சொந்த சொத்து முழுவதையும் மாற்றி எழுதி இருந்தான்... தனக்கு, அவள் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பும், அதற்குரிய ஊதியம் மட்டும் போதும், அது கூட அவள் அனுமதித்தால் மட்டுமே' என்று எழுதியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.