(Reading time: 19 - 38 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 17 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ண்ணா கொஞ்ச நாளில் வந்திருவார் " என்று கூறிய வானதியின் முகத்தில் கொஞ்சமும் சலனமே இல்லை. அவளது முகபாவனைக்கு எதிர்மாறாய் விக்கித்து போய் நின்றாள் கவிமதுரா .. பார்த்தவுடனேயே உண்மையை சொல்லிவிடும் எண்ணத்தில் அவளும் இங்கு வரவில்லை தான் .. எனினும் இனி வரவே முடியாத ஒருவனை வரபோகிறான் என்று வானதி சொல்லவும் மதுராவிற்கு அது சரியாய் தோன்றவில்லை .. வானதியையே அவள் கூர்ந்து பார்க்க , வானதி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல வித்யா விமலை பார்த்து கொண்டிருந்தாள் .

" அப்பா " என்று அழுத்தமாய் அவரை அழைத்தாள் கவிமதுரா .. பேரனின் மீதே பார்வையை பதித்தபடி

" என்னம்மா " என்றார் அவர் ..

Enna thavam seithu vitten

" ஜீவாவின் அப்பா இனி வர மாட்டார் அப்பா " என்றாள் கவிமதுரா .. இப்போது தாய் தந்தை இருவருமே அவளை பார்க்க, வானதியின் முகத்தில் வெற்றி புன்னகை .. இதுவே அவள் அமைதியாய் இருந்திருந்திருந்தால் கவி மதுரா நிச்சயம் அரவிந்த்தை பற்றி உடனே கூறி இருக்க மாட்டாள் .. சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறேன் என்ற பெயரில் அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்து கொண்டாள் ..அதில் வானதிக்கும் இஸ்டமில்லை ..அதே நேரம் மகள் பெற்றோர் இருவருக்கும் நடுவில் நடக்கும் பேச்சினில் இவளுக்கு நுழையவும் இஸ்டமில்லை ..அதனால்தான் வேண்டுமென்றே " அண்ணன் வருவார் " என்று கூறி வைத்தாள் .. ஏற்கனவே நிறைய மௌனங்களை சுமந்ததினால் கஷ்டப்பட்டவள் தானே கவிமதுரா ? ஆதலால்தான் எதுவான போதிலும் இப்போதே இதை சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள் ...

" நீங்க பேசிட்டு இருங்க ..நான் ஜீவாவை தூக்கிட்டு தோட்டத்தை சுற்றி பார்கிறேன் " என்று பொதுப்படையாய் கூறிவிட்டு அங்கிருந்து சென்றவளின் மனதில் சுமையாய் அமர்ந்து கொண்டான் அருள்மொழிவர்மன்.

காதல் ..! வார்த்தைகளால் ஒரு வரிவடிவம் கொடுக்க முடியாத உணர்வு .. யாருக்கும் கட்டுப்படாமல் அனைவரையும் கட்டி வைக்கும் பந்தம் .. அருள்மொழிவர்மனையும் வானதியையும் கட்டி வைத்ததும் கூட இந்த பந்தம் தான் .. ஆனால் காதல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இருவருமே காதலில் கசிந்துருகினர் என்று கூறிடவே முடியாது .. அதுயேனோ இருவரும் ஒருவரை ஒருவர் மலையளவு நேசித்தாலும் அதை வார்த்தைகளால் கூட அதிகம் பரிமாறி கொண்டது இல்லை .. இப்போது அவனுடனே வேலை செய்கின்ற போதும் அவர்களின் கவனத்தில் இருப்பது எல்லாம் வேலை , இருவரின் குடும்பத்தாரின் நிலை , சாஹித்யா , அதன் பிறகே காதல் ! அமைதியாய் இருந்தாலும் அவளோடு இருந்தால் அதுதான் காதல் என்ற எண்ணத்தில் இருந்தான் அருள்மொழிவர்மன் .. அதேபோல காதல் வசனங்கள் உதிர்க்காமல் அவனது திட்டங்களுக்கும் சிந்தனைக்கும் பின் நின்று துணைவியாய் இருப்பதே காதல் என்ற எண்ணத்தில் இருந்தாள் வானதி .. ஒரு வகையில் அவர்களின் காதல் இலக்கணம் சரி என்றாலும் கூட , அவ்வபோது காதலில் சிணுங்கும் மனதை என்னத்தான் செய்வது ?

சரியாய் லண்டனுக்கு போகும் நாளின் முன்னிரவில் தான் தனது பயணத்தை பற்றி கூறினான் அருள் ..

" ஏன் என்னிடம் சொல்லவில்லை " என்று அவளுக்கு கேட்கவே தோன்றவில்லை .. மாறாக

" ஏற்கனவே சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே அருள் " என்று அவள் கூறவும் கரைந்தே விட்டான் அருள் ..

" அப்படி இல்லை நதி .. சத்யாவை சமாதனம் பண்ணிட்டு ரெண்டே நாளில் வந்திடலாம்னு நினைத்தேன் .. எப்படியும் நான் போட்டோகிராபி கோர்ஸ் காக அங்க போயிடுவேன்னு உனக்கு தெரியும் தானே டீ ? அப்போ நம்ம கம்பனி பொறுப்பெல்லாம் நீதானே சமாளிக்கணும் ? இந்த ரெண்டு நாள் அதற்கு ஒத்திகைன்னு நினைச்சுக்க டா " என்று அவன் கூறவும் அவளுக்கு நிஜம்மாகவே கோபம் வந்துவிடும்போல இருந்தது ..

" கம்பனி பொறுப்பை எனக்கா சமாளிக்க தெரியாது ? நீ இல்லாமல் என்னை எப்படி டா , நான் சமாளிப்பேன் " என்று கத்தவேண்டும் போல இருந்தது அவளுக்கு .. பற்களை கடித்து கொண்டு அமைதியானாள் .. அதன்பிறகுதான் அவளும் விடுமுறை எடுத்து கொண்டு கவிமதுராவுடன் புறப்படலாம் என்று முடிவெடுத்தாள் .. அருள் மீது லேசாய் மூண்ட கோபத்துடன் அவள் இருந்த வேளையில் தான் சாஹித்யா வானதியை போனில் அழைத்திருந்தாள் ..

" ஹாய் வானு "

" ம்ம்ம் சொல்லுங்க சத்யா "

" என்ன மேடம் குரலில் கொஞ்சம் கூட உற்சாகமே இல்லையே " என்றாள் சாஹித்யா ஆராயும் குரலில் ..

" அது எல்லாம் ஒன்னும் இல்லையே .. கொஞ்சம் வேலை அதிகம் அவ்வளவு தான் " என்று பேச்சை கத்தரிக்க பார்த்தாள் வானதி ..

" சரி அருள் எப்படி இருக்கிறான் " என்று சாஹித்யா கேட்டு வைக்கவும் இப்போது உண்மையிலேயே வானதியின் கோவம் இரட்டிப்பானது ..

" என்ன கேள்வி இது சாஹித்யா .. உங்க நண்பர் உங்களோடு தானே இருப்பார் ?" என்று கேட்டே விட்டாள் வெடுக்கென .. அவளுக்கு சாஹித்யா மீது எந்த பொறாமையும் இல்லைதான் .. ஆனால் அதே நேரம் அவளை சமாதனம் செய்கிறேன் என்ற பெயரில் தனது உணர்வுகளை அருள் மதிப்பது இல்லையோ என்று கஷ்டமாய் இருந்தது அவளுக்கு .. ஏனோ அதை அவனிடன் நேரடியாய் அவளுக்கு கேட்கமுடியவில்லை .. அதன் விளைவு சாஹித்யாவின் மீது திரும்பியது ..

" நீ ஏதும் அப்சட்டா இருக்குற மாதிரி இருக்கு வானதி " என்றாள் சாஹித்யா பாவமாய் .. இதுதான் ..இதுதான் சாஹித்யா .. அவள் கொஞ்சம் குரல் தழைத்தாலும் எதிரில் இருப்பவருக்கு கோபம் மாயமாய் பறந்துவிடும் ..

" கொடுத்து வைத்தவள் இவள் .. நல்ல குடும்பம் , உயிர் கொடுக்கும் நண்பன் , அன்பான காதலன் என்று அனைத்தும் பெற்றிருக்கிறாள் ..அவள் வயது தானே எனக்கும் ? ஏன் இறைவன் எனக்கு இப்படி ஒரு அழகான சுற்றுசூழலை தரவில்லை " என்று முதல் முறையாய் வானதியின் மனதில் ஏக்கம் எட்டி பார்த்தது .. வானதி இளம்வயதில் இருந்தே போராடும் மனம் கொண்டவள் .. கிட்டதட்ட பதின்ம வயதில் இருந்தே அவளது சிந்தனை சற்று வேறுபட்டுத்தான் இருக்கும் ..விளையாட்டு தனம் நிரம்பிய வயதில் கல்வியே கண்ணென இருந்தால் , கண்முன் யார் தவறு செய்தாலும் வெடுக்கென சண்டைக்கு போய்விடுவாள் , தனது தந்தை குடிபழக்கத்திற்கு அடிமையானபோதும் அப்படித்தான் .. பயந்து ஒடுங்கும் வயதில் அத்தனை [பேரின்முன் மதுக்கடையின் முன்னே சண்டை போட்டவள் அவள் .அதேபோல அரவிந்த் அந்த வீட்டை விட்டு போனதும் , ஒரு மகன்போலவே மாறி இருந்தாள் .. இதோ இப்போ கவிமதுராவின் தலைவிதியை மாற்றுகிறேன் என்று முடிவெடுத்து தான் தனது குடும்பத்தையும் பிரிந்தாள் .. இயல்பிலேயே போராடும் குணம் உடையவளால் எப்போதுமே சாஹித்யாவை போல இருக்க முடியாது என்பதை அவள் மறந்துவிட்டாள் .. ஒருவேளை சாஹித்யாவின் இடத்தில் அவள் இருந்திருந்தால் கூட, தனக்கு கிடக்கும் சொகுசான வாழ்வு மற்றவருக்கு எப்படி பயன்படும் என்றுதான் யோசித்து கொண்டிருப்பாள் வானதி ..

மொத்தத்தில் சாஹித்யா வானதி இருவருமே நற்குணங்கள் கொண்ட நங்கைகள் தான் ..இருப்பினும் இருவரின் குணமும் வெவ்வேறு .. சாஹித்யா அன்பிற்கு கட்டுபட்டு அன்பினை கொடுப்பவர்களை சார்ந்து வாழ்பவள் .. அருளை தவிர வேறு யாரிடமும் சண்டை போடுவதற்கு கூட யோசிப்பவள் ..எப்போதும் இலகுவான சூழ்நிலையை விரும்புபவள் .. வானதி எப்போதும் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்று நினைப்பவள் .. எதை பிடிக்காவிடினும் அதை சரி செய்துவிட துடிப்பவள் .. அருள் உட்பட யாரிடமும் தனது மனதை காட்டத் தயங்காதவள் .. இப்படி இரு வெவ்வேறு திசையில் பயணிக்கும் பெண்களை இணைத்தவன் அருள்மொழிவர்மன் தான் .. அவனது ஒவ்வொரு செயலும் அவர்கள் இருவரையுமே பாதிக்கும் என்பதை அவன் புரிந்துகொள்வானா ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.